ஜெயந்தி சங்கர் திலகவதியின் 'கல்மரம்' ஒரு வாசிப்பு

கல்மரம்
-----------
ஆசிரியர் - திலகவதி


வாசிப்போம் சிங்கப்பூர்/வாசக வட்டம் - ஜூன் 2006


வாசிப்பு : ஜெயந்தி சங்கர்


தலைப்புத் தேர்வு கவித்துவமாக இருக்கிறது. கற்களால் வளரும் மரமாக கட்டடத்தைச்
சொல்வது அழகு. இரண்டும் நிழல் தரும் என்றாலும் கட்டடத்திற்கு உயிரில்லை.
அதைக்கட்டியவர்களுக்கோ அங்கீகாரமில்லை. பெரிய கோவிலை இராஜராஜசோழன் கட்டினான்
தாஜ்மஹாலை ஷாஜ்ஜஹான் கட்டினான் என்பதுபோல முதல்போட்டவரைத் தான் கட்டடத்தைக்
கட்டியவராகப் பார்க்கிறது சமூகம் என்கிற ஆதங்கம் ஆசிரியருக்கு உண்டு.



அடித்தட்டு மக்களின் ஒரு பகுதியினரான கட்டுமானப்பணியார்களின் கடின வாழ்வு
மற்றும் தொழில்முறைச் சிக்கல்களை மிகவும் அக்கறையுடன் அணுகியிருப்பது
பாராட்டுக்குரியது. இவர்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு என்று எதுவுமே இல்லை.
முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் கதை நெடுகிலும் கண்டிக்கப்படுகிறது. தவிர,
வேலையின்மையும், கிடைத்த வேலையில் மனநிறைவில்லாமையும், மேஸ்திரி/கொத்தனார்களின்
சீண்டல்கள் மற்றும் உரிமை மறுப்பு போன்ற ஏராளமான அழுத்தங்கள் நிறைந்த
வாழ்வைக்கொண்ட இவர்கள் எப்படி சமூகத்திலிருந்து அந்நியமாகிப் போகிறார்கள்
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காக ஆசிரியர் களப்பணிமேற்கொண்டிருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.



முக்கிய பாத்திரங்கள்
---------------------------


ஆதிலட்சுமி, காசி, காவேரி, சுசீலா, கன்னியம்மாள், ஆர். ஆர். எம், ராகினி, அத்தை
போன்றோர்.


கதைச்சுருக்கம்
-------------------



காசி வேலைகிடைக்காமல், என்றாவது கிடைக்கும் சில்லரைவேலையைச் செய்து
சம்பாதிக்கும் ஓரு குப்பத்து இளைஞன். எந்தவேலையும் ஒழுங்காகத் தெரியாதவன்.
அவனது தாய் ஆதிலட்சுமி மேஸ்திரியாக இருந்து வேலையின் போது விபத்தில் இறந்த தன்
கணவனின் கதி பிள்ளைக்கு வரக்கூடாது என்ற கவலையில் கொல்லு வேலைக்குப்போகக்கூடாது
என்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். அவளின் ஒரு மகள் கன்னியம்மாள்
கர்பவதி. புகுந்தவீட்டில் பிரச்சனை என்றும் கணவனுக்கு வரக்கூடாத பால்வினை நோய்
வந்திருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.
கடைசி மகள் காவேரி பத்தாவது படித்திருக்கும் துடிப்புள்ள பெண். அவள் சுசீலாவோடு
நட்புகொள்கிறாள். சுசீலா தன் நல்வாழ்வை விட்டுவிட்டு கட்டடத்தொழிலாளிகளின்
நலனுக்காகவே குப்பத்தில் வந்து வாழும் பெண். காசிக்கு மணமுடிக்கிறாள்
ஆதிலட்சுமி. வந்துசேரும் மருமகள் ராகினி வசதியாக வாழ்ந்தவள். முதலில் இவர்களின்
வீட்டைக்கண்டு முகம் சுழித்துவிட்டு, கொஞ்சநாளிலேயே காசிக்கு தன் சகோதரன்
மூலமாக வாட்ச் மேன் வேலை வாங்கித் தருகிறாள். அடுக்ககம் கட்டும் தளத்தில் ஷெட்
ஒன்று கட்டிக் கொடுக்கிறார் ஆர். ஆர். எம் என்னும் முதலாளி. அங்கே குடியேறும்
காசி, ஓரளவிற்கு கையில் காசுபார்க்கிறான். அங்கேயே ராகினிக்கும் கணக்கர் வேலை
கிடைக்கிறது. அந்த முதலாளி கொத்தனார் சித்தாள் மற்றும் பிற வேலையாட்களை
மனிதாபிமானமில்லாமல் நடத்தும் விதத்தையெல்லாம் இவர்கள் காணநேர்கிறது. உழைப்புச்
சுரண்டலையும் பாதுகாப்பில்லாத எளியமக்களின் வாழ்க்கையையும் காணும் ராகினி மனம்
மாறி அவர்களுக்காக சுசீலா அமைக்க நினைக்கும் யூனியன் நிறுவும் பணியில்
கைகொடுத்து, கொத்தனார் பயிற்சிக்கும் விண்ணப்பித்துச் சேருகிறாள்.
தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய சம்பளபாக்கியை யூனியன் மூலம் எப்படி
வாங்கலாமென்று தொழிலாளர்களுக்குச் சொல்லி நம்பிக்கையூட்டுகிறாள்.
---------



ஆதிலட்சுமி கதாபாத்திரம் இயல்பும் சிறப்பும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
அவளின் பாசம், தவிப்பு மற்றும் கவலை யாவும் ரசிக்கும்படி
சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல இட்லிக்கடை வைத்திருக்கும் அத்தை பாத்திரமும்
அதற்கு நிகரான சிறப்பினைக் கொண்டுள்ளது. இருவரின் உணர்ச்சிவெளிப்பாடுகள்
மற்றும் உளவியல் சார்ந்த சிந்தனைகள் அருமை.


காசி ஒரே ஒரு முறை குடிப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அம்மக்களிடையே
குடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சரி, குடிக்காதவன் குடித்தான் என்று
கொள்வோம். அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீற முயற்சிப்பதாகவும் அது
தொடர்பான சில சிக்கல்களையும் சொல்லியிருந்தால் ஒரு எதார்த்த இளைஞனாக
இருந்திருப்பான் காசி.


காசிக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது பெண்பார்த்தல் கட்டம் வருகிறது.
யாருக்குமே தெரியாமல் குழாயடியில் தண்ணீர் பிடிக்க வரும்
பெண்ணைப்பார்த்துவிட்டு வருவதாக கதையில் வருகிறது. அலங்காரம் செய்து
நிற்கவைத்துப் பெண்பார்ப்பதைக் கேவலமாக நினைக்கும் இவ்வெளிய மக்களிடமிருந்து
நடுத்தரவர்க்கம் கற்றுக்கொள்ளவேண்டியது இது. இதுபோல சில சின்னச் சின்ன
ரசிக்கும் படியான எளியமக்களின் வாழ்க்கைக் கூறுகள் கதை நெடுகிலும் வருகின்றன.


பெண்பாத்திரங்கள் எல்லாமே ஏதோ ஒரு சிறப்பு கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிலட்சுமி அக்கறையான தாயாக, காவேரி துடுக்கான முன்னேறத் துடிக்கும் இளைஞியாக,
கன்னியம்மாள் பொறுமைநிறைந்தவளாக, சுசீலா தொழிலாளர் நலனுக்காகவே தன் முனைவர்
வாய்ப்பினைக்கூட உதறியவளாக, ராகினி தொழிலாளிர் நலனைப்பற்றி யோசிப்பவளாக
வருகிறார்கள்.


கட்டுமானப் பணியாளர்கள் எப்போதும் முதலாளியின் ஏதோ ஒருவகையான உழைப்புச்
சுரண்டலையும் அலட்சியத்தையும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு நிறைய சிறியதும்
பெரியதுமான நம்பகத்தன்மையுடைய நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. எடுத்துக்கொண்ட
கருவுக்கு இது மிக அவசியம். ஆனால், அதே அடித்தட்டு மக்களிடையேயும் அந்த
முதலாளிகளின் சுரண்டல் மனப்பான்மை கொண்ட சிலர் இருக்கலாம். அவர்களையும்
பாத்திரங்களாக உருவாக்கி உலவவிட்டிருக்கலாம். அதேபோல முதலாளிகளில் நல்லவர்களும்
இருக்கிறார்கள். அத்தகைய முதலாளிகளையும் காட்டியிருக்கலாம்.
இப்படிச்செய்யும்போது இயல்புத்தன்மை கூடியிருக்கும். ஆசிரியர் ஒரு காவல்த்துறை
அதிகாரி. சட்ட மீறல்களைக் கொண்ட நிகழ்வுகளைச் சொல்லி அதற்கேற்ற வழக்கு தண்டனை
என்று அவர் பணிசார்ந்து இன்னும் சிறப்பாக எழுதியிருக்கமுடியும்.


சுசீலாவின் கதாப்பாத்திர அமைப்பு மிகவும் மேலோட்டமாக இருப்பதாக வாசகன்
உணர்வான். அவளுக்குப் பின்புலமாக ஒரு கிளைக்கதை அமையாதது ஒரு காரணம். அப்படி
அமைந்திருக்கும் பட்சத்தில் முனைவர் பட்ட வாய்ப்பைக்கூட அவள் மறந்து
தொழிலாளர்களுக்காகவே யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும், குப்பத்தில்
வாழ்வதற்குமான காரணங்கள் சரியாக அமைந்து கதையே கனம் கூடியிருக்கும்.



ராகினியின் பாத்திர அமைப்பில் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் பெரிய
வேறுபாடு. முதல் பாதியில் புகுந்த வீட்டின் வறுமையை விமரிசித்தபடியிருக்கும்
இவ்விளம்பெண் மறுபாதியில் தொழிலாளர்களுக்காக யோசிக்கிறாள். அவர்கள்
சுரண்டப்படுவதற்காக வருந்துகிறாள். சில நிகழ்வுகளைக் காண்கிறாள் என்றாலும்
அவளின் மனமாற்றத்திற்கான காரணம் திடமாகச் சொல்லப்படவில்லையோ என்ற நெருடல்
வாசகனுக்கு எழாமல் இருக்காது. மூன்று ஸ¥ட் கேஸ்கள் நிறைய எதையோ நிரப்பி ( ப 114
) ராகினியிடம் ஆர்.ஆர்.எம் கொடுத்து பத்திரமாக மறைத்து வைக்கச்சொல்கிறார்.
அதில் பணமும் நகையும் நிறைய வைத்திருந்ததாக பிறகு அவரே சொல்கிறார். போலீஸ்
சோதனை செய்து பிடித்தால், ராகினி மாட்டிக்கொள்வாள் என்ற நோக்கத்துடன் அவர்
செயல் பட்டிருப்பது வாசகனின் ஊகத்திற்கு விடப்படுகிறது. ஆனால், இதுவே
ராகினியின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று நிறுவப்படவில்லை. வாசகனே
தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் உதவலாம்.


சென்னைத் தமிழில் உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன. இருந்தாலும், உரையாடல்களால்
மட்டுமே நிரம்பிவிடும் சில அத்தியாயங்கள் வாசகனுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய
அனுபவத்தினை கொடுக்க தவறிவிடுகிறது. Narration என்றறியப்படும் கதை சொல்லலில்
ஆசிரியர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இது
நேர்ந்திருக்காது. அதோடு புதினம் முழுமையடையவும் உதவியிருக்கும்.


பெண்களே கொத்தனார் பயிற்சிக்குப் போகிறார்கள். காசி வாட்ச் மேன் வேலையே
போதுமென்று நினைத்து விட்டானோ? இத்தனை முற்போக்குச் சிந்தனைகொண்ட பெண்கள்
சூழ்ந்திருக்கும்போது கொஞ்சம் கூடவா ஒரு இளைஞனுக்கு வேகம் பிறக்காது? காசி
பயிற்சிக்கு போகாதது குறையே. அவன் போயிருந்தால், யூனியனிலும் அதுகொடுக்கும்
பாதுக்காப்பிலும் ஆதிலட்சுமிக்கும் வாசகனுக்கும் நம்பிக்கை
வந்தாற்போலிருந்திருக்கும். நிச்சயம் கதைக்கு வலுச்சேர்த்திருக்கும்.


பரிசு மற்றும் விருதுகள் வாசகனைப் பலவேளைகளில் குழப்பித்தான் விடுகின்றன.
பரவலான வாசிப்புள்ளோர் இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை எளிதில்
முன்வைத்துவிடுவார்கள். இந்தக் கதையின் நோக்கத்திற்கும் கருவிற்கும்
கொடுக்கப்பட்டுள்ள விருதேயன்றி படைப்புக்கு இல்லை என்பதை ஒரு சாமான்ய வாசகனும்
நிச்சயம் படித்துமுடித்ததும் புரிந்துகொள்வான். களப்பணி இருந்துகூட ஏதோ
செவிவழிச்செய்திகளை வைத்து எழுதிவிட்டது போன்ற ஒரு நிறைவின்மை தோன்றிவிடுவதைத்
தவிர்க்கமுடியவில்லை. பிரச்சனைக்குத் தீர்வு எனும் ஒரே குறிக்கோளை மட்டுமே
கவனத்தில் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பிரமாண்டமான விளம்பரங்கள் எப்படி திரைப்படத்தினைப் பற்றி ஒருவரிடம் அதிக
எதிர்பார்ப்பை ஏற்படுத்துமோ அதேபோல இந்நூலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விருதும்
வாசகனில் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுகிறது. அதுவும் வாசகனுக்கு
ஏற்படக்கூடிய ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.


பிழைகள் நிறைய இருப்பதைப்பார்க்கும்போது இது திருத்தப்பட்ட பதிப்பு தானா என்ற
கேள்வி எழுகிறது. காட்டாக ( ப. 14) த. ஜெயகாந்தன் என்று இருக்கவேண்டிய இடத்தில்
த. ஜெகாந்தன் என்று அச்சாகியிருக்கிறது.

மானஸாஜென்: அசோகமித்ரனின் 'ஒற்றன்' குறித்து

அசோகமித்திரனின் 'ஒற்றன்!'
மானஸாஜென்

நாவலில் நின்று கொண்டு, பயணக் கட்டுரை உலகினை வேவு பார்க்கிறானா? அல்லது கட்டுரையின் தளத்திலிருந்து நாவலை வேவு பார்க்கிறானா? என அசோகமித்திரனின், 'ஒற்றனை' வரையறுப்பது கடினமான செயல்.

அதற்குக் காரணம் அவரது கட்டுரைகளிலும், அவரது கதைகளின் சிறப்பு அம்சங்கள் விரவிக் கிடப்பதுதான். செய் நெர்த்தி, எளிமையான யுக்திகளும் வார்த்தைகளும் கொண்டு மிகச் சாகசமான விஷயங்களை அனாயசமாகத் தொட்டுச் செல்வது, அங்கதம், இப்படி.


இதற்கும் அசோகமித்திரனே திருப்தி அளிக்கும் பதிலை முன் வைத்திருக்கிறார். "அக்கரையுடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரை ஒரு நல்ல புனைக்கதைக்கு எவ்விதத்திலும் தாழ்ந்ததல்ல."


***********


சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி' பொலவோ, ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' போலவோ பிரமாண்டமான காலத்தின் முன் விரிவு கொண்டு மனித மனத்தை விகாசமடையச் செய்ய 'ஒற்றன்' முயல்வதில்லை, அவை காட்ட நினைப்பதெல்லாம் சிறிய அணுவைத்தான். சாதாரண நடுத்தரவர்க்க மனிதனின், சாதாரண தினங்களும், அவற்றின் ஊடாக சாதாரண வார்த்தைகளில் வெளிப்படும் அசாதாரண தருணங்களையும்தான். இத்தகைய அசாதாரண தருணங்கள் அணுவைப் பிளப்பது போன்ற ஒரு செயலை நேர்த்தியுடன் செய்கின்றன. இத்தகைய, யுகங்களைப் புறந்தள்ளி கணங்களில் ஜீவிக்கும் கலை நேர்த்தி எல்லா உன்னத படைப்புகளைப் போலவே, மனித மனத்தை என்றேன்றைக்கும் மாற்றிடும் சக்தி கொண்டதாக இருக்கிறது.



*************


மொத்தம் பதினான்கு அத்தியாயங்கள், அயோவா நகரம் களம், நிகழும் காலம் சுமாராக ஏழு மாதங்கள் (1973 அக்டோபரிலிருந்து, 27 ஏப்ரல் 1974 வரை) ஒவ்வொருவரும் வேறு வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் பிரஜைகள் இதற்கு முன் எப்போதுமே பார்த்துக் கொள்ளாதவர்கள், எல்லாம் முடிந்த பின்னர் மறுபடியும் பார்த்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகம் தான்.

ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமை பெற்று ஒரு சிறுகதைக்கான நேர்த்தியோடு விளங்குகிறது.

இந் நாவலை அப்படியே ஒரு மனிதனின் வாழ்விற்கான குறியீடாக்கினால், இப்பிறவி ஒரு பயணம்... கதை முதல் அத்தியாயத்தில் அம் மனிதனின் பிறப்பாகவும், பதினான்காம் அத்தியாயம் அவனது மரணமாகவும் உருக்கொள்கிறது. ஒரு முக்கியமான வித்தியாசத்துடன்; அதாவது, அம் மனிதனுக்கு தான் எப்போது மரணமடைவோம் என்பது தெளிவாக அறுதியிட்டுத் தெரியும்.


'மனிதன் மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்தில் அவனது தர்க்கம் அறுபட்டுப் போகிறது, சிந்தனைகளும், காலமும் சிதைவுற்றுப் போகிறது ஆனால் அவனது இதயம் இந்தப் பயணத்தின் முக்கியமான தருணங்களைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. வாழ்வில் மரணம் பற்றிய நினைப்பற்ற நேரங்களில் மிகப் பெரியதாகத் தோன்றிய விஷயங்கள், குறிக்கோள்கள், நடைமுறைகள் எல்லாம் அற்பத்தனமான வித்தியாசங்களாகக் குறுகி, பொருட்படுத்த தேவையற்றவனவாய் மாறிப் போகிறது. எல்லா விஷயங்களும் ஒரு நடு நிலைமையான பார்வையாளனின் காட்சிகளாய் மாறிப் போகின்றன. இப்போது ஒரு அற்புதமான மாற்றம் நிகழ்கிறது. எல்லா சாதாரண, தினசரிக் காட்சிகளிலும் கூட அசாதாரணமான வேறுபாடுகளைக் கடந்த கணங்கள், விடுதலைக்கான திறவு கோல்கள் இருக்கின்றன, ஒரு கட்சியில் சேர்ந்து அலைவுறும் மனம் அடங்கியதும், அவை கண்ணில் பட ஆரம்பிக்கின்றன' என மரண அனுபவத்தை (NDE) ஆய்வு செய்யும், ரேமண்ட் மூடி(Raymond A Moody), எலிசபத் குப்லர் ரோஸ் (Elisabeth Kubler Ross), அதற்கு ஒத்துழைத்த பெட்டி ஜே. யியாடி (Betty J.Eadie) போன்றோர் கூறுகின்றனர். மரணத்தை முன் வைத்து வாழ்க்கையை எதிர்கொள்ள திபெத்திய பௌத்தமும், இந்துமதமும் அறிவுறுத்துகின்றன. கிட்டத்தட்ட அத்தகைய ஒரு நிலைப்பாட்டையே அசோகமித்திரனின் படைப்புலகம் எடுக்கிறது.


மறுபடியும் ஒற்றனுக்கு வருவோம்...ஒவ்வொரு அத்தியாயமும் எந்தவொரு கட்டுக்கோப்போ, திட்டமோ, இன்றி தினசரி ஒரு சராசரி வாழ்வாய் நிகழ்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் முன் தயாரிப்புகள் அற்ற எளியவர்களாயும், குறைகளும், நிறைகளும் நிறைந்தவர்களாக, தடுமாற்றங்களுடன் தங்களின் நாளினை நகர்த்துகிறார்கள்.( இதற்கு களம் உதவுகிறது, புதிய சூழல், மொழி, கலாச்சாரம், வேறுபட்ட பருவ நிலை இப்படிப் பட்ட காரணிகள் எல்லோரையும் தடுமாற வைக்கிறது.) ஒரு அத்தியாயத்திற்கும் மற்ற அத்தியாயத்திற்கும் நேரடியான தொடர்போ, சார்போ இருப்பதில்லை, காலம் முன், பின்னாகவும் கூட தொகுப்புக்குள்ளாகிறது. தியாகராஜன் இத்தகைய சூழலில் சார்பற்ற ஒரு பார்வையாளனாக தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பார்க்கிறான்.
நாடு, இனம், மொழி, கலாச்சாரம், அந்தர்ஸு, போன்ற இமாலயப் பிரச்சனைகள் அற்பங்களாகக் குறுகிப் போக ஒவ்வொரு அத்தியாங்களிலும் ஒளிந்திருக்கும் பார்தோக்கள் (Bardo) வெளிப்படுகின்றன. இந்த சார்பற்ற பார்வை ஒரு நகைச்சுவைக்கான கோணத்தைக் கொடுக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் அபத்தத்தை உணர நேர்கையில் எழும், யாரையும் காயப்படுத்தாத இயல்புடைய அங்கதம். புத்தரின் சிரிப்பைப் போல, குழந்தை தன்னை புத்திசாலித்தனத்தை நிருபிப்பதற்காக எதையாவது பிழைபடச் செய்யும் போது நமக்குள் எழுமே அது போன்ற ஒரு சிரிப்பு.



*************




ஒற்றனில் அசோகமித்திரனின் கலை விவரிக்க மிகச் சிக்கல் வாய்ந்த தொன்று ஏனெனில் அவை மிக எளிமையாக இருக்கின்றன.

எளிமையான வாழ்வின் ஒரு துண்டை ஏன் அவர் தெரிவு செய்து நம் முன் வைக்கப் பிரயத்தம் கொள்கிறார் என்பது ஒரு முக்கிய பார்வைக் கோணத்தை நமக்குத் தருகிறது. அதுவே அவர் படைப்புகளுக்குள் நாம் செல்ல அவர் அனுமதிக்கும் நுழைவாயில்.

