பெரிதினும் பெரிது கேள் - ஒரு பார்வை

மாதங்கியின் பெரிதினும் பெரிது கேள்- ஒரு பார்வை

யெம். கே. குமார்


பாரதிதாசனின் "தன் பெண்டு தன் பிள்ளை" எனத்தொடங்கும் கவிதையை மனதில் கொண்டு உதித்த இக்கதைக்கு சிங்கப்பூரையும் சார்ஸையும் தொண்டூழியத்தையும் கொண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர் மாதங்கி.
பாரதிதாசனின் இக்கவிதைக்கும் பாரதியாரின் "தேடிச்சோறு நிதந்தின்று" கவிதைக்கும் இருக்கும் பொதுவான அசாதாரணத் தன்மையை இதுபோன்ற கதைகளின் வழியாகவே உலகுக்கு குறிப்பாக சிங்கப்பூர் வாசகர்களுக்கு அறிவிக்க முனைவது காலத்தின் கட்டாயம் எனில் அப்பணியை மாதங்கி அவர்களின் இக்கதை சிறப்பாகச் செய்திருக்கிறது.


கிஷ்கிந்தனை கதையின் ஆரம்பத்திலேயே நினைவுக்குக் கொண்டு வரும் யுகனேஸ்வரி, வாசகனைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி கதையை அரவிந்தன் மூலம் வேறுபக்கம் தள்ளுகிறார். இதன் மூலம் கிஷ்கிந்தன் கதாநாயகத் தன்மை கொன்டவனில்லை என்பதை நாம் உணர சிறிது நாழியாகிறது.
ரௌத்திரம், பேரங்காடி, காடி, தாதியர் போன்ற வார்த்தைகள் நம்பிக்கையூட்டுகின்றன.


தேசியப்பத்திரிகைக்கு மின்மடல், குழந்தைகள் அனுப்பிய வாழ்த்து அட்டை, கூல் சிங்கப்பூர் வாசகம் என சிங்கப்பூர வாழ்வியல் செய்திகள் கதைக்களம் ருசுவாக்க உதவியிருக்கின்றன.


சிறிய கோடு ஒன்றை பெரிய கோடாக்க அருகில் இன்னொரு சிறிய கோடு போடுவது போல தொண்டூழியத்தைப் பெரிதினும் பெரிதாக்க கிஷ்கிந்தனைப் பயனபடுத்தியது தெரிகிறது. கதை என்றாலே நாயகனும் நாயகியும் ஒரு வில்லனும் இருக்க வேண்டும் என்ற சினிமாத்தனம் இல்லாமல் (அரவிந்தனே இல்லாமல்) கதாநாயக கிஷ்கிந்தனையே உதறிவிட்டு கதாநாயகி மட்டும் வியட்நாம் செல்வதாக இருந்திருந்தால் எப்படி இருக்கும் என யோசிக்க விரும்புகிறேன்.


பாசக்கார டேவிட் வாங், நெகிழும் ஜான் டேவிட் லாம், கட்டணம் பெறாத முகம்மது கு சேன் இப்படியெல்லாம் வருபவர்கள் இக்கதையின் நடப்பு அங்கீகாரத்தை அவசியமாக்குதலில் உதவியிருக்கலாம்.


கதையின் கடைசி பாராவில் திடமில்லை. யுகனேஸ்வரி மிக நல்ல பெண் என ஆசிரியர் ஏற்கனவே ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருப்பதால் இதைவிட என்ன செய்வாள் அவள் என்றே கேட்கத்தோணுகிறது.



சார்ஸின் பணியாற்றிய தாதியர்களுக்கு இக்கதை நன்றி சொல்லும்.
பெரிதினும் பெரிது கேள்- தலைப்பு எனக்குப் பிடித்திருக்கிறது!

சிறுகதை வாசிப்பு- மாதங்கி

பெரிதினும் பெரிது கேள்
மாதங்கி


சிங்கப்பூரின் அந்த மிகப்பெரிய மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த யுகனேஸ்வரி, விரைவாக நடந்து நொவீனா நிறுத்தத்தில் எம். ஆர். டி. யில் பயணித்து தெம்பனீஸில் இறங்கி ப்ளோக் 320 தின் இரண்டாவது தளத்தில் இருந்த அந்த ஈர றை வீட்டில் நுழைந்த போது தொலைபேசி மணி ஒலித்தது. உடனே எடுத்து பேச, அவள் அறைத்தோழி அலின் வாங்கின் தந்தைதான். அவரிடம் மரியாதை நிமித்தமாகப் பேசி, அன்று அலினின் ஷிப்ட் நேரம் மாற்றப்பட்டிருப்பதை பணிவுடன் தெரிவித்தாள். அவளுக்கு நன்றி தெரிவித்த திரு டேவிட் வாங், "ஹவ் ஆர் யூ மை சைல்ட்?" என்று அவளை விசாரித்துவிட்டு, அவளுடனும் இரண்டு வார்த்தை அன்புடன் பேசிவிட்டுத்தான் தொலைபேசியை கீழே வைத்தார்.
அந்த கரிசனம் கூட கிஷ்கிந்தனுக்கு இல்லையே. அவனால் தானே நிரந்தரமாக வெளியே வர நேர்ந்தது. அது சார்ஸ் சிங்கப்பூரில் துவக்கத்தில் இருந்த நேரம்.
மருத்துவமனையிலிருந்து கிளம்புவதற்கு முன் தாதியர்(நர்ஸ்) அறைக்குச் சென்று சுத்தமாக குளித்து வேறு உடை அணிந்து வந்தாலும், மீண்டும் குளித்தாள். கவலைகளையும் அழுக்குகள் போல் நினைத்து கழுவி விட வேண்டும். சூடாக தேனீர் தயாரித்துக் கொண்டு, குடிக்கையில் தன் சொந்த வீட்டில் கூட இல்லாத உரிமை இங்கு இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது.


சில காலம் முன்புவரை சார்ஸ் பாதிப்பில் இருந்த பிரிவில் அல்லாது வேறு பிரிவில் அவள் பணி செய்து கொண்டிருந்தாள்; இருந்தாலும் பல தாதியர் செய்தது போல் போல் வீட்டில் குழந்தைகள் இருப்பதால், பொறுப்புணர்வுடன் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டு தாதியர் குடியிருப்பில் தங்கத் துவங்கினாள். பெயருக்குக் கூட கிஷ்கிந்தன் அவளை ஏன் போகிறாய் என்று கேட்கவில்லை. தனக்கு வரும் வருமானத்தில் பெரும்பகுதியை தங்குமிடம் மற்றும் உணவு முதலியவற்றுக்கு பெற்றுக்கொண்டவனுக்கு பாசம் எங்கிருந்து வரும்.

சார்ஸ் நோயாளிகளை கவனிக்கும் பிரிவில் தாதியாக பணிபுரிந்த மோளி கருவுற்றிருந்ததால், யுகனேஸ்வரி தானாகவே விருப்பம் தெரிவித்து அந்தப் பகுதிக்கு பணிகளை மாற்றிக்கொண்டாள். அன்று மனதை உருகவைக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஸார்ஸினால் தீவிர பாதிப்படைந்த ஒரு அம்மையாருக்கு சிகிச்சை செய்ய முதலில் அவரது தொண்டைச் சளியை எடுத்து பரிசோதனை சாலைக்கு அனுப்ப வேண்டும்.
அதற்கு முந்திய நாள்தான் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவரும், இரு தாதிமார்களும் நோய் தொற்று ஏற்பட்டு உயிர் துறந்திருந்தனர் என்ற நாளிதழ்ச் செய்தி உலகில் அனைவரையும் கலங்கச் செய்தது.

