மானஸாஜென்: அசோகமித்ரனின் 'ஒற்றன்' குறித்து

அசோகமித்திரனின் 'ஒற்றன்!'
மானஸாஜென்

நாவலில் நின்று கொண்டு, பயணக் கட்டுரை உலகினை வேவு பார்க்கிறானா? அல்லது கட்டுரையின் தளத்திலிருந்து நாவலை வேவு பார்க்கிறானா? என அசோகமித்திரனின், 'ஒற்றனை' வரையறுப்பது கடினமான செயல்.

அதற்குக் காரணம் அவரது கட்டுரைகளிலும், அவரது கதைகளின் சிறப்பு அம்சங்கள் விரவிக் கிடப்பதுதான். செய் நெர்த்தி, எளிமையான யுக்திகளும் வார்த்தைகளும் கொண்டு மிகச் சாகசமான விஷயங்களை அனாயசமாகத் தொட்டுச் செல்வது, அங்கதம், இப்படி.


இதற்கும் அசோகமித்திரனே திருப்தி அளிக்கும் பதிலை முன் வைத்திருக்கிறார். "அக்கரையுடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரை ஒரு நல்ல புனைக்கதைக்கு எவ்விதத்திலும் தாழ்ந்ததல்ல."


***********


சிங்காரத்தின், 'புயலிலே ஒரு தோணி' பொலவோ, ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம்' போலவோ பிரமாண்டமான காலத்தின் முன் விரிவு கொண்டு மனித மனத்தை விகாசமடையச் செய்ய 'ஒற்றன்' முயல்வதில்லை, அவை காட்ட நினைப்பதெல்லாம் சிறிய அணுவைத்தான். சாதாரண நடுத்தரவர்க்க மனிதனின், சாதாரண தினங்களும், அவற்றின் ஊடாக சாதாரண வார்த்தைகளில் வெளிப்படும் அசாதாரண தருணங்களையும்தான். இத்தகைய அசாதாரண தருணங்கள் அணுவைப் பிளப்பது போன்ற ஒரு செயலை நேர்த்தியுடன் செய்கின்றன. இத்தகைய, யுகங்களைப் புறந்தள்ளி கணங்களில் ஜீவிக்கும் கலை நேர்த்தி எல்லா உன்னத படைப்புகளைப் போலவே, மனித மனத்தை என்றேன்றைக்கும் மாற்றிடும் சக்தி கொண்டதாக இருக்கிறது.



*************


மொத்தம் பதினான்கு அத்தியாயங்கள், அயோவா நகரம் களம், நிகழும் காலம் சுமாராக ஏழு மாதங்கள் (1973 அக்டோபரிலிருந்து, 27 ஏப்ரல் 1974 வரை) ஒவ்வொருவரும் வேறு வேறு நாடுகளிலிருந்து வந்திருக்கும் பிரஜைகள் இதற்கு முன் எப்போதுமே பார்த்துக் கொள்ளாதவர்கள், எல்லாம் முடிந்த பின்னர் மறுபடியும் பார்த்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகம் தான்.

ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் முழுமை பெற்று ஒரு சிறுகதைக்கான நேர்த்தியோடு விளங்குகிறது.

இந் நாவலை அப்படியே ஒரு மனிதனின் வாழ்விற்கான குறியீடாக்கினால், இப்பிறவி ஒரு பயணம்... கதை முதல் அத்தியாயத்தில் அம் மனிதனின் பிறப்பாகவும், பதினான்காம் அத்தியாயம் அவனது மரணமாகவும் உருக்கொள்கிறது. ஒரு முக்கியமான வித்தியாசத்துடன்; அதாவது, அம் மனிதனுக்கு தான் எப்போது மரணமடைவோம் என்பது தெளிவாக அறுதியிட்டுத் தெரியும்.


'மனிதன் மரணத்தை எதிர்கொள்ளும் தருணத்தில் அவனது தர்க்கம் அறுபட்டுப் போகிறது, சிந்தனைகளும், காலமும் சிதைவுற்றுப் போகிறது ஆனால் அவனது இதயம் இந்தப் பயணத்தின் முக்கியமான தருணங்களைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறது. வாழ்வில் மரணம் பற்றிய நினைப்பற்ற நேரங்களில் மிகப் பெரியதாகத் தோன்றிய விஷயங்கள், குறிக்கோள்கள், நடைமுறைகள் எல்லாம் அற்பத்தனமான வித்தியாசங்களாகக் குறுகி, பொருட்படுத்த தேவையற்றவனவாய் மாறிப் போகிறது. எல்லா விஷயங்களும் ஒரு நடு நிலைமையான பார்வையாளனின் காட்சிகளாய் மாறிப் போகின்றன. இப்போது ஒரு அற்புதமான மாற்றம் நிகழ்கிறது. எல்லா சாதாரண, தினசரிக் காட்சிகளிலும் கூட அசாதாரணமான வேறுபாடுகளைக் கடந்த கணங்கள், விடுதலைக்கான திறவு கோல்கள் இருக்கின்றன, ஒரு கட்சியில் சேர்ந்து அலைவுறும் மனம் அடங்கியதும், அவை கண்ணில் பட ஆரம்பிக்கின்றன' என மரண அனுபவத்தை (NDE) ஆய்வு செய்யும், ரேமண்ட் மூடி(Raymond A Moody), எலிசபத் குப்லர் ரோஸ் (Elisabeth Kubler Ross), அதற்கு ஒத்துழைத்த பெட்டி ஜே. யியாடி (Betty J.Eadie) போன்றோர் கூறுகின்றனர். மரணத்தை முன் வைத்து வாழ்க்கையை எதிர்கொள்ள திபெத்திய பௌத்தமும், இந்துமதமும் அறிவுறுத்துகின்றன. கிட்டத்தட்ட அத்தகைய ஒரு நிலைப்பாட்டையே அசோகமித்திரனின் படைப்புலகம் எடுக்கிறது.


மறுபடியும் ஒற்றனுக்கு வருவோம்...ஒவ்வொரு அத்தியாயமும் எந்தவொரு கட்டுக்கோப்போ, திட்டமோ, இன்றி தினசரி ஒரு சராசரி வாழ்வாய் நிகழ்கிறது. மனிதர்கள் பெரும்பாலும் முன் தயாரிப்புகள் அற்ற எளியவர்களாயும், குறைகளும், நிறைகளும் நிறைந்தவர்களாக, தடுமாற்றங்களுடன் தங்களின் நாளினை நகர்த்துகிறார்கள்.( இதற்கு களம் உதவுகிறது, புதிய சூழல், மொழி, கலாச்சாரம், வேறுபட்ட பருவ நிலை இப்படிப் பட்ட காரணிகள் எல்லோரையும் தடுமாற வைக்கிறது.) ஒரு அத்தியாயத்திற்கும் மற்ற அத்தியாயத்திற்கும் நேரடியான தொடர்போ, சார்போ இருப்பதில்லை, காலம் முன், பின்னாகவும் கூட தொகுப்புக்குள்ளாகிறது. தியாகராஜன் இத்தகைய சூழலில் சார்பற்ற ஒரு பார்வையாளனாக தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகளைப் பார்க்கிறான்.
நாடு, இனம், மொழி, கலாச்சாரம், அந்தர்ஸு, போன்ற இமாலயப் பிரச்சனைகள் அற்பங்களாகக் குறுகிப் போக ஒவ்வொரு அத்தியாங்களிலும் ஒளிந்திருக்கும் பார்தோக்கள் (Bardo) வெளிப்படுகின்றன. இந்த சார்பற்ற பார்வை ஒரு நகைச்சுவைக்கான கோணத்தைக் கொடுக்கிறது. நாம் வாழும் வாழ்க்கையின் அபத்தத்தை உணர நேர்கையில் எழும், யாரையும் காயப்படுத்தாத இயல்புடைய அங்கதம். புத்தரின் சிரிப்பைப் போல, குழந்தை தன்னை புத்திசாலித்தனத்தை நிருபிப்பதற்காக எதையாவது பிழைபடச் செய்யும் போது நமக்குள் எழுமே அது போன்ற ஒரு சிரிப்பு.



*************




ஒற்றனில் அசோகமித்திரனின் கலை விவரிக்க மிகச் சிக்கல் வாய்ந்த தொன்று ஏனெனில் அவை மிக எளிமையாக இருக்கின்றன.

எளிமையான வாழ்வின் ஒரு துண்டை ஏன் அவர் தெரிவு செய்து நம் முன் வைக்கப் பிரயத்தம் கொள்கிறார் என்பது ஒரு முக்கிய பார்வைக் கோணத்தை நமக்குத் தருகிறது. அதுவே அவர் படைப்புகளுக்குள் நாம் செல்ல அவர் அனுமதிக்கும் நுழைவாயில்.

சார்பற்ற பார்வைக் கோணத்தில் பெரியது சிறியதென விஷயங்கள் இல்லை, அபே குபேக்னாவின், அந்தர்ஸ் ( ஜுடாயா சிங்கத்தின் நண்பன், பணக்காரன்), தியாகராஜனுக்கும் அவனுடைய பெண் தோழிக்குமான (கஜுகோ) உறவை பொறாமையில் வேவு பார்ப்பவன், கதைசொல்லியையும் அடித்தவன் போன்ற விஷயங்களுக்கு பெரிய முக்கியத்துவம் ஏதுமில்லை, கவனம் அவன் புத்தகத்தின் மீது தட்டி நிற்கிறது, அதைப் படிக்க வேண்டுமென்ற அவாவில் முடிகிறது, ஆனால் ஒரு கே-மார்ட் ஷூவிலிருக்கும் ஒரு அட்டை அற்ப விஷயமாகப் போகாமல் ஓயாமல் வறுத்தி அவனை அலைகழிக்கிறது! பெரு தேசத்து பிரவோவுக்கும், அர்ஜெண்டீன அலீசியாவிற்குமான வெறுப்பும்கூட பெரிய விஷயமில்லை, ஆனால் அனைத்து வேறுபாடுகளற்ற வெளியில் மொழிகளைக் கடந்து ஞானக்கூத்தனின் கவிதை நெகிழ்த்தும் கணம் பிரதானப் படுத்தப் படுகிறது, அம்மா இறந்தவனின் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் கணம் இருவருக்குமே மறக்கமுடியாத கணமாகிறதென உணர்த்தப் படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போக நாவல் நெடுக விஷயங்களைக் கவனமாக முன் வைக்கிறார்.


புற விஷயங்கள் (சம்பவங்கள், சித்தரிப்பு, மனவோட்டங்களும் உணர்வுகளுக்கும் கூட அழுத்தம் தருவதில்லை.) மூலமாக அகதரிசனத்திற்குப் போகிறார், தேவைக்கும் குறைவான விவரிப்புகள் மூலம் ஒரு பொதுப் புள்ளியிலிருந்து வாசகனைப் பார்க்க வைக்கிறார். உதாரணத்திற்கு பெரும்பாலான மனிதர்கள் எந்த நாட்டுக்காரன், அவன் உயரமானவனா, அவன் உடல் உறுப்புகள் எல்லாம் எப்படி அமைந்திருக்கின்றன, என்ற தயாரிப்புகள் ஏதுமில்லை, சற்று வித்யாசமான கலாச்சார, மொழி பின்னனியுடைய மனிதன் என்ற விவரம் மட்டும் போதும், (உதாரணம் அத்தியாயம்: பூண்டு) தேவைப்பட்டால் மேல் விவரங்களை சம்பாஷணைகளில் பூடகமாகத் தருகிறார். இத்தகைய இடைவெளிகளை ஒரு சூட்சமமான இணைப்புகள் இணைக்கின்றன, அவை வழியெங்கும் விரவிக் கிடக்கின்றன.


சாதாரண நிகழ்வில் பெரிய விஷயங்கள் நிகழ்கின்றன. ( கே-மார்ட் ஷூ, பூண்டு, அந்த இன்னொரு பஸ் நிலையம், இப்போது நேரமில்லை...) ஆனால் முன் தயாரிப்புகளும், திட்டங்களும், வீழ்ச்சியிலும், கேளிக்கூத்தாகவும் முடிகின்றன. ( பிரவோவின் 'மகா ஒற்றன்', கவிதை வாசிப்பு, கஜுகோவின் கவிதை அரங்கேற்றம்.)

மத்திய, கீழ் மத்திய தர வர்கத்தின், அலைச்சல்களும், தயக்கங்களும் நாடு, இன, மொழி கடந்து ஒற்றனில் பதிவாகியிருக்கின்றன, ஆனால் அவை எந்த ஒரு அரசியல் நிலைப்பாட்டையும், சித்தாந்தத்தையும் வலியுறுத்துவதில்லை, அழுத்திக் கூடச் சொல்வதில்லை.


சிக்கலான வாசிப்பு தரும் போதையில் உழல விரும்பும் வாசகர்களுக்கு ஒற்றன் பெருத்த ஏமாற்றம் தரலாம், அத்தியாயங்களுக்கு ஊடாக கதையையோ, உணர்வு நிலை வளச்சியையோ, தத்துவங்களையோ, தேடவிழையும் வாசகர்களுக்கு மற்றைய அசோகமித்திரனின் படைப்புகளைப் போன்றே இதுவும் ஏமாற்றத்தைத் தரும்.


************

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு