கே.ஜெ.ரமேஷ் "ஒற்றன்" குறித்து

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ குறித்து கே.ஜெ. ரமேஷ்

இந்த புத்தகத்தை முதன் முதலில் படிக்க எடுத்த போது இதுவும் ஒரு பயணக் கட்டுரையாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அசோக மித்திரன் போன்றவர்கள் மட்டுமே சாதாரணப் பயணக்கட்டுரையைக் கூட ஒரு சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த படைப்பாக உருவாக்க முடியும் என்பதை உணர வைத்த புத்தகம் இது.

கதைக்கரு, முடிச்சு என்று ஒன்று இல்லாமல் ஐயோவா பலகலைக் கழகத்தால் பல நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய விமர்சகர் என்று தன் குழுவைச் சார்ந்தவர்களையேப் பாத்திரங்களாக்கி அன்றாடச் செயல்களைக் கொண்டே ஒரு அருமையான படைப்பை உருவாக்கி விட்டார். இமிக்ரேஷன் வரிசையில் நிற்பது முதல் கடைசி பக்கம் வரை ஒரு நையாண்டி கண் சிமிட்டிக்கொண்டேயிருக்கிறது. காதல், நகைச்சுவை, கருணை, ரௌத்திரம், வீரம், பயம், அருவெறுப்பு, ஆச்சர்யம் சாந்தம் என்ற நவரசங்களும் இழையோடும் பல நிகழ்வுகள். அவை ஏற்படுத்தும் உணர்ச்சிகளை நம்மிடையே ஏற்படுத்தி விடுகிறது அசோகமித்திரனின் நடை.


நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள், அனுபவிக்கும் உணர்வுகள் கதை முழுவதும் நிறவிக் கிடக்கின்றன. 'எந்த புகைப்படமும் அது எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை. அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூடவேண்டியிருக்கிறது' என்ற யதார்த்தம் நம்மை புன்னகைக்க வைக்கிறது.


தீப்பெட்டியைத்தேடி அலுத்து காபி கூட குடிக்கமுடியாத அப்பாவித்தனம், மிஸ்ஸிஸ்ஸிப்பி ஆற்றில் பயணம், பயண முடிவில் புதிய நண்பன் 'வெண்டுரா' ஏற்படுத்திய அசிங்கம் என்று முதன் முதல் வெளிநாட்டுப் பயணம் ஏற்படுத்தும் நடுக்கமும், பிரமிப்பும் நீங்குவதற்கு முன்பாகவே பல அனுபவங்கள். போதாததற்கு சுத்த சைவம் வேறு. பழக்கப்பட்ட இடம், மக்கள், உணவு எல்லாவற்றையும் விட்டு விட்டு எதற்காக பல ஆயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்தோம் என்று தன்னைத் தானே நொந்து கொள்ளும் அனுபவம் அனேகமாக முதல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் எவருக்கும் ஏற்படக்கூடியதே. அதுவே வாசகரை புத்தகத்துடன் ஒன்றிவிடச் செய்கிறது. கவிதை வாசிப்பு நிகழ்ச்சி பற்றி நகைச்சுவையாகக் கூறினாலும் மேடையேறி பேச அழைத்தபோது அவருக்கு ஏற்பட்ட நடுக்கமும் பயமும் அடிநாதமாக வெளிப்படுகிறது. தன்னைத்தானே ஒரு மூன்றாம் பார்வையில் அலசுவதும், கலவையான பல உணர்ச்சிகளை தன் நடையின் மூலம் வெளிக்கொணர்வதும் அசோகமித்திரனின் தனித் தன்மையாக இந்த புத்தகம் முழுவதும் மிளிர்கிறது. அதே போல் குளிர்பதனப்பெட்டியில் பூண்டு வைத்ததற்காக கோபப்படும்போது தனது சகா தன் அறைக்குச் சென்று கதவை மூடியதும், 'சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னமேயே தோற்றுவிட்டவன்' என்று மிக நுட்பமாக தன்னிலையை வெளிப்படுத்துகிறார். அதே நண்பனுக்கு ஒரு துக்ககரமான செய்தி வரும்போது அவனுக்கு ஆறுதலாக இருக்கிறார். அந்த சோக கட்டத்திலும் 'அவனிடத்திலிருந்து இலேசாகப் பூண்டு வாசனை வந்து கொண்டிருந்தது' என்று எழுதுவதின் மூலம் மனித மனத்தின் விசித்திரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்துகிறார்.


இன்னொரு கட்டத்தில் இத்தாலியப் பெண் இலாரியாவிடம், 'கற்பனை மயக்கமாகாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. இரண்டிற்கும் இடையே மிகத் துல்லியமான மாறுபாடு தான் இருக்கிறது. நாம் தான் வேறுபடுத்திக் கொள்ளவேண்டும்' என்று கூறுவதும் மனித உறவுகளும், உறவுகளால் ஏற்படும் சிக்கல்களும் மிகத்துல்லியமாக அவரது எழுத்தில் வெளிப்படுவதைக் காட்டுகிறது.


வெண்டுராவிற்கு தட்டச்சு இயந்திரம் வாங்க உதவி செய்வதும், அது சரியாக வேலை செய்யாமல் போனதற்கு இவரே காரணம் என்ற தொனியில் அவன் பேசுவதும் மனிதர்களைப் புரிந்து கொண்டவர்களுக்குப் புதிதல்ல. ஆனால் கே மார்ட்டில் இவர் சண்டையிடும் நோக்கில் கோபமாகப் பேசத் தொடங்கியவுடன் மறுபேச்சு பேசாமல் தட்டச்சு இயந்திரத்தை மாற்றிக் கொடுத்து பழையதை மறுபடி விற்பனைக்கு வைப்பது நல்ல எதிர்மறை உச்சக்கட்டம்.


எவ்வித நியாயமான காரணங்கள் இல்லாத போதும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மட்டுமே விரோதத்தைத் தூண்டமுடியும் என்பதை அபே குபக்னா சம்பந்த்தப்பட்ட காட்சிகளில் மிகச்சுவையாக எழுதியிருக்கிறார். எப்படியாவது அபேவிற்கு ஏற்பட்ட தப்பான அபிப்பிராயத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் கஜூகோவை ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அதற்கு அபே குபக்னாவை அவளையே அழைக்கச் சொல்லிவிடலாம் என்ற முயற்சியும் தோல்வியில் முடிகிறது. பிறகு பலமுறை அபேயைப் பார்க்க நேரிட்டாலும் அவனிடம் அடி வாங்கிய தோள் அவரை அபேயிடம் பேச விடாமல் தடுத்து விடுகிறது. கடைசியில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அபே குபக்னா எத்தியோப்பியாவிற்கு சென்று விடுகிறான். ஆனால் நம் நாயகனுக்கு அபே குபக்னாவிடம் கஜூகோவிற்கு ஏற்பட்ட வெறுப்பின் காரணத்தை அறிந்து கொள்ளவே முடியாமல் போகிறது.


தென் அமெரிக்காவில் இலக்கியத்துறைப் பேராசிரியராக பணிபுரிந்த பிராவோ எல்லாவிதத்திலும் அபே குபக்னாவிற்கு நேர் எதிரானவன். ஆனால் அவனுக்குப் பிடிக்காத அவன் நாட்டின் பழைய எதிரி நாட்டிலிருந்து வந்தவனின் பெயரால் அவனை அழைக்கவே அவனுக்கும் அசோகமித்திரனிடம் வருத்தம் ஏற்படுகிறது. எவ்வளவு பகையுணர்ச்சி இருந்தாலும் நேருக்கு நேர் சந்திக்கும்போது பிராவோவும் டொமிங்கஸ்ஸ¤ம் ஸ்பானிஷ் மொழியில் அன்பு பொங்க பேசுவதை அவருக்கே உரிய கிண்டலுடன் 'பரம்பரை விரோதிகளுக்கு இருபதாம் நூற்றாண்டு மிகவும் சங்கடமான காலம்' என்று கூறுகிறார். பிராவோ எழுதப்போவதாகக் கட்டியம் கூறிய 'மகா ஒற்றன்' நாவலை ஒரு எலக்டிரானிக் சாதனத்தின் சர்க்யூட் போல வரைபடத்தில் வரைந்திருந்ததைப் பார்த்து அவனிடம் ஏற்பட்ட பிரமிப்பு அவனுடைய மனைவிக்கே அந்த புத்தகம் பிடிக்கவில்லை என்றறிந்த போது வடிந்து விடுகிறது. இதற்கிடையில் பிராவோவை நெருக்கமாக ஒரு பெண்ணுடன் பார்த்து அவள் தான் அவனுடைய மனைவி என்ற யூகம், அவனுடைய உண்மையான மனைவி வருகிறாள் என்றும் அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி தன் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்று பிராவோ கேட்டுக் கொள்வது, ஒன்றுமே நடவாதது போல் மனைவியிடம் அன்பு செலுத்துவது என்று மனித மனங்களின் வினோதங்களை அப்பட்டமாக விவரிக்கிறார்.


கடைசியாக ஜிம் பார்க்கரிடம் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் மாட்டிக்கொண்டு திண்டாடுவதைப் பற்றி எழுதும்போது அமெரிக்காவில் பொருளாதார அடிமட்டத்தில் வாழும் மக்களின் அவலநிலையை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்.


சில இடங்களில் காலக்கிரமப்படி வரிசைப்படுத்தாமல் நிகழ்வுகளை எழுதியதால் ஏற்பட்ட சிறு குழப்பத்தைத் தவிர, இந்தப் புத்தகம் நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகங்களில் ஒன்று.


********

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு