உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது' குறித்து மானஸாஜென்

உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது.'
மானஸாஜென்.


'மீசைக்கார மியாகண்ணு' சாம்பல் அடுக்குகளின் ஊடாக நினைவுக்கு வந்தார், உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது' வாசிக்கையில்...மியாகண்ணு ஒரு அல்பப் பூச்சி. ஒரு சின்ன பருப்பு டப்பாதான் அதன் உலகம். வெறும் பூச்சி மட்டுமல்ல வாழ்தலுக்கான பிரபஞ்ச ரகசியத்தை உள்ளடக்கிய உயிரியாகப்படுகிறது கவிஞர் சமயவேலுக்கும் அவரை வாசித்ததன் ஊடாக நமக்கும்.


உமா மகேஸ்வரியின் உலகம் மிகச் சிறியது...ஒரு வீடுகூட அல்ல ஒரு கட்டிலும், சிறு சமையலறையுமே, ஆனால் ஜன்னல் இருக்கிறது, ஜன்னல் சில செடிகளையும், ஆகாயத்தையும், மழையையும் காட்டுவதன் மூலம் வேலிகளையும், பறத்தலைக் குறித்த பிரக்ஞையையும் ஒரு சேரக்காட்டுகிறது.


கவிமனம் உருவாக்கும் கூர்மிகுந்த பிரக்ஞை, மிகுந்த வலி தோய்ந்த பாதையாக வாழ்வினை மாற்றும் வல்லமை கொள்கிறது. இந்த வலியிலிருந்து விடுபட வேலிகளை உடைக்க முயலும் காரியத்தை உமா மகேஸ்வரி செய்ய முற்படுவதில்லை. மாறாக எல்லாவற்றின் ஊடாக எல்லாவற்றையும் பார்ப்பதன் மூலமாக... வேலிகளும், சுவர்களும், வானமும் ஒரே பொருளாளானதாக பார்க்க முயல்வதன் மூலமாக அவருக்கான விடுதலையை அவர் அடைய முயல்கிறார்.


இத்தகைய பார்வை அவர் கவிதைகளில் பூத்தொடுத்தல், விளக்கேற்றுதல், பாத்திரங்களைச் சுத்தம் செய்தல், குப்பை கொட்டுதல், மழையில் வேடிக்கை போன்ற தின வாழ்வின் செயல்களில் ஒரு ஆழத்தையும், அந்தரங்கமான தனிமையின் மோனத்தையும் ஏற்றி வானத்தின் அமைதியையும், பறவையின் சுதந்திரத்தையும், பூத்தலின் புத்துணர்ச்சியையும் உருவாக்க முயல்கின்றன.

அகண்டத்தையும், அகாலத்திற்குமான இயற்கை இவருக்குப் பிடிபடுவது வித்யாசமான கோணத்தில், சிறகுகள்- விசிறிமடிப்புப் பாவாடை நலுங்காது கொசுவியமர்ந்த சிறுமியாய்ப் படுகிறது. நதியின் அலை அம்மாவின் புடவையாய் படுகிறது. கடலின் நுனியலைகள் முதுமையை நினைவுபடுத்துகிறது. தூறல், குளித்த கூந்தலை உலுக்குவதையும்,


இந்த 'மனமே நூலாகும் நுண்மை' (பூத்தொடுத்தல்) எல்லா கவிதைகளிலும் வாய்த்திருக்கிறதா? "இல்லை!" என்றுதான் சலிப்புற நேர்க்கிறது நம் பதில். இதற்கு காரணங்களாக தென்பட்டவை காலம் காலமாய் கவிஞர்கள் உபயோகித்து கழிவுக் குப்பைகளாகி விட்ட சொற்களைக் கொண்டு கவிதைகள் கட்டமைக்கப்படுவது. வார்த்தைகளின் நவீனத்தன்மை வாசகனின் கவனத்தைக் குவிப்பதன் மூலமாக புதுப் பொருளை வாசிப்புக்குத்தருகிறது. புழங்கிச் சலித்த வார்த்தைகள் மூளையின் குப்பைக்கூடைக்குள் போய் சேர்ந்து பழைய அர்த்தத்தையே தருவதன் மூலம், இயல்பாகவே அனிச்சையாக அதன் மேலோட்டமான நிலையையே படிமங்களும், குறியீடுகளும், உருவகங்களும் எய்துகின்றன. (உதாரணமாக: வெளுத்திருக்கும் மனத்திரைக்குள், உதிர்கின்ற நடைபாதைப் பூக்கள்,சன்னலுக்குள் கைதியாக, மன இடுக்கில், ஞாபகத்தழும்பில், பருவத்தின் வானவில், உறிஞ்சுகிற விழிகள்..)


கிளைகள்=சுதந்திரம், வானம்= விசாலம், பறத்தல்=சுதந்திரம், கட்டில், கருச்சிதைவு=ஆணாதிக்கம், மழலை, நட்சத்திரங்கள், மழை, பூக்கள்=புத்துணர்ச்சி, ஒளி=சத்தியம், குறுங்கத்தி=வன்மம், மலர்/இலை/சிறகு உதிர்தல்=மரணம் இப்படியாக வழக்கமான படிமங்களும், குறியீடுகளும் கூட ஒரு நல்ல கவிதை வேண்டும் விசேசமான அர்த்ததை தருவதற்குப் பதிலாக கவிதைகளைக் கீழிறக்கவே செய்கின்றன.


சிலகவிதைகள் நேரடியாக ஆரம்பித்து, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட முடிவில் முற்றுப் பெறுகின்றன. பேசும் பொருளும், தொனியும் வேறாக இருந்தாலும், இவைகள் பிரச்சாரத்தொனி கொண்ட கவிதைகள் போன்ற ஒன்றுதான். அதன் கருத்தைத் தவிர்த்து வாசகனுக்குக் கிடைப்பது ஏதுமில்லை.

நேசம் பேசும் கவிதைகள் உமாமகேஸ்வரியின் பலம். தன் சின்னஞ்சிறு உலகத்தை பாவனையின்றி நேர்மையாக பதிவு செய்தல் பலம். கவிதைகளுக்கான மொழியும், உத்திகளும், பலஹீனங்கள்.

@ @ @
http://www.vasagarvattam.blogspot.com

உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது' குறித்து சித்ரா ரமேஷ்

உமா மஹேஸ்வரியின் "வெறும் பொழுதுகள்"

சித்ரா ரமேஷ்




இந்தக் கவிதைத் தொகுப்பைப் பற்றி என் கருத்துகளைச் சொல்லும் முன் இது பெண்ணீயத்தைப் பற்றியக் கவிதைகள், ஆனால் பெண்மையின் வரம்பை மீறியக் கவிதைகள் போன்றக் கருத்துகளை ஒதுக்கி வைத்து விட்டு, உடல் உறுப்புகளைப் பற்றி, பாலியல் பற்றி, உடல் வேட்கைகளைப் பற்றி பெண்கள் எழுதலாமா அது தேவைதானா போன்ற கேள்விகளை எழுப்பாமல், இதையெல்லாம் கடந்துதான் சற்று யோசிக்க வேண்டும்.


பெண்ணை வெறும் உடலாக உடைமைப் பொருளாக மட்டும் இல்லாமல் சக மனுஷியாக ஆணுக்கு இருக்கும் அத்தனை உணர்வுகளும், அறிவும், ஆளுமையும் உடையவளாக இருந்தாலும் சமூக அமைப்புகள், குறிப்பாக இந்திய சமூக அமைப்பு பெண்களுக்குச் சுமத்தும் சிலுவைகள் அதிகம்தான்!


ஆனால் ஒரு பெண்ணுக்கு பாலியல் சுதந்திரம் கிடைத்து விட்டால் பெண் விடுதலை கிடைத்து விடும் என்று நம்பும் தீவிரப் பெண்ணியவாதிகள் ஒன்றை மற்ந்து விடக் கூடாது. ஏற்கெனவே அத்து மீறி பெண் உடலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஆணுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும் ஆபத்துகளே அதிகம். பாலியல் மறுப்பு கூடப் பெண்ணியத்தின் ஒரு வகைப் போராட்டம்தான்! அந்த வகைப் போராட்டக் களம்தான் உமாமஹேஸ்வரியின் களம் என்று சிலக் கவிதைகளைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது.
பாலியல் உரிமைகள் குறித்து வெளிப்படையாக பேசினால் அவளது சொந்த வாழ்வின் அனுபவமாகப் பார்க்கும் பார்வைகளைத் தவிக்க முடியாத நிர்ப்பந்தம் எல்லாப் பெண் படைப்பாளிகளுக்கும் இருக்கிறது. இது உமா மாஹேஸ்வரிக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.


ஒற்றை ரகசியம் கவிதையில்(பக்கம்92)

"சாறுகள் பிழிப்பட்ட வெற்றுச்சக்கையின் கிடப்பே உன் கட்டிலுக்கு

என்றுணர்கையில் அடைகிறேன் உனை வென்ற வகையை நீ அறியவியலா

ஒற்றை ரகசியமாக

அலைச்சல் கவிதையில் (பக்கம்78)

"என் முந்தானையில் மூள்கிற நெருப்பு நீ மூட்டியதல்ல
பக்கம் 92 இல் வரும் பெயரிடாதக் கவிதையில் வரும் கற்பனைக் காதலன் காட்டும் கரிசனம் நெருடல் கவிதையில் (பக்கம் 80) பெண்கரு சிதைத்த கத்தி நுனியின் நெருடலை என் கருப்பையிலிருந்து அகற்ற முடிந்தால் பூக்காத செடிகள்(பக்கம்42) அடிவயிற்றுக் கருவின் அசைவை அறிவிக்க உன் கை பற்றிப் பதிந்த போது அவசரமாய் உதறிப் போனாயே அதற்கு வருத்தம் தெரிவி உடனடியாக போன்ற கவிதைகளில் காணும் அந்தரங்கங்கள் ஒரு பெண்ணின் டைரிக் குறிப்பைப் படிக்கும் குறுகுறுப்பு, எங்கோ மூலையிலிருக்கும் கண்ணாடியில் எதிர்பாராமல் நம் உருவத்தைப் பார்க்கும் பரபரப்பு, தோழியுடன் மனம் விட்டுப் பேசும் நட்பின் நெருக்கம், இதையெல்லாம் இவ்வளவு நுணுக்கமாக எப்படிச் சொல்ல முடியும் என்ற திகைப்பும் உமா மஹேஸ்வரியின் கவிதை மொழியின் மிகப் பெரிய வெற்றி!


பூத்தொடுத்தல் என்ற கவிதையில் ஆரம்பித்து கோலம் என்ற கவிதையில் முடியும் இந்தக் கவிதைத் தொகுப்பு எழுதியவர் பெயரைப் பார்க்காமலேயே பெண் எழுதியக் கவிதைகள் என்ற உணர்வோடு பெண்மை ததும்பும் கவிதைகள்!


பூத்தொடுப்பதில் இருக்கும் ஒரு மென்மையான யுத்தி! ரொம்ப இருக்கமாகக் கட்டினால் காம்பு பிய்ந்து மலைர்கள் உதிர்ந்து விடும். ரொம்பத் தளரக் கட்டினால் பூக்கள் நாரில் தங்காமல் உதிர்ந்து விடும். எப்படித் தொடுத்தாலும் கசங்கி உதிரும் மலர்கள் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாலும் பூக்காமல் இருப்பதில்லை. இந்த வரிகள் வெறும் பூவுக்குச் சொந்தமானக் கவிதை மட்டும் இல்லை என்று புரிந்து விடுகிறது. இதன் விரிவாக பூத்தல் என்றக் கவிதை! இந்தச் சின்ன வயதிலேயேவா என்ற அம்மாவின் அசட்டுத் தவிப்பிலிருந்து மாதாமாதம் வருகிறதே என்ற மாமியாரின் ஆதங்கம், பெண்ணின் சலிப்பு, இதன் பிண்ணனியில் இருக்கும் குருட்டு நம்பிக்கைகள்! பொதுவாகவே விரக்தியும் சலிப்புமாக தொலந்து போனக் கனவுகளையும், இளமையையும் நினைத்து பெரு மூச்சு விடும் கவிதைகள் நிறையவே தென்படுகின்றன.


குழந்தைப் பிறந்த்ததும் பிறந்த்தது ஆண் குழந்தைதானா என்று தேடும் மனோபாவம் மறு நிமிடம் அந்தக் கயமைத்தனத்தை நினைத்து பதைக்கும் மனது இவற்றுக்கு இடையே உமா மஹேஸ்வரியின் கவிதைகளில் காணப்படும் ஒரு தன்னிச்சையான சுதந்திரம் மனதை வருடும் விஷயம்தான்!


