ஜெயந்தி சங்கர் திலகவதியின் 'கல்மரம்' ஒரு வாசிப்பு

கல்மரம்
-----------
ஆசிரியர் - திலகவதி


வாசிப்போம் சிங்கப்பூர்/வாசக வட்டம் - ஜூன் 2006


வாசிப்பு : ஜெயந்தி சங்கர்


தலைப்புத் தேர்வு கவித்துவமாக இருக்கிறது. கற்களால் வளரும் மரமாக கட்டடத்தைச்
சொல்வது அழகு. இரண்டும் நிழல் தரும் என்றாலும் கட்டடத்திற்கு உயிரில்லை.
அதைக்கட்டியவர்களுக்கோ அங்கீகாரமில்லை. பெரிய கோவிலை இராஜராஜசோழன் கட்டினான்
தாஜ்மஹாலை ஷாஜ்ஜஹான் கட்டினான் என்பதுபோல முதல்போட்டவரைத் தான் கட்டடத்தைக்
கட்டியவராகப் பார்க்கிறது சமூகம் என்கிற ஆதங்கம் ஆசிரியருக்கு உண்டு.



அடித்தட்டு மக்களின் ஒரு பகுதியினரான கட்டுமானப்பணியார்களின் கடின வாழ்வு
மற்றும் தொழில்முறைச் சிக்கல்களை மிகவும் அக்கறையுடன் அணுகியிருப்பது
பாராட்டுக்குரியது. இவர்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு என்று எதுவுமே இல்லை.
முதலாளிகளின் உழைப்புச் சுரண்டல் கதை நெடுகிலும் கண்டிக்கப்படுகிறது. தவிர,
வேலையின்மையும், கிடைத்த வேலையில் மனநிறைவில்லாமையும், மேஸ்திரி/கொத்தனார்களின்
சீண்டல்கள் மற்றும் உரிமை மறுப்பு போன்ற ஏராளமான அழுத்தங்கள் நிறைந்த
வாழ்வைக்கொண்ட இவர்கள் எப்படி சமூகத்திலிருந்து அந்நியமாகிப் போகிறார்கள்
என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்காக ஆசிரியர் களப்பணிமேற்கொண்டிருக்கிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.



முக்கிய பாத்திரங்கள்
---------------------------


ஆதிலட்சுமி, காசி, காவேரி, சுசீலா, கன்னியம்மாள், ஆர். ஆர். எம், ராகினி, அத்தை
போன்றோர்.


கதைச்சுருக்கம்
-------------------



காசி வேலைகிடைக்காமல், என்றாவது கிடைக்கும் சில்லரைவேலையைச் செய்து
சம்பாதிக்கும் ஓரு குப்பத்து இளைஞன். எந்தவேலையும் ஒழுங்காகத் தெரியாதவன்.
அவனது தாய் ஆதிலட்சுமி மேஸ்திரியாக இருந்து வேலையின் போது விபத்தில் இறந்த தன்
கணவனின் கதி பிள்ளைக்கு வரக்கூடாது என்ற கவலையில் கொல்லு வேலைக்குப்போகக்கூடாது
என்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். அவளின் ஒரு மகள் கன்னியம்மாள்
கர்பவதி. புகுந்தவீட்டில் பிரச்சனை என்றும் கணவனுக்கு வரக்கூடாத பால்வினை நோய்
வந்திருக்கிறது என்றும் சொல்லிக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிடுகிறாள்.
கடைசி மகள் காவேரி பத்தாவது படித்திருக்கும் துடிப்புள்ள பெண். அவள் சுசீலாவோடு
நட்புகொள்கிறாள். சுசீலா தன் நல்வாழ்வை விட்டுவிட்டு கட்டடத்தொழிலாளிகளின்
நலனுக்காகவே குப்பத்தில் வந்து வாழும் பெண். காசிக்கு மணமுடிக்கிறாள்
ஆதிலட்சுமி. வந்துசேரும் மருமகள் ராகினி வசதியாக வாழ்ந்தவள். முதலில் இவர்களின்
வீட்டைக்கண்டு முகம் சுழித்துவிட்டு, கொஞ்சநாளிலேயே காசிக்கு தன் சகோதரன்
மூலமாக வாட்ச் மேன் வேலை வாங்கித் தருகிறாள். அடுக்ககம் கட்டும் தளத்தில் ஷெட்
ஒன்று கட்டிக் கொடுக்கிறார் ஆர். ஆர். எம் என்னும் முதலாளி. அங்கே குடியேறும்
காசி, ஓரளவிற்கு கையில் காசுபார்க்கிறான். அங்கேயே ராகினிக்கும் கணக்கர் வேலை
கிடைக்கிறது. அந்த முதலாளி கொத்தனார் சித்தாள் மற்றும் பிற வேலையாட்களை
மனிதாபிமானமில்லாமல் நடத்தும் விதத்தையெல்லாம் இவர்கள் காணநேர்கிறது. உழைப்புச்
சுரண்டலையும் பாதுகாப்பில்லாத எளியமக்களின் வாழ்க்கையையும் காணும் ராகினி மனம்
மாறி அவர்களுக்காக சுசீலா அமைக்க நினைக்கும் யூனியன் நிறுவும் பணியில்
கைகொடுத்து, கொத்தனார் பயிற்சிக்கும் விண்ணப்பித்துச் சேருகிறாள்.
தொழிலாளர்களுக்குச் சேரவேண்டிய சம்பளபாக்கியை யூனியன் மூலம் எப்படி
வாங்கலாமென்று தொழிலாளர்களுக்குச் சொல்லி நம்பிக்கையூட்டுகிறாள்.
---------



ஆதிலட்சுமி கதாபாத்திரம் இயல்பும் சிறப்பும் கொண்டதாக அமைந்திருக்கின்றது.
அவளின் பாசம், தவிப்பு மற்றும் கவலை யாவும் ரசிக்கும்படி
சொல்லப்பட்டிருக்கின்றன. அதேபோல இட்லிக்கடை வைத்திருக்கும் அத்தை பாத்திரமும்
அதற்கு நிகரான சிறப்பினைக் கொண்டுள்ளது. இருவரின் உணர்ச்சிவெளிப்பாடுகள்
மற்றும் உளவியல் சார்ந்த சிந்தனைகள் அருமை.


காசி ஒரே ஒரு முறை குடிப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அம்மக்களிடையே
குடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சரி, குடிக்காதவன் குடித்தான் என்று
கொள்வோம். அம்மாவுக்கு செய்துகொடுத்த சத்தியத்தை மீற முயற்சிப்பதாகவும் அது
தொடர்பான சில சிக்கல்களையும் சொல்லியிருந்தால் ஒரு எதார்த்த இளைஞனாக
இருந்திருப்பான் காசி.


காசிக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும்போது பெண்பார்த்தல் கட்டம் வருகிறது.
யாருக்குமே தெரியாமல் குழாயடியில் தண்ணீர் பிடிக்க வரும்
பெண்ணைப்பார்த்துவிட்டு வருவதாக கதையில் வருகிறது. அலங்காரம் செய்து
நிற்கவைத்துப் பெண்பார்ப்பதைக் கேவலமாக நினைக்கும் இவ்வெளிய மக்களிடமிருந்து
நடுத்தரவர்க்கம் கற்றுக்கொள்ளவேண்டியது இது. இதுபோல சில சின்னச் சின்ன
ரசிக்கும் படியான எளியமக்களின் வாழ்க்கைக் கூறுகள் கதை நெடுகிலும் வருகின்றன.


பெண்பாத்திரங்கள் எல்லாமே ஏதோ ஒரு சிறப்பு கொண்டவையாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆதிலட்சுமி அக்கறையான தாயாக, காவேரி துடுக்கான முன்னேறத் துடிக்கும் இளைஞியாக,
கன்னியம்மாள் பொறுமைநிறைந்தவளாக, சுசீலா தொழிலாளர் நலனுக்காகவே தன் முனைவர்
வாய்ப்பினைக்கூட உதறியவளாக, ராகினி தொழிலாளிர் நலனைப்பற்றி யோசிப்பவளாக
வருகிறார்கள்.


கட்டுமானப் பணியாளர்கள் எப்போதும் முதலாளியின் ஏதோ ஒருவகையான உழைப்புச்
சுரண்டலையும் அலட்சியத்தையும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு நிறைய சிறியதும்
பெரியதுமான நம்பகத்தன்மையுடைய நிகழ்வுகள் சொல்லப்பட்டுள்ளன. எடுத்துக்கொண்ட
கருவுக்கு இது மிக அவசியம். ஆனால், அதே அடித்தட்டு மக்களிடையேயும் அந்த
முதலாளிகளின் சுரண்டல் மனப்பான்மை கொண்ட சிலர் இருக்கலாம். அவர்களையும்
பாத்திரங்களாக உருவாக்கி உலவவிட்டிருக்கலாம். அதேபோல முதலாளிகளில் நல்லவர்களும்
இருக்கிறார்கள். அத்தகைய முதலாளிகளையும் காட்டியிருக்கலாம்.
இப்படிச்செய்யும்போது இயல்புத்தன்மை கூடியிருக்கும். ஆசிரியர் ஒரு காவல்த்துறை
அதிகாரி. சட்ட மீறல்களைக் கொண்ட நிகழ்வுகளைச் சொல்லி அதற்கேற்ற வழக்கு தண்டனை
என்று அவர் பணிசார்ந்து இன்னும் சிறப்பாக எழுதியிருக்கமுடியும்.


சுசீலாவின் கதாப்பாத்திர அமைப்பு மிகவும் மேலோட்டமாக இருப்பதாக வாசகன்
உணர்வான். அவளுக்குப் பின்புலமாக ஒரு கிளைக்கதை அமையாதது ஒரு காரணம். அப்படி
அமைந்திருக்கும் பட்சத்தில் முனைவர் பட்ட வாய்ப்பைக்கூட அவள் மறந்து
தொழிலாளர்களுக்காகவே யோசிப்பதற்கும், செயல்படுவதற்கும், குப்பத்தில்
வாழ்வதற்குமான காரணங்கள் சரியாக அமைந்து கதையே கனம் கூடியிருக்கும்.



ராகினியின் பாத்திர அமைப்பில் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் பெரிய
வேறுபாடு. முதல் பாதியில் புகுந்த வீட்டின் வறுமையை விமரிசித்தபடியிருக்கும்
இவ்விளம்பெண் மறுபாதியில் தொழிலாளர்களுக்காக யோசிக்கிறாள். அவர்கள்
சுரண்டப்படுவதற்காக வருந்துகிறாள். சில நிகழ்வுகளைக் காண்கிறாள் என்றாலும்
அவளின் மனமாற்றத்திற்கான காரணம் திடமாகச் சொல்லப்படவில்லையோ என்ற நெருடல்
வாசகனுக்கு எழாமல் இருக்காது. மூன்று ஸ¥ட் கேஸ்கள் நிறைய எதையோ நிரப்பி ( ப 114
) ராகினியிடம் ஆர்.ஆர்.எம் கொடுத்து பத்திரமாக மறைத்து வைக்கச்சொல்கிறார்.
அதில் பணமும் நகையும் நிறைய வைத்திருந்ததாக பிறகு அவரே சொல்கிறார். போலீஸ்
சோதனை செய்து பிடித்தால், ராகினி மாட்டிக்கொள்வாள் என்ற நோக்கத்துடன் அவர்
செயல் பட்டிருப்பது வாசகனின் ஊகத்திற்கு விடப்படுகிறது. ஆனால், இதுவே
ராகினியின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று நிறுவப்படவில்லை. வாசகனே
தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் உதவலாம்.


சென்னைத் தமிழில் உரையாடல்கள் இயல்பாக இருக்கின்றன. இருந்தாலும், உரையாடல்களால்
மட்டுமே நிரம்பிவிடும் சில அத்தியாயங்கள் வாசகனுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய
அனுபவத்தினை கொடுக்க தவறிவிடுகிறது. Narration என்றறியப்படும் கதை சொல்லலில்
ஆசிரியர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் இது
நேர்ந்திருக்காது. அதோடு புதினம் முழுமையடையவும் உதவியிருக்கும்.


பெண்களே கொத்தனார் பயிற்சிக்குப் போகிறார்கள். காசி வாட்ச் மேன் வேலையே
போதுமென்று நினைத்து விட்டானோ? இத்தனை முற்போக்குச் சிந்தனைகொண்ட பெண்கள்
சூழ்ந்திருக்கும்போது கொஞ்சம் கூடவா ஒரு இளைஞனுக்கு வேகம் பிறக்காது? காசி
பயிற்சிக்கு போகாதது குறையே. அவன் போயிருந்தால், யூனியனிலும் அதுகொடுக்கும்
பாதுக்காப்பிலும் ஆதிலட்சுமிக்கும் வாசகனுக்கும் நம்பிக்கை
வந்தாற்போலிருந்திருக்கும். நிச்சயம் கதைக்கு வலுச்சேர்த்திருக்கும்.


பரிசு மற்றும் விருதுகள் வாசகனைப் பலவேளைகளில் குழப்பித்தான் விடுகின்றன.
பரவலான வாசிப்புள்ளோர் இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை எளிதில்
முன்வைத்துவிடுவார்கள். இந்தக் கதையின் நோக்கத்திற்கும் கருவிற்கும்
கொடுக்கப்பட்டுள்ள விருதேயன்றி படைப்புக்கு இல்லை என்பதை ஒரு சாமான்ய வாசகனும்
நிச்சயம் படித்துமுடித்ததும் புரிந்துகொள்வான். களப்பணி இருந்துகூட ஏதோ
செவிவழிச்செய்திகளை வைத்து எழுதிவிட்டது போன்ற ஒரு நிறைவின்மை தோன்றிவிடுவதைத்
தவிர்க்கமுடியவில்லை. பிரச்சனைக்குத் தீர்வு எனும் ஒரே குறிக்கோளை மட்டுமே
கவனத்தில் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பிரமாண்டமான விளம்பரங்கள் எப்படி திரைப்படத்தினைப் பற்றி ஒருவரிடம் அதிக
எதிர்பார்ப்பை ஏற்படுத்துமோ அதேபோல இந்நூலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விருதும்
வாசகனில் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுகிறது. அதுவும் வாசகனுக்கு
ஏற்படக்கூடிய ஏமாற்றத்திற்கு ஒரு காரணமாகிவிடுகிறது.


பிழைகள் நிறைய இருப்பதைப்பார்க்கும்போது இது திருத்தப்பட்ட பதிப்பு தானா என்ற
கேள்வி எழுகிறது. காட்டாக ( ப. 14) த. ஜெயகாந்தன் என்று இருக்கவேண்டிய இடத்தில்
த. ஜெகாந்தன் என்று அச்சாகியிருக்கிறது.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு