நகுலன் ஒரு வாசகப் பார்வை -ஜெயந்தி சங்கர்

போவதையே நினைத்தபடி இருந்தவன் வாசகப் பார்வை: ஜெயந்தி சங்கர்
While I thought that I was learning how to live, I have been learning how to die. -Leonardo da Vinci

மரபிலிருந்து வெளியேறிட முடியாத அல்லது விரும்பாத தத்துவங்களை உதிர்க்கும் ஒரு தனித்துவமான கவிதை மொழி நகுலனுடையது. மரபில் ஒரு காலும் நவீனத்தில் ஒரு காலுமாக இருக்கும் நகுலன் தன் சாதிப் பின்னணியை எழுத்திலும் வாழ்விலும் நிராகரித்த நகுலன் தன் கவிதை மொழியில் மரபை விடாது பற்றியிருப்பது ஒரு சுவாரஸியமான முரண் என்று எனக்குத் தோன்றுகிறது. நவீன தமிழ் கவிதையின் துவக்க கட்டத்தில் வாழ்ந்த கவிஞர் எனும் நியாயமான காரணத்தையும் மறந்திட முடியாது தான். 'நாயர்' என்று புனைப்பெயரில் எழுதியிருக்கிறார் என்பதை அறியும் போது பொதுவாக சாதிப்பிரிவில் இல்லை அவரின் வெறுப்பு, தன் சாதியின் மீது மட்டுமே என்பதும் நிரூபணமாகிறது என்று நினைக்கிறேன்.
சிலர் வந்ததும் வந்து சென்ற பிறகும் சூன்யமாகவே மிஞ்சுகிறார்கள்
என்ற அனுபவம் நாம் அறிந்திருக்கக் கூடிய எல்லோரிடமும் நமக்கு ஏற்படுவதில்லை என்றாலும் சில தருணங்களில் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும்.
எதைத் திறந்தால் என்ன கிடைக்கும் என்று திறந்துகொண்டே இருக்கிறார்கள்.
இதைவிட எளிமையாகவும் குறைந்த சொற்களிலும் தேடலைச் சொல்லிவிட முடியாது என்று நான் வியந்தேன்.
'உரையாடல்' என்ற கவிதையில்
பிராந்தி அருந்திய உச்ச நிலையில் நான் என்னுடனேயே பேசுகிறேன்; என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் என்னையே நான் அதட்டுகிறேன்
என்று சொல்லும் நகுலன் தன் தனிமையை அப்பட்டமாகச் சொல்லி விட்டார்.
யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம்
என்று சொல்லும் போது நகுலனுக்கு தனிமையில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
மொழிபெயர்ப்பு மற்றும் பழம் இலக்கியங்களின் தாக்கம் கொண்ட கவிதைகளைக் காட்டிலும் முதல் வாசிப்பில் வார்த்தை விளையாட்டு போலத் தோன்றி அடுத்த வாசிப்பில் தத்துவம் கூறும் முறையில் அமைந்திருக்கும் கவிதைகளே நகுலனின் கவிதைகளில் பரவலான கவனமும் முக்கியத்துவமும் பெரும் போலத் தெரிகிறது. வார்த்தை விளையாட்டு போலத் தோற்றம் தரும் இவ்வகையான கவிதைகள் தான் நகுலனிடமிருந்து அதிகம் கிடைத்திருக்கின்றன.
நினைவு ஊர்ந்து செல்கிறது பார்க்கப் பயமாக இருக்கிறது பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
என்ற வரிகளிலும் சதா ஊர்ந்துசெல்லும் நினைவுகளைக் குறித்து ஒருவிதமான பயமும் ஆர்வமும் கொள்வதை தனக்கே உரித்தான பாணியில் சொல்லும் அனுபவமும் நமக்கு அறிமுகமானது தான்.
***
அதிகமும் மரணத்தைப் பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்த மரணத்திற்குக் காத்திருக்கவே தனிமையைத் தனதென ஏற்றிருக்கிறார் இந்தக் கவி. அல்லது நிழலென ஒரு அடர் தனிமையில் வாழ முடிவெடுத்ததால் சாவை எதிர்பார்த்துத் தன் வாயிலையே பார்த்திருந்தாரோ? வாழ்க்கையில் வெறுப்புற்றோ அல்லது வாழ்ந்து முடித்து போதுமென்று நினைத்துத் தான் தான் மரணத்தை விரும்பினாரோ?! வாழ பயந்து தான் மரணத்தை விரும்பினாரா என்ற கேள்விகளுண்டு என்னில். மரணத்தை எள்ளிடம் கவிகளுக்கு மத்தியில், மரணமேயில்லாத உலகைக் கற்பனைசெய்து காட்சிப்படுத்தி மகிழும் கவிஞர்களுக்கிடையே இவரளவுக்கு மரணத்தை மிகத் தீவிரமாக சந்திக்கத் துடித்த ஒரு கவிஞர் இருப்பாரா என்றே தெரியவில்லை.
மரணத்துக்குப் பின் என்ன, மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று ஏதேனும் ஒன்று உண்டா என்று பல்வேறு கேள்விகளையும் தாங்கிய மரணம் குறித்த மர்மங்களில் சாதாரணமாக மற்றெவருக்குமே இருக்கக் கூடிய ஆர்வத்தின்/ஈடுபாட்டின் தீவிரத்தைக்காட்டிலும் நகுலனில் இருந்த தீவிரம் 'தேகத்தையே உரித்து கோட்- ஸ்டேண்டில் தொங்க விடுகிற' அளவிற்கு பன்மடங்கு அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. உடலைத் துறந்து உணர்ந்துவிடத் தவிக்கும் அந்தத் தீவிரத்தின் தாக்கம் தான் அவர் வாழ்க்கை முறையிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கின்றது என்று நினைக்கிறேன்.
தன் தேகத்திடம்
"இல்லை நீ அங்கேயே தொங்கிக் கொண்டிரு; உன்னைப்பிடித்துக் கொண்டு நான் தொங்குவதை விட நீ தனியாகத் தொங்கிக் கொண்டிருப்பது தான் ரண்டு பேருக்கும் நல்லது" என்று, சொல்லிவிட்டு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியே செல்கிறான்.
என்று நகுலன் சொல்லுபோது தன் உடலையே பாரமாக நினைப்பதை நம்மால் மேலும் உறுதிசெய்து விடமுடிகிறது. உடலின்றி உலகை ஒரு பார்வையாளனாகக் காணும் ஆசையும் இதில் கசிவதை நம்மால் உணரமுடியும்.
மனிதருள் சிலந்தியும் பெண்டிருள் சிதலும் உண்டு.
எனும் போது ஏன் //மனிதருள் சிதலும் பெண்டிருள் சிலந்தியும்// என்று பாடக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. இடக்கா? இருக்கலாம். ஆனால், தோன்றியதென்னவோ உண்மை.
இருப்பதற்கு என்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்
என்று ஒருவித pessimistic தொனியில் சொன்ன நகுலன் தமிழ் நவீன கவிதையின் துவக்கமாக என்றென்றும் தமிழிலக்கியத்தில் இருக்கத் தான் போகிறார் என்று தோன்றுவதையும் உணர்கிறேன். அதிக அங்கீகாரம் இல்லாததால் அவருக்கு ஏதேனும் ஆதங்கம் இருந்திருக்குமோ?
***
எப்பொழுதும் அவள் நினைவு தான் அவள் யார் என்று கேட்காதீர்கள் சுசீலாவின் பல உருவங்களில் இரு உருவம்
என்று சொல்லும் தன் 'சுசிலா'வைப் பற்றி எல்லோரும் யார் என்று துருவிப் பார்க்கும் பார்வைகளாலும் கேள்விகளாலும் வெறுப்படைந்த நகுலனின் உணர்ச்சி வெளிப்பாட்டை கீழ்காணும் வரிகளில் நாம் புரிந்து கொள்ளலாம்.
அவள் யார் என்று கேட்காதீர்கள் உங்கள் துருவிப்பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வு கொடுங்கள் உங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது அக்கறையுமில்லை.
சுசீலாவைக் குறித்து மற்றொரு கவிதையில்,
நேற்று ஒரு கனவு முதல் பேற்றில் சுசீலாவின் கர்ப்பம் அலசிவிட்டதாக இந்த மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
என்று அவர் சொல்லும் போது கட்டுப்பாடற்று அலையும் தன் மனதைக் குறித்து அலுத்துக் கொண்டு சொல்லுமிடத்தில் ஆழ்மனம் பலவேளைகளில் கொள்ளும் விசித்திர விகாரங்கள் கனவுகளாக மேலெழுவதை இயல்பாகச் சொல்கிறார். அதுவும் நம் மனதுக்கு நெருக்கமானவர்களைப் பற்றியே இவ்வகைக் கனவுகள் அமைவதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். சுசிலாவுடன் மனதளவில் வாழ்ந்து வரும் நகுலன் அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் கரு கலைந்தது போன்றும் கனவு காண்வது இதையே தான் உறுதி செய்கிறது.
வேளைக்குத் தகுந்த வேஷம் ஆளுக்கேற்ற அபிநயம் இதுதான் வாழ்வென்றால் சாவதே சாலச் சிறப்பு
என்று சொல்லும் நகுலனுக்கு பாசாங்குகளில் இருக்கும் வெறுப்பு தெளிவாக நமக்குப் புரிகிறது. அதனால் தான்,
மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்
என்று சொல்லும் நகுலகின் கோபம் பாசாங்கு செய்யும் அனைவரின் மீதுமாகப் பாய்கிறது. வாய் பேசாத போதிலும் சதா நம் உள்ளம் பேசிக் கொண்டே தானே இருக்கிறது? மூச்சடங்கும் போது தான் அது அடங்குமோ என்னவோ. அத்தகைய அமைதியைத்தான் நகுலன் தான் காத்திருந்த மரணத்தில் தேடினாரோ!? அவரின் தனிமை அதற்குத் துணை போனதோ அல்லது அதற்கென்றே தனிமையை சுவீகரித்தாரோ தெரியவில்லை.
மனங்கொள்ளும் விபரீத கற்பனைக்குச் சான்றாக நகுலன் எழுதிய
யார் தலையையோ சீவுகிற மாதிரி அவன் பென்சில் சீவிக் கொண்டிருந்தான்
என்ற கவிதை குழந்தை உருவில் உருகி வழியும் மெழுகுவர்த்தியைப் பற்றி யாரோ எழுதிய கவிதையை நினைவூட்டுகிறது.
***
நான் உண்மையில் 'ராமச்சந்திரா' கவிதையை மனதில் வைத்துக் கொண்டு தான் நான் இந்தத் தொகுப்பை அணுகினேன். ஆகவே, பெரிய முன்முடிவென்று என் மனதில் எதுவும் இல்லாதிருந்தாலும் ஒரு வித எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதே நேரத்தில் நகுலனின் உரைநடையை (நாவல்கள்!) விட அவரின் சில கவிதைகள் எனக்குப் பிடித்தே இருந்தன, வேறு சில கவிதைகள் ஒரு வித சோர்வு கலந்த சலிப்பை ஏற்படுத்திய போதிலும் கூட.
கை எழுதி அலுத்துவிட்டது. கண் பார்த்து மூளை சிந்தித்து மனம் அதையும் - இதையும் நினைத்து நினைத்து
என்பது போன்ற பல வரிகளில் கவிஞருக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையின்மை தூக்கலாக தெறிக்கிறது. காலனைக் காலால் மிதிப்பேன் என்ற பாரதியின் கவிமொழியில் வாழ்வதற்கான ஆர்வம் இருக்கும். ஏழ்மை போன்ற பல நெருக்கடிகள் மிகுந்த அவரது வாழ்க்கையிலும் அவருக்கு வாழ ஆசை இருந்தது என்பதில் இருக்கக்கூடிய சுவாரஸியத்துக்கு நகுலனின் இந்த நம்பிக்கையின்மையின் தீவிரத்தின் சுவாரஸியம் ஒருவிதத்திலும் குறைந்தில்லை.
'Death most resembles a prophet who is without honor in his own land or a poet who is a stranger among his people' என்று Kahlil Gibran சொன்னது நகுலனுக்கு மிகவும் பொருந்துகிறது. 'கோட்- ஸ்டேண்ட்' கவிதைகள் பரவலாக அறியப் படுகிற நியாயம் யாருக்கும் புரியும். நகுலனின் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசிக்கும் போது ஏற்படக் கூடிய உணர்வு முற்றிலும் வேறு விதமாக இருக்கும் என்று தோன்றும் வேளையில், ஒரு தொகுப்பாக வாசிக்கும் நாட்களில் என்னிலும் ஒருவித மனச்சோர்வு (depression) படிந்ததை உணர முடிந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

***

'நகுலன் கவிதைகள்' வாசிப்பு: ரெ பாண்டியன்

நகுலனின் கவிதைகள்யாருமில்லாத பிரதேசத்தில் காலியான பின்னும் வெட்டவெளி நோக்கி அசைந்தாடிக் கொண்டிருக்கும் சூரல் நாற்காலி
ரெ.பாண்டியன்.




வந்தவன் கேட்டான்“என்னைத் தெரியுமா?
“தெரியவில்லையே “ என்றேன்
“உன்னைத் தெரியுமா ?” என்று கேட்டான்
“தெரியவில்லையே “ என்றேன்
“பின் என்னதான் தெரியும் ? “ என்றான்
உன்னையும் என்னையும் தவிர வேறு எல்லாம் தெரியும்
என்றேன். (பக்கம் 198, நகுலன் கவிதைகள், காவ்யா வெளியீடு, 2001)

உலகத்தைப்பற்றி நாளிதழின் சேதிகளாய், தடித்த புத்தகங்களின் பக்கங்களாய் எழுத்துக்களாய், தகவலாய் தெரியும். என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் (அதாவது எனது சுற்றம்) பற்றியும் அனுபவபூர்வமாய் இன்னும் எதுவும் நிச்சயமாகத் தெரியாது.

“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை” (பக்கம் 184)


முதல் “எல்லாம்” போத புத்தியால் ஒரு செயல்பாட்டை, அதன் உப-செயல்பாடுகளுடன், செயல்பாட்டின் கொள்கை அடிப்படைகளை அறிந்து வைத்திருப்பது; இரண்டாவது “எல்லாம்” அபோதபூர்வமாய் ( அதே செயல்பாட்டை சுயமான அனுபவமாக உள்வாங்கி ) உணர்தல் அல்லது நான் உள்வாங்கியிருக்கும் அனுபவத்தளம் எவ்வளவு தூரம் அரைக்கிணறு தாண்டிய தனமானது என்பதை புரியவைக்கும் ஒரு தூரத்து வெளிச்சம்.


அங்கு
இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீகளா? “
என்று
கேட்டார்
“எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்”
என்றேன். (பக்கம் 191)


அவர் தன் முன்தீர்மானத்தில் இவரை வைத்திருக்கும் இடம், போட்டு வைத்திருக்கும் புறக்கணிப்பின் பின்வாசல்கடை - இவற்றிலிருந்து இவராய் நகர்ந்துவிடமுடியுமா ?


சந்தை
செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல் “ (பக்கம் 189 )


இழவு வீட்டின் மௌனத்தை சடங்குபூர்வமாய் கடைப்பிடிப்பதை எதிர்பார்த்து சென்ற மனம் அங்கிருந்த இயல்பு நிலையை “இரைச்சலாய்” பார்த்து அதிர்ச்சி கொள்கிறது.

உள்
வீட்டிற்குள்
இருந்தோம்
வெளியில்
நல்ல மழை
ஒரு சொரூப நிலை (பக்கம் 186 )

வெட்டவெளியை நம்மிடமிருந்து அடைமழை அடைத்து, தடுத்துவிடும் வேளை (water curtain போல) – மழை சுழ, வீடு மட்டும் என்கிற ஒற்றை இருப்பும், வீட்டிற்குள்ளான ஓசைகளின் லயத்திலும் தட்பத்திலும் நனையாது நனைந்து லயிக்கும் அனுபவம்.

கடைசிக் கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது ?
எல்லாம். (பக்கம் 177 )

நிழலேயற்ற, கண்கூசும், வெயில் எரிக்கும் பாலைவனத்தில் யானைகள் நீர் அருந்த பத்து கிலோமீட்டர் தூரம் நடக்கின்றன. அதுபோன்ற ஒரு பகல்வேளையில் ஒரு நகர்புறத்து அலுவலக அவசரகதியில் மனிதர்கள் தங்களை மறந்த காரியங்களில். ஒரே தருணத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அறிந்த யதார்த்தங்கள் தவிர்த்து, அறியாத யதார்த்தங்கள் எத்தனை?

இதைப்போலவே இன்னொரு கவிதை:

இங்கும்
கத்தாழைச் செடி
சப்பாத்தி முள்
பாலைவனச் சோலைகள்
எனத்
தோற்றமளிக்கும்
கானல்நீர்ப் பரப்புகள்
ஊர்ந்து செல்லும்
ஒட்டகங்கள்
இங்கும்
உயிர் சலித்துக்கொண்டிருக்கிறது (பக்கம் 187 )


ஸ்டேஷன்
ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது. (பக்கம் 169 )


ஸ்டேஷனில் இப்பொழுது யாருமில்லை. ஆனால் வேறு யார் யாரோ வெவ்வேறு காலங்களில் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது வந்த ரயிலிலும் (நினைவுகள் பயணம் போன பாதை) வந்து நின்ற ஸ்டேஷனிலும் (நினைவுகள் வந்துசேர்ந்து, உலவி நிற்கும் இடத்திலும்) யாருமில்லை என்பதால், இது ஸ்டேஷன் இல்லை (இதற்கு முன் இந்த இடம்வரை யாருடைய நினைவுப்பாதையும் நீண்டதில்லை) என்றாகுமா?


ராமச்சந்திரன்
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை. (பக்கம் 169)


அவசரகதி என்கிற வெள்ளத்தில் தனக்குள்ளேயே மனிதன் மூழ்கிப்போனான். அதற்குப் பிறகு அடுத்த மனிதனின் தனித்த அடையாளங்களில் அக்கறை கொள்ளுமளவிற்கு அவன் பொறுமையற்று போனான். “ராமச்சந்திரனா” என்பது தனது அலுவலை விரைந்து முடிக்க எண்ணி கேட்கப்படும் கேள்வி. அதற்கு அவர் “ராமச்சந்திரன் “ என்றதும் வந்த காரியம் உடனே நிறைவேறியதின் ஆசுவாசம் உள்ளுக்குள். புதுமைப்பித்தனின் “மனித யந்திரம் “ கதையில் இயந்திரமாய் இயங்கும் சர்வர் மனிதனாகும் தருணம் (கீழே விழுந்த கைக்குட்டையை அவன் கவனிப்பது) இங்கே நிகழாமல் போகிறது. நிகழாமல் போன “எந்த ராமச்சந்திரன் “ என்கிற கேள்வியைத் தொடர்ந்திருக்கக்கூடிய சம்பாஷணை தொடர்பு, பின்னர் நினைவு கூரப்பட்டு, மனிதர்களுக்கிடையில் பாதாளமாய் விழுந்துவிட்ட மௌனம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


வழக்கம் போல்
வழக்கம்போல் வெளிவாசல்
திண்ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கிறான்.
அந்தி மயங்கும் வேளை
..
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும்போது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது.
வெயில் மறைகிறது
..
கையெழுத்து மறையும் வேளை
..
“பட்”டென்று நிழல்கூட
இல்லாமல் போகிறது. இருள்
எங்கும் “கப்”பென்று பரவுகிறது.
மரம், தந்திக்கம்பம், வீடு –
எல்லாமே மறைகின்றன.
எங்கும் “திட்டு திட்டாக”
இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது. (பக்கம் 168)


வழக்கம்போல தொடங்கும் ஒரு அந்திவேளை – இருள் விழுந்தபிறகு, அசேதனப்பொருட்களின் சேதன வடிவம் “திட்டு திட்டாக “ எஞ்சி நிற்கிறது. பழக்கத்தின் களிம்பேறிப்போன மனதின் ரசிப்புத்தன்மைக்கு, கலையின் வசீகரச் சக்தி ஒரு புது அதிர்ச்சியை தந்து செல்கிறது : எது உண்மையில் அழகு ? வெயிலும் வெளிச்சமும் அதன் வெவ்வேறான நிறச்சாயல்களும் - அவை சிந்திவைக்கும் நிழல்களுமா அல்லது அங்கு பகல்-இரவு எப்பொழுதும் இருக்கும் இயற்கையா ?


அவர் பல உண்மைகளைச் சொல்கிறார்
ஒரு உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு (பக்கம் 181 )


ஒரு உண்மையை மறைக்கவேண்டுமானால், அதன் வெற்றிடத்தை மறைக்க அதன் அருகருகே இருக்கும் பிற பாதகமற்ற உண்மைகளை இலை, தழைகளை இழுத்துப்போட்டு ஒரு குழியை மூடுவதுபோல மூடவேண்டும்.
நகுலனின் கலை

“எவற்றின் நடமாடும் சாயைகள் நாம்? “ என்ற மௌனியின் கதாபாத்திரத்தின் கேள்வி நகுலனது கவிதைகளின் ஆதார கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. தனிமையின் சஞ்சாரத்தில் மொழியின் வார்த்தைகள் மீதும், புலன்கள்வழி அவரை வந்தடையும் காட்சிகள் மீதும், ஒலிகளின்மீதும் (குயிலின் கூகூ),உணர்வுநிலைகள் மீதும் அவரது பரந்த வாசிப்பின்மீதும், மரணத்தின்மீதும், தன்னிலிருந்து விடுபட்டு தன்னையே பார்த்துக்கொள்ளும் முயற்சிமீதும்(கோட்ஸ்டாண்ட்-ல் உடலை கழற்றி தொங்கவிட்டதும் காணமற்போகும் அவரது நிழல்) அவரது கேள்விகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.


சூரல் நாற்காலி காலியாகிவிட்டது. ஆனால், நகுலனோடு பயணிக்கவிரும்பும் வாசகனின் பார்வையில் அது அசைந்தாடுவது இன்னும் நிற்கவில்லை.
@ @ @

(புதிய வாசகனுக்கு நகுலனை அறிமுகப்படுத்தும் விதமாய் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. நகுலன் மேலும் அனுமதிக்கும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இது முற்றுப்பெறலாம் )

ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா .பாஸ்கருடனான கலந்துரையாடல்

ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா .பாஸ்கருடனான கலந்துரையாடல்


22.02.2007 ஞாயிறு அன்று சிங்கப்பூரில் அமைந்துள்ள அமோக்கிய நூலகப்பிரிவில் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டிருக்கும் வாசகர் வட்டம் ஓவியர் கா.பாஸ்கர் அவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.


திரு. செல்வம் அவர்கள் ஓவியர் கா. பாஸ்கர் அவர்களை அறிமுகம் செய்ததையடுத்து ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல் கலகலப்பாக அரங்கேறியது.

கா. பாஸ்கர் சென்னை ஓவியக்கல்லூரி மாணவர் அங்கு ஓவியத்தில் முதுகலைபட்டத்தை முடித்து பல்வேறு ஓவியபோட்டிகளில் கலந்துகொண்டும் தற்சமயம் சிங்கப்பூரில் கணிணி வரைகலைபிரிவில் பணிபுரிகிறார். ஓவியர் சந்துரு ஆர். வி.பாஸ்கர் தட்சணாமூர்த்தி இவர்களின் மாணவர் கா.பாஸ்கர் என்பது சிறப்பு.

இந்த சந்திப்பை மிகப்பெரிய அனுபவமாக எடுத்துகொள்வதாக ஆரம்பித்து நான் இங்கு வரலாறுகளை பற்றி பேசவரவில்லை ஓவியத்தை மட்டும் பேசவந்துள்ளேன் என்றார். ஓவியம் எழுத்து இரண்டும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதாக கருதும் இவர் ஓவியம் பயின்ற கால கட்டத்தில் ஓவியத்தை தாண்டி வேறு பக்கங்களில் அதிகம் சென்றதில்லையாம். ஓவியக் கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் முன் இவரது கனவு மிகப்பெரிய சினிமா போஸ்டர் டிசைனராக வருவதாக இருந்ததாம் . ஆனால் கல்லூரியில் நுழைந்த பின்தான் ஓவியம் என்பது புகழுக்காகவும் எல்லோருக்காகவும் தெரியபடுத்தவேண்டும் என்பதற்காகவும் செய்யும் செயலாக இல்லை என்பதை உணர்ந்ததாகவும் கூறும் பாஸ்கர் ஓவியத்திற்கும் இவருக்கும் உள்ள தொடர்பினை நிர்ணயிக்கவே 5 ஆண்டுகள் தேவைபட்டதாம். இது ஓவியம் என்று இல்லை எழுத்து இன்னபிற கலைகளுக்கும் பொருந்துவதாகவும் கருதுகிறார். அவரது கல்லூரிக் காலத்து நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார் . முதல் இரண்டுவருடங்களில் பார்ப்பதை வரைந்து பின் வந்த காலகட்டத்தில் ஓவியம் சார்ந்த சிற்பம் புகைப்படம் அச்சுக்கலை என்று பல்வேறுவகையான கலைகளுக்கு பயிற்சியளிக்கப்படும்போது தான் ஓவியன் அவன் எந்த திசையில் பயணிக்கவேண்டும் என்று முடிவு எடுப்பதாகவும் மேலும் ஓவியத்தில் புதுவகையான மாற்றங்களை புகுத்தவும் தயாராகின்றனர் என்கிறார். டெல்லியுளுள்ள மாடர்ன் ஆர்ட் காலரிக்கு ஒவிய போட்டிக்கு 10000 க்கும் மேற்ப்பட்ட படைப்புகள் வந்தால் அதில் சிறந்த ஓவியமாக 100 க்கும் குறைவான ஓவியம் தேர்ந்தெடுக் படுமாம் அப்பொழுது ஓவியரின் சிறப்பினை கண்டுகொள்ள முடியுமாம். கல்லூரி காலகட்டத்தில் இவரது படைப்புகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றதும் குறிப்பிடதக்கது . பயிற்சி காலகட்டத்தில் ஆபுர்வமாக சில விருந்தினர்கள் வருவார்கள் என்றும் அப்படி நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வினை நினைவுகூறும் இவர் சிவக்குமார் நடிகர் என்பதைவிட சிறந்த ஓவியராம் .

16ம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்து இன்று வரை ஓவியம் அடைந்த வளர்சியினை ரவிந்தான தாகூர் ரவிவர்மா ரெனாசன் மைக்கல் ஏஞ்சலோ எம்ரான் வான்கோ பிக்காசோ மோன்ரியான் சந்துரு ஆர். வி.பாஸ்கர் அல்போன்சா என்று வரிசைபடுத்தி எங்களுக்கு காண்பித்தது என்போன்றவர்களுக்கு ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்த தூண்டுவதாக அமைந்தது. ஓவியனும் ஓவியனும் சந்தித்து கலந்துரையாடுவதை விட ஒரு ஓவியனும் எழுத்தாளனும் சந்திக்கும்போது இருவரிடம்மிருந்தும் வெளிப்படும் படைப்புகள் மிகச்சிறந்ததாக வருவதாக கருதும் இவர் சிங்கப்பூரில் கிடைந்த நட்பு வட்டங்கள் தான் எழுத்தின் மீதான புரிதலை தூண்டியதாம். பார்ப்பதை வரைவதைவிட நாம் பார்த்ததில் நினைப்பதை வரையஆரம்பித்த இவர் எல்லா இசங்களிளும் குழு மனப்பான்மை இருந்ததாகவும் அதனால்தான் கலைகள் ஒவ்வொருகாலகட்டத்திலும் பல்வேறு விதமான வளர்ச்சியினை எட்டியுள்ளதாம். சினிமா புகைப்படகலைஞர்கள் பின்னோக்கிசென்று ஓவியத்தில்லிருந்தான் பல்வேறு காட்சி அமைப்புகளை அறிந்து தற்பொழுது சினிமாவில் பயன்படுத்துவதாக சொல்லி 18 ம் நூற்றாண்டின் ஓவியத்தை பிரதிபலிக்கும் சில தமிழ்சினிமாவை குறிப்பிட்டபோது சிரிப்பலை எழுந்து அடங்கியது. மரபு பற்றி தெரிந்து கொள்ளும் போதுதான் நவின ஓவியத்தை சிறப்பாக வiயைமுடியும் என்று நம்பும் இவர் இலக்கியங்கள் பற்றியும் அதன் மீதான குழுமனப்பான்மை பற்றியும் ஆங்காங்கே தொட்டுச்சென்றது அவரது மனஅதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது . எகிப்திய காலகட்டத்துடன் ஒப்பிடும் போது ஆரம்பகாலகட்டத்திலேயே நாம் மிகச்சிறந்த ஓவியத்தை வரைய ஆரம்பித்துவிட்டதாகவும் நம்மிடமிருந்துதான் ஓவியத்திற்கான வண்ணங்களை ஆரம்பகாலகட்டத்தில் எகிப்தியர்கள் எடுத்துச்சென்றதாகவும் அதற்கான வரலாறுகளை தான் நாம் பத்திரப்படுத்த தவறிதை குறிப்பிட்டு பிரிட்டிஷ்சாரின் வருகையால் நாம் நம்முடைய அஜந்தா குகைகள் உட்பட பல்வேறு ஓவியங்ளை கண்டுகொள்ள நேரிட்டதையும் விவரித்தது ஓவியத்தின் மீதான அதித ஈடுபாட்டை காட்டியது.