வாழ்க்கையை அதன் இயல்பான ஓட்டத்தோடு ஏற்றுக் கொண்டு அதிகம் சிந்திக்காதப் பெண்களுக்குச் சில கவிதைகள் அதிர்ச்சியளிக்கலாம். ஏனென்றால் பெண்களை வளர்க்கும் போதே அதிகம் பேசாமல், சிந்திக்காமல் வளர்க்கும் முறை! பேசினாலும் பெண்களுக்கென்றுப் பேசுவதற்குச் சில வட்டங்களைப் போட்டு சமையல் குறிப்புகள், அலங்காரக் குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, மேலும் கணவரின் நீண்ட ஆயுளுக்காக செய்யும் விரதக் குறிப்புகளைத் தாண்டி சிந்திக்க விடாமல் மூளை சலவைச் செய்யப்பட்ட பெண்கள், அவர்களுக்காக நடத்தபடும் பத்திரிகைகள், பெண்கள் படிப்பதும் வேலைக்குச் செல்வதும் கூட ஆண்களின் வசதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வழியேத் தவிர பெண் முன்னேற்றதிற்கான ஒரு படி என்று பெண்களே உணரவில்லை.


பெண் காணும் கற்பனை வாழ்க்கை, அவள் முன்னால் விரியும் உலகம், அந்த உலகத்தில் அவள் பார்வை, அவற்றின் நீட்சியாக எழும் எண்ண ஓட்டங்கள் அதிர்வைத் தருகின்றன. வெறும் உடலால் மட்டும் ஒரு பெண்ணை ஆணால் திருப்தி படுத்தவோ வெல்லவோ முடியாது. கணவனானாலும் அவனுடைய ஆளுமையையும், அவனுடைய அடக்குமுறையையும் ஒரு சலிப்போடு பார்க்கின்றப் பெண்! நீ என்னதான் என்னை அடக்கியாள முயன்றாலும் என்னை என கனவுகளை கலைக்க முடியாது என்று சவால் விடும் பெண்! இவையெல்லாம் ஒரு உச்சக்கட்ட சுதந்திரத்திற்கான தவிப்பு எனப் புரிந்தாலும் பாவம் அவள் என்ன செய்ய முடியும் ஒரு கணம் அவளை நினைத்து பரிதாபப் படவைக்கும் ஒரு கணம்!


சமைத்தல், பாத்திரம் தேய்த்தல், தண்ணீர் பிடித்தல் என்று பல வேலைகள் செய்வது பற்றி அடிக்கடி சொல்லப்படுகிறது. இவை ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் அடையாளங்களா? கணவனோடு சுகித்தல், பிள்ளைப் பெறுதல் போன்ற அந்தரங்கமான தனிப்பட்ட விஷயங்களில் கூட அவளின் சொந்த விருப்பங்கள் மறுக்கப்பட்டு விடுகின்றன.


பக்கம் 54 ஆம் பக்கத்தில் காணபடும் தலைப்பில்லாக் கவிதையில் கண்ணாடிகுள்ளிருந்து எட்டிப் பார்க்கும் ஒரு புதிய நகரம் பற்றியக் கற்பனையில் எந்த வித நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் அற்ற ஒரு நிலையைக் காட்டுகிறது, அதிலும் கூட வேலைபளுவின்றி சிரிக்கும் பெண்கள், கணவர்களாக மாறாத காதலர்கள் கட்டாயங்களற்றப் பிரியங்கள் இப்படிப் பல கட்டாயங்கள் இல்லாதச் சூழல் சித்தரிக்கப் பட்டுள்று. ஒருவரிடம் இயல்பாகப் பிரியம் காட்டுவதும், அன்பில்லாத தூரத்தில் தென்படும் உறவுகளோடு அணுக்கம் கொள்ள முடியாமல் போவதும் மனதளவில் சாத்தியம் என்றாலும் நடைமுறையில் சாத்தியமில்லை.
நெருங்கைய உறவின் மரணத்தை யாரோவாகப் பார்ப்பது அந்தத் துக்கத்தில் தோய்ந்து அதை மற்றவர்கள் உணரச் செய்வது இந்த இரண்டு வகையிலும் தன் சகோதரி இறந்த துக்க தினங்களை எழுதியிருக்கிறார். தன் தங்கையின் பெண்குழந்தை தாய் இறந்தச் சோகம் உணராது தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு பிஸ்கெட் தின்னும் அறியாமை, தாயற்று வளரும் சூழல், இறந்த முப்பதாம் நாள் தலைக்குச் சாயமிடும் அப்பா, உனக்கு பிடிக்குமே உனக்கு பிடிக்குமே என்று உருகி உருகி ஜாதி மல்லியையும், பால் கொழுக்கட்டயையும் படையலில் வைக்கும் அம்மா, இருவரும் சேர்ந்து கழித்த குழந்தைப் பருவம், "அதே நதிதான் நீயும் நானும் உனது எனது குழந்தைகளும் ஆடிய அதே நதிதான் ஓடிக்கொண்டிருக்கிறது உன் உடலின் தகனத்தை வேடிக்கைப் பார்த்தபடி" என்ற நதியின் ஓட்டம் வாழ்க்கையின் அநித்தியத்தை உணராமல் ஓடும் மனித மனங்களையும் குறிப்பிடுகிறதோ?