சார்பற்ற பார்வைக் கோணத்தில் பெரியது சிறியதென விஷயங்கள் இல்லை, அபே குபேக்னாவின், அந்தர்ஸ் ( ஜுடாயா சிங்கத்தின் நண்பன், பணக்காரன்), தியாகராஜனுக்கும் அவனுடைய பெண் தோழிக்குமான (கஜுகோ) உறவை பொறாமையில் வேவு பார்ப்பவன், கதைசொல்லியையும் அடித்தவன் போன்ற விஷயங்களுக்கு பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை, கவனம் அவன் புத்தகத்தின் மீது தட்டி நிற்கிறது, அதைப் படிக்க வேண்டுமென்ற அவாவில் முடிகிறது, ஆனால் ஒரு கே-மார்ட் ஷூவிலிருக்கும் ஒரு அட்டை அற்ப விஷயமாகப் போகாமல் ஓயாமல் வறுத்தி அவனை அலைகழிக்கிறது! பெரு தேசத்து பிரவோவுக்கும், அர்ஜெண்டீன அலீசியாவிற்குமான வெறுப்பும்கூட பெரிய விஷயமில்லை, ஆனால் அனைத்து வேறுபாடுகளற்ற வெளியில் மொழிகளைக் கடந்து ஞானக்கூத்தனின் கவிதை நெகிழ்த்தும் கணம் பிரதானப் படுத்தப் படுகிறது, அம்மா இறந்தவனின் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் கணம் இருவருக்குமே மறக்கமுடியாத கணமாகிறதென உணர்த்தப் படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போக நாவல் நெடுக விஷயங்களைக் கவனமாக முன் வைக்கிறார்.


புற விஷயங்கள் (சம்பவங்கள், சித்தரிப்பு, மனவோட்டங்களும் உணர்வுகளுக்கும் கூட அழுத்தம் தருவதில்லை.) மூலமாக அகதரிசனத்திற்குப் போகிறார், தேவைக்கும் குறைவான விவரிப்புகள் மூலம் ஒரு பொதுப் புள்ளியிலிருந்து வாசகனைப் பார்க்க வைக்கிறார். உதாரணத்திற்கு பெரும்பாலான மனிதர்கள் எந்த நாட்டுக்காரன், அவன் உயரமானவனா, அவன் உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி அமைந்திருக்கின்றன, என்ற தயாரிப்புகள் ஏதுமில்லை, சற்று வித்யாசமான கலாச்சார, மொழி பின்னனியுடைய மனிதன் என்ற விவரம் மட்டும் போதும், (உதாரணம் அத்தியாயம்: பூண்டு) தேவைப்பட்டால் மேல் விவரங்களை சம்பாஷணைகளில் பூடகமாகத் தருகிறார். இத்தகைய இடைவெளிகளை ஒரு சூட்சமமான இணைப்புகள் இணைக்கின்றன, அவை வழியெங்கும் விரவிக் கிடக்கின்றன.


சாதாரண நிகழ்வில் பெரிய விஷயங்கள் நிகழ்கின்றன. ( கே-மார்ட் ஷூ, பூண்டு, அந்த இன்னொரு பஸ் நிலையம், இப்போது நேரமில்லை...) ஆனால் முன் தயாரிப்புகளும், திட்டங்களும், வீழ்ச்சியிலும், கேளிக்கூத்தாகவும் முடிகின்றன. ( பிரவோவின் 'மகா ஒற்றன்', கவிதை வாசிப்பு, கஜுகோவின் கவிதை அரங்கேற்றம்.)

மத்திய, கீழ் மத்திய தர வர்கத்தின், அலைச்சல்களும், தயக்கங்களும் நாடு, இன, மொழி கடந்து ஒற்றனில் பதிவாகியிருக்கின்றன, ஆனால் அவை எந்த ஒரு அரசியல் நிலைப்பாட்டையும், சித்தாந்தத்தையும் வலியுறுத்துவதில்லை, அழுத்திக் கூடச் சொல்வதில்லை.


சிக்கலான வாசிப்பு தரும் போதையில் உழல விரும்பும் வாசகர்களுக்கு ஒற்றன் பெருத்த ஏமாற்றம் தரலாம், அத்தியாயங்களுக்கு ஊடாக கதையையோ, உணர்வு நிலை வளச்சியையோ, தத்துவங்களையோ, தேடவிழையும் வாசகர்களுக்கு மற்றைய அசோகமித்திரனின் படைப்புகளைப் போன்றே இதுவும் ஏமாற்றத்தைத் தரும்.


************

அசோகமித்திரனின் 'ஒற்றன்' -சித்ரா ரமேஷ்

அசோக மித்திரனின் ஒற்றன்.
சித்ரா ரமேஷ்


United states என்று அழைக்கப்படும் அமெரிக்கா நட்டில் அயோவா பல்கலைக்கழகத்தில் 1974-74 ம் ண்டு ஏழு மாதங்கள் தங்கி அவர் பெற்ற அனுபவங்களை ஒரு புனைக்கதையாக்கித் தந்திருக்கிறார். முதல் அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரை முன்பின் தெரியாத இடங்களில் தங்குவது, கிடைத்த சைவ உணவு வகைகளைச் சாப்பிடுவது,
விசித்திரமானப் பழக்கவழக்கங்களைக் கொண்ட சக எழுத்தாளர்களோடு பழகுவது, அதிலும் சிலர் அவருடைய அறை நண்பர்களாக இருந்து நட்புக்கும் விரோதத்திற்கும் இடைப்பட்ட ஒரு விநோதச் சேர்க்கையாக இருந்ததைச் சொல்லி கேலியும் கிண்டலும் கலந்து தந்தாலும் அதில் அடியாழத்தில் ஒரு எரிச்சலும் மெல்லியதாக ஒரு சோகமும் தென்படுகிறது.


பாஸ்போர்ட்டில் காணப்படும் புகைப்படம் யாருக்குமே அவ்வளவாக திருப்தியைத் தராத புகைப்படமாகத்தான் அமைந்து விடுகிறது. அதிலும் சில வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்படுகின்ற இளமையை நினைத்து ஏக்கப்படவைக்கும். அசோகமித்திரனின் முதல் அத்தியாயம் இமிகிரேஷன் வரிசையையும் பாஸ்போர்ட் போட்டோவைப் பார்த்து வெட்கப்படும் பெண்ணை தன்னுடைய வழக்கமான நடையிலேயே விவரிக்கிறார்.


அடுத்த அத்தியாயத்தில் அவர் தங்கியிருந்த மே பிளவர் கட்டத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறார். இவருக்கு சில மணி நேரங்களே முன்னால் வந்திருக்கும் பெண் நெடுநாட்கள் பழகியது போல் பேப்பரை எடுப்பதும் போஸ்ட் பாக்ஸ் போய் அன்றைய நிகழ்ச்சி நிரலை எடுத்துப் பார்த்து இன்று மிஸ்ஸிஸிப்பி ஆற்றங்கரைக்குப் போவதாகக் கூறுகிறாள். இதிலிருந்து அவருடைய சோதனைக் காலம் ஆரம்பிக்கிறது. சீரியல் புட்டை சூடான பால் விட்டு அசப்பில் நம் ஊர் பொங்கல் கணக்காக சாப்பிடுவதும் அதிகம் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் தற்காலிக நண்பனுக்கு உதவுவதுமாக அன்றையப் பொழுது கழிகிறது, ஆனால் இதைப் போல் புது ஊரில் புது இ டங்களில் முக்கியமாக நம்முடைய வழக்கமான சாப்பாடு, பகிர்ந்து கொள்ள நண்பர்கள் இ ல்லாத முதல் நாள் ஏற்படும் விரக்தியும் சலிப்பும் தோன்றிவிடுகிறது. பிறகு அவருடைய அறை நண்பரின் பூண்டு சாப்பிடும் பழக்கத்தால் பூண்டு வாசனையோடு பால் காபி எதையும் சாப்பிடப் பிடிக்காமல் மெல்ல பூண்டு வாடைப் பழகும்போது அந்த அறை நண்பர் கிளம்பி விடுகிறார். உன்னை மறக்க மாட்டேன் என்று கட்டிப் பிடித்து விடை பெறும் போது கூட அந்த நண்பரின் மீது வீசும் பூண்டு வாசனை விடவில்லை.


தன் பிறகு இலாரியா என்ற இ த்தாலியப் பெண்ணோடு ஸ்நேகிதம். பல மொழிகள் அறிந்த அருமையானப் பெண். இவருக்கு இத்தாலிய சைவ உணவெல்லாம் தயாரித்துக் கொடுத்து தன்னுடைய துக்கங்களையெல்லாம் பகிர்ந்து கொள்கிறாள். னால் பெண்களின் துக்கங்கள் எப்போதுமே ண்களுக்கு புரிவதில்லை. காதலிக்கும் போது காதலன் ஏற்கெனவே கல்யாணம் னவனா இல்லையா என்ற யதார்த்த உண்மைகளைக் கூட அறியாமல் காதலித்திருக்கக் கூடாது என்று அறிவுரை கூறும் தியாகராஜனுக்கு எல்லா சராசரி ண்களைப் ப்போல் பெண்களின் காதல் உணர்வு பூர்வமானது அறிவால் யோசித்து காதலிக்க முடியாது என்பது புரியவில்லை. இலாரியாவும் அந்த செமெஸ்டர் முடியும் முன்பே ஊரை விட்டு கிளம்பி விடுகிறாள். அடுத்த அனுபவம் அந்த ஊர் குளிர் பற்றியது. குளிர் என்றால் வெறும் ஸ்வெட்டர் போட்டுச் சமாளிக்கும் குளிர் கிடையாது. உறைபனிக் குளிர்! இ துவும் அவருக்கு சென்னையில் பழகாத குளிர். கே மார்ட்டுக்குப் போய் காலுக்குப் பூட்ஸ் வாங்கியதிலிருந்து தொடங்குகிறது குளிரின் கதை.
கே மார்ட்டில் வாங்கிய காலணியால் ஏற்படும் உபாதைகள். கே மார்ட்டில் வாங்கிய எந்த பொருளையும் திருப்பித் தந்து பதிலுக்கு புதியதாகத் தருவார்கள் என்று வங்கிய டைப் ரைட்டரை திப்பித் தந்து வேறு ஒரு புது டைப் ரைட்டர் வாங்கிக் கொள்ளும் வென்டூரா , அவன் கொடுத்த டைப் ரைட்டரை மீண்டும் விற்பனைக்கு வைத்து விட்டுப் போகும் கடைக்காரப்பெண் என்று அமெரிக்காவில் வாடிக்கையாளர்களை எப்படி திருப்தி படுத்துகிறார்கள் என்பதை தனக்கேநையாண்டியுடன் ரசிக்க வைக்கிறார். இதேபாணியில் தான் தான் வாங்கிய ஷூவும் யாரோ வாங்கி அந்த அளவு சரியாக இல்லாமல் போக அதை பேப்பர் வைத்து அடைத்து சரி பண்ணி பிறகு அப்படியும் சரியாகாமல் கே மார்ட்டில் மாற்றிக் கொண்டு போன ஷ¥ என்பதை உணருகிறார். அந்த ஷ¥வுடனே அந்தக் குளிர் காலம் முழுவதும் காலம் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம். சென்னையில் அதுவும் மழை குளிர் போன்ற இயற்கைச் சூழலை அதிகம் காணாத சூழலில் வாழப் பழகியவருக்கு அந்தக் குளிரும், புது வகையான சாப்பாடுகளும் சைவ உணவையே அதிகம் அறியாத நாட்டில் வாழ நேரிடுவது அப்படி ஒன்றும் ரசிக்கத்தக்கதாக இருந்திருக்க முடியாது. அதுவும் மத்திய வர்க்கத்து எளிமையான பிராம்மண உணவை மட்டும் உண்டு பழகியவருக்கு அந்தச் சூழலில் எத்தகைய பசி கொடுமைக்கு ஆளாக்கியிருப்பார் என்பதை சொல்லாமல் கதை முழுக்கச் சொல்லும் திறமை! ஆனால் இவற்றை மீறி சுற்றிலும் பல்வேறு நாட்டிலிருந்து வந்த இலக்கியவாதிகள், இலக்கியத்துக்கும் மேலான வேறு பல அனுபவங்களைச் சந்திக்கும் வித்தியாசமான களங்கள்! அந்த கே மார்ட்டில் போய் மிகக் குறைந்த தேவைகளுக்காக மட்டும் உள்ளே நுழையும் போதெல்லாம் ஒரு முறையாவது அந்தக் கடை பணியாளன் தூக்கிக் கொண்டு வந்து உதவி செய்யும் அளவிற்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று சைப் பட்டு அந்த சையும் அடௌ வென்டூரா என்ற பிரேசில் நாட்டுக் கவிஞனரால் பூர்த்தியாகிறது.


எத்தியோப்பியாவிலிருந்து வந்த அபே குபேக்னா எழுதிய ஒற்றன் நாவல். அதன்ஆங்கில மொழி பெயர்ப்புக்காக அலைந்து இறுதியில் அந்த நாவலின் தலைப்பை உலகப் புத்தகச்சந்தையில் இருந்த புத்தகப் பட்டியலில் பார்த்து மகிழ்கிறார். கணக்குப் பார்த்து செல்வழிக்கும் தியாகராஜனுக்கு அபே குபேகனாவின் செலவழிக்கும் திறனைப் பார்த்து பயமாக இருக்கிறது. கையில் ஆயிரம் டாலர்களுடன் யாராவது அலைவார்களா என்று அங்கலாய்க்கிறார்.
மலிவு விலைக் கடையில் வேண்டிய சாமான்களை விட வேண்டாத சாமான்களை அதிகம் வாங்கிக் குவிக்கும் அபே வாங்கிய எதையும் சமைத்துச் சாப்பிடாமல் பாக்கெட்டில் கிடைக்கும் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு எதிஅயும் சுத்தப் படுத்தாமல் கஜூகோ என்று ஜப்பானியப் பெண்ணைப் பற்றிப் பேசி அவளை தன்க்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். ‘டகரஜான்’ என்று அழைக்கும் அந்த கஜுகோ அபேயைச் சந்திக்க விருப்பமில்லை என்று சொல்லிவிடுகிறாள். அவளுக்கும் அவளுடைய ஏழடி கறுப்பு அமெரிக்கக் காதலனுக்கும் இருக்கும் விசித்திர பிணைப்பைப் பற்றி ச்சரியப்படுகிறார். கஜுகோவிடம் சற்று நெருக்கமாகப் பழகுவதைப் பார்த்து அபே பொறாமைப்பட்டு தோளில் குத்தி விடுகிறான். பெண் ஒருத்தி எல்லோருடனும் நெருக்கமாகப் பழகுகிறாள். தன்னுடன் மட்டும் ஏன் பழக மாட்டேன் என்கிறாள் என்ற ஆண்களுக்கே உரிய ஆங்காரம்! கஜுகோ தான் நடத்திய கவிதைக் கருத்தரங்கின் வெற்றியக் கொண்டாடுவதற்கு விருந்து தருகிறாள். சந்தோஷத்தின் உச்சியில் எல்லோரையும் முத்தமிடுகிறாள். அன்று இரவு அயோவாசிடியில் ஏதாவது தேர்தல் நடந்திருந்தால் கஜுகோ தான் அமோக வெற்றி பெற்றிருப்பாள் என்று கிண்டலாக எழுதுகிறார். இதற்கு எந்த நாட்டில் இருந்தால் எத்தனை இலக்கியம் படித்தாலும், படைத்தாலும் இந்த விஷயத்தில் ஆண்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்தான்!


பிராவோ என்ற பெரு தேசத்துக்காரன், தன் பெயரை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம் ஆனால் சிலி நாட்டுக்காரன் பெயராக மாட்டும் மாற்றக் கூடாது என்ற கோரிக்கையுடன் அறிமுகமாகிறான். உலக இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்தவன் இலக்கியத்துறை பேராசிரியன். அபேகுபேக்னாவிற்கு நேர் மாறாக எல்லா விஷயங்களிலும் நேர்த்தியாக திட்டமிட்டு செய்பவன். அவன் திட்டமிட்டு எழுதப் போகும் நாவலுக்கு செய்த சார்ட்டைப் பார்த்து பிரமிப்பு ஏற்படுகிறது. மேலிருந்து கீழ் வரை கட்டங்கள். ஒவ்வொரு கட்டங்களும் ஒவ்வொரு வண்ணத்தில்! அவை ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கானவை. கட்டங்களுக்குள் இருக்கும் குறிகள் அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை விளக்கும் என்று பிராவோ செய்த திட்டத்தைப் பார்த்து பிரமிக்கிறார். கடைசியில் அந்த நாவல் மிக மோசமான நாவலாக உருவெடுக்கிறது. திட்டமிடல் என்பதெல்லாம் இலக்கியத்திற்கு ஒத்து வராது. அந்த மோசமான நாவலின் பெயர் ‘மகாஒற்றன்’.


இப்படி ஒரு எழுத்தாளர்கள் எழுதிய ஒற்றன், மகா ஒற்றன் என்ற ஒரு நாவல்களின் தலைப்பையே தன் நாவலுக்கும் தலைப்பாகத் தந்து இறுதியில் சாதாரண விடை பெறுதலோடு அந்தப் பத்துப் பதினைந்து பேரோடு இனிமேல் சந்திக்க முடியாத நண்பர்களைப் பிரிகிறார்.

*********

கே.ஜெ.ரமேஷ் "ஒற்றன்" குறித்து

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ குறித்து கே.ஜெ. ரமேஷ்

இந்த புத்தகத்தை முதன் முதலில் படிக்க எடுத்த போது இதுவும் ஒரு பயணக் கட்டுரையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அசோக மித்திரன் போன்றவர்கள் மட்டுமே சாதாரணப் பயணக்கட்டுரையைக் கூட ஒரு சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த படைப்பாக உருவாக்க முடியும் என்பதை உணர வைத்த புத்தகம் இது.

கதைக்கரு, முடிச்சு என்று ஒன்று இல்லாமல் ஐயோவா பலகலைக் கழகத்தால் பல நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமர்சகர் என்று தன் குழுவைச் சார்ந்தவர்களையேப் பாத்திரங்களாக்கி அன்றாடச் செயல்களைக் கொண்டே ஒரு அருமையான படைப்பை உருவாக்கி விட்டார். இமிக்ரேஷன் வரிசையில் நிற்பது முதல் கடைசி பக்கம் வரை ஒரு நையாண்டி கண் சிமிட்டிக்கொண்டேயிருக்கிறது. காதல், நகைச்சுவை, கருணை, ரௌத்திரம், வீரம், பயம், அருவெறுப்பு, ஆச்சர்யம் சாந்தம் என்ற நவரசங்களும் இழையோடும் பல நிகழ்வுகள். அவை ஏற்படுத்தும் உணர்ச்சிகளை நம்மிடையே ஏற்படுத்தி விடுகிறது அசோகமித்திரனின் நடை.


நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள், அனுபவிக்கும் உணர்வுகள் கதை முழுவதும் நிறவிக் கிடக்கின்றன. 'எந்த புகைப்படமும் அது எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூடவேண்டியிருக்கிறது' என்ற யதார்த்தம் நம்மை புன்னகைக்க வைக்கிறது.


தீப்பெட்டியைத்தேடி அலுத்து காபி கூட குடிக்கமுடியாத அப்பாவித்தனம், மிஸ்ஸிஸ்ஸிப்பி ஆற்றில் பயணம், பயண முடிவில் புதிய நண்பன் 'வெண்டுரா' ஏற்படுத்திய அசிங்கம் என்று முதன் முதல் வெளிநாட்டுப் பயணம் ஏற்படுத்தும் நடுக்கமும், பிரமிப்பும் நீங்குவதற்கு முன்பாகவே பல அனுபவங்கள். போதாததற்கு சுத்த சைவம் வேறு. பழக்கப்பட்ட இடம், மக்கள், உணவு எல்லாவற்றையும் விட்டு விட்டு எதற்காக பல ஆயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்தோம் என்று தன்னைத் தானே நொந்து கொள்ளும் அனுபவம் அனேகமாக முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் எவருக்கும் ஏற்படக்கூடியதே. அதுவே வாசகரை புத்தகத்துடன் ஒன்றிவிடச் செய்கிறது. கவிதை வாசிப்பு நிகழ்ச்சி பற்றி நகைச்சுவையாகக் கூறினாலும் மேடையேறி பேச அழைத்தபோது அவருக்கு ஏற்பட்ட நடுக்கமும் பயமும் அடிநாதமாக வெளிப்படுகிறது. தன்னைத்தானே ஒரு மூன்றாம் பார்வையில் அலசுவதும், கலவையான பல உணர்ச்சிகளை தன் நடையின் மூலம் வெளிக்கொணர்வதும் அசோகமித்திரனின் தனித் தன்மையாக இந்த புத்தகம் முழுவதும் மிளிர்கிறது. அதே போல் குளிர்பதனப்பெட்டியில் பூண்டு வைத்ததற்காக கோபப்படும்போது தனது சகா தன் அறைக்குச் சென்று கதவை மூடியதும், 'சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே தோற்றுவிட்டவன்' என்று மிக நுட்பமாக தன்னிலையை வெளிப்படுத்துகிறார். அதே நண்பனுக்கு ஒரு துக்ககரமான செய்தி வரும்போது அவனுக்கு ஆறுதலாக இருக்கிறார். அந்த சோக கட்டத்திலும் 'அவனிடத்திலிருந்து இலேசாகப் பூண்டு வாசனை வந்து கொண்டிருந்தது' என்று எழுதுவதின் மூலம் மனித மனத்தின் விசித்திரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார்.


இன்னொரு கட்டத்தில் இத்தாலியப் பெண் இலாரியாவிடம், 'கற்பனை மயக்கமாகாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. இரண்டிற்கும் இடையே மிகத் துல்லியமான மாறுபாடு தான் இருக்கிறது. நாம் தான் வேறுபடுத்திக் கொள்ளவேண்டும்' என்று கூறுவதும் மனித உறவுகளும், உறவுகளால் ஏற்படும் சிக்கல்களும் மிகத்துல்லியமாக அவரது எழுத்தில் வெளிப்படுவதைக் காட்டுகிறது.


வெண்டுராவிற்கு தட்டச்சு இயந்திரம் வாங்க உதவி செய்வதும், அது சரியாக வேலை செய்யாமல் போனதற்கு இவரே காரணம் என்ற தொனியில் அவன் பேசுவதும் மனிதர்களைப் புரிந்து கொண்டவர்களுக்குப் புதிதல்ல. ஆனால் கே மார்ட்டில் இவர் சண்டையிடும் நோக்கில் கோபமாகப் பேசத் தொடங்கியவுடன் மறுபேச்சு பேசாமல் தட்டச்சு இயந்திரத்தை மாற்றிக் கொடுத்து பழையதை மறுபடி விற்பனைக்கு வைப்பது நல்ல எதிர்மறை உச்சக்கட்டம்.


எவ்வித நியாயமான காரணங்கள் இல்லாத போதும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மட்டுமே விரோதத்தைத் தூண்டமுடியும் என்பதை அபே குபக்னா சம்பந்த்தப்பட்ட காட்சிகளில் மிகச்சுவையாக எழுதியிருக்கிறார். எப்படியாவது அபேவிற்கு ஏற்பட்ட தப்பான அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கஜூகோவை ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அதற்கு அபே குபக்னாவை அவளையே அழைக்கச் சொல்லிவிடலாம் என்ற முயற்சியும் தோல்வியில் முடிகிறது. பிறகு பலமுறை அபேயைப் பார்க்க நேரிட்டாலும் அவனிடம் அடி வாங்கிய தோள் அவரை அபேயிடம் பேச விடாமல் தடுத்து விடுகிறது. கடைசியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அபே குபக்னா எத்தியோப்பியாவிற்கு சென்று விடுகிறான். ஆனால் நம் நாயகனுக்கு அபே குபக்னாவிடம் கஜூகோவிற்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணத்தை அறிந்து கொள்ளவே முடியாமல் போகிறது.


தென் அமெரிக்காவில் இலக்கியத்துறைப் பேராசிரியராக பணிபுரிந்த பிராவோ எல்லாவிதத்திலும் அபே குபக்னாவிற்கு நேர் எதிரானவன். ஆனால் அவனுக்குப் பிடிக்காத அவன் நாட்டின் பழைய எதிரி நாட்டிலிருந்து வந்தவனின் பெயரால் அவனை அழைக்கவே அவனுக்கும் அசோகமித்திரனிடம் வருத்தம் ஏற்படுகிறது. எவ்வளவு பகையுணர்ச்சி இருந்தாலும் நேருக்கு நேர் சந்திக்கும்போது பிராவோவும் டொமிங்கஸ்ஸ¤ம் ஸ்பானிஷ் மொழியில் அன்பு பொங்க பேசுவதை அவருக்கே உரிய கிண்டலுடன் 'பரம்பரை விரோதிகளுக்கு இருபதாம் நூற்றாண்டு மிகவும் சங்கடமான காலம்' என்று கூறுகிறார். பிராவோ எழுதப்போவதாகக் கட்டியம் கூறிய 'மகா ஒற்றன்' நாவலை ஒரு எலக்டிரானிக் சாதனத்தின் சர்க்யூட் போல வரைபடத்தில் வரைந்திருந்ததைப் பார்த்து அவனிடம் ஏற்பட்ட பிரமிப்பு அவனுடைய மனைவிக்கே அந்த புத்தகம் பிடிக்கவில்லை என்றறிந்த போது வடிந்து விடுகிறது. இதற்கிடையில் பிராவோவை நெருக்கமாக ஒரு பெண்ணுடன் பார்த்து அவள் தான் அவனுடைய மனைவி என்ற யூகம், அவனுடைய உண்மையான மனைவி வருகிறாள் என்றும் அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி தன் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்று பிராவோ கேட்டுக் கொள்வது, ஒன்றுமே நடவாதது போல் மனைவியிடம் அன்பு செலுத்துவது என்று மனித மனங்களின் வினோதங்களை அப்பட்டமாக விவரிக்கிறார்.


கடைசியாக ஜிம் பார்க்கரிடம் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் மாட்டிக்கொண்டு திண்டாடுவதைப் பற்றி எழுதும்போது அமெரிக்காவில் பொருளாதார அடிமட்டத்தில் வாழும் மக்களின் அவலநிலையை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்.


சில இடங்களில் காலக்கிரமப்படி வரிசைப்படுத்தாமல் நிகழ்வுகளை எழுதியதால் ஏற்பட்ட சிறு குழப்பத்தைத் தவிர, இந்தப் புத்தகம் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகங்களில் ஒன்று.


********

ரெ.பாண்டியன் : விமர்சனம்: அசோகமித்திரனின் "ஒற்றன்"

விமர்சனம்: அசோகமித்திரனின் "ஒற்றன்!" :

மார்க் டுவெயினுக்கு விடைகொடுத்த கரை தெரியாத மிசிசிப்பி நதி
ரெ.பாண்டியன்

1. அமெரிக்கா எனும் மனபிம்பத்தின் சிதம்பர ரகசியம்

அமெரிக்கா என்றால் எழுபதுகளின் மனிதர்களுக்கு ஒரு பிம்பம் இருந்தது : அது ஒரு பணக்கார, நவநாகரீக, உயர்தரமான அமைப்பு என்பது அது. ஆனால், அங்குள்ள கே-மார்ட் கடை ஊழியர்கள் அதனை ஒரு மோஸ்தரான காயலான்கடையாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு பரிச்சயமான காட்சி, அந்த பிம்பத்தில் ஒரு உடைவை ஏற்படுத்துகிறது.

அந்த சமூகத்தின் தினசரி அமைப்பிற்குள் ஒரு பரிச்சயத்தை அடைய ஒருவன் மேற்கொண்ட பிரயாசைகள் அனைத்தும் அவனது அனுபவ தோகையில் ஒரு புதிய இறகாக மாறி, ஒரு புன்னகை பிறக்கிறது.

பிடிபடாதிருந்த வெவ்வேறு காட்சிகளும் அனுபவங்களும் ஒரு ஞாபகக்கோர்வைக்குள் பழைய சாதனையாக இடம்
பெறதொடங்குகிறது. எதோ ஒரு கள்ளச்சாவியின் அசம்பாவித திருகலில் அனைத்து மர்மக்கதவுகளும் திறந்துவிடும் போது, ஒரு கணம் மூர்ச்சையாகும் மௌனம்.

இதைப்போல

அ) amongst others, Picasso கண்காட்சி ( இது நம்ம ஊர் கில்லாடிகள் மாதிரினா இருக்கு )

ஆ) "எப்பொழுதும் லேட்டாக வந்து சேரும் விவரம் தெரியாத இந்தியர்கள் !" என்கிற ஏளனத்தோடு நடந்துகொள்ளும் ஜான், வெண்டுராவின் வாந்தியை துடைத்து சுத்தப்படுத்த கிடைத்த உதவிக்குப்பிறகு, காட்டும் நட்புணர்வு.

இ) புகைப்படத்திற்கு பொருத்தமில்லாத முகம் கொண்ட வெள்ளைக்காரி காட்டும் இலகுபுன்னகை; அதுவரை தனது புகைப்படத்தைப் பற்றி வெட்க உணர்வு கொண்டிருப்பவன், இப்பொழுது அது மோசமில்லை என்பதோடு, அதில் இளமைக்களையையும் காண்கிறான். (என்னைப்போல் ஒருத்தி!)

அமெரிக்காவைவிட்டு "நான்" திரும்பிவரும்போது, அந்த மனப்பிம்பம் வெளிறிப் போயிருக்கிறது : அந்த சமூகத்தின் உள் அமைப்பும் அதன் பலவீனமான முனைகளும் தன்னுடைய மண்ணின் இன்னொரு சாயலாக தெரியத் தொடங்குகிறது. அத்தோடு அந்த வேறொரு சாயல் அமைப்பில் பிழைத்துக் கொள்வதற்கான சில அடிப்படைத் திறமைகளைப் பெற்றவனாக "அவன்" திரும்புகிறான்.


ஒரு அந்நிய சமுக அமைப்பின் பலங்கள், பலவீனங்கள், தனித்துவங்கள், போலித்தனங்கள், மோஸ்தர்கள் அத்தனையையும் ஊடுருவிப் பார்த்துவிட்ட மனிதனாக (ஆகா, தலைப்பு கிடைத்துவிட்டது -- "ஒற்றன்!" ) "அவன்" திரும்புகிறான்.

இந்த தலைப்பை வாசகன் அசோகமித்திரனிடமிருந்து மட்டுமே எதிர்பார்க்க முடியும் : அன்றாட வாழ்வில் விசேஷமாக எதுவும் நடைபெறாதது போல தோற்றமளிக்கும் நிகழ்வுகளின் ஊடாக வாழ்வின் மர்ம நகர்வுகளை நுணுக்கமான பதிவுகளாய் தந்திருப்பவர் அசோகமித்திரன். அலைக்கழிப்பின் ஊடாக கிரகிப்பையும், கிரகிப்பில் பிறக்கும் விகாசத்தில் மனபிம்பத்தின் மர்மம் உடைவதையும் தெரிவிக்கும் சொல் - ஒற்றன்!

2. நான் ஏன் இவ்வளவு அசடாயிருந்தேன் ?

இருப்பது அசலூரில்; பிராணவாயுக்கு அடுத்தபடியாக தேவைப்படுவது கடிகாரம்; பழுதானதை சரிபார்க்க வழியில்லை; பதினைந்து டாலருக்கு நேரம் காட்டும் பேனா; அது தொலைந்து விடுவது பெரும் பதட்டத்தை தந்துவிடுகிறது. throwaway culture-ன் (பழுது பார்க்கும் செலவிற்கு நுகர்வோரை புதியதை வாங்கத் தூண்டும் அமெரிக்க வணிக கலாச்சாரம்) கொடுமுடியான அமெரிக்காவில் எங்கே சென்று ஒன்றை பழுது பார்க்க முடியும் என்பதை யாரும் சொல்ல முடியாதிருப்பதும், டாலரில் செலவு செய்து வாங்கியதை தொலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சுய பொருளாதார நிலையும் நிதானத்தை இழக்கச் செய்துவிடுகிறது; கடும் பனியிலும் இருட்டிலும் தெரியாத ஊரின் தனிமையிலும் அவதியை சம்பாதிக்கவேண்டிவருகிறது.

அந்நிய சூழலில் ஒருவனுக்கு தன்னுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இருக்கும் மிகவும் குறுகலான வெளிகள் அவனை மனரீதியாக பாதித்து, நிதானத்தை இழக்க செய்து, துன்பத்தை சுமத்திவிடுகின்றன.

இதற்கெல்லாம் ஒருவன் தன்னைதானே கையாலாகாததனமாய் (ஆனால் பொருத்தமற்றதாய்) கேட்டுக் கொள்ளக்கூடிய கேள்வி : நான் ஏன் இவ்வளவு அசடாயிருந்தேன் ?



3. யார் அவன் ?

" நானி"ன் முகத்தை ஓவியமாக வரையும் அனுபவம் ஜிம்முக்கு ஒரு சாகஸம்தான்; ஆனால், அதற்கு அனுமதி பெறாமலே, "நானை" எல்.ஏ.க்கு அலைய வைத்து ஒரு கொலை முயற்சிவரையிலான சிக்கலில் மாட்டிவைத்துவிடுகிறான். ஜிம்மும் சூசியும் வசிக்கும் மாளிகையும், ஓட்டும் காரும் அவர்களுடையது அல்ல; அவர்களின் உறவும் கூட.

சம்பந்தமே இல்லாதவன் கொலை செய்ய வருகிறான். கொலை செய்ய வருபவனும் அதை எதிர்பார்த்திருப்பவனும் துப்பாக்கி சகிதமாய் வந்து போகின்றனர். இரு துப்பாக்கிகாரர்களில் உண்மையான கொலைகாரன் யார்?

"நானி"ன் முகத்தை வரைவதில் ஆவேசம் கொண்டிருந்த ஜிம்மின் கவனம் கலைவதற்கு காரணமாயிருந்த "நானி"ன் முகம் கண்ணாடி அறையில் சுடப்பட்டு சிதறும் கற்பனையை ஜிம் சொல்லிக்காட்டுகிறான். நடக்கவிருந்த அசம்பாவிதம் ஒன்றுக்கு மிகவும் பரிவுடன் "நானி"டம் நடந்துகொள்கிறான்.

வாழும்விதம் பற்றி, உறவுகள் பற்றி, ஏன் பகைமைப் பற்றி கூட எந்த தொடர்ச்சியும் இல்லாத திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை -இதையெல்லாம் எந்த கணத்திலும் அணைத்துவிடக்கூடிய துப்பாக்கியை சதா உடலில் சுமந்துதிரியும் நோய்க்கூறான மனிதர்கள் - அமெரிக்காவில் விளிம்பில் வாழும் சமூகம் பற்றிய அனுபவம் ஒரு மின்னலடித்த இரவில் தெரிந்த காட்சியாய் வந்து போகிறது.


4. எல்லோரும் எழுத்தாளர்தாமா ?

அமெரிக்காவை பற்றிய மனப்பிம்பம் போலவே தடம் புரளும் மற்றொரு கற்பனை எழுத்தாளர்கள் பற்றியது.

பிராவோ உலக இலக்கியங்களை 'கரைத்துக் குடித்தவன்' ; பேராசிரியன். அட்டவணை போட்டு தொடங்கிய மகாநாவல் வெளியில் சொல்ல முடியாத குட்டிக்கதையாகிவிடுகிறது.

அபே தனது எழுத்தைப் பற்றி மட்டும் கவலைப்படுபவன்; பிறரின் எழுத்தை ஏறெடுத்தும் பார்க்காதவன்; பணக்கார தோழமையின் தயவில், எதையும் அனுபவித்து பார்த்திராத மனவறுமையை ஒரேயடியாக தீர்த்துக் கொள்ள நினைப்பவன்.

கஜுகோ எல்லோர் மீதும் அன்பை பொழிபவள், ஆனால்,அவளது கவிதை நிகழ்வு முதிர்ச்சியற்றதாய் இருக்கிறது.

சே தன்வயமானவன்; தன் மொழிக்கு வெளியில் எட்டிப்பார்த்திராதவன். சுத்தமாக இருப்பதற்கும் வறுமைக்கும் இன்னும் வித்தியாசம் உணராத 'நான் ஏழை' புகழ் வெண்டுரா.

அபே எதியோப்பியாவின் முக்கியமான எழுத்தாளன் ; ஆனால், கஜுகோவிடம் அவன் உடல் முள்ளம்பன்றிபோல் சிலிர்த்துக்கொள்கிறது.

'எழுத்தாளன்' என்கிற ஒற்றை பதத்திற்குள் இத்தனை வகை மாதிரிகள் கொள்ளுமா ?

5. நான் x அவர்கள்

"நான் X அவர்கள்" என்கிற கதை சொல்லும் கோணத்தில், "நான்" என்னதான் கட்டியக்காரன் வேஷம் தாங்கினாலும், "அவர்களி"ன் ஸ்தாயியை உயர்த்த முயன்றாலும், "நானி"ன் பார்வையை எழுத்தாளன் நிறுவ முயல்கிறான் என்கிற சாயல் படிந்துவிடுகிறது.

"நான்" தனது புறவாழ்வை பெரும் பிரயாசைக்குப்பிறகு, ஒரு புகைப்பட நுணுக்கத்தோடு அறிந்துவைத்திருப்பவன். அகவாழ்வில், இந்த புறவாழ்வு தரும் தடுமாற்றங்கள் தவிர, சலனமற்று இருப்பவன். பிறர் வாழ்வில் ஏற்படும் சூறாவளிக்கு, மனசாட்சியாய் நின்றிருப்பவன்.

"நான்" ஒரு சாதாரணனின், கோபமே இல்லாத(angst-absent) அறிவுஜீவி; அதிகபட்சம், தனது போதாமை பற்றிய சிறு இமைச்சிலிர்ப்பே அவனது நெற்றிக்கண்ணின் எல்லை.

"அவர்கள்" யாரும் எழுத்தாளர்களாக "நானை" எந்த பொழுதிலும் ஆச்சரியப்படுத்துவதில்லை; தனி மனிதர்களாக, இலாரியா creative writing கற்றுக்கொள்ள செய்யும் செலவுகளும் மேற்கொள்ளும் உதிரித் தொழில்களும், பிராவோ போடும் அட்டவணைகளும் அபே குபேக்னா பணக்கார இளவரசத் தோழனின் தயவில் செய்யும் ஆடம்பரமும் தான் , "நானை" ஆச்சரியப்படுத்துகின்றன.


வரித்துக்கொண்ட வித்தையில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்களான விக்டோரியாவும் அபே குபேக்னாவும் "நானி"ன் மதிப்பை பெறுகின்றனர்.


6. உயிரினும் ஓம்பப்படுவது

அசோகமித்திரன் தலைமுறைவரையிலான எழுத்தாளர்களிடம், அதே காலக்கட்டத்தைச் சேர்ந்த மேற்கத்திய எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது, தனிமனிதனின் காமம் சார்ந்த தடுமாற்றங்கள் இலைமறை காயாக, மன பிறழ்வாகவே பெரும்பாலும் பதிவாகியிருக்கிறது. (ஆதவன், இவர்களின் ராஜபாட்டையிலிருந்து பிரியும் முதல் ஒத்தையடிப் பாதை; தி ஜானகிராமனில் தனக்குத்தானேகூட காமம் ஒப்புக்கொள்ளப்படுவதில்லை; அது நிறுத்திவிடமுடியாத மனதின் சஞ்சலமாகவே அலைக்கழித்துக்கொண்டிருக்கும்)

இலாரியா மீது வபின்ஸ்கிக்கு இருக்கும் மூச்சுத்திணறல், கஜூகோ மீது அபே குபேக்னாவுக்கு தோன்றும் கடுங்காதல், இலாரியாவுக்கு 'நான்' மீது முகம் சிவந்து விரிய ஏற்படும் துடிப்பு, பிராவோவுக்கு ஸ்பானிஷ் தட்டச்சுக்காரியின் மீது ஏற்படும் க்ரியா ஊக்கம் - இந்த உடல் சார்ந்த தடுமாற்றங்களிலிருந்து "நான்" விலகியே செல்கிறார்.

கோபமே இல்லாத, சாதாரணனின் அறிவுஜ“வி ஒழுக்கம் சார்ந்த தடுமாற்றங்களும் இல்லாதவர்தான். angst-ridden போலவே rom ance-ridden னும் தான்;

நவீனத்துவ பண்புகள் கேள்விக்குள்ளாக்கப்படும் இன்றைய காலத்தில் இதனை 'நானி"ன் ஒழுக்கவியல் பார்வை என்று சொல்ல இடமிருந்தாலும், சக மனிதர்களின் தடுமாற்றங்கள் மிகையின்றியே பதிவாகியிருக்கின்றன.

7. அமானுஷ்யமே வந்து மண்டியிட்டாலும்

கவித்துவத்துக்கு எம்பாத நடை அசோகமித்திரனுடையது. அதனை நிர்தாட்சண்யமாய் நிராகரித்துவிடுவது. அகவுலக தரிசனங்களை பீடத்தில் அல்ல, ஒரு கணுக்கால் உயர கல் மேடையில் ஏற்றிவைக்கவும் கூட உள்ளூர கூசுவது.

உலகின் அமானுஷ்யம் கூட அசோகமித்திரனின் நிலைக்கு இறங்கி வந்து, அவரது பேனாவின் நிப்பை சுற்றி வாலைக் குழைத்துக் கொண்டு தான் கிடக்கவேண்டும். அந்த நிலையிலும் , " அட பாவமே, இது எவ்வளவு உயரத்தில் எவ்வளவு வசதியுடன் இருந்தது, இப்படி இங்கே வந்து பழிகிடக்க எவ்வளவு துன்பமாயிருக்கும் ? பார் அதற்கு இன்னும் வாலை சரிவர சுருட்டிக்கொள்ளக்கூட வரவில்லை " என்று தனது காலடியிலிருந்தே அசோகமித்திரனின் (அடுத்த கதையின்) வரி கிண்டலுடன் எழ தொடங்கும்.

8. பயண அனுபவமா? நாவலா?

தமாஷ், வருத்தம், விநோதம் ஆகியவை பயண அனுபவங்களின் சாரமாக இருக்கும்; பயணம் செய்திராத, கற்பனைத் திறன் உடைய வாசகனை அவை வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைத்து இன்பம் தரும். பரந்துபட்ட வாழ்வின் விநோதமே பயண அனுபவ எழுத்தாளனையும் வாசகனையும் இணைக்கும் பொது தளம்.

ஆனால், நாவலில் எவ்வளவு விரிந்த அனுபவங்களுக்கும், எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லும் ஒரு பார்வை வாய்த்திருக்கும், அசோகமித்திரனின் கட்டுரைகளின் பொதுதன்மை புனைகதையின் நுணுக்கமான விவரிப்பும் முத்தாய்ப்பும். அப்படி கட்டுரையாகத் தொடங்கிய ஒன்றே நாவலாய் வளர்ந்து முடிந்திருக்கிறது.

"ஒற்றன்!" நாவல் எழுபதுகளின் அமெரிக்காவை / அயோவா நகரத்தை ஒரு தமிழன் தெரிந்துகொண்டவிதம் பற்றிய பதிவாக காலங்காலத்திற்கும் நின்று கொண்டிருக்கும்.


**********

ரெ. செல்வம்: அசோகமித்திரனின் "ஒற்றன்"

விமர்சனம் : அசோகமித்திரனின் "ஒற்றன்!"

நிரப்பப்படாத இடைவெளியும் தொடர்ச்சியும்
ரெ.செல்வம்


மனிதவாழ்வின் மிக நீண்ட இருப்பு அவனால் உருவாக்கப்படும் கேள்விகளும் கண்டடையும் விடைகளுமாகவே தொடர்கிறது. அவ்வாறே சிறந்த கலை இலக்கிய படைப்புகளும் வாசகனின் அகமனதில் பிரதிகளின் இடைவெளிமூலமாக வாழ்வியலின் தத்துவார்த்தமான கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. அவற்றிற்கான பதில்களை சில தருணங்களில் நாம் கண்டடைந்தாலும் அது முழு முற்றானதாக அமைந்துவிடுவதும் இல்லை.
அசோகமித்திரனுடைய ஒற்றன்! நாவலை வாசிப்பதற்கு முன்னால் வாசக மனம் ஒரு பொதுமையான கருதுகோளை அவருடைய முன்னைய எழுத்துக்களின் மூலம் அடைய வேண்டியிருக்கிறது. குறிப்பாக அவருடைய நாவலுக்குரிய மொழி மிக வெளிப்படையாக இருப்பினும் மிக கவனமாகவே வாசிக்கவேண்டியிருக்கிறது. இல்லை எனில், இந்நாவலில் இட்டு ரப்பப்படாத பக்கங்களை அதன் ரகசியமான கழ்வுகளை தவறவிடக்கூடிய சந்தர்ப்பமாக அமைந்துவிடக் கூடும். குறிப்பாக, இந்நாவல் உருவான காலக்கட்டத்திற்குரிய உலக நாடுகளின் உறவுச்சிக்கல்கள், சமூகங்களுக்கு இடையிலான முன்முடிவுகள் மீதான கருதுகோள்கள் ஆகியவற்றை கவனப்படுத்துவது போன்றவை. வியாபகமான சமூகங்களின் இடையில் ன்றுகொண்டிருக்கும் நமக்கு பழகிப்போன சமூகத்தின் மனம் தெளிக்கப்பட்ட காட்சிகளின் பின்புலமாக இருந்து ஒரு பார்வையாளன்போல அது செயல்படுகிறது. இந்நாவல் அடையாளப்படுத்தும் குறியீடுகள் செருப்பு, மூடுபனி என நீண்ட வரிசையாக தொடரலாம்.


அவை உருவாக்கும் கவனமின்மைக்கு இடையிலான வலி இடப்பெயர்வுக்குரிய வலியாக அதன் காரகளான ஒவ்வாமை, ராதரவு, பலகீனப்படல் போன்றதாக கொள்ளலாம். மூடுபனி வன்முறையற்ற கதையாடலுக்குரிய முகங்களின் பின்னால், இருக்கக்கூடிய உறுதிப்படுத்தப்படாத வன்முறை இங்கே சில நிகழ்வுகளை நாம் தெளிவு படுத்திக்கொள்ளலாம்.

பெரிய ஆயுதங்களுக்கு இடையிலானது மட்டுமில்லை வன்முறை. அது சாதாரண கை குலுக்கலில், அறிமுகங்களில் உதிர்க்கப்படும் பெயர்களில், திட்டமிடப்படாத ஒரு சொல்லில்கூட அது பதுங்கியிருப்பதாக கொள்ள வேண்டியுள்ளது. முழு முற்றாக தனது சமூகத்தை கண்ணாடியைப் போல ஆவனப்படுத்த வேண்டிய எழுத்தாளன் தம் உணர்வுச்சிக்கலில் விலகிப்போய்விடுகிற தருணங்கள் மற்றும் பொறுப்பற்ற உணர்ச்சிப் பிண்டமாக மாறிவிடுவதை காணமுடிகிறது.


நாவலாசிரியரின் பூண்டு போன்ற உணவுப்பழக்க வழக்கங்களில் தர்ச்சார்புடைய லை யூகங்களை உருவாக்க கூடியதாக அமைகிறது. நீண்ட விவரணையற்ற கதை அமைப்பு குறிப்பிடபட வேண்டிய ஒன்று. இறுதி பாகங்களின் மேரி தம்பதிகளின் செயல்பாடு. ரூவாண்டாவிலிருந்து தொடங்கும்போது அது அலெக்ஸ் ஹய்லியின் "ரூட்ஸ்" நாவலை னைவுப்படுத்துகிறது. சுயமற்ற ரூவாண்டாவில் பிடிக்கப்பட்ட ஒரு அடிமை தன் மேல் சுமத்தப்படும் நகர்வுகளை எதிர்ப்பின்றி, தயார் நிலையில் முன் இருப்பது ஒற்றன் நாவலிலும் அது தொடர்வதாகவே உணரமுடிகிறது. இன்னும் செய்தியும் அதன் முகங்களும் இடைவெளிகளை இட்டு நிரப்பாமல் தொடர்வதாகவே உணரமுடியும்.

*******

"வாசிப்போம் சிங்கப்பூர்! "வாசகர் வட்ட கூட்டம்

4 ஜூன் 2006 வாசகர் வட்ட அமர்வின் தொகுப்பு: ஜெயந்தி சங்கர்

அசோகமித்திரனின் 'ஒற்றன்' மற்றும், உள்ளூர் எழுத்தாளாரான புதுமைதாசனின் சிறுகதையான 'உதிரிகள்' ஆகிய இரண்டும் ஜூன் வாசகர் வட்டத்திற்கென்று சென்ற வாசகர்வட்டத்தில் தெரிவு செய்யப்பட்டன. இவையிரண்டும் சிங்கப்பூர் நூலக வாரியம் ஏற்பாடு செய்திருக்கும் 'வாசிப்போம் சிங்கப்பூர் 2006' இயக்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட படைப்புகள். இதில் மூன்றாவது படைப்பு சாகித்ய அகாதமி விருது பெற்ற திலகவதியின் 'கல்மரம்'.


உதிரிகள் சிறுகதைத் தொகுப்பு வாசகவட்ட நண்பர்களுக்குப் படிக்கக் கிடைக்காததால் ,அந்த ஒரு சிறுகதையின் பிரதிகள் எடுக்கப்பட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டன. இதுகுறித்த கலந்துரையாடல் அடுத்த வாசக வட்டத்திற்கு என்று முடிவெடுக்கப்பட்டது.


நூலக வாரியத்தின் அதிகாரி புஷ்பலதா ஒரு கேள்வியை முன்வைத்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட 'ஒற்றன்' உலகமயமாகியிருக்கும் இக்காலத்திற்குப் பொருந்துமா?


இந்தக் கேள்வியின் அடிப்படையிலேயே விவாதத்தைத் துவங்கலாம் என்று ரே. பாண்டியன் சொன்ன யோசனையின் பேரில் வழக்கமான கட்டுரைகளை வாசிக்க ஆரம்பிப்பது போலில்லாமல் நேரடியாக கலந்துரையாடல் துவங்கியது.


கல்கியின் பொன்னியின் செல்வனை நாம் இன்றும் ரசிக்கிறோமே, 20 வருட இடைவெளியெல்லாம் ஒரு பிரச்சனையா என்று தொடங்கி அவரவர் அவரவர் கருத்துக்களைச்சொன்னார்கள். இன்றும் ஒற்றன் ரசிக்கும்படியிருப்பதற்கு அசோகமித்ரனின் subtlehumour ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.


அசோகமித்திரன் நூலில் மற்றவரை திறந்துவிட்டு, தன்னை மூடிக்கொண்டுள்ளார் என்றார் மணிவேலன். மாணவி இலாரியிடம் பேசுமிடத்தைத் தவிர என்றும் நினைவுபடுத்திக்கொண்டார்!
அசோகமித்திரனுக்கு எதிராகத் தான் பேசுவதாக யாரும் நினைக்கவேண்டாம், எனக்கு அவரின் எழுத்துக்கள் பிடிக்கும், 'பிரயாணம்' என்ற அசோகமித்ரனின் படைப்பு உலகத்தரம் வாய்ந்தது என்று கருதுவதாவும் பெருமையோடு சொன்னார். (வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கும்போது இவர் சொன்னது --- 'காஞ்சனை'க்குபுதுமைப்பித்தன் எழுதிய முன்னுரையைப் போல இதுவரை எழுதப்படவேயில்லை என்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.)

" இல்லையே, தன்னை ஒரு முட்டாள் என்று தானே சொல்லிக்கொள்கிறார் அசோகமித்திரன்" என்றார் மானசாஜென்.

"அசோகமித்திரன் தன் படைப்புகளில் ஓங்கிப்பேசுவதை நாம் பார்க்க முடியாதும் என்றும் ஒற்றனில் தன்னை சாதாரணமானவன் என்று சொல்லிக்கொண்டே அசாதாரணமானவன் என்று நிறுவிக்கொள்கிறார்," என்று சொன்னார் இன்னொரு வாசகர். இவர் புதிய படமான புதுப்பேட்டையைப் பற்றிக் குறிப்பிட்டு ஏதோ சொல்லவந்தபோது நல்லவேளை விவாதம்முற்றிலும் வேறு தளத்திற்குப்போகாமல் சரியான நேரத்தில் கடிவாளம் இழுக்கப்பட்டது.


பொதுவாக முன்வைக்கப்பட்ட கருத்து அசோகமித்ரன் மனிதனை மனிதனாகப் பார்க்கிறார். அவனிடமிருக்கும் குறைநிறைகளோடு ஏற்கிறார். முக்கியமாக ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட ஏதோ ஒரு நல்லதைக் கவனிக்கிறார் என்றார் ரே. பாண்டியன்.


ஒவ்வொரு அத்தியாயமும் தன்னிறைவு கொண்ட ஒரு சிறுகதையாக அமைந்துள்ளது மிகச் சிறப்பு என்று எல்லோரும் ஒருமனதாக ஒத்துக்கொண்டனர்.


70களில் முதல் முறையாக அமெரிக்காவுக்குப் போகும் ஒருவரின் அனுபவங்களின் பதிவுஎன்றே இந்நூலை நாம் பார்க்கவேண்டும் என்று ரே. பாண்டியன் சொனார்.
மானசாஜென் தன் கட்டுரையைப் படித்துமுடித்தபிறகு கலந்துரையாடல் கொஞ்சம்'தியானம்' என்ற திசையில் திரும்பியது. மானசாஜென் தன் கட்டுரையை வழக்கம்போலஆன்மிகப்பார்வையில் கொடுத்திருந்தது ஒரு காரணம் என்றபோதிலும் திபெத்திய தியானவகையைக் குறிப்பிட்டிருந்ததால், அது குறித்த விளக்கம் ஒன்றை மணிவேலன் வேண்டமானசாஜெனும் விளக்கினார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒரு நிலையை அடையவேண்டும்என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால் அவ்விடத்தை அடைவது மிகவும் சிரமம் என்று தான் கருதுவதாக ஆணித்தரமாகச் சொன்னார் மணிவேலன்.


இந்த இடத்தில் மாதங்கி சோவின் ஒரு படைப்பினைப் பற்றி சொன்னார்.
பொதுவாக தியானம் என்பதெல்லாம் அனுபவம் சார்ந்த விஷயம். சொல்லித் தரவோ, அனுபவத்தைப் பகிரவோ செய்வது எளிதல்ல என்றார் வாசகர்.
விவாதம் கொஞ்சம் திசை திரும்பியதைப் பார்த்த ப்ரசாந்தன் ஒற்றன் என்ற பெயரைத் தெரிவு செய்யக்காரணம் என்ன என்ற கேள்வியைகேட்டதும் மீண்டும் ஒற்றனுக்கு வந்தார்கள்.


மூன்றாம் உலகநாட்டிலிருந்து ஒரு மனிதன் முன்னேறிய ஒரு நாட்டிற்குள் போய் பார்க்கிறான் என்று விளக்கம் கொடுத்தார் மானசாஜென்.

ஒற்றன் என்ற தலைப்பு தன்னில் கொஞ்சம் வேறு மாதிரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்று சொன்னார் மூர்த்தி. அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்கொண்டு போய்விட்டது என்றும் சொல்லி முடித்தார். 70களில் கம்யூனிஸம் உச்சத்தில்இருந்தது. அதைப்பற்றி தான் ஏதேனும் எழுதியிருக்கிறாரோ என்று எதிர்பார்த்தாராம். அதைப்பற்றி ஒரு இடத்திலும் குறிப்பிடக்கூட இல்லையே என்று குறைபட்டுக் கொண்டார். சுஜாதாவைப் போல அசோகமித்ரனும் அரசியலைத் தொடாமல் நழுவுகிறார். சுஜாதாவாவது ஆங்காங்கே கிண்டலாகத் தொட்டிருப்பார். இவர் முற்றிலுமே தவிர்த்திருக்கிறார் என்றார். அரசியல் இல்லை என்பதே பெரிய அரசியல் என்றார். ஒரு படைப்பாகப் பார்க்கும் போது தனக்கும் பிடித்துத் தான் இருக்கிறது என்று முடித்தார்.