எழுத்தாளர் விமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதிய நவின ஓவியம் என்னும் நூலை வாங்கி படித்தால் தமிழக ஓவியர்கள் பற்றியும் நவின ஒவியத்தை பற்றியும் அறிந்துகொள்ள உதவுவதாகவும் மேலும் கும்பகோணத்தை சேர்ந்த எழுத்தாளர் தேனுகா அவர்கள் பியத்மோன்ரியான் பற்றி எழுதிய புத்தகமும் ஓவியம் பற்றிய புரிதலை பூர்த்திசெய்வதாக இருக்கும் படைப்புகள்.

மரபு நவினம் என்று மாறிமாறி பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இவரது எண்ணம் இவரது படைப்புகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது அவ்வளவுதானாம். அத்தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப அவர்கள் வேண்டியதை எடுத்துகொள்ளட்டுமாம்.

இதன் பின் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஓவியத்தின் மூலம் சழுகத்திற்கு என்இதன் பின் கலந்துரையாடலில் கேட்கப்பட்ட ஓவியத்தின் மூலம் சழுகத்திற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ஓவியத்தை நவின ஓவியத்தை புரிந்துகொள்வது எப்படி வரலாறுகளை ஓவியன் அடுத்த தலைமுறைக்கு கடத்திச்செல்கிறானா அப்படி நீங்கள் செய்கிறீர்களா என்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஓவியர் கா. பாஸ்கருடனான இந்த கலந்துரையாடல் எழுத்தாளர்கள் திருமதி . ஜெயந்தி சங்கர் திருமதி . மாதங்கி திரு.கண்ணபிரான் கவிஞர் திரு. பாலுமணிமாறன் தீவிர இலக்கிய வாசிப்பாளர் திரு. மணி உள்ளிட்ட கலந்துகொண்ட இலக்கிய ஆர்வர்களை ஓவியத்தின் மீதான புரிதல் ஓவியம் மற்றும் எழுத்துடனான தொடர்பை அறிதல் என்று பயனுள்ளதாக அமைந்தது. என்போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு படைப்பினை எப்படி அணுகுவது என்று கண்டுகொள்ள களமாக இந்த கலந்துரையாடல் அமைந்ததில் கலந்துகொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியே .

அருமையான கலந்துரையாடலை ஏற்பாடு செய்த வாசகர் வட்டம் திரு ரெ. பாண்டியன் உள்ளிட்ட நண்பர்கள் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்த சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் கிளை பிரிவான அமோக்கியநூலகம் மற்றும் நிகழ்சியின் ஆரம்பம் முதல் முடிவு வரையிருந்து எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ததோடு அருமையான சிற்றுண்டியை கொடுத்து உபசரித்த நூலகத்தின் நிர்வாகியில் ஒருவரான நிர்மலா அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை பதிவு செய்கிறேன் .
குறிப்பு:
ஆரஞ்சு வண்ண ஆடை அணிந்திருப்பவர் ஓவியர் கா. பாஸ்கர்