இழந்த சோகத்தில் சொல்லப்பட்டக் கவிதைகள் உமா மஹேஸ்வரியின் சொந்த அனுபவங்களாக நினைத்தாலும், பிரிவு யாருக்கும் எத்தகைய சூழலில் நிகழ்ந்தாலும் இத்தகைய துன்பவியல் அனுபவங்களை தவிர்க்க இயலாத ஒரு பொதுப்படையான அவலச்சுவையைக் காட்டுகிறது.


இவற்றில் எனக்கு மிகவும் பிடித்தக் கவிதைகளாக பூக்காத செடிகள் (பக்கம்42) , முகம் தெரியாத உனக்கு(பக்கம் 82). இரண்டிலும் எளிமையான வரிகள். தேவைய்ற்ற நெருடல்கள் ஏதுமின்றி மனதை வதைக்கும் வரிகள்! தினசரி வாழ்க்கையில் ரசிக்க ஒன்றுமில்லையா யோசிக்க வைத்தக் கவிதை!
"முகம் தெரியாத உனக்கு" கவிதையில் 'வலி தாங்கி வாழவும் வலியற்றுச் சாகவும் ஆகவில்லை உனக்கு!' என்ற வரிகளின் தற்கொலையின் குரூரத்தை விவரிக்கிறது. தினமும் நாம் சந்திக்கும் ஒரு முகம். பார்த்து லேசாக சிரிக்கும். நாம் வழக்கம் போல் இறுகிய முகத்தோடு உன்னுடன் எனக்கென்னச் சிரிப்பு? நீ யாரோ நான் யாரோ என்ற பாவனையில் அந்த முகத்தைத் தாண்டி போவோம். ஆனால் ஒரு நாள் அவள் இல்லை இறந்து விட்டாள் என்று கேள்விப்பட்ட பின் அந்த முகத்தையும் சிரிப்பையும் மறக்க முடியாதுதானே! நம்மைச் சுற்றியிருக்கும் அற்புதங்களை இழந்த பிறகு தான் உணர்கிறோமா? உருள்கின்ற கண்ணீரும், உடைப்பட்ட உறக்கமுமாக இந்த இரவில் உன்னைச் சிந்தித்திருக்கிறேன் நாம் சந்திக்கக் கூடவில்லையென! என்ற இறுதி வரிகளோடு முடிக்கிறேன்.


என்னுடைய பகுதிகளாகவே தெரியும் இந்தக் கவிதைகளில் ஏதோ ஒரு வாசக மனம் தன் சாயலை காணக்கூடும் என்பதே போதுமானது என்று உமா மஹேஸ்வரி கூறுகிறார். வெறும் பொழுது காட்டும் மதிய நேரம் வேண்டாத நினைவுகள் வந்து அலைக்கழிக்கும் போது உற்சாகப் படுத்த ஒரு காரணமும் இல்லாமல் ஒரு கருஞ்சாம்பல் அணில் ஒன்று ஓடி நம்மை உற்சாகப்படுத்துவதும் ஒரு பாவனைதான். ஆனால் அந்த பாவனைகள் போலித்தனமில்லாத உண்மையான எழுத்துக்கு கிடைத்த வெற்றிதான்!

* * * * *

செப்டம்பர் மாத வாசகர்வட்டம்

செப்டம்பர் 03ஆம் தேதி நிகழ்ந்த வாசகர் வட்டக் கூட்டத்தில் கவிஞர் உமாமகேஸ்வரியின், " வெறும் பொழுது" கவிதைத் தொகுதி வாசிப்புக்கென கொள்ளப்பட்டது.

முதலில் பெண்ணியம் என்றால் என்ன என்ற அடிப்படையில் ஒரு பொது தளத்தை வரையறுத்துக் கொள்ள கூட்டத்தில் விவாதமும் பின்னர் அதனடிப்படையில் உமாமகேஸ்வரியின் கவிதைகளைப் பற்றிய ஒரு கலந்துரையாடலும், கடைசியாக எழுதி கொண்டுவரப் பெற்றிருந்த கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவைகளின் மீதான விவாதங்களுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.


கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பேர் வந்திருந்த கூட்டத்தில் காலச்சுவடு ஆசிரியர் திரு. கண்ணன் கலந்து கொண்டு பங்களிப்பினைச் செய்தார்.