இதற்கு வேறொரு வாசகர் கோபால் விளக்கமளிக்கும் போது, ஒற்றனுக்கு கம்யூனிஸம் தேவையாக இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் நிலவியவற்றையெல்லாம் தொடவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும், அவசியமில்லையே என்றார்.


அசோகமித்ரனின் நகைச்சுவையுணர்வு தவிர ஒற்றன் என்ற தலைப்பினைப் பற்றியும் கே-மார்ட் விவகாரம் குறித்துமே அதிகம் பேசப்பட்டது.


வாசகர்வட்ட நண்பர்களின் சிறுகதைக்கு 20 நிமிடங்கள் ஒதுக்குவோம் என்ற தன் கருத்தை பொது விஷயங்களுக்கு வந்த போது மாதங்கி முன்வைத்தார். அதற்கு முதல் கதையாக தனது கதையையே கொடுப்பதாகவும் சொன்னார். முதலில் தயங்கினாலும் பிறகு மானசாஜென் சோதனை முயற்சியாகச் செய்து பார்ப்போம் என்று ஒத்துக்கொண்டார்.
வாசகர் வட்டம் வலைப்பதிவினை இயக்கத்தில் வைத்துக் கொள்ள ஏதேனும் பதிவுகள் இடவேண்டும். தன்னிடம் அனுப்பினால் தானே இடுவதாகச் சொன்னார் மானசாஜென். இல்லையானால், அவரவரே கூட பதியலாம் என்றார். அப்போது கடவு எண் போன்றவற்றை எல்லோருக்கும் கொடுக்க வேண்டாம் என்று சித்ரா ரமேஷ் எச்சரித்தார்.




அப்போது, "வாசகர் வட்டத்தில் உரைநடைக்கு மட்டும் தான் இடமா, கவிதைக்கு இல்லையா?" என்று கேட்டார் ஜெயந்தி சங்கர். படைப்பாற்றலை வளர்க்க உதவக்கூடிய எல்லா கலைகளையும் அமர்வுக்கு கொண்டுவரலாம் என கூட்டத்தினரால் முடிவு செய்யப்பட்டது.


ஒற்றன் படிக்கவில்லை என்றும் படித்து முடித்த கல்மரத்தினைப் பற்றி தன் கருத்துக்களை எழுதிக்கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லிவிட்டு, கடைசியில் திலகவதியின் கல்மரம் கட்டுரையை வாசித்தார் ஜெயந்தி சங்கர்.

அடுத்த வாசகர்வட்ட கூட்டம்

நண்பர்களே!


ஒரு நினைவூட்டல், வரும் வாசகர் வட்டத்தின் கூட்டம் 04-06-2006 ஞாயிறு மாலை 4 மணிக்குத் துவங்கி 7 மணிவரை நிகழும், தேசிய நூலகத்தின் 'வாசிப்போம் சிங்கப்பூர்' கொண்டாட்டத்தில் தெரிவு செய்யப் பட்டிருக்கும் அசோகமித்ரனின், 'ஒற்றன்' நாவலும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளரான புதுமைதாசனின் (P.கிருஷ்ணன்) "புதுமைதாசன் சிறுகதைகள்" என்ற தொகுப்பில் உள்ள "உதிரிகள்" என்ற சிறுகதை ஆகியவற்றை ஆய்வுக்கு கருப்பொருளாகக் கொண்டுருக்கிறோம். மறக்காமல் அங்மோ-கியோ நூலகத்தின் தக்காளி அறைக்கு வந்து விடுங்கள், உங்களின் விமர்சனங்களுடன்.

ஒரு வழியாக போன கூட்டத்தின் விமர்சனங்களைத் தட்டச்சு செய்து வலைப்பூவில் வலையேற்றி விட்டேன். வலைப்பூவின் வடிவமைப்பிலும் மாறுதல்கள். இப்போது தமிழ் எழுத்துருக்கள் எளிதில் தெரியுமாறான தொழில் நுட்பத்துடன் மாற்றப் பட்டிருக்கிறது.



இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பதிவுகளை இடுவதினால், பெரும்பாலான நேரங்களில் செயலற்று இருப்பதான தோற்றம் கொள்கிறது. இது குறித்து உங்களின் யோசனைகள் கட்டாயம் தேவைப் படுகிறது.


என்ன செய்யலாம், சொல்லுங்கள்?


http://vasagarvattam.blogspot.com

e-mail: vasagarvattam@yahoo.com.sg
vasagarvattam@gmail.com

என்றென்றும் அன்புடன்,

சுப்பிரமணியன் ரமேஷ்

என்னுடைய வலைப்பதிவு:

http://subramesh.blogapot.com

email: manasazen@gmail.com

பொன்.இராமச்சந்திரன் -மகாபாரதத்தில் பெண்ணியம்

பொன். இராமச்சந்திரன் - மகாபாரதத்தில் பெண்ணியம் நாடகம் குறித்து

பழங்காலக்கதைகள் எனில் அதில் மிகைப்படுத்திச் சொல்லப்படும் கதாநாயக, நாயகிகளாக சனாதனக் கும்பல்கள் எனச் சொல்லப்படும் அரச, அரசியரை மையப்படுத்தியே கூறப்பட்டுள்ளது. ஆனால் 'மகாபாரதத்தில் பெண்ணியம்'' என்ற இரு நாடகங்களைப் படிக்கும் பொழுது, பெண்ணியத்தைப் பற்றி வித்யாசமான சிந்தனைகள் எப்படியும் இருக்குமென்று நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். அரசியல், சமூக ஈடுபாடுகள் குறித்து பெண்களின் அக்கரையைத் தெரிந்து கொள்ளலாம் என எண்ணினேன். மாறாக இவ்விரு நாடகங்களிலும் பெண்ணியம் என்பது பாலியலைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை என்பது போல நாடகம் சித்தரிக்கப் பட்டுள்ளது. இந்த இரு நாடகங்களும் தற்போதைய திரைப்படத் தயாரிப்பாளர்களின் கையில் கிடைத்திருந்தால் பணம் கொட்டும் பெரிய வெள்ளி விழாப் படமாக " மக்களின் ரசனை" என்ற பொய் பிரச்சாரத்துடன் வெளியே வந்திருக்கும்.
முதல் நாடகமான அஸ்தினாபுரம் என்ற நாடகத்தில் பாலியல் போக்குடன் கதை சென்ற போதும், 'சுபா' என்ற பாத்திரத்தின் மூலம் சில அரிய அரசியல் உண்மை, பெண்ணுரிமைச் சிந்தனைகளைத் தெரிந்தெடுத்துள்ளார், நாடகாசிரியர் நந்தகிஷோர் ஆச்சாரியா. ஆங்கே அரசகுலம் என்பது ஒர் ஆணின் குலம் சார்ந்தே உருவாக்கப்படுகிறது. அந்தக் கருத்தைத் தட்டிக் கேட்கும் ஒரு நாடகப் பாத்திரமாக சுபாவைச் சித்தரிக்கிறார். மேலும் தனது மகன் விதுரர் அரசுரிமையிலிருந்து ஏன் வஞ்சிக்கப் பட வேண்டும் என்று தான் வாழ்ந்த யதார்த்த உண்மைகளைக்கொண்டு விளக்குகிறார், இங்கு ஆணின் குலத்தை சார்ந்தே அரசகுலம் அமையவேண்டும் என்ற ஆணின் ஆதிக்க வர்க்கத்தை, பெண்ணியத்திற்க்கும் உரிமை உண்டு என்ற சிந்தனையால் எதிர்கொள்கிறார். அரசியலைப் பற்றிக் குறிப்பிடும் போது, சத்யவதி கூறும் கருத்தான, "மக்கள் வம்சப் பரம்பரையைத்தான் விரும்புகின்றனர். அதில்லாமல் மக்களால் அரசனை மதிக்க முடிவதில்லை." என்று கூறும் போது, சுபா, "ஏன் என்றால் அவர்களுக்கு இது போல்தான் கற்பிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் தான் அரசவன்சத்தின் நலன்கள் பத்திரமாகக் காப்பாற்றப் படுகிறது." என்று கூறுகிறார். இது நாம் கவனிக்க வேண்டியா ஒரு உயரிய சித்தாந்தம். இக் கருத்து ஒரு பெண்ணின் மூலமாக வெளிப்படும் போது, இந்த மாதிரியான அரசியல் தெளிவுள்ள பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியப் பட வைக்கிறது. இக்கருத்து இன்றைய அரசியல் சூழலுக்கும், ஒரு பலத்த் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது.

தர்க்க ரீதியாகவும் அங்கு அந்தப் பெண்மை தன் தெளிவான அறிவின் மூலம் பீஷ்மரையும் விஞ்சி நிற்கிறாள்.


பெண்களின் பாலியல் சம்பந்தமான கருத்துகளில் அம்பிகா கூறுவதாக இப்படித்தரப் படுகிறது." விருப்பமென்பது தர்மத்திற்கு விரோதமானதாக இருந்தால் அது உசிதமற்றதுதான். ஆனால் தர்மம் கட்டாயபூர்வமாக விருப்பத்திற்கு எதிரானதாக இருப்பதில்லையே! இதைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மேலும் இதுதான் தர்மமா? தன் விருப்பமின்றித் தன்னைப் பிறருகு அளிப்பதா தர்மம்? இது பலாத்காரமன்றி வேறென்ன" என வினவுகிறார். இப்படி இந்தக் கருத்து ஒருபுறம் இருக்க குந்திக்கோ, தன் தேவைக்கேற்றவாறு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்ததாகவும் கூறுகின்றார். இப்படிப் பார்க்கும் போது இவர் எதைப் பற்றி கூறுகிறார் என்பதும், தான் கூறும் பாலியல் கொடுமைப் பற்றிய கருத்தில் காமத்தைத் திணிக்க ஒரு தடுமாற்றம் இருப்பதாகவே கருதுகின்றேன்.

**********

நாடகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவை இரண்டு.


ஒன்று அரசாள்வதற்கு ஆண்தான் அவசியம் என்ற கருத்துக்கு எதிராக எந்தப் பெண் கதாபாத்திரமும் படைக்கப் படாமல் இருப்பது ஆண் ஆதிக்கத்தினால்தான்!


இரண்டு, ' பெண்ணின் கற்பே மிகப் பெரிய பாரதப் பண்பாடு' என்று சமயவாதிகளும், சிந்தனாவாதிகளும் பல நூற்றாண்டுகளாகவே கோஷம் போட்டு வரும் நமது 'பாரதப் பண்பாடு' இந்த நாடகத்தைப் படிக்கும் போது ஒரு கேள்விக்குறியே.



நாடகத்தில் குறிப்பிட்டது போல், 'நியோக்' போன்ற நடைமுறைப் பழக்கங்களும், தர்மம் என்ற போர்வைக்குள் முறை கேடான உறவுமுறைகள், திருமணத்திற்கு முந்தைய உடலுறவுகளை எல்லாம் பார்க்கும் போது, 'பாரதப் பண்பாடு' என்ற கோட்பாட்டையே நீக்கி விடலாம் என்பது எனது கருத்து.


***********