"தொண்டையிலிருந்து சளியை யார் உறுஞ்சு குழாய் மூலம் எடுக்க முன் வருகிறீர்கள்?" என்று தலைமை மருத்துவர் ஜான் டேவிட் லாம் கேட்டபோது அடுத்த வினாடி கையுயர்த்திய அந்த வார்ட் தாதியர் அனைவரையும் பார்த்து மருத்துவர் லாம் கண்கலங்கிவிட்டார். அந்தத் தாதியரில் பலருக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு இருந்தது.

கடமையுணர்வுடன் ஒரு துளி முகஞ்சுளிப்போ அருவறுப்போ இன்றி செயல்பட்ட அந்த அந்த தாதியரும், பரிசோதனைச்சாலை பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும் , மருத்துவர்களையும் பற்றி சார்ஸ் நோய் தீவிரமடைந்த அந்த அம்மையாரின் உணர்வுபூர்வமாக நன்றியைக் காட்டிய முகத்தை மறக்கத்தான் முடியுமா. "நீங்கள் எல்லோரும் மனிதர்களே அல்ல, கடவுளின் பிரதிநிதிகள்," என்று பல முறைசொல்லி அவர் விட்ட கண்ணீர் அவர் உயிர் பிரியும் முன் அவரது கண் தேங்கியிருந்தது அன்பும் நன்றியும் மட்டுமே.

ஞாயிறு அன்று வீட்டிற்கு சென்றபோது அம்மாவிடம் மனம் பொங்கி சொன்னாள். அண்ணன் கிஷ்கிந்தன் ' ரௌத்திரமடைந்தான். " யூகி, முட்டாள் பெண்ணே, இந்த மருத்துவமனையில் வேலையை விட்டுவிடு" என்று கடுமையாக கூச்சலிட்டான்.
"இதெல்லாம் எதிர்பார்க்காமலா தாதிப்பயிற்சியில் சேர்ந்தேன்" என்ற அவளை அவன் பேச விட்டால்தானே. " என் வீட்டில் நான் சொல்வதைக் கேட்டு கீழ்படியாவிட்டால், வீட்டைவிட்டு நிரந்தரமாக வெளியே போ, என்று கூச்சலிட்டான். அப்போது கூட அவளுக்கு போகவேண்டும் என்ற உந்துதல் வரவில்லை ஆனால் காரணமேயில்லாமல் உதவி மருத்துவர் அரவிந்தனை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தினான்.

"இவளை தாதியர் பயிற்சியில் மேல் படிப்பு படிக்க வைத்துவிட்டானில்லையா, அவன் சொல்லுக்குத்தான் இவள் ஆடுவாள். திருமணத்திற்குப் பிறகு இவளை அமெரிக்காவோ ஐரோப்பாவோ வேலைக்கு அனுப்பி நிறைய சம்பாதிக்க வைப்பான், இவள் பணத்தை அள்ளிக்கொள்வான். பணத்திற்குத் தானே காதல் , கத்தரிக்காய் என்று பேசுகிறான்".
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவராகவும், அவள் மனம் கவர்ந்தவனாகவும் இருந்தான் அரவிந்தன்.

தாதியாகச் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தன் வருமானத்தைப் பெற்றுக்கொண்ட அண்ணன் இன்னும் இரு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் என்று கூறியதைக்கூட ஒப்புக்கொண்டிருந்தாள். அரவிந்தனைக் கேவலப்படுத்திப் பேசியதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
சற்று நேரத்திலே தன் உடைமைகளை எடுத்து, எஸ். எம் எஸ் சில் சகக் கூட்டாளியான அலைனை தொடர்பு கொண்டு அலன் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொண்டு அம்மாவிடம் விடைபெற்றபோதுகூட கிஷ்கிந்தன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஊடான் புட்டிலிருந்து கூட பார்வையை விலக்கவில்லையே,
கனத்தமனதுடன் நடந்து அருகில் இருந்த பேரங்காடிக்கு முன் இருந்த வாடகைகாடி நிறுத்துமிடத்திற்கு வந்து, காடியில் பயணித்து இறங்குகையில் அவள் ஒரு தாதியாக சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் பணிபுரிகிறாள் என்பதை அறிந்துகொண்ட அந்த ஓட்டுனர் அவளிடம் அவள் நீட்டிய பத்து வெள்ளியை வாங்க மறுத்ததுமட்டுமன்றி, அவள் சேவையைப் பாராட்டினார். அவளும் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, காடியிலே குறிக்கப்பட்டிருந்த அவரது முழுப் பெயரைப்பார்த்தாள் மகம்மது ந'சீம் ஹ¤சைன் என்று அது தெரிவித்தது. அவர் பெயர் மற்று காடி எண் குறிப்பிட்டு நன்றி பாராட்டி, மின்மடலில் தேசியப் பத்திரிகையான தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்க்கு மறுநாள் அனுப்பி வைத்தாள்.


அதற்கு பின் அவள் அரவிந்தனிடம் அடிக்கடி தொலைபேசியில் பேச நேரம் கிடைக்கவில்லை, எஸ். எம். எஸ் அல்லது மின் மடல்தான். அரவிந்தன் அவளது தொண்டிற்கு மிகவும் உற்சாகம் அளித்தான்.

சிரித்த முகத்துடன் பணி புரிபவளுக்கு நோயாளிகளைக் கையாள்வதோ ஆக்கபூர்வமாகவோ ஆறுதலாகவோ பேசிவது புதிதல்ல, ஆனால் கடுமையான தொற்றுநோய் என்பதால், மிக நெருங்கிய உறவினர் கூட பார்வையாளராக வர இயலாத சூழல், இது மருத்துவர்உலகுக்குக்கே சவாலாக இருந்தது.
"நீ என் தாய், என் மகள், என் சகோதரி என்று ஒவ்வொரு நோயாளியின் கதறலும் கண்ணீரும், அவளுக்கு சில புதிய சிந்தனைகளை தோன்றுவித்தது. பணிகளைச் செவ்வனே செய்து வந்த அவள் போன்றவர்களுக்கு மனைதெம்பை அளித்தது எம். ஆர். டி. நிலையத்தில் நன்றி தெரிவித்து பொதுமக்கள் எழுதிக்குவித்த கையெழுத்துக்கள், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துக்கள், மலர்க்கொத்துக்கள், அதிலும் ஒரு ஆறு வயது சிறுமி தானே தயாரித்து வண்ண அட்டையில் fly fly letter fly for all your service no money can buy என்று தாதியர் படம் வரைந்து அதில் மருத்துவ உபகரணங்களின் படங்கள் வரைந்து அலங்கரித்து அனுப்பியது அந்த மருத்துமனையின் அறிவிப்புப் பலகையிலிருந்து எடுக்க யாருக்கும் மனம் வரவில்லை.

உண்மையில் முதலிய தயங்கிய ஒருசிலர் கூட வெகுவிரைவில் மருத்துவத்துரை, மற்று சுகாதாரப் பணியாளர்களின் சேவையை பார்த்து மனம் மாறினர், ஆனால் கூடப்பிறந்த சொந்த ரத்தம், ஒரு வினாடிதான் நினைத்தாள், மறுகணம் பொதுச்சேவையில் இருக்கும் நான், சொந்த பிரச்சனைகள் இருந்தாலும் , கடமையை உற்சாகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அனைவரிடமும் பேசுவேன் என்று உறுதி பூண்டது நினைவுக்கு வர, சிந்தனையை மாற்றினாள். இந்த மூன்று மாதங்களில் சார்ஸ் மட்டுமா உலக நாடுகளை உலுக்கியது, ஈராக் போர், இந்தோனிய கலவரங்கள், மற்றும் அங்கங்கே தீவிரவாதிகளின் தாக்குதல்கள், வெள்ளம், பூகம்பம் என்று இயற்கையில் சீறல்கள், மூன்று மாதங்கள் மூன்று நொடிகளாகப் பறந்தன.

சிங்கப்பூர் சீரடைந்து வந்தது அறிவிக்கப்பட்டது. அரவிந்தன் அன்று அவளை தன்னுடன் உணவுக்கு அழைத்திருந்தான். அரவிந்தன் ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று வேறு கூறியிருந்தான். எல்லாம் அவர்களது வருங்கால நடவடிக்கைகளை பற்றி பேசுவதற்காக என்றான்.

அன்று தன்னை எளிமையாக ஆனால் அழகாக அலங்கரித்துக் கொண்டாள்.
அவளுக்கும் ஒரு முக்கிய நோக்கம் இருந்தது. சார்ஸ் பிடியிலிருந்து நாடு விலகி "கூல் சிங்கப்பூர்", "சிங்கப்பூர் இஸ் ஓகே" என்ற வாசகங்கள் அங்கங்கே முழங்கிக்கொண்டிருந்தன. அதோ, அரவிந்தன் அங்கு ஒரு காலி மேசையருகில் அமர்ந்திருந்தான். இருவரும் சுருக்கமாகப் பேசி உணவு உண்டு முடித்தனர்.

"யூகனேஷ்வரி, வாழ்வின் உச்சகட்டத்தில் நாம் உள்ளோ¡ம், இப்போது நம்மிடம் ஒரு பெரிய சொத்து உள்ளது அது நம் இளமை , கல்வியில் மேம்படுத்திக்கொண்டோம், இதோ இது நம் வாழ்வில் பல பல சாதனைகளுக்கும் புரட்சிகளுக்கு நம்மை அழைத்துச் செல்லப்போகிறது, இளையரான நமக்கு மிகச் சிறந்த உடல் நிலை, ஆரோக்கியம், மனத்திண்ணம் நினைத்ததை செயல் படுத்தும் ஆற்றல், இதெல்லம் இந்த பருவத்தின் உச்சகட்டத்திலிருக்கும், அந்த சக்தி வீணாகக்கூடாது, நாளைய உலகை வளமாக அமைதியாக ஆக்குவது இளையரான நம் கையில்தான் இருக்கிறது. ஆக்கபூர்வமாகச் செயல் படலாம். இந்தக் கவிதையைப் பார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் எழுதியது,


"தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு,
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம்கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு
தனது நாட்டுச் சுதந்திரத்தால்
பிற நாட்டைத் துன்புறுத்தல்."


"மருத்துவமனையில் என் பணியில் இரண்டு ஆண்டு விடுப்பு பெற்றுக் கொண்டு, தொண்டூழியராக பதிவு செய்து கொண்டு வியட்நாம் செல்லப்போகிறேன், மருத்துவ உதவி குழுவினருடன். அங்கு என் பணி நிரந்தரம் அன்று, கம்போடியா , நேப்பாள், எங்கெல்லாம் தேவைபடுகிறதோ அங்கு செல்லும் குழுவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளேன். அவன் பேசிக்கொண்டே போனான், யுகனேஸ்வரியின் இரண்டு கண்களிலுருந்து தாரை தாரையாக கண்ணீர், வாயிலிருந்து ஒரு கேவல் சத்தம் கூட இல்லை, அப்படியே அவன் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள்.
"பேசு யூகனேச்வரி எதாவது பேசு, என்று எனக்குத் தெரியும் , இதோ பார் " என்று அவள் முகத்தை மெல்லத்திருப்ப, அவள் தன் கைப்பையிலிருந்து அதே தொண்டூழியத்திற்கு (volunteer) விருப்பம் தெரிவித்து தான் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை எடுத்து அவன் முகமெதிரில் காட்டிவிட்டு கண்ணீரோடு சிரித்தாள் யுகனேஸ்வரி. அரவிந்தன் அவளுக்காக கொண்டு வந்த விண்ணப்பம் அவன் சட்டைப்பையிலிருந்து மேசைமீது விழுந்தது.

* * * *

யெம்.கே. குமார்- 'காகிதமலர்கள்' குறித்து

காகிதமலர்கள் - மூன்றாவது கோணம்!

இந்நாவலைப் படித்து முடித்த பின் எனக்குத்தெரிந்த சிலபேர் சொன்னது:

பாக்கியம் மாமி:

ஆனாலும் இந்த மிஸஸ் பசுபதிக்கு இவ்வளவு ஆகாதாக்கும். பத்மினி இந்தக்காலத்தவ, அவ ஆடுறான்னு இவாளும் ஆடலாமா? பத்மினிக்கு போட்டியா வாறா, மனசாலே நாமளும் அழகிதான்னும் நமக்கும் நாலாம்பளையை பாக்கவைக்கிற, கவனிக்கவைக்கிற சொரூபங்கள் இருக்குறதா மனசாலே நெனச்சுண்டு இப்படிக் காலம் போகுற போக்குல சுத்துனா கலிகாலம் ஆகாம என்னதான் ஆகும்? பத்துப்பேரு வந்தாலும் ஹிஹின்னு பேசிச் சமாளிச்சுண்டு போற இக்காலத்து பொண்ணுக்குப் போட்டியாய் பத்து ஆம்பளைங்களை இவளும் சமாளிக்க இறங்குனா, முடியுமா? அந்தளவுக்கு அவாளுக்கு மனதைர்யம் இருக்கா சொல்லுங்கோ? இத்தனை ஆம்பிளையைப் பாத்தபின்னும் இத்தனை வயசு ஆனபின்னும் மனசுல ஒரு பக்குவம் வராம இருபத்தஞ்சாட்டம் மந்திரியைப் பாத்ததும் மோகவெறி வருமோ சொல்லுங்கோ?

பாருங்கன்னா, பதினாறு வயசுப்பொண்ணாட்டம், இன்ஃபேச்சுவேஷன்ல மாட்டிண்டவாளாட்டம், மந்திரி ஏமாத்திட்டாருன்னு மண்டையப் போட்டுக் குழப்பிண்டு படக்குன்னு போயி மோதிண்டா! பாவம், இந்த ஆதவன்அம்பியும் என்னதான் பண்ணுவான்? இப்படிக்குழப்பிண்ட, வாழ்க்கையைப் பொசுக்கிண்ட பொண் ஜென்மத்தையெல்லாம் படக்குன்னு கொன்னுடவேண்டும் இல்லாட்டி மனநலகாப்பகத்தை முன்புறம் காட்டி கதையை முடிச்சுக்கவேண்டும். வேறு என்னதான் எங்க பொறப்புக்கெல்லாம்? அந்த சண்டாளன் பசுபதி ஆரம்பிச்சு வைச்சான். இந்த ஆதவன் அம்பி முடிச்சுவைச்சான். ம்க்கும்!

பத்மினியப் பாத்து பொறாமப்பட்டு பழமைக்குள்ளேயும் புதுமைக்குள்ளேயும் மாட்டிண்டு அவ படுறத விடுங்கன்னா, அவாளும் பொம்பளதானே, தாய்தானேன்னா, விசுவம் தன்மேல பாசம் வைக்கலேன்னு பொலம்பித்திரியுறா, செல்லப்பா மேல இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வழியில்லாமயும் விட்டேற்றியா வளந்துட்ட பத்ரி மேல பாசத்தை எப்படிக் காட்டுறதுன்னா தெரியாமயும் தடுமாறுறா, தேவையின்னா வாறவன்னா இருக்கான் புருஷன் (யாருடைய தேவைக்கும்!), நாடகத்துல நடிக்கிறதுல ஒரு நிம்மதி, அங்கேயும் ஆம்பிளைங்க தானெ, அவாளும் எல்லாரும் மாதிரிதானே! அட, புருஷன் மட்டுமே பாக்கணுன்னாதான் எந்தப்பொண்ணும் வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்டுட்டு உக்காந்துடலாமேன்னா, வெளியில வாறபோது எதுக்காக அழகா வாறோம்? நாலு பேரோட வெளிப்படையான மதிப்பீட்டுக்கு அர்த்தம் சொல்லத்தானேன்னா. அந்த நாலு பேரோட மதிப்பீடும் புதுமையோடு நம்மைப் பொருத்திப்பாத்தா எப்படித்தான் நம்ம தரத்தை ஏத்திக்கிறது சொல்லுங்கன்னா. மிஸஸ் பசுபதி, இந்த மதிப்பீட்டை வேற மாதிரி நெனச்சிண்டு செயலாக்கிண்டா, பாவம்!

விசுவத்தின் அப்பா:

ஆக்சுவல்லி.... உங்களையும் என்னையும் போல பசுபதியும் நல்லவர்தான் சார். என்ன, சான்ஸ் கெடைக்காதவரைக்கும் நாம நல்லவனா இருக்கோம். சான்ஸ் கெடச்சிதுன்னா நாமளும் சறுக்கிடுறோம். எங்காவது இருக்குற ஒண்ணுரெண்டைப் பாக்காதீங்க. நம்ம ஐயரை எடுத்துக்குங்க, மனுஷனுடைய போக்கு சுத்தமா பசுபதிக்குப் பிடிக்காது, தன்னளவில அவர் ரொம்ப நல்லவர்ன்னு நெனச்சிண்டு வாழ்றார், ஆனா எதுவரைக்கும் வாழ்றார்? சான்ஸ் கெடைக்கிறவரைக்கும்.! சத்தியமாச் சொல்லுறேன் சார், பசுபதிகூடவே அவரும் ஸ்டெனோவா சேர்ந்திருந்தா, அய்யரு பசுபதியை விட மோசமா இருந்திருப்பாருன்னு நான் நெனைக்கிறேன். இந்நேரம் மந்திரி லிஸ்ட்ல கூட அவரு பேரு இருந்திருக்குமோ என்னவோ!

வாழ்க்கையோட கடைசிவரைக்கும் எதுதான் சார் நம்மள ஓட்டிட்டுப்போவுது? புரோகிரஸ், வளர்ச்சி, இன்பமயமான வாழ்க்கை, உயர்ந்த பதவி, நல்ல குடும்பம் இப்படி எதுன்னு எடுத்துண்டாலும் பணம் முக்கியம் சார். நம்மள மாதிரி ஒரு பிற்போக்கான சமூகத்துல இருந்துகிட்டு முற்போக்கான வாழ்க்கைக்கு வரணுமுன்னா நம்ம மனைவிங்களையும் அதுக்கு கொண்டுவரணுமுன்னு அவர் மனைவி மனைவி பாக்கியத்தைக் கொண்டுவந்தார், பாருங்க, சீறுகெட்ட சமுதாயத்துல ஒரு எஸ்.கே, ஒரு மந்திரின்னு எல்லாரும் ஒரு அங்கம் சார். ஸ்டெனோவா அவர் வேலையை அவங்க பாத்துருக்கலாம்; பாராட்டியிருக்கலாம், கூட்டத்துக்கு வந்த அவரு பொண்டாட்டிய பாத்து அவரைப் பாராட்டினா பசுபதி என்ன சார் செய்யமுடியும்? பாக்கியமும் பளார்ன்னு ரெண்டு அறை அறைஞ்சி வாழ்க்கையோட ஸ்ருதி எதுன்னு பசுபதிக்குக் காட்டியிருக்கலாம். அவ என்ன பண்ணினா, வாழ்க்கையோட அடிப்படை மூலக்கூறுகள் பெண்ணழகோட இணைஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டா, எப்படி பணம் பதவியோட அது இணைஞ்சதுன்னு பசுபதி முடிவு பண்ணினமாதிரி!

நீங்க சொல்லுங்க சார், இங்க உங்க முன்னாடி உக்காந்திருக்க எத்தனை பேரை உங்களுக்குப்பிடிக்கிது? அதோ அவரைப் பிடிக்குமா உங்களுக்கு? எது சார் அதைத் தீர்மானிக்கிது? அந்தாளு கருப்புச்சட்டை போட்டுவந்ததாலே பிடிக்காதுப் போயிருக்கலாம், அட ஒண்ணும் வேண்டாம். நீங்க பாக்கும்போது ஒரு இஞ்ச் விரியிற சிரிப்புக்குப்பதிலா அரை இஞ்ச் விரிஞ்சதாலே 'மூடி'ன்னு அவரை உங்களுக்குப் பிடிக்காம போகலாம். ஆனா ஒண்ணு சார், ஆதவன் சொன்னதுமாதிரி, ஒரு மாநிலத்தோட, மக்களோட பிரச்சனைக்குத்தீர்வு ஒரு ஸ்டேனோவால மாறுது பாருங்க. இதுதான் சார் வாழ்க்கை! அந்த ஸ்டேனோக்கள் நல்லவரா இருந்தா போதும், இந்தியா மட்டுமில்லை எந்த நாடும் முன்னுக்கு வந்துடலாம்.

விசுவத்தின் மனைவி:

யு பெலீவ் ஆர் வோண்ட் பெலீவ் ஐ டோண்ட் நோ, ஆல் மென் ஆர் ஸ்டுபிட்; அசடுங்க! நிஜமாச் சொல்லுறேன். அதிலேயும் பத்மினியின் கணவர்...விசுவம்! அய்யோ..! அவர்கூடல்லாம் வாழவேண்டியிருக்கேனு ரொம்ப நாள் அவ நொந்திருப்பாள்ன்னு நெனைக்கிறேன்! ஆனா சில நேரங்கள்லெ பாருங்க, இந்தமாதிரி அசடுங்களாலெ சில நன்மைகள் இருக்கும். நமக்கு வேண்டியதை நாம ஈஸியா அடஞ்சிக்கலாம்.

யு மைட் ஹேவ் நோட்டீஸ்டு, பத்மினியும் விசுவமும் காரசாரமா விவாதம் பண்னிண்டு இருப்பா ஒரு கட்டத்துல, எந்த ஹஸ்பெண்ட் - ஒய்ப்ப்புக்கும் இந்த ஆர்க்யூமெண்ட் வந்தப்பறம் சேர்ந்து படுக்குறது பேசுறது ஏன் வாழறது கூட கஷ்டமாகலாம், ஆனா அவங்க சேர்ந்துக்குறாங்க, ஏன்? ரெண்டு பேருக்கும் தெரியுது, இந்த அசடைவிட்டா எந்த அசடை நாம புடிக்கிறதுன்னு அவ யோசிக்கிறா! இப்போது இருக்குற அரைகுறை நிம்மதியும் போகனுமான்னு அவன் நெனைக்கிறான். அப்புறம் எப்படி பிரிவாங்க. என்ன, அவங்களுக்குள்லே இருக்குற அந்நியோன்யமும் அப்பப்போ மாறி மாறி வந்துபோகும்; அவ்வள்வுதான்! அதானே மிஸ்டர் இந்த இடியட் குடும்ப வாழ்க்கைக்கி ஆதாரம்?! அதை வெச்சித்தானே ஏகப்பட்ட திருமண வாழ்க்கைங்க ஓடிட்டு இருக்கு? கரெக்ட் ஒர் னோட்?

விசுவத்தோட அக்கப்போர் தாங்க முடியலேன்னு பாத்தா, அவங்க அம்மா பாக்கியம் மாமி அய்யோ..! ஏந்தான் இந்த கிழவிக்கு இப்படிப்புத்தி போகுதோ தெரியலை! ஒரு ஆம்பளையோட பார்வையை தன்னை நோக்கி அடைய வைக்கிறதுதுதான் பொண்ணோட அழகுக்கும் / அலங்காரத்திற்கும் வெற்றின்னு நெனச்சிக்கலாம். பத்மினிகூட பலசமயங்கள்லெ பலபார்ட்டிகள்லெ அந்தமாதிரி நடந்திருப்பா, அந்த மெடிக்கல் ரெப்புகூட பேசினது மாதிரி! ஆனா இந்தமாமியார் இருக்காங்களெ அவங்க, பத்மினிகூட போட்டிபோடுறதா நெனச்சிண்டு அந்த ஆம்பளையை தன்னை அடைய வைக்கிறதுதான் தன்னோட வெற்றின்னு நெனச்சிட்டாளே பாவம்! எல்லா ஆம்பளைங்களும் கோகுலகிருஸ்ணனா என்ன?

பாக்கவைக்கிறது ரிசல்டா இருக்கிறதை மாத்தி படுக்கைக்கு வாற வைக்கிறதை அவங்க வெற்றியின்னு நெனச்சி ஏமாந்திட்டாங்க, அதுக்கு அனுசரனையா எரியுற தீபத்துக்கு எண்ணெய் ஊத்திட்டார் நம்ம பசுபதி அங்கிள்! நல்லவேளை, பத்மினியும் அவர்கூட ஏதாவது மந்திரி மீட்டிங்குப்போகலை, போயிருந்தால் அவ பேசுற தத்துவமெல்லாம் இப்போ எடுபட்டிருக்குமோ என்னவோ?!

சமத்துன்னா, காகிதமலர்கள்லெ எனக்குத்தெரிஞ்சு யாரும் இல்லே. படிக்கிறவங்கள்ளெ(?!) வேணுன்னா யாராச்சும் இருக்கலாம். பத்ரி ஒரு யூஸ்லெஸ். லைஃப் ஜாலியா போய்க்கிட்டு இருக்கும்போது மாணவர் அணி, கட்சி, போராட்டம்! கடைசில எல்லாரையும் விட பெரிய போக்கிரியா அரசியல்ல வந்து நிக்கலாம் அவன். அல்லது வெட்டிக்கொல்லப்படலாம்! யார் கண்டது?

செல்லப்பா...chikky fellow. ஒரு தைர்யம் ம்ஹூம், மண்ணு! வெறுங்கையாலே உலகத்தைப்பிடிக்க முடியுமா? யாராவது ஒரு பொண்ணு வந்து மாரு காட்டி மயக்கி கல்யாணம் பண்ணவெச்சி முதுகுல ரெண்டு போட்ட புத்தி வரும்..இவன மாதிரி கேசுங்கள்லாம் இப்படித்தான் மாறும். இல்லாட்டி வானத்தைப் பிடிக்கிறேன், பூனையைப்பிடிக்கிறேன்னுட்டு அலையும். இவனோட அம்மாவா நான் இருந்தா இந்நேரம் படக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சி சுகமான சுமையை போட்டு மடக்கி வெச்சிருப்பேன்.

மெடிக்கல் ரெப் - நான் சென்ஸ். ரெண்டு மூணு காஸ்ட்லி ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போயி பில்ல பல ஆயிரத்துக்கு எகிறவிட்டா அடுத்த தடவை அப்பீட்டாயிடுவான். கொஞ்சம் வெவரம்ன்னா, கணேசன். யா.... ஐ திங் பத்மினி வில் லைக் தேட் ஃபெல்லோ.

செல்லப்பாவின் அண்ணன்:

இந்த விசுவத்தைப்பத்தி கொஞ்சம் பேசலாம் இப்போ. இவனைபாக்கும்போது சார், ரெண்டு விஷயம் தான் ஞாபகத்து வருது, ஒண்ணு 'ஜானி' படத்து ரஜினி வசனம், வாழ்க்கையில ஒன்னைவிட ஒன்னு எப்பவும் பெட்டராத்தான் தெரியும். ரெண்டு, கமல் பாடும் பாட்டு வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்!

பத்மினிய முதன்முதலா பாத்தபோது வந்த அந்த ஒரு நிமிடநெகிழ்ச்சி அவன் நண்பன் உண்ணி 'ஒய்ஃபைப்' பாக்கும்போது வாறதாம். ஹம்பக். அந்த நிமிடம் ஏன் தப்பானது? இந்த நிமிடம் எப்படி சரியாகும், சொல்லத்தெரியுமா இவனுக்கு?

புவியின் அறிவியலை முழுக்க முழுக்க புரிந்துகொண்ட இவன் பெண்களையும் அப்படிப்புரிந்துகொள்ள முயல்கிறானா? பெண்ணையும் பூமியையும் ஒப்பிடுவது சரி. பருவகால மாற்றத்தை புரிந்துகொள்ளும் வரையறுக்க முயலும் இவனுக்கு பத்மினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா? பத்மினி மட்டுமல்ல; எந்தப்பெண்ணையும் அப்படிச் சொல்லமுடியுமா? பத்மினி, மெடிக்கல் ரெப்பிடம் அந்நியோன்யமாய் பேசினபிறகே ஏதோ கொஞ்சம் வாழ்க்கைப்பக்கம் வருகிறான். பத்மினிக்கு இவனைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கிறது, இந்தமாதிரி அசடுகளை இப்படித்தான் வழிக்கு வரவைக்கவேண்டும் என்று. அதான் தனிவீடு! ம்..தூக்கு தண்ணீரை! கழுவு பாத்திரத்தை!

கிரீன்ஹவுஸ் எஃபெக்டால், மரம் வெட்டுதலால், குளங்களைப் பாழ்படுத்துவதால், பிளாஸ்டிக்குகளை அதிகமாய்ப் பயன்படுத்தவதால், ஆழமாய்த்தோண்டி எண்ணெயையும் தண்ணீரையும் நிலக்கரியையும் எடுப்பதால் புவிக்கு வரப்போகும் ஆபத்தை பத்மினி போன்ற பெண்ணுடன் அல்லது ஒரு பெண்ணுடன்(?!) வாழ முனைந்தவன் ஆராய முயலலாமா? இல்லை கீழ்த்தர சுயலாபங்கள் நிறைந்த அரசியல் விளையாடும் இந்தியப்பதவி ஒன்றில் நேர்மையை எதிர்பார்க்கலாமா? இவனது தாத்தா திரும்பி எழுந்து வந்தால் ஏதாவது நடக்கும். ம்க்கூம்!

பத்ரியின் நடு அண்ணன்:

இந்த செல்லப்பா இருக்கானே சார், கொஞ்சம் நல்லவன்சார். என்ன..எந்த நேரம் பாத்தாலும் ஒரே ஃபீலீங்க்ஸ். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ்! இருக்கட்டுமே சார், ஃபீலீங்க்ஸ் இல்லாம யாருதான் இருக்கா? இவனையெல்லாம் கவிதை எழுத விடணும் சார். என்ன சொல்றீங்க. இந்த மாதிரி அணிலோடவும் புல்லோடவும் மரத்தோடவும் ரசனையா கெடக்குற ஒருத்தன் என்னடா பொண்னோட ஒடம்பு மேல படுற அந்த சொகத்துக்கே ஏகப்பட்ட பஸ் ஏறி அலையுறான்னு நாம நெனைக்கக்கூடாது சார். அது ஒரு ரசனை! அளவுக்கு மீறிய ரசனை! அந்த ரசனையின் வேகம்; இன்னும் அதிகமானா வெறி!

படிப்பை விட்டுடா என் செல்லம்ன்னு சொல்லி (மனுஷன் எவ்வளவு சந்தோசப்படுவான்!), நல்ல ஒரு அழகியாப் பாத்து இவனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிட்டீங்கன்னு வெச்சீங்க, நாலு வருஷத்து ரெண்டு கவிதைப்புத்தகம் அல்லது மூணு புள்ளையப்பெத்துடுவான். கூட, வாற பொண்ணும் நம்ம தாரா மாதிரி வெவெரமா இருந்ததுன்னு வெச்சுக்குங்க, ஏதாவது வேலயைப்புடிச்சு முன்னேறிடுவான் சார். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ் அதிகமானா தப்பா நெனக்கக்கூடாது சார். அததுக்கு நாட்ல மனுஷன் மாத்திரயெல்லாம் வாங்கிச்சாப்பாடுறான் நாம என்னடான்னா? சார், செல்லப்பாவோட தாத்தா இருந்தாருன்னா கண்டிப்பா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவெச்சிருப்பாரு. சீக்கிரமா கல்யாணம் பண்ணுறதும் நல்லதுதானே சார். புத்தகத்தைப் படிச்சு வாழ்க்கையைப் புரிஞ்சுக்குறது ஒரு வகை! பொண்ணைப் படிச்சு வாழ்வைப் புரிஞ்சுக்கிறது (புரிஞ்சும் என்ன புண்ணியம்!) இன்னொரு வகை! செல்லப்பாவுக்கு ரெண்டாவது நல்லா ஒர்க்அவுட் ஆகும் சார்.

எல்லா இடத்திலேயும் ஏதாவது அன்பையோ அரவணைப்பையோ எதிர்பாக்குறோம், அது இல்லாட்டி ஏமாத்தமா வாறது, எல்லாரும் ஏமாத்த வந்தவங்கன்னு தோணுறது. கொஞ்சம் பக்குவப்பட்டா போதும். அனுசரனையா பேசுறார்ன்னு உக்காந்து பேசுனா காலுக்கெடையில் கையை விட்டுத் தடவுறாரு அந்த குண்டு மனுஷன். இந்த ஸ்ரீதர் இன்னொரு செல்லப்பா. என்னன்னா கொஞ்சம் வெவரமான செல்லப்பா! எல்லோருக்கும் ஏதாவது தேவை. அதை நம்ம தேவையோட ஒத்தி தேடிக்கிறாங்க! நாம அதை அடையமுடியாம ஏமாந்து நிக்கிறோம், அவங்களெல்லாம் அதை எடுத்துட்டுபோனப் பின்னால!

செல்லப்பாவின் தம்பி:

இப்போ பத்ரியைப் பத்தி பேசுவோம் மிஸ்டர். 'அம்மா ஒரு இடியட் - அப்பா ஒரு ஜெண்டில்மேன். அண்ணன் ஒருத்தன் படிச்ச கிறுக்கு இன்னொருத்தன் படிக்காத கிறுக்கு. யாருக்காவது வாழ்க்கையோட நிஜம் புரியுதா? அம்மா - நாடகம், பார்ட்டி! விசுவம் - புவியியல், பொண்டாட்டி பத்மினி, செல்லப்பா-செக்ஸ் படத்து தியேட்டர் இல்லை எக்ஸாம், அப்பா-பதவி அன் வேலை (அட்லீஸ்ட் ஹி இஸ் ஓகே!).
ஒரு காலேஜ் இருக்கு, அங்க பிராப்ளம்ஸ் இருக்கு, ஒரு கட்சி தலையிடுது, மாணவர்களோட எதிர்காலம் தடுமாறுது! என்ன செய்யலாம் என்ன இதில சாதிக்கலாம்? யாருக்காவது அக்கறை! கணேசன் நல்லா பேசுறான். இவனையே பேச வெச்சுக்கலாம். கணேசன் சொன்னது மாதிரி நாமளே தலைவராயிடவேண்டியதுதான். அப்பா இருப்பார் ஃபுல் சப்போர்ட்டுக்கு. ஆளுங்கட்சி மந்திரி வேற அப்பாவுக்கு குளோஸ்.'

பாத்தீங்களா மிஸ்டர், பத்ரியும் மிஸ்டர் பசுபதி மாதிரி ஒருகட்டத்துல ஆயிடுவான்னு தோன்றது. அவன் அப்பாவெ ரொம்ப சார்ந்திருக்கான்; அப்பா அரசியலையும் அதன் சூழ்ச்சிச்சுழற்சியையும் சார்ந்திருக்கார்; அதே சூழ்ச்சிதான் பத்ரியையும் சூழ்ந்திருக்கு; இப்போ என்ன ஆகும்? இன்னொரு மிஸ்டர் பசுபதி இல்லாட்டி மரத்தில் மோதும் மிஸஸ் பசுபதி.

காகிதமலர்கள் டைட்டில் பேசுகிறது:

அண்ணே, எனக்கெதுக்குன்னே காகிதமலர்கள்ன்னு பேரு வெச்சிருக்காங்கெ? வாசம் இல்லாத மலர்கள்ன்னா? நாமளும் சிறந்து விளங்குற உயர்ந்த மனிதர்கள்ன்னு சில பேரு நெனைச்சிக்கிற மாதிரி இக்கதையில் வாற மலர்களும் நெனைக்கிதுனா? என்னவோ இருந்துட்டுப் போகட்டும்ண்ணே, மனிதர்கள்ன்னே தலைப்பு வெச்சிருக்கலாம். இந்தியாவில மட்டுமான்னே இப்படி, 12,756.3 கி.மீட்டரை விட்டமாகக் கொண்ட இந்தப் பூமியில எங்கேயும் இப்படித்தானேன்னெ மனுசங்கெ இருக்காய்ங்கெ.

ஆளுக்கொரு தேவை, அதற்கொரு முகம், அது அசிங்கமானதுன்னா அதுக்கொரு முகமூடி! கண்டதுக்கெல்லாம் அலையிறாங்கண்ணே. காசுபணம், காமம், அங்கீகாரம், பீடம், அலங்காரம், பாசம், பந்தம் எல்லாத்துக்கும் பலமுகமா அலையிறாய்ங்கண்ணே! ஒருமுகத்தை மறைக்க இன்னொரு முகம்! அந்த முகத்தை மறைக்க அடுத்த இடத்தில் இன்னொரு முகம், அதுவும் சரிவரவில்லையென்றால் ஓரு அழகான முகமூடி. முகமூடின்னு பேரு வெச்சிருக்கலாமோ நாவலுக்கு?

சிறந்த முகமூடிக்காரர்ன்னு யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்? மிஸ்டர் பசுபதி? பாவம்ணே அவரு! பல இடங்கள்லே அவரு முகமூடி கிழிஞ்சி தொங்கி அசிங்கப்படுறார்ணே. மிஸஸ் பசுபதி? கொடுக்கலாம்ணே, ஆனாலும் அந்தம்மாவுக்கே தெரிஞ்சும்தெரியாம இருக்குண்ணே அது முகமூடின்னு. அநியாயமா செத்துப்போயிட்டதாலே 'போஸ்துமஸ் அவார்ட்' வேண்டாம்ண்ணே. பத்மினிக்கு.. அருமையான சாய்ஸ்ண்ணே. ஆனா பத்மினிக்கி கொடுத்தா நாட்டுல இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் கொடுக்கணுமுண்ணே, கட்டுபடியாகாது. விசுவம்...இல்லேண்ணெ, இந்தாளுக்கு முகமூடி போட்டாலும் வேலைக்கு ஆவாது. செல்லப்பா..சிறந்த ஏமாளின்னு வேணா பட்டம் கொடுக்கலாம்ணே! பத்ரி...சிறந்த அப்பாவின்னு பட்டம் கொடுக்கலாம்ணே!

டென்ஷன் ஆகாதீங்கண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க? செல்லப்பாவின் சைட்டு, ஸ்ரீதர், குண்டு ஆள், ஐயர், ஐயரோட எடுபிடி சிங், கிருஷ்ணன், எஸ்.கே, மந்திரி, சமையல்காரர் நரசிம்மையர், பத்திரிகையாசிரியர், தாத்தாவின் வேலையாள், ஜோசியர், பத்ரியின் சைட்டு, ஆங்..முக்கியமான ஆள் கணேசன்...அவனோட அம்மா, தங்கச்சி, அப்பா அந்த குடும்பம்....

ம்ம். இந்தாங்கண்ணே...மூன்றாம் பரிசு.. ஸ்ரீதருக்கு கொடுக்கலாம்ண்ணே...படவா. பெரிய ஆளுண்ணே அவன். செல்லப்பாவிற்கு நல்ல முகமூடி போடும் அவன், செல்லப்பா அம்மாவுக்கொரு முகமூடி போடுறான் பாருங்க,அது அசத்தல்ண்ணே. அப்படியே அவன் மன்னிக்கும்.

இரண்டாம் பரிசு..சில காட்சிகள்லெ வந்து போனாலும் பத்ரியோட கேர்ள் ஃபிரெண்டுக்குண்ணே! நடு ரோட்ல இறங்கி மவனேன்னு அவனை அல்லாட விட்டு படக்குன்னு அவனைப்பாத்து சிரிச்சி மயக்குறா பாருங்க...இது சூப்பருண்ணே!

முதல்பரிசு ஐயருக்கு கொடுக்கலாம்ன்னா, அவருக்கு வயசாயிருச்சுண்ணே! அதனாலே வேற யாருக்குன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சுண்ணே...வீட்டுக்குள்ளேயும் காலேஜ்லேயும் நண்பர்கள்ட்டேயும் என எல்லா இடத்திலும் முகமூடியோடு அலையும் திரு. கணேசன்! பெரிய ஆளுண்ணே அவரு!

@ @ @

காகிதமலர்கள்- சித்ரா ரமேஷ்

ஆதவனின் 'காகித மலர்கள்' -சித்ரா ரமேஷ்


தொலைக்காட்சியில் வலுக்கட்டாயமாக குழந்தை போன்று முகத்தை வைத்துக் கொண்டு உலகின் துயரங்களையெல்லாம் சுமக்கும் சோக பாவங்களோடு தோன்றும் கதாநாயகியின் மெகாத் தொடரின் ஆரம்பப் பாடல் ஒருபக்கம்! சுத்தம் செய்யப்படாத சமையலறை பிசுக்குப் பாத்திரங்கள் ஒரு பக்கம்! இவற்றிற்கிடையில் கையில் ஆதவனின் காகித மலர்கள். அவர் காட்டும் முரண்பாடான வாழ்க்கையின் மிச்சமிருக்கும் பகுதியாக என்னைச் சுற்றி இயங்கும் ஒரு உலகம். அவர் காட்டும் மனவெளிகளின் தொடர்ச்சியாக நான். இப்படித்தான் என்னால் காகித மலர்களில் வரும் ஒவ்வொரு கதை மாந்தர்களோடு என்னை நான் தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது.
கணவனிடம் கூட சுதந்திரமாக தன்னிச்சையாக இணைய முடியாத,
கணவனின் குறிப்பறிந்து வாழ்ந்து, அவரின் குணநலன்களையும், குணக்கேடுகளையும் அப்படியே சகித்துக் கொள்ளும் விசுவத்தின் பாட்டி, அழகு, அறிவு, திறமை, அந்தஸ்து வசதியான வாழ்க்கை எல்லாமிருந்து, நவீன யுகத்து யுவதிகளிலிருந்து சற்றும் நான் குறைந்தவளல்ல என்று பாலுறவுச் சுதந்திரத்தையும் அனுபவிக்கும் விசுவத்தின் அம்மா, பெண் விடுதலை பெண் சுதந்திரம் இவற்றின் மொத்த வடிவமாக சிகரெட் பிடித்து, வேலை பார்த்து சுதந்திரமாக வாழும் விசுவத்தின் மனைவி, இவர்களுக்கு இடையில் கணேசனின் அம்மா, தாராவின் அம்மா போன்ற சராசரி மத்திய வர்க்கத்துப் பெண் பிரதிநிதிகள், மேலும் எழுபதுகளின் பிரபலமான ஹிந்திக் கதாநாயகிகள் என்று மொத்தமாக எல்லாப் பெண் கதாபாத்திரங்களியும் பார்க்கும் போது பெண்களை சற்று கேலியாகவும்இகுதர்க்கமாகவும் கவனிக்கிறாரோஆதவன்! என்ன செய்வது பெண்கள் தங்களை இயல்பாகவோ, அல்லது இயல்புக்கு மாறாகவோ வெளிப்படுத்திக் கொள்ள முயலும் போது கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த நாடகங்கள் பிடிபட்டுவிடுகின்றன.
நாவல் விசுவத்தை மையமாகக் கொண்டு விசுவத்தின் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என இவர்களைச் சுற்றி நடக்கிறதா? செல்லப்பாவைச் சுற்றி இயக்குகிறதா? இல்லை கணேசனைப் பற்றியா? என்பதை உணரும் முன் முடிந்து விடுகிறது. பல மனிதர்கள், அவர்களின் உள்மனம், வெளியுலக வேஷம், போடும் வித வித முகமூடிகள் இவற்றிற்கிடையில்ஆதவனின் நாவல் ஒரு கொலாஜ் வடிவ ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது. சிறு சிறு சிதறல்களாக பார்க்கும் போது இது எப்படி ஓவியமாகும் என்ற கேள்விக்குறி, ஆனால் முடிந்த பிறகு ஒரு அற்புதக் கலை வடிவம். இதுதான் ஆதவனின் காகித மலர்கள்.


விசுவத்தின் ஒரு பக்கம் புதுமையை புரட்சியை விரும்பி ஏற்கிறது. மறுபக்கம், காலந்தோறும் பார்த்துப் பழகிய மரபுகளை மீறாதப் பெண்ணைத் தேடிக்கொண்டேயிருக்கிறது. பாட்டியையும், சிறு வயதுத் தோழியையும் பார்க்கும் பெண்களிடம் தேடுகிறான். அந்தத் தேடல் நண்பனின் மனைவிடம் மானசீகமாக மையல் கொள்ள வைக்கிறது. சிறுவயதில் தன்னை வளர்த்தப் பாட்டியின்ஆதர்ச பிம்பத்தையும் தன்னோடுப் பழகிய தோழியின் முகத்¨யும் உண்ணியின் மனைவியைப் பார்த்ததும் பரவசமாகிறான். அவள் தன்னை குடிக்கக் கூடாது என்று கண்டிப்பதாக கற்பனை செய்து கொள்வதும் இந்த மனபிம்பத்தின் தொடர்ச்சியே!


செல்லப்பாவின் கற்பனை உலகம் பெண்களால் சூழப்பட்டிருக்கிறது. பெண்களின் ஸ்பரிசம் அதைத் தேடி அலையும்அலைச்சல்கள்! இதையும் மீறி தொடுதலின் பரவசத்தை ஒரு அனுபவிக்கிறான். அவனுடைய பருமனான அந்த "ஆண் நண்பர்" மூலம் அதை இயல்பாகப் பெறுகிறான். அவன் நண்பன் ரமணியுடன் சேர்ந்து அவன் எதிர்காலத்தில் நடத்தப்போகும் ஹோட்டல் எப்படியெல்லாம் இருக்கக் கூடும் என்பதை விவரிப்பது அவன் இயலாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. எந்த பாடமும் சரியாக படிக்க முடியாமல் பரீட்சைகள் வெறும் தோல்விகளாகத் தோன்றும் போது வாழ்க்கைய குரூர நகைச்சுவையாகப் பார்ப்பதும் புரிகிறது.


நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமான புலம் பெயர்தல். கிராமங்களை விட்டு நகரத்திற்கு நகரும் மனிதர்கள். எந்த இடத்தில் எப்படி வாழ்ந்தாலும் தன்ஆசார அனுஷ்டானங்களைக் கை விடாமல் வாழும் மத்தியதர பிராம்மணக் குடும்பங்கள்! அதன் உண்மையான அர்த்தங்கள் திரிந்து போய் வேறு விதமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தப் பின்னும் தமிழ் நாட்டுக் கிராமத்தில் ஒரு அக்ரஹாரத்தில் வாழும் வாழ்க்கையைத் தொடரும் மேம்போக்கான மனிதர்கள். உள்மனதில் தோன்றும் எண்ணங்கள், வெளியில் அதற்கு முகப் பூச்சுப் பூசி காட்டும் நாசூக்குத்தனம், தன்னைப் பற்றிய சுய மதிப்பீடுகள்இ வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள், அவரவர்கள் இடத்திலிருந்து பார்க்கும் போது மாறுபடும் கோணங்கள். மனதிற்குள் எத்தனைப் பெரிய குப்பைத்தொட்டி ஒளிந்திருந்தாலும் வெளியில் ஒரு புன்னகைப் பூங்கொத்தை நீட்டி பொய்யான மதிபீடுகளால் தன்னை உயர்த்திக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கை சாகசங்களை தானே வெளியில் நின்று பார்த்து எழுதியிருக்கிறார்ஆதவன் என்பதை மட்டும் சற்றுப் புன்னகையோடும் வேதனையோடும் ரசிக்க முடிகிறது.


புதுதில்லிக் கதைகள் என்றால் இன்னும் மனதிற்கு அதிக நெருக்கமாக உணர்வதற்கு சற்றுத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. குளிர்காலத் தொடக்கதில் தொடங்கும் கதை மழைக் காலத்தில் முடிகிறது. டெல்லி குளிர் இன்னும் கைகளில் வெண்ணெய் பிசுபிசுப்பாக, ரஜாய் என்று அழைக்கப் படும் கனத்த போர்வைகளின் அடியில், அந்தக் குளிருக்கு ஒத்து வராத தென்னிந்தியச் சமையலோடு செருப்பணியாதக் கால்களில் பனிக்கட்டியாகக் குத்துகிறது.பிறகு வரும் வசந்தக் காலம். அந்த இனிமை கொஞ்ச நாட்களுக்குத்தான். பிறகுஆந்தி என்று அழைக்கப்படும் புழுதி புயலோடு சுட்டெரிக்கும் வெய்யில்! தென்னிந்தியர்களுக்குப் பழகாத குளிர்காலத்தை நினைந்து ஏங்க வைக்கும் வெய்யில் காலம்! இவற்றிற்கு இடையே எழுபதுகளின் மத்தியில் உள்ள காலக் கட்டம். ஹிப்பிகள் கலாச்சாரம், ஜெயாபாதுரி, ஹேமமாலினி, மும்தாஜ் போன்ற கனவுக்கன்னிகள்! கோல் மார்க்கெட், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட அதன் அரசாங்க வீடுகள், கன்னாட் ப்ளேஸ், ரிவோலி தியேட்டர் என்று டெல்லியைச் சுற்றி வலம் வருகிற கதை.


வாழ்க்கையின் சகிக்க முடியாத அபத்தங்கள் நிறைந்த ஒரு தொலைக்காட்சித் தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்து முதலிடம் பெறுவது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எழும் போதெல்லாம் இதை விட மோசமான தவிர்க்க முடியாத அபத்தங்களையெல்லாம் நிஜ வாழ்க்கையில் சந்தித்து ஒத்துப் போய்கொண்டிருக்கும் உண்மைகள் காகித மலர்களின் நிஜ வாசனையில் வெறும் கேள்விகளாக மட்டும் தொடரும் வாழ்க்கையை ஒரு நொடி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

@ @ @

நவம்பர் வாசகர் வட்டம்

நவம்பர் மாத வாசிப்புக்கென 'ஆதவனின் காகிதமலர்கள்' நாவலும், சிங்கை எழுத்தாளர் மாதங்கியின் 'பெரிதினும் பெரிது கேள்' சிறுகதையும் தெரிவு செய்யப்பட்டது.

முதலில் காகிதமலர்கள் குறித்தான விமர்சனங்களையும், பின்னர் மாதங்கியின் சிறுகதையை வெளியிட்டு அதன் விமர்சனங்களையும்
பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன்.

@@@