"வாசிப்போம் சிங்கப்பூர்! "வாசகர் வட்ட கூட்டம்

4 ஜூன் 2006 வாசகர் வட்ட அமர்வின் தொகுப்பு: ஜெயந்தி சங்கர்

அசோகமித்திரனின் 'ஒற்றன்' மற்றும், உள்ளூர் எழுத்தாளாரான புதுமைதாசனின் சிறுகதையான 'உதிரிகள்' ஆகிய இரண்டும் ஜூன் வாசகர் வட்டத்திற்கென்று சென்ற வாசகர்வட்டத்தில் தெரிவு செய்யப்பட்டன. இவையிரண்டும் சிங்கப்பூர் நூலக வாரியம் ஏற்பாடு செய்திருக்கும் 'வாசிப்போம் சிங்கப்பூர் 2006' இயக்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட படைப்புகள். இதில் மூன்றாவது படைப்பு சாகித்ய அகாதமி விருது பெற்ற திலகவதியின் 'கல்மரம்'.


உதிரிகள் சிறுகதைத் தொகுப்பு வாசகவட்ட நண்பர்களுக்குப் படிக்கக் கிடைக்காததால் ,அந்த ஒரு சிறுகதையின் பிரதிகள் எடுக்கப்பட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டன. இதுகுறித்த கலந்துரையாடல் அடுத்த வாசக வட்டத்திற்கு என்று முடிவெடுக்கப்பட்டது.


நூலக வாரியத்தின் அதிகாரி புஷ்பலதா ஒரு கேள்வியை முன்வைத்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட 'ஒற்றன்' உலகமயமாகியிருக்கும் இக்காலத்திற்குப் பொருந்துமா?


இந்தக் கேள்வியின் அடிப்படையிலேயே விவாதத்தைத் துவங்கலாம் என்று ரே. பாண்டியன் சொன்ன யோசனையின் பேரில் வழக்கமான கட்டுரைகளை வாசிக்க ஆரம்பிப்பது போலில்லாமல் நேரடியாக கலந்துரையாடல் துவங்கியது.


கல்கியின் பொன்னியின் செல்வனை நாம் இன்றும் ரசிக்கிறோமே, 20 வருட இடைவெளியெல்லாம் ஒரு பிரச்சனையா என்று தொடங்கி அவரவர் அவரவர் கருத்துக்களைச்சொன்னார்கள். இன்றும் ஒற்றன் ரசிக்கும்படியிருப்பதற்கு அசோகமித்ரனின் subtlehumour ஒரு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.


அசோகமித்திரன் நூலில் மற்றவரை திறந்துவிட்டு, தன்னை மூடிக்கொண்டுள்ளார் என்றார் மணிவேலன். மாணவி இலாரியிடம் பேசுமிடத்தைத் தவிர என்றும் நினைவுபடுத்திக்கொண்டார்!
அசோகமித்திரனுக்கு எதிராகத் தான் பேசுவதாக யாரும் நினைக்கவேண்டாம், எனக்கு அவரின் எழுத்துக்கள் பிடிக்கும், 'பிரயாணம்' என்ற அசோகமித்ரனின் படைப்பு உலகத்தரம் வாய்ந்தது என்று கருதுவதாவும் பெருமையோடு சொன்னார். (வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கும்போது இவர் சொன்னது --- 'காஞ்சனை'க்குபுதுமைப்பித்தன் எழுதிய முன்னுரையைப் போல இதுவரை எழுதப்படவேயில்லை என்று கருதுவதாகக் குறிப்பிட்டார்.)

" இல்லையே, தன்னை ஒரு முட்டாள் என்று தானே சொல்லிக்கொள்கிறார் அசோகமித்திரன்" என்றார் மானசாஜென்.

"அசோகமித்திரன் தன் படைப்புகளில் ஓங்கிப்பேசுவதை நாம் பார்க்க முடியாதும் என்றும் ஒற்றனில் தன்னை சாதாரணமானவன் என்று சொல்லிக்கொண்டே அசாதாரணமானவன் என்று நிறுவிக்கொள்கிறார்," என்று சொன்னார் இன்னொரு வாசகர். இவர் புதிய படமான புதுப்பேட்டையைப் பற்றிக் குறிப்பிட்டு ஏதோ சொல்லவந்தபோது நல்லவேளை விவாதம்முற்றிலும் வேறு தளத்திற்குப்போகாமல் சரியான நேரத்தில் கடிவாளம் இழுக்கப்பட்டது.


பொதுவாக முன்வைக்கப்பட்ட கருத்து அசோகமித்ரன் மனிதனை மனிதனாகப் பார்க்கிறார். அவனிடமிருக்கும் குறைநிறைகளோடு ஏற்கிறார். முக்கியமாக ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட ஏதோ ஒரு நல்லதைக் கவனிக்கிறார் என்றார் ரே. பாண்டியன்.


ஒவ்வொரு அத்தியாயமும் தன்னிறைவு கொண்ட ஒரு சிறுகதையாக அமைந்துள்ளது மிகச் சிறப்பு என்று எல்லோரும் ஒருமனதாக ஒத்துக்கொண்டனர்.


70களில் முதல் முறையாக அமெரிக்காவுக்குப் போகும் ஒருவரின் அனுபவங்களின் பதிவுஎன்றே இந்நூலை நாம் பார்க்கவேண்டும் என்று ரே. பாண்டியன் சொனார்.
மானசாஜென் தன் கட்டுரையைப் படித்துமுடித்தபிறகு கலந்துரையாடல் கொஞ்சம்'தியானம்' என்ற திசையில் திரும்பியது. மானசாஜென் தன் கட்டுரையை வழக்கம்போலஆன்மிகப்பார்வையில் கொடுத்திருந்தது ஒரு காரணம் என்றபோதிலும் திபெத்திய தியானவகையைக் குறிப்பிட்டிருந்ததால், அது குறித்த விளக்கம் ஒன்றை மணிவேலன் வேண்டமானசாஜெனும் விளக்கினார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒரு நிலையை அடையவேண்டும்என்ற குறிக்கோளுடன் செயல்பட்டால் அவ்விடத்தை அடைவது மிகவும் சிரமம் என்று தான் கருதுவதாக ஆணித்தரமாகச் சொன்னார் மணிவேலன்.


இந்த இடத்தில் மாதங்கி சோவின் ஒரு படைப்பினைப் பற்றி சொன்னார்.
பொதுவாக தியானம் என்பதெல்லாம் அனுபவம் சார்ந்த விஷயம். சொல்லித் தரவோ, அனுபவத்தைப் பகிரவோ செய்வது எளிதல்ல என்றார் வாசகர்.
விவாதம் கொஞ்சம் திசை திரும்பியதைப் பார்த்த ப்ரசாந்தன் ஒற்றன் என்ற பெயரைத் தெரிவு செய்யக்காரணம் என்ன என்ற கேள்வியைகேட்டதும் மீண்டும் ஒற்றனுக்கு வந்தார்கள்.


மூன்றாம் உலகநாட்டிலிருந்து ஒரு மனிதன் முன்னேறிய ஒரு நாட்டிற்குள் போய் பார்க்கிறான் என்று விளக்கம் கொடுத்தார் மானசாஜென்.

ஒற்றன் என்ற தலைப்பு தன்னில் கொஞ்சம் வேறு மாதிரியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்று சொன்னார் மூர்த்தி. அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்கொண்டு போய்விட்டது என்றும் சொல்லி முடித்தார். 70களில் கம்யூனிஸம் உச்சத்தில்இருந்தது. அதைப்பற்றி தான் ஏதேனும் எழுதியிருக்கிறாரோ என்று எதிர்பார்த்தாராம். அதைப்பற்றி ஒரு இடத்திலும் குறிப்பிடக்கூட இல்லையே என்று குறைபட்டுக் கொண்டார். சுஜாதாவைப் போல அசோகமித்ரனும் அரசியலைத் தொடாமல் நழுவுகிறார். சுஜாதாவாவது ஆங்காங்கே கிண்டலாகத் தொட்டிருப்பார். இவர் முற்றிலுமே தவிர்த்திருக்கிறார் என்றார். அரசியல் இல்லை என்பதே பெரிய அரசியல் என்றார். ஒரு படைப்பாகப் பார்க்கும் போது தனக்கும் பிடித்துத் தான் இருக்கிறது என்று முடித்தார்.


இதற்கு வேறொரு வாசகர் கோபால் விளக்கமளிக்கும் போது, ஒற்றனுக்கு கம்யூனிஸம் தேவையாக இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் நிலவியவற்றையெல்லாம் தொடவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும், அவசியமில்லையே என்றார்.


அசோகமித்ரனின் நகைச்சுவையுணர்வு தவிர ஒற்றன் என்ற தலைப்பினைப் பற்றியும் கே-மார்ட் விவகாரம் குறித்துமே அதிகம் பேசப்பட்டது.


வாசகர்வட்ட நண்பர்களின் சிறுகதைக்கு 20 நிமிடங்கள் ஒதுக்குவோம் என்ற தன் கருத்தை பொது விஷயங்களுக்கு வந்த போது மாதங்கி முன்வைத்தார். அதற்கு முதல் கதையாக தனது கதையையே கொடுப்பதாகவும் சொன்னார். முதலில் தயங்கினாலும் பிறகு மானசாஜென் சோதனை முயற்சியாகச் செய்து பார்ப்போம் என்று ஒத்துக்கொண்டார்.
வாசகர் வட்டம் வலைப்பதிவினை இயக்கத்தில் வைத்துக் கொள்ள ஏதேனும் பதிவுகள் இடவேண்டும். தன்னிடம் அனுப்பினால் தானே இடுவதாகச் சொன்னார் மானசாஜென். இல்லையானால், அவரவரே கூட பதியலாம் என்றார். அப்போது கடவு எண் போன்றவற்றை எல்லோருக்கும் கொடுக்க வேண்டாம் என்று சித்ரா ரமேஷ் எச்சரித்தார்.




அப்போது, "வாசகர் வட்டத்தில் உரைநடைக்கு மட்டும் தான் இடமா, கவிதைக்கு இல்லையா?" என்று கேட்டார் ஜெயந்தி சங்கர். படைப்பாற்றலை வளர்க்க உதவக்கூடிய எல்லா கலைகளையும் அமர்வுக்கு கொண்டுவரலாம் என கூட்டத்தினரால் முடிவு செய்யப்பட்டது.


ஒற்றன் படிக்கவில்லை என்றும் படித்து முடித்த கல்மரத்தினைப் பற்றி தன் கருத்துக்களை எழுதிக்கொண்டு வந்திருப்பதாகவும் சொல்லிவிட்டு, கடைசியில் திலகவதியின் கல்மரம் கட்டுரையை வாசித்தார் ஜெயந்தி சங்கர்.

2 மறுமொழிகள்:

At , Blogger வடுவூர் குமார் மொழிந்தது...

நானும் ஒற்றன் படித்தேன்.நன்றாக இருந்தது.புத்தகத்தின் மேலுரையே அது பிரபலமான புத்தகம் என்பதை காட்டியது.அவரைப்பற்றி தெரியாமலே அந்த புத்தகத்தை படித்தேன்.
என்னைப்பொருத்தவரை படிக்கும் போது நாமும் பக்கத்தில் இருந்து பார்க்கிற உணர்வை கொண்டு வரும் எந்த புத்தகமும் நல்ல புத்தகம் தான்.

 
At , Blogger எம்.கே.குமார் மொழிந்தது...

தொகுப்புக்கு நன்றி ஜெயந்தி.

தொடரட்டும் உங்கள் பணி.

எம்.கே.

 

Post a Comment

<< முகப்பு