ஜே.பி. சாணக்யாவின் 'கனவுப்புத்தகம்'- ஒரு பார்வை

ஜே. பி. சாணக்யாவின் 'கனவுப்புத்தகம்'.
மானஸாஜென்.
ஜே. பி. சாணக்யாவின் படைப்புகள் பாலுணர்வுகள் அழுத்தப்பட்டிருக்கு ஒரு சமகால தமிழ் மற்றும் இந்திய பசப்பல்களை தவிர்ப்பதற்காக பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுபவை. இதன் காரணமாக பல அடுக்குகள் கொண்ட கதைகளானாலும் 'புணர்தல், புணர்தல் நிமித்தம்' என வகைப்படுத்தி விடலாம் அவரது கனவுப் புத்தகத்தின் பெரும்பாலான கதைகளை. உடலின் இச்சைகளை போற்றுவதும், துய்ப்பதும், கீழ்த்தரமான வெளிப்பாடுகள் என்றும் அவற்றை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும், கடந்து செல்ல வெண்டுமென்றே கிட்டத்தட்ட எல்லா மத தத்துவங்களும் அறிவுறுத்தினாலும், இந்திய (இந்து, பெளத்த, ஜைன) மத தத்துவங்களில் இக்கருத்தின் ஆதிக்கம் ஆழமானது, அல்லது அப்படி அறிவுறுத்துவதாகத்தான் சராசரியான சமகால இந்தியன் புரிந்து கொண்டுள்ளான்.(காமத்தை அங்கீகரிக்கும் தந்திரசாஸ்திரங்களும் கூட புணர்தலை ஒரு கதவு போலத்தான் பாவிக்கின்றன. அது ஒரு இடமல்ல, வேறு ஒரு இடத்தை சென்றடைவதற்கான ஒரு வாயில்.) இதன் காரணமாக காமத்தை, காதலாக்குவதும், காதலை தெய்வீகமாக்குவதுமான ஒரு பாசாங்கு விரிவு கொள்கிறது. இன்னொரு புறம் உடலின் இச்சைகள் மனிதனை அலைக்கழிக்கிறது. சமூகக் கோட்பாடுகளையோ, மதிப்பீடுகளையோ ஒழுக்க விதிகளையோ அவை அறிவதில்லை, சுமத்தப்பட்டாலோ சமூகத்தின் ஒப்புதலுக்காக அவைகளை உடல் கைவிடுவதுமில்லை, காத்திருப்பதுமில்லை. தான் மதிப்பிடப் படுவதற்கான சமுகத்தின் அளவு கோலுக்கும் தன் உடலின் தேவைகளுக்கும் இடையே மாட்டிக்கொள்ளும் மனிதன் பிளவுபட்டவனாகிறான், குற்றவுணர்வு கொள்கிறான். தேவை, நிராகரிப்பு, குற்றவுணர்வு என பல கோணங்களில் அசைந்து கொண்டிருக்கும் ஆடிகளுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் ஒரு சிறுவனும், சிறுமியும் பின் எப்போதுமே திரும்ப முடியாத பிம்பங்களின் அலைகழிப்பில் சிக்கிக் கொள்வதன் ஊடாக ஆணும், பெண்ணுமாகத் திடப்படுகின்றனர்.புணர்விற்கான வழியாகவும், சமூகத்தின் அங்கிகரிப்பிற்குமான அடையாளமாகவும் இந்திய சமூகத்தின் பிரஜை, குடும்ப அமைப்பையும் கணவன் மனைவி உறவையும் அடையாளம் காண்கிறான். உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், நிர்பந்தம் உளவியல் ரீதியான பெரும் பாரமாகக் கவிழ்கிறது அவர்கள் மீது. அது பயம், கவலை, அதிகாரம், ஆதிக்கம், ஒடுக்குமுறை என சிராய்ப்புகளையும், காயங்களையும், புண்களையும், வடுக்களையும் நிரந்தரமாய் உற்பத்தி செய்து கொண்டே வாழ்வினை புரையோடிப் போன ஒரு வதைக் கூடமாக மாற்றிவிடுகிறது. நடுத்தர, கீழ் தட்டு நிலையிலிருக்கும் ஆண்களும், பெண்களும், காமத்தை தன் உறவின் சிக்கல்களோடு எதிர் கொள்வதும், தந்திர யுக்திகளின் ஊடாக அதிகாரத்திற்கான சமன்பாடுகளை மாற்றிக் கொண்டே இருப்பதுமான படக்காட்சிகளாக கனவுப் புத்தகம் விரிவு கொள்கிறது. கலவி, கரும்பாகவும், கம்பாகவும் மாறி மாறி சுவைக்கவும், துவைக்கவும் செய்கிறது. இன்னொரு கோணத்தில் இந்திய சமூகத்தில் பாலுணர்வு ஒடுக்கம் என்பதை ஆரிய சிந்தனை முறையாகக் கருதினால், அதன் ஆதிக்கம் குறித்த எதிர்ப்புணர்வில் விளைந்த திராவிடப் படைப்புகள் இவை என்றும் கருதலாம்.




* * * * * * * * * * * *


ஜே. பி. சாணக்யாவின் கதா மாந்தர்கள் நுணுக்கமான சித்தரிப்பின் ஊடாக உயிர்க்கிறார்கள். இரையைப் பின் தொடரும் புலியென சத்தமின்றி பின் தொடரும் கவனத்தில் ஒரு சமூகத்தட்டு மனிதர்களின் அநிச்சையாய் இயல்பான உடல் மொழிகள், பாவனைகள், பேச்சு பழக்கங்கள், எதுவும் விடுபடுவதில்லை. இத்தனைக்கும் அக உலக எண்ணங்களை அவர் பெரும்பாலும் தொடர்வதில்லை. கச்சிதமான புற சித்தரிப்புகளின் ஊடாகவே கடினமான உடல் உழைப்புக்குச் சொந்தமான அம் மக்களின் வாழ்வினை நமக்கு அறிமுகப் படுத்திவிடுகிறார். தன்னைச் சூழ்ந்த மக்களின் வாழ்க்கை மீது பிரக்ஞையும், அக்கரையும், அன்பும் கொண்ட மனதிலிருந்தே இத்தகைய புனைவுகள் சாத்யமாகின்றன என்பதே ஜே. பி. சாணக்யாவின் பலம். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளின் மையங்கள் ஒருமை கொள்வதற்கு மாறாக சிதறியே காணப்படுகின்றன. இக் குவிமையச் சிதறல் ஒரு சிறுகதை வாசிப்பு அனுபவத்தை அதன் முடிவில் இருத்தாமல் அதன் பயணத்திலேயே தக்கவைத்துக் கொள்கிறது. கனவுப்புத்தகம், ஆண்களின் படித்துறை, கடவுளின் நூலகம், கறுப்புக்குதிரைகள் போன்ற கதைகள் கறாராக எடிட் செய்யப்பட்டிருந்தால் நவீன சிறுகதைப் போக்கிற்கான மாதிரிகளாக தன்னைப் பிரஸ்தாபித்துக் கொள்ளாவிட்டாலும், இன்னமும் சிறப்பான இடத்தை அடைந்திருக்கும் என்பது எனது எண்ணம். கனவுப் புத்தகத்தின் கதைகளை அதன் தன்மைகளைக் கொண்டு மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம். இரண்டாவது ஆப்பிள், கனவுப்புத்தகம், கடவுளின் நூலகம், ஆண்களின் படித்துறையின் முற்பகுதி ‘ஆதியில் எல்லாம் ஒளியாய் இருந்தது’ என்னும் வாக்கியம் போல புனைவு கொள்ளும் கதைகள். அமராவதியின் பூனை, மஞ்சள் நீலம், ஆண்களின் படித்துறையின் பிற்பகுதி, வெள்ளை, கண்ணாம்பூச்சி போன்ற கதைகள் மறு அடுக்கு. உடலின் இச்சைகள் அலைகழிக்கும் வாழ்க்கையில் ஆண்களால் திருப்திபடுத்தவே இயலாத பெண்களும், அவர்களின் ‘உறவுகளுக்கு விஸ்வாசமற்ற’ தன்மையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள விழையும் ஆண்கள் தங்களின் சகல வீரத்தையும், ஆண்மையும் வெளிப்படுத்தியும் கூட புரிந்து கொள்ள முடியாத புதிர்களாய் பெண்கள் விரிவுகொள்வதையும், தங்களின் சந்தேகங்களிலும், பயங்களிலும் சிறு குழந்தைகளாய் அவமானப்பட்டு சிறுத்துவிடும் ஆண்களும், என விரியும் கதைகள். கோடைவெயில், பதியம், கறுப்புக்குதிரைகள் போன்ற சமூக அலைகழிப்பில் சிதறும் மனித சித்தரிப்புகளின் கதைகள். சிறுபத்திரிக்கைச் சூழலில் பழக்கமான கதைகள். திரும்பத் திரும்ப அறிமுகப் படுத்தப்பட்டதாலேயே அவை அதிர்வுகள் ஏதும் ஏற்படுத்தாமல் சற்றே மிகை போலத் தோற்றம் கொள்கின்றன.

பாலுணர்வுகள் குறித்த பாசாங்குகள் குறைந்த சமூகத்தில் இக் கதைகளின் பின்னுள்ள ‘புரட்சி’ பெரிதும் மட்டுப் படுகிறது. ஆனால் காமம் சார்ந்த அரசியல் கூர்மைப்படுகிறது என்பதையும் சிங்கப்பூரின் சூழலில் வாழும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.


* * * * * * * * * *

அடுத்த வாசகர் வட்டம்-ஒர் அறிவிப்பு.

ஒரு அறிவிப்பு

இனிய வாசகர் வட்ட நண்பர்களுக்கு நமது அடுத்த வாசகர் வட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்கள் மற்றும் சிறுகதைகள் பின் வருமாறு

சந்தியா- நாவல் எழுதியவர் பிரபஞ்சன்
(இந்த நாவல் சுவா சூ காங், மரைன் பரேட், ஆர்ச்சர்ட் தேசிய நூலகங்களில் இல்லை.)

சூர்யவம்சம் - எழுதியவர் சா.கந்தசாமி
(சுவா சூ காங், ஈசூன், செம்பவாங் ஜுரோங் கிழக்கு நூலகங்களில் இந்த நாவல் இல்லை)

ஒரு முக்கிய குறிப்பு. இந்த நாவலுக்கும் விக்ரமன் திரைப்படத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே ரோஜாப்பூ பாடல் சூப்பர்! சலக்கு சலக்குப் பாடல் படத்திற்கு வலு சேர்க்கின்றது போன்ற திரை விமர்சனங்களைத் தவிர்க்கவும். இந்தப் பெயரை எடுத்து ஒரு திரைப்படத்திற்கு உபயோகித்துக் கொண்டதற்கு ஏதாவது ராயல்டி கிடைத்ததா என்பதை திரு சா.கந்தசாமியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.

சா.கந்தசாமி, பிரபஞ்சன் இருவரும் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சியை முன்னிட்டு சிங்கப்பூர் வரவிருக்கிறார்கள். எனவே நம்முடைய வாசகர் வட்டமும் இதனை ஒட்டி நடைபெறும்.

மேலும் இரு உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளும் இந்த நிகழ்ச்சிக்கு சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

திரு கண்ணபிரான் எழுதிய ‘gypsies’

திரு இளங்கண்ணன் எழுதிய ‘morning dew’

இந்த இரண்டு சிறுகதைகளும் விரைவில் மின்னஞ்சல் மூலம் நம் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அடுத்த வசகர் வட்டம் எப்போது, எங்கே, யாருடன் போன்ற விவரங்கள் விரைவில்!!
நான்கு கதைகள் தேர்வாகியுள்ளன. எனவே எல்லாக் கதைகளுக்கும் விமர்சனங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் நண்பர்களிடம் பேசி யார் எந்தக் கதையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
அன்புடன்
வாசகர் வட்டத்தில் ஒரு சிறு வட்டம்

நெடுங்குருதி :வாசிப்பு ரெ. பாண்டியன்

எஸ் ராமகிருஷ்ணனின் “நெடுங்குருதி”
களவாடப்பட்ட வாழ்வின் மெல்ல கலையும் நிச்சலனம்

ரெ.பாண்டியன்


இது யாருடைய கதை ?

முதலில் இது நாகுவின் கதை; அடுத்து நாகுவின் குடும்பத்தின், சந்ததியின் கதை ; பிறகு இது வேம்பலை கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் கதை ; அப்புறம் இது வேம்பர்கள் என்னும் குழுவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை. இன்னும் அதே வேம்பலையில் வாழும் வேம்பர்களின் கதை.
நாவல் மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் சமூகத்தின் பார்வை எது ?
கள்ளர்கள் அல்லது கொலைஞர்கள் பிறர் பொருளை அபகரிப்பதை தொழிலாகக்கொண்டு வாழ்பவர்கள்.
எந்த நிலையிலும் அடுத்தவனை வஞ்சிக்காமல் இருக்கவேண்டும் என்பது காவியங்கள் ஏற்றிப்பிடிக்கும் தர்மம்.
ஆனால், வேம்பர்களின் வாழ்வை அபகரித்த வரலாற்று , அரசியல், சமூகவியல் காரணிகள் யாவை ? அவற்றை எளிதாக கண்முன் அடையாளப்படுத்த முடியுமா?
இந்த காரணிகளை வேம்பர்களே எதிர்கொண்டுள்ளனரா? அல்லது அவர்களை எதிர்கொள்ள விடாமல் வைத்திருக்கும் உள் நிலவரம் என்ன? வேம்பர்கள் அவர்களது களவு வாழ்வில்கூட கடைப்பிடிக்கும் சில நெறிமுறைகளுக்கான அர்த்தம் என்ன? அவன் அந்த நெறிமுறைகளுக்கு வந்தடைந்த அனுபவம் என்ன?
அவர்களின் சந்ததியில் விலகல்கள் உண்டா? (இவை நாவல் ஆராயும் கேள்விகள்)
ஒரு வேம்பனின் கதையை எப்படிச் சொல்லலாம்?
கதையின் பிரதான கதாபாத்திரங்கள் நாகு, நாகு அய்யா, ரத்னா.
நாகு இரண்டுங்கெட்டான் மனநிலை வளர்ச்சியுடையவன்; அவன் அவனது அய்யாவைப்போல திடசித்தமான திருடனில்லை; பயப்பிராந்தியோடு வளர்ந்தவன். ஆனாலும் திருட்டில் ஈடுபட்டு, குறை ஆயுளில்
இறந்துபோகிறான்.
ரத்னா நாகுவின் நகர்புறத்து வடிவம். பர்மாக்காரனின் வன்புணர்ச்சியில் தைரியம் எல்லாம் வடிந்துபோகிறது; காலம் முழுக்க தனது தனிமையை தொலைக்க, போராடி தோற்றுப்போகிறாள்.
நாகு, ரத்னா இருவருமே தனியான ஆளுமை உடையவர்கள் இல்லை. கள்ளன் என்றும் விலைமாது என்றும் பொதுமைப்படுத்தும் பெயர்களுக்குள் பெரும் தத்தளிப்பு நிறைந்த மனிதர்கள் இருப்பதை இருவரும் பிரதிநிதிக்கிறார்கள்.
வெளியில் “சாமி மாதிரி”யான கடினசித்தம் படைத்த நாகுவின் அய்யா தனது குடும்ப வாழ்வில் ஏற்படும் வீழ்ச்சிகளால் (பொருள் ஈட்டுவதில் தோல்வி, நீலாவின் , நாகுவின் மரணங்கள்) உள்ளூர உடைந்துபோகிறார்.
ஒரு காலத்தில் பலராலும் அஞ்சப்பட்ட சிங்கி என்கிற வேம்பன் காதலுக்காக திருட்டுத்தொழிலையே விட்டுவிட்ட பிறகும், மீதி வாழ்வை சீரழிந்த நிலையிலேயே தொடரவேண்டிய அவலம்; அவன் ஒரு சிறுவனாக, தன் தாய் வேம்பனின் மனைவி என்பதால் அடைந்த அவமானங்களை பற்றிய ஞாபகங்களோடு முதுமையின் தனிமையில் கழித்துக்கொண்டு, இறந்துபோன கூட்டாளி குருவனோடு ஆடுபுலி ஆட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான்.
இடுப்பு விலகிய லட்சுமணனை திருடு போன களவு நகைகளுக்காக அவன் மகன் சீனி வேல்கம்பால் கொன்றுவிட்டு, பிறகு உண்மையை தெரிந்துகொண்டு, பழிவாங்க புறப்பட்டு, அவனும் பழியாகிறான்.
இடுப்பு விலகி, கழுத்தில் ஆயுளுக்கும் கொண்டி மாட்டப்பட்ட வேதனைக்குரல் ஊர் முழுக்க கேட்டுக்கொண்டிருக்கும் சூழல்.
வேம்பர் குடும்பத்து பெண்களான சுப்புத்தாய், வேணி, மல்லிகா போன்றவர்கள் ஆளுமையற்றவர்களாக, துயரத்தை மௌனமாக எதிர்கொள்பவர்களாக இருக்க, பக்கீரின் விதவை மனைவி ஆளுமைமிக்கவளாக வேம்பலைக்குள் நுழைகிறாள். வேம்பர் சந்ததியில் கண்ணீரை விலக்கி வைக்கும் முதல் பெண் வசந்தா.
வசந்தாவும் திருமாலும் நாகு அய்யாவின் நிகழ்கால தலைமுறை சந்ததியினர் (சிறு கதாபாத்திரங்கள் தான்). நாகு அய்யாவின் / வேம்பர்களின் பரம்பரையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களின் குறியீடாக வசந்தாவும், திருமாலும் வருகிறார்கள்.
வசந்தாவின் ஆளுமை துலங்க கிட்ணா-சேது-சங்கு, தோழி-குருநாதன் ஆகியோருடனான அனுபவங்கள் விரிகின்றன; திருமாலின் ஆளுமை துலங்க பவுல்-கிருபை-தங்கபுஷ்பம்-லயனல்சார்-இறையியல் பள்ளி அனுபவங்கள் விரிகின்றன.
புத்திசாலித்தனமாக பிழைத்துக்கொள்பவன் காயம்பு.
இவ்வளவு பேர் இருக்க, குறை ஆயுள் உடைய நாகு பிரதான பாத்திரம் ஆனது ஏன்?
கள்வர்களின் சந்ததியின் விலகல் புள்ளி நாகு. முதன்முதலாக (சின்னுவின்) இரத்தம் பார்த்து, மனக்கலக்கத்துக்கு உள்ளானவன். அத்தோடு அவனது சந்ததி வேம்பலையின் சாபத்தை எதிர்கொள்ள இரண்டு வழிகளில் பிரிகிறது. ஒன்று, வேம்பர் மரபோடு தன்னை துண்டித்துக்கொள்கிறது (திருமாலின் பாதை) ; மற்றொன்று, வளர்த்துக்கொண்ட தனது ஆளுமையோடு, வேம்பலைக்குத் திரும்புகிறது (வசந்தாவின் பாதை).
நாகு அய்யாவின் வீழ்ச்சியின் தொடர்ச்சி நாகு ; நாகு அய்யாவின் பாதிப்பு வசந்தாவிடமே தொடர்கிறது. தானறியாத, குறை ஆயுளில் மறைந்த தந்தை பற்றிய ஏக்கம் ஒரு புதிய கனவின் தொடக்கமாகிறது .

வேம்பர் வாழ்வின் கதியில் எதிர்படும் முரண் எது ?

1. இயற்கையின் வஞ்சனை : பகல் பற்றி எரிவது போன்ற தீவிரம் கொள்ளும் வெக்கை.
வெக்கையின் விளைவான வறட்சி. ஊரைவிட்டு கிளம்பிபோன மனிதர்களால், சூன்யமாய் காட்சியளிக்கும் கிராமம். அன்றாட வாழ்விற்கு அலைக்கழிக்கப்படும் நிலையும், கடுமையான தனிமை உணர்வும் மனிதர்களை உள்ளூர இறுகிப் போக வைக்கிறது.
2. வாழ்க்கையின் வஞ்சனை : அசம்பாவிதங்களின் தொடர் சம்பவிப்பு.
நீலாவின் மரணம் அம்மாவைக் கொல்கிறது; அம்மாவின் மரணம் நாகுவை தடம் புரள வைக்கிறது ; சின்னுவின் இரத்தம் பார்த்தல், நாகுவை அதிர வைக்கிறது. நாகுவின் மரணம் மல்லிகா / ரத்னாவதி ஆகியோரின் வாழ்வை நிர்க்கதியாக்குகிறது; இரண்டாவது வாய்ப்பாக வரும் பூபாலனின் மரணம் ரத்னாவதியை பழைய வாழ்வுக்கு திரும்பச் செய்கிறது.
3. காலத்தின் வஞ்சனை
கொற்கை பாண்டியனின் வீரர்களுக்கு தப்பி வந்த வரலாறு ; வேல்சி துரையால் துன்புறுத்தலுக்கு உள்ளானது; 42 வேம்பர்கள் கொல்லப்பட்டது ; மற்றவர்களின் குதிகால் நரம்பும் குரல்வளை நரம்பும் வெட்டப்பட்டது ; வேம்பனின் கண்களில் நிரந்திரமாக குடிகொண்ட பயம்.
பிறகு மீண்டும் களவுக்குப் புறப்பட்டு, போலீசின் கைரேகை வேட்டை, கச்சேரி காவல் என்று அவர்களின் வீழ்ச்சி தொடர்கிறது.
‘நாகு’ வின் சாத்தியப்பாடுகள்
திருட்டுத் தொழிலிலிருந்து நாகுவின் விலகலை சாத்தியப்படுத்தியிருக்கக்கூடியவள் அவனின் அம்மா சுப்புத்தாய். கனகாம்பரத்தின் தலையை அவன் உடைத்ததற்காக, அவனுக்கு சூடு போட்டவள். அவன் சூரிக்கத்தியைத் தீட்டுவதை தாத்தாவைப்போல பார்த்துக்கொண்டிருந்திருக்கமாட்டாள்.
நாகு பழைய வரலாற்றை நேர் செய்யக் கூடிய வாய்ப்பைப்பெறவேண்டி இருந்தவன்; அம்மாவின் மரணம் அவனை திசையற்ற வெளியில் அலையவைத்து விடுகிறது. ஆனால், சிங்கி திருட்டுத்தொழிலை தெய்வானை மீது கொண்ட காதலினால் விட்டுவிட்டாலும், தெய்வானை கொடூரமானவளாக மாறிப்போகிறாள்.
வழிதவறி திருட்டில் நுழைந்து, அதன் சவாலை எதிர்கொள்ளமுடியாமல் வாழ்வை இழக்கிறான் ஒருவன் ; வழிதவறி திருட்டை கைவிட்டு குடும்ப வாழ்வில் நுழைந்தவன், தாம்பத்யத்தின் சவாலை எதிர்கொள்ளமுடியாமல் தனிமைபடுகிறான்.
நாவலின் ஆரம்பத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடும் சண்டை நடக்கிறது; வேணி அக்காள் அழும் குரல் தெருவில் வீட்டை நோக்கி நடந்துவந்து கொண்டிருக்கும் நாகுவுக்கு கேட்கிறது. உடனே அவன் திரும்பி தெருவை நோக்கி நடக்கிறான். சிறுவயது மனதில் ஏற்படும் இது போன்ற பதட்டங்கள் எவ்வளவு தூரம் பிற்கால வாழ்வை தடுமாற்றங்கள் உள்ளதாக ஆக்குமென்பதற்கு நாகுவின் பிற்பகுதி வாழ்வே உதாரணம்.
நாகு அய்யாவின் பாதை
பக்கீரைக் கொன்றது நாகு அய்யா; பக்கீரின் மனைவி இரு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு, சுயதொழில் முயற்சியாலும் பிறகு ரெட்டியாருக்கு ‘தொடுப்பாகி’ போவதாலும் குடும்பத்தை கரையேற்றுகிறாள்; நாகுவும் வேணியும் வேம்பலைக்கு வரும்போதெல்லாம், பக்கீரின் மனைவியை காணச்செல்கின்றனர். ஆனால், நாகு அய்யா பக்கீரின் மனைவியை நடத்தைக் கெட்டவள் என்று திட்டுகிறார்.
இந்த இடத்தில் நாகு அய்யாவின் மனோபவம் என்ன? அவர் என்ன எதிர்பார்க்கிறார் ?
விதவையானவுடன் பக்கீரின் மனைவி சுப்புத்தாயைப்போல கண்ணீரும் கம்பலையுமாக காலம் தள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். வேணி திருமணமாகி போகும் தருணத்தில் “என்ன கஷ்டம் வந்தாலும் உன் அம்மாவைப்போல தைரியாமாய் இருக்கணும் “ என்கிறார் - அதாவது, சுப்புத்தாயின் வாழ்வை உருக்குலைக்க செய்வதையெல்லாம் செய்துவிட்டு. அவர் நினைத்தால் குடும்பத்தைவிட்டு ஓடிப்போய்விடுவார், பிறகு சாவகாசமாக திரும்பி வருவார். இருக்கும் கொஞ்சநஞ்ச குடிநீரையும் கால்கழுவ பயன்படுத்துபவராக நாவலில் அவர் அறிமுகமாகிறார்.
ஆணாதிக்கம் பற்றி நேரடியாக நாவலில் பேசப்படாவிட்டாலும், நாவலின் வரும் அத்தனை பெண்களும் (சுப்புத்தாய், மல்லிகா, வேணி, ரத்னாவின் பிற்பகுதி வாழ்வு) துயர நிழல்களாகவே வருகிறார்கள் – வசந்தாவையும் பக்கீரின் மனைவியைத் தவிர.
பிறகு பெண்களுக்கு பேய் பிடிப்பது பற்றியும், ஆண்களுக்கு பேய் பிடிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த பெண்களைப் பிடித்த பேய் ஆணைத் தவிர வேறு யார் ?
வேம்பலையின் சாபத்துக்கும் இவர்களின் கண்ணீருக்கும் சம்பந்தம் உண்டா? ரத்னா ‘வேட்டைக்கு தப்பிய மிருகங்களுக்கு ஏற்படும் மூர்க்கம்போல ஏற்பட்டு மாறிவிடுகிறாள்; மல்லிகா “வேலை பைத்தியமா”கிறாள்; ஏன் என்று கேட்டால், ஓங்காரித்து அழத் தொடங்கிறாள்; சிடுசிடுப்பாகி போகிறாள்;
நாகு அய்யாவின் பிற்பகுதி வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது; வாழ்வின் கொடும் வெக்கையிலிருந்தும் தாங்கொண்ணா துயரத்திலிருந்தும் ஓடி ஒளிவதல்ல, மல்லிகாவிற்கும் வசந்தாவிற்கும் ஆசுவாசத்திற்காக சாய்ந்துகொள்ளும் ஒரு சுவராகவாவது இருப்பதுதான் தனது குறைந்தபட்ச நல்லது செய்தலாக இருக்கும் என்கிற நிலைக்கு வருகிறார்.
நாகு அய்யாவோடு ஒப்பிடும்போது நாகுவுக்கு தன் வேணி அக்கா வாழ்நிலைப்பற்றியும் வெற்றிலைச் சத்திர விலைமாதுபற்றியும் வருத்தம் ஏற்படுகிறது. ரத்னாவின் தோழியின் மகளை மடியில் வைத்து முடி இறக்க சம்மதிக்கிற அளவுக்கு திறந்த மனோபாவம் அவனுக்கு இருக்கிறது.
வேம்பனின் நிகழ்கால வேர் 1 : வசந்தா
கல்லூரிக்குமேல் வட்டமிடும் பருந்து வேம்பலையைச் சேர்ந்தது என்று வசந்தாவுக்குத் தோன்றுகிறது. நாவலில் அவள் தற்கொலையிலிருந்து உயிர்பிழைப்பதன்மூலம், அவள் “மறுபிறப்பு எடுத்துவிட்டாள்; அவளை இனி வேம்பலையின் சாபம் ஒன்றும் செய்யாது “.
வசந்தாவுக்கு படிப்பு பிடிக்கவில்லை; தினமும் தலையில் கொட்டுவாங்கும் வசந்தா; ஆனால் அவள் அழுவதேயில்லை; யாரும் அழுதாலும் பிடிப்பதேயில்லை; அவள் புது டீச்சருக்கு வணக்கம் சொல்வதில்லை; அதனால் ஏற்படும் தண்டனைக்கு வேதனைப்படுவதில்லை; அவளுக்கு இருட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்கும்; அவளைப் பார்க்க யாரும் வருவதில்லை ; அவளுக்கும் அம்மாவிடம் பேசப்பிடிப்பதில்லை; ஆனால், வேம்பலைக்கு வந்துவிட்டுச் சென்றபிறகு, அம்மாவின் நிலை மீது வருத்தம் ஏற்படுகிறது. பழைய வேம்பலை வாழ்வு அம்மாவைப்போன்ற எளிய மனிதர்களின் வாழ்வின் மீது நிகழ்த்திய தாக்குதல் பற்றிய புரிதல் அது.
பதின்ம வயதில் ஒரே ஆளைத் திருமணம் செய்யமுடியாத காரணத்தால், தோழியின் பேச்சைக்கேட்டு கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வசந்தாதான், தனது கணவன் சேதுவை கிட்ணா அபகரிப்பதை கண்டு, கணவனை விட்டு விலகுகிறாள்.
ஒரு சிறு குற்றத்திற்காக, சின்னுவை தண்டிக்கிறான் நாகு; ஆனால், நாகுவின் மகள் வசந்தா சேதுவின் அண்ணியிடம் சேதுவுக்குள்ள கள்ள உறவை மன்னித்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை ஏற்றுகொள்கிறாள். நாகுவின் வம்சகுணத்திலிருந்து வசந்தா விலகும் புள்ளி இது.
நாகு வேம்பர்களின் தற்கால நிர்க்கதி வாழ்வின் குறியீடு; அடுத்த தலைமுறை வசந்தா வேர்களைத் தேடி வருகிறாள். வேர்களின் பலவீனமான அம்சங்களை அவள் மீறவேண்டும். அதற்கான ஆளுமை அவளிடம் இருக்கிறது. (சுப்புத்தாயிடமும் மல்லிகாவிடமும் இல்லாதது )
அவள் வேர்களின் பலவீன அம்சங்களை மீறும் தருணங்கள் நாவலுக்கு வெளியே இருக்கிறது (முடிவுக்கு பின்னால்)
ஊமைவேம்பு நாகுவின் காலத்தில் காய்ப்பதோ பூப்பதோ இல்லை; வசந்தாவின் காலத்தில்தான் பூக்கிறது.
வேம்பனின் நிகழ்கால வேர் 2 : திருமால்
பூபாலனின் மரணமும் அத்தைக்காரியின் திடீர் மனமாற்றங்களும் ரத்னாவை பழைய வாழ்வை நோக்கி திருப்புகிறது. இது திருமாலின் வாழ்வின் கதியை மாற்றிவிடுகின்றன.
வேம்பர் வாழ்ககைச்சூழலிலிருந்தும் ரத்னாவின் நகர்ப்புறச் சூழலிலிருந்தும் துண்டிக்கப்பட்டு, மிஷன் பள்ளியின் பாதுகாப்பு விதிகளுக்குள் தன்னிச்சையாக வளர்கிறான்.
அவன் சிறுவர்விடுதி கம்பிகளைப் பிடித்துக்கொண்டு எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறான்; காலப்போக்கில், அம்மா அவனது மனத்திலிருந்து விலகிப்போகத் தொடங்கினாள்; பள்ளிக்கூடத்தின் நெல்லிமரத்தடியும் கிழிந்த காகிதங்களின் மக்கிய வாசனையும் அவனை வளர்த்தன. ஓட்டு அணில்களைப் போல தன்னிச்சையாக பள்ளியினுள் அவன் உலா வர ஆரம்பித்தான்.
லயனல்சாரின் தந்தையைப்போன்ற பராமரிப்பில் எதையும் நடுநிலையிலிருந்து பார்க்க கற்றுக்கொள்கிறான்.
பவுல் மார்க்சியம் பற்றி பேசுகிறான்; இறையியலின் போதாமைகளையும் இறுக்கத்தையும் பற்றி பேசுகிறான்; அவன் தன் அப்பா கிருபையை வெறுக்கிறான், அம்மாவின் பாதையில். ஆனால், பவுலின் அப்பாவின் மீது தான் திருமாலுக்கு வாஞ்சை பிறக்கிறது. கிருபையை சந்தேக நோயாளியாக மாற்றியது யார்? தங்கபுஷ்பம் கிருபைக்குத் தெரியாமல் திருடி பரண்மீது சேர்த்துவைத்த பணமா ? இது வீட்டிற்குள் நடந்த திருட்டு; கிருபையிடம் திருடியது பணம் மட்டும்தானா ?
கிருபைக்கு விஷம் வைத்து தங்கபுஷ்பம் கொன்றுவிடுகிறாள். இதைப்பற்றி பவுலுக்கு உள்ளுணர்வு தட்டும்போது, இந்த புரிதலுக்கு காரணமான திருமால்மீது மனவிலகல் ஏற்படுகிறது; “நீ தோழர் சீனிவாசனை இனி சந்திக்கவேண்டாம்“ என்கிறான். மார்க்சியமும், ஏங்கல்சும் தோழர் சீனிவாசனும் பவுலின் தனியுடைமையன்றோ?

வேம்பனின் நகர்புற பிரதிபலிப்பு : ரத்னாவதி

பர்மாக்காரனுடனான வன்புணர்ச்சி அனுபவத்திற்கு பிறகு, அவளது தைரியம் யாவும் வடிந்துவிடுகிறது. முன்பின் அறியாதவர்களோடு படுக்கையை பகிர்ந்துகொள்ளும் வாழ்விலிருந்து விலக ரத்னா விலக விரும்புகிறாள். முதலில் நாகு, பிறகு பூபாலன், அத்தைக்காரி. எல்லாம் பொய்த்து போகிறது.
யாருமற்ற தனிமை என்கிற அச்சம் அவளை துரத்துகிறது. சினிமாவுக்கு வருகிறாயா என்று அழைத்தவன் தொடங்கி, அஸ்ரஸ் முதலாளிவரை அவள் தனது தனிமையை வெல்ல நடத்தும் அவல முயற்சிகள்; மேக நோய் வந்த பிறகு மீண்டும் தனிமை. ஜெயராணியோடு தங்க வருகிறாள்; அவளும் இவளை ஒரு லாட்ஜில் ரூமில் தள்ளிவிட்டு, கிளம்பிவிடுகிறாள். தற்கொலை அவள் தனது தனிமைக்கு எதிராக தொடுக்கும் இறுதி அஸ்திரம்.
ரத்னாவுக்கு ஏன் மிஷன் பள்ளி பிடித்திருக்கிறது ?
அவள் கோயிலுக்கு வெளியே கடை வைத்திருந்தாலும், கோயிலுக்குள் போக விரும்பியதில்லை; ஒருதடவை பூபாலனோடு போனபோது ஒரு போலீஸ்காரன் (பழைய வாடிக்கையாளன்?) “இப்பொழுதெல்லாம் பார்க்கவே முடிவதில்லையே, ஆமா இது யாரு? “ என்கிறான். அவள் விட்டு விலகினாலும் அவளது பழைய வாழ்வு அவளை பின்தொடர்கிறது;
அவள் தனது மகனுக்கு விரும்பும் ஒரு புதிய தொடக்கம் மிஷன்பள்ளி மூலமாகத் தான் சாத்தியம் என்று நினைக்கிறாள்; கிறிஸ்தவம் வெளிப்படையாக வழங்கும் மன்னிப்பு, பரிசுத்தம், எளிமை என்கிற மாற்று யதார்த்தம் பற்றிய அவளது எண்ணங்கள் அவளுக்கு மன ஆசுவாசத்தை வழங்குகிறது.
மாற்றங்களை எதிர்கொள்ளும் வேம்பர்கள்
கல்வியின் அறிமுகத்தை, கிறிஸ்தவ மதத்தின் அறிமுகத்தை, தூக்கம் பற்றிய ஆராய்ச்சியை போனால்போகிறது என ஏற்றுக்கொள்ளும் வேம்பர்கள் மின்சாரத்தை நிராகரித்துவிடுகிறார்கள். மின்சாரம் வேம்பர்கள் மிகவும் நேசிக்கும் இருட்டைப் போக்கிவிடும். அவர்களின் வாழ்க்கைப்பாட்டையும் நிறுத்திவிடும் என்பதால்.
நாவலின் சொல்முறை
நாவலில் எங்குமே கள்ளர்கள்மீது நமக்கு எதிர்மறையான என்ணம் ஏற்படவில்லை. காரணம் அவர்களின் வாழ்நிலையின் மீதான சோகம்.
ஆனால், கள்ளர்கள் மீதான எதிர்மறையான எண்ணம் சமூகத்தின் பொது நனைவிலியில் இருக்கிறது; வேல்சு துரை வரலாற்றில் எப்படி வேம்பர்களை ஒடுக்கினான் என்கிற சமூக பார்வை அல்லது பிரதாபம் நாவலின் தொடக்கத்துக்கு முன்னே உள்ளது. நாவல் இந்த பொது பார்வை தாண்டிய உள்-நிலவரங்களுக்குள் தனது விசாரணையை செய்கிறது.
நாகு அய்யா ஒரு “சாமி” மாதிரி ஆள் என்பது மிகவும் பிற்பாடு போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. மாட்டுத் திருட்டு பற்றி துப்பு சொல்பவர்கள்மீது விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகமும் கோபமும் மட்டுமே எதிர்மறையான ஒரே பதிவு. நாகு அய்யா செய்த பக்கீரின் கொலையும் நேரடியாகச் சொல்லப்படவில்லை.
நாவலின் தொனி ஒரு சீரான நீரோடை ; பகீரதன பாய்ச்சல்கள் இல்லை; நாகுவின் மரணம் கடைசிக்கு மூன்றாவது பாராவில் நடுவரியில் சொல்லப்படுகிறது; நீலாவின் மரணமும் ரத்னாவின் தற்கொலையும் அவ்வாறே.
‘கோடைகாலத்’தை நாகுவின் எங்கும் தப்பிச்செல்லமுடியாத கஷ்டமான பால்யம், ‘காற்றடிக்கும் காலத்’தை நாகுவின் வாலிப சாகஸம் மற்றும் திடீர் மரணம், ‘மழைக் காலத்’தை அடுத்த தலைமுறையின் பள்ளிகளுக்குள் சிறைப்பட்ட பால்யம், ‘பனிக்காலத்’தை மூன்றாம் தலைமுறையின் அளுமையின் சோதனைக்காலம், மற்றும் ரத்னாவதியின் மரணம் ஆகியவற்றை சுட்டி நிற்கிறதாக வாசிக்கலாம்.

எஸ்ராவின் கலை

நாவலில் எந்த ஒரு நிகழ்வின்மீதோ ஒரு கதாபாத்திரத்தின்மீதோ ஆசிரியர் தனது அபிப்பிராயத்தையோ அல்லது ஒரு எள்ளலையோகூட தெரிவிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு தொனி மாறுதலையோ அல்லது புனைவின் ஏதோ ஒன்றிற்கு தரும் முக்கியத்துவத்தையோ எங்கும் உணரமுடியவில்லை; இந்த நாவல் எழுதப்பட்டதன் அல்லது செதுக்கப்பட்டதன் தடயத்தை இதன் பக்கங்களில் எங்கும் காணமுடியவில்லை.
எந்த குறிப்பிட்ட இலக்குகளையும் அவர் நாவலில் வலியுறுத்தவில்லை; நாவலில் வேம்பர்களின் உள்நிலவரங்கள் கூடிய வரலாற்றை நிகழ்கால தலைமுறையான வசந்தாவிற்கும் திருமாலுக்கும் விரித்து இணைப்பதன்மூலம், கள்ளர்கள் விலைமாதுகள் என்கிற பொதுமைக்கு பின்னே இருக்கும் பொது மனநனைவிலியின் அந்தரங்க மனத்தீட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார்.

அதியற்புத யதார்த்த அம்சங்கள்

1)இறந்த மனைவியிடமிருந்து பச்சைக்குத்தப்பட்ட தேளை சிங்கி கிழவன் பெற்றுக்கொள்ளும் இடம்.
2)ஊமை வேம்பை தஞ்சமடையும் பேய் பிடித்த பெண்கள் ; அவர்களின் கூந்தலைப் பிடித்து ஊமைவேம்போடு ஆணியடித்துவிடும் கோடங்கி.
[கோடாங்கியாக வேல்சு துரையும் உள்ளூர் போலிசும்; பேய் பிடித்த பெண்களாக வேம்பர்கள்; வேம்பலை அவர்களது சரணாலயம் – சுபிட்சத்திற்கு வழியில்லாத “ஊமைவேம்பு” ஊர் ; அவர்களது தைரியம் வேல்சு துரையாலும் / தலைவிதி வேம்பலையின் சாபத்தாலும் அங்கே நிரந்திரமாக ஆணியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் இதை வாசிக்கலாம்.]
3) சென்னம்மாளின் முற்றிய வயதும், வாய்க்காத மரணமும் தீராத தாகமும் : வேம்பலையின்மீதான சாபத்தின் மனித உரு (personification).
4) இரு வேம்பலைகள் : இறந்தவருக்கு ஒன்று, இருப்பவருக்கு ஒன்று.
5) பக்கீரின் மனைவியின் கனவு : அவளுக்கும் கணவனுக்கும் ஏற்பட்டுவிட்ட நிரந்திர பிரிவைத் தெரிவிக்கும் கனவு.
6) வேணிக்கு கிணற்றுத் தண்ணீர் கைக்கு எட்டாததாகவே கனவு வருகிறது ; கனவு முடிந்து, கதவு வழியே வீட்டிற்குள் திறந்த மார்புடன் கிடக்கும் தாயைப் பார்க்கிறாள்; பசியடங்காத பூனை ஒன்று இரவில் அலைகிறது; கனவும் நனவும் வேம்பலை பெண்ணின் வாழ்வு வாழ்க்கைப்பற்றிய ஈரத்தின் ஏக்கத்திற்கும் ஆணின் அடங்காதபசிக்கும் இடையிலான சிறுவட்டத்தின் பரப்பளவுக்குள்தான் என்பதன் சூசகம்.
7) வீட்டிற்கு ஆகாத கோயிலுக்கு நேர்ந்துவிட்ட செவலைப்பசு.
8) உள்ளங்கையைப்போல பாதுகாக்கும், தப்பிப்போகாமல் சிறைவைக்கும், தப்பிப் போனவரை மீண்டும் தன்வசமாக்கும் தன்மை
9) ஆணியைப் பிடுங்கியதும் தேள் கொட்டுவது, பிடுங்கிய ஆணியை திரும்ப அடிக்க முடியாது தடுமாறும் வீரம்மாள்
10) வேம்பர் குதிகாலில் தழும்பு, இன்னும் பல.

கிராமத்து வாழ்வில் அதியற்புத யதார்த்தத்தின் அர்த்தம் என்ன ?

நூறு குடும்பங்களே உள்ள ஒரு சிறு கிராமம். எந்த நவீன வசதிகளும் சென்றடையாத, வெக்கையும் அடைமழையும் சூறைக்காற்றும் துர்மரணங்களும் அலைக்கழிக்கும் நிலவெளி.
எந்த நவீன அறிவும் வந்துசேராத மனிதன்.
அவன் தன் சூழல் சார்ந்த, இருப்பு சார்ந்த , துர்மரணங்கள் சார்ந்த அச்சத்தைப் போக்கவேண்டும். என்ன செய்வான் ?

தன்னை அச்சுறுத்தும் கொடும் வெக்கை வயது முற்றி மரணம் வாய்க்காத சென்னம்மாளின் தீராத தாகமாகத்தான் இருக்கவேண்டும். சென்னம்மாள் அவர்களோடு வாழ்ந்தவள். அவளுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்தால் அவளைப்பற்றி அச்சமின்றி வாழலாம்.
வெக்கை தீர்ந்து வந்த அடைமழை நிச்சயமாக சென்னம்மாள் கொண்டுவந்ததாகத்தான் இருக்கவேண்டும். அப்படிச் சொன்னால்தான் சென்னம்மாளோடு நன்றி பாராட்டியதாகும் . அவளின் ஆசியையும் பெற்றதாகும். தனக்கு முன்னால் இறந்தவள் தனக்கு தாய்தானே ? தாய் காக்கும் தெய்வமும் தானே ?
வேல்சின் போலீஸ்காரர்கள் துரத்திவந்தபோது வேம்பர்கள் வேம்பின்கீழ் ஒளிந்துகொண்டார்கள் ; வேம்பு தனது அடர்த்தியாலும், அது தந்த இருட்டாலும், நிசப்தத்தாலும் காட்டின் ஒலிகளாலும் அவர்களைக் காத்தது.
ஆனால், அதை அப்படிச் சொன்னால் நன்றி பாராட்டியதாகுமா ?
ஆக வேம்பு தங்களின் குலதெய்வம்போல, தாயைப்போல வயிற்றைத் திறந்து அவர்கள் அனைவரையும் உள்வாங்கி, அவர்களைக் காத்ததுதானே உண்மை ?
தனது சூழலின் மீதான அச்சத்தை வெல்ல, வேம்பன் தன் சூழல்மீது நட்பும், உறவும் கொண்டாடியே ஆக வேண்டும். வெக்கையும் அடைமழையும் சூறைக்காற்றும் அவனது தாயின் சேய் மீதான கோபமன்றி வேறென்ன ?
தெய்வானையின் கையிலிருந்த தேளை சிங்கி தன் உள்ளங்கையில் பெற்றுக்கொள்வதன் அர்த்தமென்ன ?
தேள் வேம்பர்களின் பச்சைக்குத்தப்பட்ட சின்னம் ; சிங்கியைப் பிரிந்த பிறகு பண்டாரத்தின் மகளான தெய்வானை செய்துகொண்ட இந்த சின்னம் கணவன்மீதான அன்பின் குறியீடு ? அவளது கொடுங்குணம் தன்னால் தாயாக முடியாததின் சுய கோபமாய் இருக்கலாம்; மரணத்திற்கு பின்னாலான அவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட மௌன சம்பாஷணை அது? அதில் அவள் தன் உள்ளார்ந்த அன்பை அவனுக்கு தெரிவித்துவிட்டாள். அன்பு தேளாய் கொட்டுவது யார் வாழ்வில்தான் புதிது?
நகரத்து வாழ்வின் அதியற்புத யதார்த்தத்தின் அம்சங்கள்
மூச்சிரைப்பு நோய் உள்ள லயனல் சாரின் மனைவி. இவ்வளவு இறையுணர்வு உள்ள குடும்பத்தில் ஏன் இவ்வளவு துன்பம் என்று பிரான்சிஸ் திருமால் நினைக்கிறான்.
கேள்வியை மாற்றியும் வாசிக்கலாம் : இவ்வளவு மரண பயம் இருப்பதால்தான், உயிரைப் பற்றிக்கொள்ள இவ்வளவு பிராயத்தனம் (பிரார்த்தனையும் அதன் வழியான வாழ்வும்) பத்ததிகள் நிரம்பிய சடங்காய் (stylized rituals) ஆக செயல்படுத்தப்படுகிறது. குடும்பத்து நால்வரின் பிரார்த்தனைகளில் அவளது உயிர் காக்கப்படும் என்ற நம்பிக்கைக்கும் சென்னம்மாள் வேம்பலையை காக்கிறாள் , ஊமைவேம்பு வேம்பனின் முன்னோர்களை காத்த தெய்வம் என்று சொல்வதற்கும் வேறுபாடு என்ன ?
மிஷன்பள்ளி பற்றிய ரத்னாவதியின் மாற்று யதார்த்தம் மீதான ஈர்ப்பும் இதோடு சேர்ந்ததுதான்.
கிராமத்தில் காடு, மலை, மிருகங்கள், பூச்சிகள், இருட்டு, மழை, காற்று, துர்மரணம் என்கிற அச்சங்கள்.
(நாகுவின் பயப்பிரமைகளுக்கு நிர்வாணப் பரதேசிகள்தான் நிவாரணம் தருகிறார்கள் : “எல்லாம் சரியாகிவிடும்” )
நகரத்தில் நம்மை சிறைவைத்திருக்கும் நகரத்தின் இயக்கம், அதன் கதி, சுற்றுச்சூழ நிறைந்திருக்கும் மனிதர்கள், நோய்கள், தனிமை பற்றிய அச்சங்கள்.
அச்சங்கள் தான் வேறுபடுகின்றன தவிர, அச்சங்களே மனிதனுக்கு நடுக்கமேற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அச்சத்தை வெல்ல நம்பிக்கைகள் தேவை - அது நிறுவனமாக்கப்பட்டிருக்கும் இறையியலாகவோ மார்க்சியமாகவோ இருக்கலாம் .
நாவலின் மையச்சரடு
நாவல் வேம்பனின் வாழ்வின் விரிவுகளைக்கொண்டு விசாரிக்க விரும்புவனவற்றை ஒற்றைப் பதத்தில் குறிப்பாலுணர்த்த முடியுமா?
‘கள்ளர் பயம்’
எந்த பழிக்கும் அஞ்சாத கள்ளனைப்பற்றி கள்ளர் அல்லாதவர் கொள்ளும் பயம் இது. யாருமற்ற சூழ்நிலையும் இருட்டும் அவன் இல்லாதபோதும் அவனைப் பற்றிய நினைவை கிளறுபவை.
கடினசித்தம் படைத்த கள்ளனுக்குள்ளும் இருக்குமா பயங்கள் ?
கள்ளர் அல்லாதவர்களின் பயங்களிலிருந்து வேறுபட்டவையா அவை ? கள்ளர் அல்லாதவர்களின் வாழ்விலும் சாதாரணமாய் ததும்பி வழியும் கள்ளத்தனங்களை நியாயப்படுத்தும் அச்சங்கள் மாதிரித்தானா அவையும் ?

**********

ஜே.பி. சாணக்கனவுப்புத்தகம்-ஜெயந்தி சங்கர்

ஜே.பி.சாணக்யாவின் 'கனவுப் புத்தகம்'

- வாசிப்பு: ஜெயந்தி சங்கர் -

ஆணின் ego சீண்டப்படும் போது அவன் கொள்ளும் ஆக்ரோஷம், தன்னுடைய அபரிமிதமான பாலியல் உணர்வையே ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது பலமானத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் இயல்பு, என்று சில விநோத உணர்வுகள் இக்கதைகளில் சொல்லப் பட்டிருந்தாலும் அதிகமும் தாய்-மகள் அல்லது அக்கா-தங்கை ஒரே ஆணை விரும்புவது போன்ற உறவுச் சிக்கல்களே அதிகம் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகின்றன. இவ்வகை உணர்வுப் போராட்டங்களைப் படிக்கும் போது கிருஷ்ண சோப்தியின் சிறிய இந்தி நாவல் (தமிழில் - லட்சுமி விஸ்வநாதன் / நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா) 'மித்ர வந்தி'யின் நினைவு வந்தது. இரண்டும் வேறு பட்டிருந்தாலும் சில ஒற்றுமைகளைக் கொண்டவை. இந்த விதமான கருக்களைக் கொண்ட கதைகள் 'கண்ணாமூச்சி, 'ஆண்களின் 'படித்துறை', 'இரண்டாவது ஆப்பிள்' ,'அமராவதியின் பூனை' இதிலிருந்து மாறுபட்ட கதைகள் 'கடவுளின் நூலகம்', 'பதியம்', 'கனவுப்புத்தகம்', 'கோடை வெயில்', 'கருப்புக் குதிரைகள்', 'மஞ்சள் நீலம் வெள்ளை' போன்றவை.


விதவிதமான அனுமானங்களுக்கு வழிவிடக் கூடியது தொகுப்பின் முதல் கதையான 'கடவுளின் நூலகம்' (ப. 11). ஒரு அனுமானத்தை கதைஞரே கதையினூடாகச் சொல்லி விடுகிறார். அதுவும் நம்பக் கூடியதாக இருந்த போதிலும் உண்மையில் நாற்பது வயதைக் கடந்த கதையின் நாயகன் தான் ஏதோ காரணத்தினால் தன் கடந்த கால வாழ்க்கையின் நினைவுகளை இழந்திருப்பதாகத் தோன்றுகிறது. 'பேசாம நான் எங்கியாவது அடிபட்டுச் செத்திருக்கலாம்' ( ப.33) என்று நாயகி சொல்லுமிடமும் நாயகி கட்டிக் கொண்டிருந்த பழைய மாடல் வாட்ச்சும் (ப.34) இதை உறுதி செய்கின்றன. இக்கதையின் தலைப்பு நிச்சயம் ஆய்வுக்குறியது. நாயகனின் கடந்த காலமான ஆசிரியர் பணி ஊகிக்கக் கூடியது. அதே போல ஆசிரியர்-மாணவி காதலும் கூட. பாத்திரங்களுக்குப் பெயர் கொடுக்காமலே எழுதி முடித்திருக்கிறார். படிக்கும் தறுவாயில் இது வாசகனுக்கு உரைக்காத வகையில் நாயகனின் எண்ணவோட்டமும் நேர்த்தியான கதையின் கட்டமைப்பும் பலமாக அமைந்திருக்கின்றன. வாசகனின் ஏற்படும் எதிர்பார்ப்பு கதை சட்டென்று முடியும் போது ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். நீண்ட ஒரே வரியினைக் கொண்ட கடைசி பத்தி அவசியமா என்று தொன்றுவதையும் தவிர்க்க முடிவதில்லை.


தனது பிரதியாகவோ தனது பிம்பமாகவோ தன் மகளையோ மகனையோ நினைக்கும் ஒரு பெற்றோரின் நிலையினைத் துல்லியமாகச் சொல்லும் கதை 'பதியம்' (ப. 51). ஆனாலும், எத்தனை பெற்றோருக்கு அவனும்/ அவளும் ஒரு தனி மனிதன் / மனுஷி (an individual) என்ற சிந்தனை வந்து விடுகிறது? மகளைப் பற்றி செல்லம் விரித்திருந்த அனைத்துக் கற்பனைகளையும் மறந்து யதார்த்தத்தை விழுங்குவது வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புட்டுப்புட்டு வைக்கிறது.


எளிய சரள மொழி ஜே.பி. சாணக்கியாவின் பலம். life span என்பதற்கிணையான 'வாழ்வின் சட்டகம்' (ப. 17), 'தவறுணர்ச்சி' போன்ற சொற்களை கொஞ்சமும் துருத்திக் கொண்டிராத வகையில் மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தியிருக்கிறார். தனது உரைநடைக்கென்று உருவாக்கிக் கொண்ட மொழியை இவர் மிகக் கவனமாகக் கையாள்வது வாசகன் உணரக் கூடியது. இருந்தாலும், அவ்வப்போது ஆசிரியரினுள் இருக்கும் கவிஞன் எட்டிப் பார்க்கவே செய்கிறான். சாணக்கியாவின் உரைநடையில் 'காடு' லலிதாவின் தனியான நடையைப் பார்க்கும் (ப. 108); 'அன்னத்தின் உடலுறுப்புகள்' ஆண்களைப் பார்க்கும் (ப. 97); 'சாயங்காலம்' மெதுவாக எட்டிப் பார்க்கும் (ப. 111); 'கூரை' பார்த்துக் கொண்டிருக்கும் (ப. 114). இவையெல்லாமே ரசிக்கக் கூடியவை.


'கோடை வெயில்' கதையில் விவரிக்கப் படும் வெயிலைப் படிக்கப் படிக்க எனக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை நினைவு படுத்தியது. அவருக்கு 'வெயில்' மிகவும் பிடிக்குமாமே. கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் உள்ளுணர்வினால் போலீஸ்காரரின் சூழ்ச்சியினை உணர்கிறான் சேகர். மனைவியிடம் அவனுக்கு இருந்த ஒருவித possessiveness தான் அவனில் அந்தக் கற்பனையை விரிக்கிறது. வரப் போகும் ஏதோ ஒரு இக்கட்டை முன்பே கற்பனையாகவோ கனவாகவோ நம்மில் உணர்த்தி விடும் விநோத கணங்களை நான் எல்லோரும் அனுபவித்திருப்போம். அது இங்கும் இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. போலீஸ்காரர் தன் பெண்டாட்டி செத்த அன்றே வசந்தாவின் மீது கண் வைத்து விடுகிறார். 'கறி சமைக்குமா?' என்று போலிஸ்காரர் கேட்பது சேகருக்குள் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது என்றே தோன்றுகிறது. கதை வளர வளர ஆசிரியரின் நடையும் பலவிதமான ஊகங்களுக்கும் வழிவிடுகிறது. கடைசியில் உண்மையிலேயே போலீஸ்காரர் அவர்களின் ஏழ்மையையும் சேகரின் வேலையில்லாத நிலையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு பாலியல் சுரண்டலில் இறங்குகிறார். வேலை வாகிக் கொடுக்கிறேன் என்று சொன்னதுமே வசந்தாவைத் தனதாகவே நினைக்கிறார் போலீஸ்காரர். அது அவர் சேகரை அப்புறப்படுத்தப்படும் அவசரத்திலும் (ப. 48 - 'நாளைக்கி காலைல எங்கூடவே கிளம்பி வந்திரு,..') கணவன்-மனைவி மகிழ்ச்சியில் மறைவில் கொஞ்சிக் கொள்வதை உணர்ந்து (ப. 47) குரல் கொடுத்து தடுத்து விடுவதிலும் தெரிகிறது. 'மாமா' என்று சேகர் போலீஸ்காரரைக் கூப்பிடுவது வசந்தா அவரை 'அண்ணா' என்று கூப்பிடுவதும் உறவுகளில் குழப்பத்தைக் கொடுக்கின்றன. திட்டமிட்டே தான் ஆசிரியர் இதைச் செய்தாரா என்றும் தெரியவில்லை.


'ஆண்களின் படித்துறை' யில் லலிதா தனது அம்மா அன்னத்திடமிருந்து தான் வேறுபட்டவள் என்று மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளவும் தனதும் ஒழுக்கத்தினை எல்லோர் மனதிலும் பதிய வைக்கவும் வேண்டிய நெருக்கடியில் இருக்கிறாள். அவளின் எண்ணங்களும் செயல்களும் (ப. 105) இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. பல முறை நிராகரித்துக் கடந்து விட்டு, எல்லாக் கதைகளையும் படித்த பிறகு இக்கட்டுரைக்கென்று இந்தக் கதையினையும் படித்து முடித்தேன். அன்னத்தின் போக்கும் எந்த ஒரு ஆணிடமும் பொருளாகவோ பணமாகவோ பெற்றுக் கொள்வதில்லை என்ற அவளின் கொள்கையும் முரண்பட்டிருப்பதைப் போல முதலில் தோன்றக் கூடும். தன்னைச் சுற்றியிருக்கக் கூடிய ஆண்களின் பார்வையில் தன்னைக் கொஞ்சமும் தாழ்த்திக் கொண்டு விடாமல் நிமிர்ந்து நிற்க நினைக்கிறாள் என்பதும் புரியத் தான் செய்கிறது. இருந்தாலும், அன்னத்தின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தையும் தாண்டி ஆச்சரியத்தையும் பல்வேறு விதமான உணர்வுகளையும் வாசகனின் மனதில் எற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது. செல்வம் திட்டமிட்டு லலிதாவைக் காதலித்து தாய் மகள் இருவரையும் குறிவைப்பது என்பதை ஒரு ஆணின் குணநலனாகப் பார்க்க முடிகிறது. அதே சமயம் செல்வத்துடன் உடலுறவு கொண்டு விட்டு தன் மகள் லலிதாவுடன் அவனின் திருமணம் பற்றி பேசுவது பயங்கர அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இதெல்லாம் சாத்தியமா? இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? என்று ஏராளமான கேள்விகள் எழுகின்றன. கடைசியில் லலிதாவின் தற்கொலை அநியாயமாகவோ மிகைப் படுத்தப் பட்டதாகவோ தெரியவில்லை. தற்கொலைக்குத் துணியும் ஒருவரின் எண்ணங்களில் இருக்கக் கூடிய குழப்ப நிலையைச் சொல்லியிருக்கும் விதம் அருமை. லலிதாவின் தற்கொலை முயற்சி வெற்றியா தோல்வியா என்று சொல்லாமல் விட்டதும் நன்றாக இருக்கிறது.


'ஆண்களின் படித்துறை' கதையில் ஒரு இடத்தில் கூட 'குளித்தல்' எனும் சொல்லைப் பயன் படுத்தாமல் ஒவ்வொரு இடத்திலும் 'நீராடுதல்' எனும் சொல்லையே பயன்படுத்துவது ஏன்? தற்சயலா இல்லை திட்டமிட்டா? வேண்டுமென்றே என்றால் ஏன் அப்படி? தாவணி என்று சொல்லாமல் லலிதா 'அரைப் புடவை' உடுத்திச் செல்வதாகச் சொல்வதும் புதியதாக இருக்கிறது. பழைய சொற்களைப் புதுப்பிக்கும் நோக்கமோ என்னவோ. 'மஞ்சள் நீலம் வெள்ளை' கதையிலும் கூட கதையின் முதல் வரியே - சாலையாந்தோப்பில் அப்பு, குப்பு என்ற இரு நண்பர்கள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தார்கள்- என்பது. மிகவும் பழையரக வாக்கியமான இது அப்புக்கும் குப்புக்கும் பின்னால் வரப் போகும் இடைவிடாத சண்டையினை குறிப்பாக உணர்த்திடவா? 'ரெண்டாளம் கெட்டவள்' (ப. 105) என்றால் என்ன? 'வெகுளி'யா? ரிக்ஷாக்காரன், சேரி/சென்னை வட்டார மொழி, குடி, குழப்பங்கள் என்று ஜெயகாந்தனின் கதா மாந்தர்களையும் கதைச் சாயலையும் நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது 'கண்ணாமூச்சி' ( ப.70). விநோதமான தாய்-மகள் சக்களத்தி உறவும் போராட்டமும் பி.ஏ.கிருஷ்ணனின் 'புலிநகக் கொன்றையில்' வரும் விஷமிரக்கும் இளைஞனைப் பற்றிய பொன்னம்மாள்-ஆண்டாள் இருவரின் சிந்தனை ஓட்டங்கள் கொடுத்த அதே போன்றதொரு அதிர்வைக் கொடுக்கத் தான் செய்கிறது.


எடுத்துக் கொண்ட விளிம்பு நிலை மாந்தர்களின் கதைகளைச் சொல்லும் நூலாசிரியர் அதையே தன் எழுத்துக்குச் சாதகமாக்கிக் கொண்டு பாலியல் சொற்களையும் விவரிப்புகளையும் தேவைக்கதிகமாகவே கையாள்வதை நெருடலுடன் உணர முடிகிறது. (போர்னோ என்றால் என்ன என்று சொல்லக்கேட்ட அளவில், அவ்வகைகளின் பரிச்சயம் இல்லாத நிலையில்) porno வகையில் துளியும் தயக்கமில்லாமல் சேர்த்து விடக்கூடிய விவரிப்புகள் பெரும்பாலான கதைகளில். இவ்வளவு துக்கலாக (பச்சையாக?) தமிழில் இதுவரை யாரும் எழுதியிருக்கிறார்களா என்று யோசித்ததில் 'இல்லை' என்ற (இன்றைய எனது வாசிப்பில்) பதிலே மிஞ்சியது. கரிச்சான் குஞ்சின் 'பசித்த மானிடம்' பேசிய ஒரு பால் உறவு போன்ற எடுத்துக்காட்டுக்கள் பலவற்றில் சொல்லப் பட்டிருந்த கண்ணியமான மொழி இங்கு நினைவில் கொள்ளத் தக்கது. எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொண்டால் எழுதப்பட்ட விஷயம் மிகவும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியது. இருப்பினும் எதார்த்தம் என்ற பெயரிலோ மொழி என்ற பெயரிலோ வரம்புகள் மீறப்படாமல் இருக்கும் நடை மேலும் பரவலாம வாசகர்களைக் கண்டடையுமோ?


***

ஆதவனின் 'காகிதமலர்கள்'-ரே. பாண்டியன்.

வாய் நிறைய உண்மை பேச முடியாத வாழ்க்கை

ரெ.பாண்டியன் / நவம்பர் 06

இருபது வருடங்களுக்கு முன்பு நான் இந்த நாவலை வாசித்தபோது, செல்லப்பா விசுவத்தை சந்திக்க விமான நிலையத்துக்கு போய்க்கொண்டிருந்தான். இருவரும் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கப் போகும் தருணத்தில், பழைய செல்லப்பா இறந்துவிடுவான் என்று செல்லப்பாவின் மனதில் எண்ணம் ஓடும். அந்த வரிகள் அன்றைய காலத்தில் என்னை பெரும் உத்வேகத்துக்கு உள்ளாக்கிய வரிகள்.

அப்பொழுது நான் “தேடல்”, “அடையாளச்சிக்கல்” போன்ற வார்த்தைகளை அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்த வார்த்தைகள் பிரதிநுவப்படுத்தும் குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்தேன்.

குழப்பங்களைத் தீர்த்துவைக்க எந்த நாவலும் எழுதப்படுவதில்லை என்றாலும், அடையாளச்சிக்கல் பற்றிய குழப்பங்களை வார்த்தைப்படுத்த சொற்களை தந்துதவிய நாவல் இது எனலாம்.

அகிலன், நாபா, சாண்டில்யன் வாசகனாக இருந்த என்னை, வெகு தூரம் நிர்வாணப்படுத்திய நாவல் “காகித மலர்களு”ம் “ என் பெயர் ராமசேஷன்” ஆகும். இந்த நிர்வாணப்படுத்துதல் நான் ஏற்கனவே அந்தரங்கமாய் உணர்ந்திருந்த உண்மைகளுக்கான அங்கீகாரம் கூட.

இந்த நிர்வாணப்படுத்துதலுக்கு நானும் வெகுகாலமாய் காத்திருந்தேன், ஆர்வத்துடன் வரவேற்றேன் என்பதின் வெளிப்பாடுதான் இந்த நாவலை தமிழின் சிறந்த நாவலாக நண்பர்களிடம் பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

ஒரு மனிதன் தன்னைத்தானே புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு நீண்ட பயணம். ஆனால், அப்படி ஒரு பயணம் என்ற ஒன்று செல்லவேண்டி இருப்பதையே உணர்ந்துகொள்ள நேர்வது இன்னொரு பயணம்.

ஒரு பயணம் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளமுடியாத நிலையில், பயணத்தின் நோக்கத்தில் யாருக்கும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

மார்க்கப் போலோ அய்ரோப்பாவிலிருந்து சீனாவைச் சென்று அடைய பல ஆண்டுகள் கடல்மார்க்கமாக பயணித்தான். சென்று சேர்வோம் என்ற நம்பிக்கையில் அவன் ஆரம்பித்திருந்தாலும், அந்த நம்பிக்கை அந்த பயண காலம் முழுக்க ஒரே புரிதல் தளத்தில் நீடித்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு கடுமையான சோதனைக்குப் பிறகும் அவனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு புதிய வெளிச்சத்தில் அவனது நோக்கம் ஒரு புது பரிமாணம் கொண்டிருக்கும். ஆனால், பல நேரங்களில், கடலில் வேறு ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் அவன் வேறுவழியின்றி, கடலில் வெறுமனே மிதந்து கொண்டிருந்திருப்பான்.
(இது மார்க்கபோலோவைப் போல பயணம் செல்ல உத்வேகம் கொண்டிருப்பவர்களுக்கு உவப்பான செய்தியல்ல.)

போவதற்கு வேறு வழியில்லை, இது மட்டுமே தான் செய்வதற்கு இருக்கிறது, இதுதான் என்முகம், இதுதான் நான் என்கிற விசை தான்(பழக்க தோஷத்தினால் பழிகிடப்பதாயும் இருக்கலாம்) “நான் யார்” என்கிற தேடலில் காலங்காலமாக பயணம் செய்பவர்களை உந்திச் சென்றுகொண்டிருப்பது.

ஆனால், பலர் பாதையில்லா நடைக்கு தயாராய் இருப்பதில்லை.

நாவலில் பலருக்கு பல ஆசைகள் இருக்கின்றன. ஆனால், அவரவர் ஆற்றலும் பின்னணியும் சார்ந்து, அந்த ஆசைகளை எய்தமுடியாமல் இருக்கிறது. நிறைவேற்றத்திற்கான தீவிர முயற்சியில், தங்களின் இயல்புகளை துறக்கவேண்டியிருக்கிறது. நேர்மையை ஈடு வைத்து விலைபோக வேண்டியிருக்கிறது. மற்றவர்களை சலனமின்றி காவுகொடுத்துவிட்டு முன்னேற வேண்டியிருக்கிறது.

ஈடேறாத ஆசைகளுக்கு, அடிவாங்கிய ‘ஈகோ’விற்காக பழிவாங்க வேண்டியிருக்கிறது. தாரா செல்லப்பாவைச் சேரும்போது, பத்ரியையும் கணேசனையும் பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறாள்.

ஒருவனிடம் வாங்கிய அடிக்கு இன்னொருவனை உதைக்க வேண்டியிருக்கிறது. மாணவர்களிடம் வாங்கிய அடிக்கு, ராம் பிரசாத் செல்லப்பாவை மிரட்டி மகிழ்கிறான்.

வாலிபக் கனவுகளை தொண்டைச் சிரமம் ஏதுமின்றி எச்சில்கூட்டி விழுங்கிவிட்டு, கால்கட்டு போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. (ரமணி-செல்லப்பா கல்யாண முடிவுகள்) லட்சியங்கள் கைவிட்டு போவதை தனக்குத்தானே எந்த பெரிய ஏமாற்றமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளமுடிவதை கசப்புடன் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. யார் யாரையோ கனவுகண்டு இறுதியில் கைமாட்டில் இருந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். இருவரது திருமணமும் இடைவெளிவரைக்குமான ஒரு திரைப்படத்தின் முடிவுபோலத்தான். இரண்டாவது பாதியில் ஏமாற்றங்கள் தொடர்வதற்கான தடயங்கள் முதல் பாதியிலேயே இருக்கின்றன (“கிராமத்து அடக்கவொடுக்கமான பெண்” என்கிற ரமணியின் ஆசுவாசமும் “எனக்கு தாராதான் சரி” என்கிற செல்லப்பாவின் கண்டுபிடிப்பும் மனபிம்பங்கள்தான்)

அம்மாவின் மீதான தனது உணர்வும் சரி, அவள் பிறரை தன்னிடம் அனுமதிக்கும் அளவும் சரி - இரண்டையுமே பிரக்ஞையின் பின்கட்டுக்கு தள்ளிவிட்டு போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் அதனை பச்சையாக சொல்லி, பிரக்ஞையின் முன்கட்டுக்கு கொண்டுவருவது சகிக்கமுடியாததாகிவிடுகிறது. (செல்லப்பா-மிஸஸ் பசுபதி-ரமணி)

நிஜவாழ்க்கையில் மிஸஸ் பசுபதியின் வேடங்களுக்கு( வங்காளி நாடக ரசிகை, பஜனை மாமி, மாடர்ன் மாமியார்) கிடைக்காத கரகோஷத்திற்கு ஏங்கித்தான் அவள் மேடையேறி நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகையாக வேண்டியிருக்கிறது.

உடலுறவின் திருப்தி / திருப்தியின்மையை பற்றி பேசும் திஜாவின் கதாபாத்திரங்கள் விநோதமானவர்களாக தோன்றுவதுண்டு. ஆனால், ஆதவன் அவர்களை இயல்பானவர்களாக காட்டியவர்.

பெண்ணைப்பற்றிய ‘பூச்சிப்பார்வை’ அல்லது ‘லட்சியப்பார்வை’ இந்த நாவலில் அகல்கிறது; பெண்கள் பற்றிய அந்தரங்கங்களை ஆண்கள் பகிர்ந்து கொள்வதைவிடவும், ஆண்கள் பற்றிய அந்தரங்கங்களை பெண்கள் எப்போதும் பகிர்ந்து வந்திருக்கிறார்கள் என்பது இந்த பார்வைகளுக்கு கிடைக்கும் சம்மட்டி.

அட வேறொன்றும் இல்லாவிட்டாலும், “நீ நார்மலாக இருக்கிறாய், செய்வதையெல்லாம் நன்றாகத்தான் செய்கிறாய்” என்று சமாதானம் சொல்லவாவது ஒரு ஆத்மா தேவைப்படுகிறது. அது ஒரு கைத்தட்டலாக, கழுத்துக்கு மாலையாக, பத்திரிக்கையில் பெயர் வருவதாக இருக்கலாம். (தாரா, செல்லப்பா, மிஸஸ் பசுபதி)

நாவலில் எல்லோரும் முடுக்கிவிடப்பட்ட குதிரைகளாக, பசுபதியின் பதவியும் வாழ்க்கைத்தரமும் பிரதிநுவப்படுத்தும் வெற்றி ஒன்றை அடைய துடிக்கிறார்கள். ஆனால், அதற்கு, ஆற்றலோ பொறுமையோ இன்றி அதனை எப்படியாவது அடைய நினைக்கிறார்கள். தங்களது நோக்கத்தை தங்களது குறைவான ஆற்றலை முன்னிட்டு மறுபரிசீலனை செய்யவும் தயாராயில்லை. இங்கிருந்து பிரச்னை தொடங்குகிறது.

பசுபதி போன்றவர்களுக்கு இன்னும் மேலே மேலே என்கிற பதட்டம் (தற்போதைய வெற்றியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி) இருக்கிறது. மகன், மருமகள் என்கிற இளைஞர்களுக்கு முன்னால், இளைஞர்களின் அலைவரிசையில் செயல்படும் அனுபவசாலி என்கிற அடையாளத்தைப் பெறவும் துடிக்கிறார்கள்.

ஒரு மனிதன் போலித்தனமே இல்லாது இருப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. (இந்த வரி எழுதப்பட எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்கிறது !)

தன்மீது சதா கவியும் பொய்மை, தன்னில் சதா ஊறும் பொய்மை பற்றிய விழிப்புணர்வே மனிதனின் கைவிளக்கு. இந்த கைவிளக்கைக் கொண்டு, மனிதன் வாழ்க்கையின் நோக்கம் என்றோ, வாழ்க்கையின் வெற்றி என்றோ அவன் நிர்ணயித்துக்கொள்ளும் ஒன்றை நோக்கி பயணிக்கலாம்.

நாவலின் உருவம்

நாம் நம் கண்களால் உலகைப் பார்க்கிறோம். என் உலகில் நான் கதாநாயகன்; அடுத்தவன் உலகில் நான் துணை பாத்திரம்; ஒரே நிகழ்வை இரண்டு தடவைகள் ஆதவன் சொல்லி இதனை செய்து காட்டுகிறார்.

பௌதிக நிகழ்வுகளைவிடவும் மன உலகின் தோற்றப்பாடுகள் அமைவது, களைவது, ஆராயப்படுவது, ஏற்றுக்கொள்ளமுடியாமல் தத்தளிப்பது, தற்காலிகமாவாவது சமாதானம் அடைவது என்று கதை நகர்கிறது.

ஆதவனின் கலை

தமிழ் இளைஞனுக்கான எழுத்தாளர் ஆதவன். தமிழ் இளைஞிக்கு அம்பை. ஆதவனது கதைகளில் வரும் மனிதர்களின் பேச்சுமொழியும் உடல்மொழியும் மனமொழியும் ஒரே நேரத்தில் சதா பதிவாகியவண்ணம் இருக்கும்.

இது இளைஞர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய சொல்முறை; ஆனால், இது நாவல் வடிவத்தின் வீச்சை பெருமளவு குறைத்துவிடும் காரியமும் கூட.

சில இடங்களில் இந்த மனமொழி அளவுக்கதிகமாய் ஆராய்வதாய் இருக்கிறது : எ-கா- விஸ்வத்தின் மௌனத்தை நடராஜர் நடனத்திலிருந்து ஒதுங்கி இருப்பதாய் சொல்வது; தாயின் உடலைப் பார்த்து செல்லப்பாவின் உடல் தீப்பற்றிக்கொள்வது.

தேர்ந்த வாசகர்கள் பலர் கடந்துவந்த நிழல் விழுந்த பாதை ஆதவன்; மனவிகாசத்தின் கரடுபாதைகளை நினைவில் எழுப்பும் ஒரு பழுப்புநிற புகைப்படமாய் அவரது கதைகள் என்றும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------------------------------

இலட்சிய வாதமும் நம்பகத்தன்மையும்
இராம கண்ணபிரான் 12-11-06

(1)
பிரிட்டிஷ் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர முயன்ற அரசியல் தீரர்கள் பலர். அவர்களுள் வெற்றிக்கனியைக் கொய்தவர் சத்தியாகிரகர் காந்தியடிகள். அவர் வாழ்ந்த யுகத்தில், பிரம்மச்சரியம் பூண்டு நாதுச் விடுதலை வேள்விக்குத் தங்கள் இளம் வாழ்வை அர்ப்பணித்த பாரத தேசத்து யுவதிகளும், வாலிபர்களும்எண்ணிக்கையில் பலராவர். தேசத்துக்கு உழைத்த இவர்களின் தியாக உள்ளங்கள் இந்திய படைப்பாக்கங்களில் பதிவாகியுள்ளன. இப்படைப்புகளில் இர்லட்சியவாத விழுமங்களே மேலோங்கியுள்ளன.
இன்னொரு நிலையில், அடிமை இந்தியாவைப் பிரிட்டஷரிடமிருந்து மீட்க இராணுவப் பலத்தை நம்பியவர் சுபாஷ் சந்திர போஸ். ஜப்பானியர் சிங்கப்பூரை ஆண்ட போது அவர்களின் உதவியோடு இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் இந்திய தேசிய இராணுவத்தை அவர் நிறுவினார். அவ்வேளையில் ‘சுதந்திர இந்தியா’ ‘யுவ பாரதம்’ போன்ற தினசரி, வார பத்திரிகைகள் சிங்கப்பூரில் தோன்றி, சுதத்திரத்தை கருப் பொருளாகக் கொண்டு இலட்சிய தாகத்துடன் கதை, கட்டுரை, கவிதை முதலியவற்றை வெளியிட்டன. இந்த ஆக்கங்களில் இலட்சியவாத கோஷங்கள் மிகுந்து காணப்பட்டன.

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளின் முற்பகுதியில் போர்னியோவின் ஒரு பகுதியை இள்ளடக்கி மலேசியா உருவான போது, இந்தோனேசியாவின் அன்றைய அதிபர் சுகர்னோ அத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க மலேசியாவில் அப்போது இணையவிருந்த சிங்கப்பூரின் சில இடங்களில் குண்டு வெடிப்புகளை நிகழச் செய்தார். மலேசியா தேசயத்திற்கு ஆதரவு தரும் வகையில் , இலட்சிய நோக்கில் ‘அழகோவியம்’ என்னும் ஒரு குறுங்காவியத்தை இயற்றி அதை ஒரு நூலாக வெளியிட்டார் சிங்கப்பூர் கவிஞர் முருகடியான். கருவுற்றிருக்கும் தம் இளம் மனைவி வெண்ணிலவைச் சிங்கையில் விட்டுவிட்டு, அவள் கணவன்வேலவன் மலேசிய-இந்தோனிசிய எல்லைப் போரில் ஈடுபட்டு சில காலம் கழித்ஹ்து வெற்றியுடன் நாடு திரும்புவதாக அவர் கூறுகிறார். இக்காவியத்தில் இலட்சியவாதப் போர்ப் பரணி பாடப்ப்டுகிறது.
இப்படியாக சென்ற நூற்றாண்டின் இலட்சியவாதப் படைப்புகளில் உயரிய விழுமங்களும், பிரசாரக கோஷங்களும், காவியப் பண்பு கொண்ட பரணி வாசகங்களும் மிகுந்து இருக்கின்றன.

ஆனால், இந்நூற்றாண்டின் படைப்புகளோ நவீன இலக்கியத் தளத்தில் இயங்குவனவாக மாறுதல் பெற்றுள்ளன. எனவே இலட்சியவாத ஆக்கங்கள் முன் போல் உணர்வுமிக்க கனவுகளுடன் பூமிக்கு மேலே பாவாமல், நடைமுறை வாழ்க்கையைச் சித்தரித்துத் தரையில் நடக்க வேண்டியிருக்கிறது. தரிசிக்கப்படும் வாழ்க்கையை ஓரளவிற்கு உள்ளது உள்ளபடியே சொல்லி, நம்பகத்தன்மையுடன் எழுதுவது தற்போதைய இலட்சியவாதப் படைப்புகளின் போக்காக மாறியுள்ளது.

ஆகவேதான், நவீன இலக்கியப் புனைவில், இலட்சிய வாதக் கதையாக்க்கம், உள்ளது புனைதல் என்ற யதார்த்தத்தில் கட்டமைக்கப்பட்டு,இலட்சியவாத யதார்த்தம் என்றொரு புதுவகை எழுத்தாக இன்று பரிணாமம் கண்டுள்ளது.

(2)
ஒரு நிலப் பகுதியில் அரசியல் நிமித்தம் தேசியம் உருவாக்கப்படும் போது அப்பகுதி மக்கள் ஒரே திரளாய் அணிவகுத்து தம் இலட்சியத்தை அடையச் செயல்படுவது இலட்சியவாதஈயக்கம் ஆகும்.

இதே மனிதக் குழுவைக் கொள்ளை நோய் போன்ற பொது இடர்கள் கௌவும் போது அதக் களைய இவர்கள் ஒருமித்துக் காரியம் ஆற்றும் போது இலட்சியவாத தியாக உணர்வே இவர்களிடம் தூக்கலாக காணப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சார்ஸ் எனப்படும் உயிர்க்கொல்லி நோய் சிங்கப்பூரில் பரவிய சமயம், இங்குள்ள ஜனக்களில் பெரும்பாலோர், இனம், மதம், மொழி, பால் பேதங்களைக் கடந்து, ஒன்றுப் பட்டுப்பொதுத் துயரை துடைக்க தங்கள் உயிர்களையே பணயம் வைத்தனர்.

இந்தப் பேரிடரை மையப்படுத்திப் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற சிறுகதையை மாதங்கி புனைதுள்ளார். இவர் தம் கதையில் இலட்சியவாதத்தையும், யதார்த்தவாதத்தையும் எவ்வாறு நம்பகத்தன்ன்மையுடன் இணைத்து தம் படைப்பை ஒரு வெற்றி படைப்பாகத் தந்துள்ளார் என்பதை இனிப் பார்ப்போம். அதற்கு முன், அவர் எழுதிய கதையின் சுருக்கத்தை பார்ப்போம். கதை ஏற்கனவே இந்த வலைப்பூவில் பிரசுரமாகிவிட்டதால் இதற்கு அவசியமில்லை.

(3)
கதைத் தலைப்பு, கதைப் பொருள் முதலியவற்றுக்கு அழுத்தமும் நம்பகத்தன்மையும் தருவதற்கு பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் பாட்டு வரிகளை மாதங்கி தம் சிறுகதையில் எடுத்தாள்கிறார்.
“Best of the best” என்ற அர்த்தத்தில் தொனிக்கும் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற கோரிக்கைத் தலைப்பு வாக்கியம் மகாகவி பாரது எழுதிய புதிய ஆத்திச்சூடியில் இடம் பெற்றுள்ள ஒரு செய்யுள் வாக்கியம் ஆகும். டாக்டர் அரவிந்தன் நர்ஸ் யுகனேஸ்வரியை மனிதத் தொண்டு புரிய அழைக்கும் போது பெரிதினும் பெரிதான இந்தக் கோரிக்கையைத்தான் அவன் அவள் முன் வைக்கிறான்.

பெரிதுப் பற்றிப் பேசும் போது ஔவையாருக்கும் முருகப் பெருமானுக்கும்இடையே வினா-விடை பாணியில் நடைபெற்ற ஓர் உரையாடலையும் நாம் பொருத்திப்,பார்க்கலாம். இந்த வார்த்தையாடல் ஔவையாரின் தனிப் பாடல் பகுதியில் தொகுக்கப்ப்பட்டது.

வேல் முருகன் ஔவைப்பிராட்டியிடம் ‘பெரியது எது?” என்று கேட்கிறான். அதற்கு அவள்,”பெரியது கேட்கின் எரிதழக் வேலோய், பெரிது பெரிது புவனம் பெரிது ஆனால் புவனத்தை நான்முகன் படைத்தான். நான்முகக பிரம்மனோ விஷ்னுவின் மைந்தன். விஷ்ணுக் கடவுளோ தொண்டர் உள்ளத்து உடுக்கம். அதனால், தொண்டர் தம் பெருமைச் சொல்லவும் பெரிதோ!”, எண்ட்கிறாள்.

இறைவனுக்கும் தொண்டருக்கும் உள்ள இந்த நெருங்கிய தொடர்பைமனத்தை உருக வைக்கும் ஒரு தியாகக் காட்சி மூலம் கதை விவரிக்கிறது.
சார்ஸ் நோயினால் தீவிர பாதிப்படைந்த ஓர் அம்மையார் டான் டாக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப் படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவருடைய தொண்டை சளியை ஓர் இறிஞ்சுக் குழாயின் மூலம், அதை பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பவேண்டும். அன்றக்கு முன் தனம் தான் மற்ற சார்ஸ் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த ஒரு டாக்டரும்,இரு நர்ஸ¤களும் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிர் துறந்திருந்தனர்.“இப்போது புதிதாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த அம்மையாரின் தொண்டையிலிருந்து சளியை யார் உறிஞ்சுக் குழாய் மூலம் எடுக்க முன் வர்கிறீர்கள்?”, என்று தலைமை மருத்துவர் ஜான் லாம் கேட்கும் போது, அந்த வார்டில் இருக்கும் நர்ஸ¤கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்துகிறார்கள்.அந்த நர்ஸ¤களுள் பலருக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் இருப்பதை அறிந்த டாக்டர் ஜான் லாம் உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்குகிறார்.

அந்த அம்மையாருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் அங்குள்ளவர்களிடம்” நீங்கள் எல்லாரும் மனிதர்களே அல்லர்; கடவுளின் பரதிநிதிகள்”, என்று கண்ணீர் மல்க, மனம் நெகிழ்ந்து கூறுகிறார்.
சில நாட்களில் அம்மையாரின் உயிர், அவர் உடலை விட்டுப் பிரிகிறது. ************
தன்னலம் பேணும் மனத்தையும், பொதுனலம் பேணும் மனத்தையும் வேறுபடுத்திக் காட்ட பாரதிதாசனின் ஒரு கவிதை கதையில் பயன்படுத்தப் படுகிறது.

அரவிந்தன் யுகனேஷ்வரியிடம் தொண்டூழியம் குறித்துப் பேசும் போது “ இந்தக் கவிதையைப் பார், யுகனேஷ்வரி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியது”,. என்கிறான்.

‘தன் பெண்டு, தன் பிள்ளை, தன் சோறு, தன் வீடு, தன் சம்பாத்தியம், இவையுண்டு, தானுண்டு என்போன் சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன். ஊரார் நலன்கள் எல்லாம் எனக்கு இனிக்கும் கற்கண்டே என்போன் உள்ளம் கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்’, என்று தீட்டப்படும் பாரதிதாசன் பாடல் வரிகள், அவருடைய முழுக்கவிதைகள் அடங்கிய நூலில், புதிய உலகம் என்று பகுதியில், உலக ஒற்றுமை என்ற தலைப்பில் இடம் பெற்றஒரு எண்ணீர் விருத்தம் ஆகும். ******
குணப் பண்புகளைக் காட்டும் வகையில், கதையின் முக்கிய பாத்திரங்களுக்குத் தகுந்த பெயர்கள் சூட்டப்படுள்ளன.
கிஷ்கிந்தைப் பிரதேசம் மனிதக் குரங்குகள் வசித்த ஒரு புராதனக் காலத்து இடம் ஆகும். கரிசனமும் பாசமும் அற்ற, ரௌத்திரமும் ஆதிக்கமும் நிறைந்த, தன் சகோதரியின் வெளியேற்றத்தில் கூட, ஊடான் புட்டின் மீதே தன் பசித்த கண்களைப் பதிய விட்டிருக்கும் ஒருவனுக்குக் கிஷ்கிந்தன் என்ற நாமகரணம் பொருத்தமாகவே சூட்டப் பட்டிருக்கிறது.

யுகன் என்ற யுகத்திற்கு ஈஸ்வரியாக இருப்பவள் யுகனேஷ்வரி. உலகத்தினருக்குக் கருணை காட்டுபவளாக, தியாகம் தேவைப்படும் ஒரு கால அளவு கொண்ட யுகத்திற்கு உரியவளாக அவள் இருப்பதால், கதாநாயகிக்குயுகனேஷ்வரி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அமரர் நா.பார்த்தசாரதி படைத்த ஓர் இலட்சியவாத நாவல் ‘குறிஞ்சி மலர்’. அதில் உலவும் அரவிந்தன் ஓர் இலட்சியப் பாத்திரம். அவன் பண்பை நினைவு கூர்வது போன்று, மனிதச்சேவையை நாடும் கதாநாயக டாக்டருக்கும், அரவிந்தன் என்று பெயர் இடப்பட்டிருக்கிறது. ********** யுகனேஷ்வரி,கிஷ்கிந்தன், அவர்களின் அம்மா ஆகியோர் இந்தியத் தமிழர்கள். யுகனேஷ்வரியின் அறைத் தோழி அலின் வாங், அவளுடைய தந்தை திரு.டேவிட் வாங், யுகனேஷ்வரியின் தலைமை டாக்டர் ஜான் லாம், அவளோடு பணி புரியும் மோளி, அவள் பயணம் செய்யும் வாடகைக்கார் ஓட்டும் மகம்மது நசீம் ஹீசைன் முதலியோர் சிங்கப்பூர் ம்க்களைப் பிரதினிதிக்கும் தமிழர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள்; மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள். **********வாடகைக் காரோட்டியின் பேச்சு எந்தப் பாஷையில் நடைபெற்றதுஎன்று சொல்லப்படவில்லையென்றாலும் திரு. டேவிட் வாங்,” ஹவ் ஆர்யூ மை சைல்ட்?”, என்று யுகனேஷ்வரியிடம் அன்புடன் தொலைபேசியில் விசாரிப்பது, ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. ஆங்கில மொழி இங்கு மற்ற இனத்தாரோடு பேசுகின்ற ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுவதைக் கதை சுட்டுகிறது. ***********
மூன்று மாதங்கள் சார்ஸ் நோய் சிங்க்கப்பூரை அச்சுறுத்திய போது, பெரும்பாலான மக்களிடத்தில் ஓங்கியிருந்த தியாக உணர்வு, பலவகைகளில் கதை நெடுகப் பெருமிதத்துடன் கொண்டாடப்படுகிறது. வாடகைக்காடியில் யுகனேஷ்வரி பயணிக்கும் போது, அவள் சார்ஸ் நோயாளிகலைக் கவனிக்கும் ஒரு தாதி என்பதை அறிந்து டாக்ஸி ஓட்டுனர் அவளிடம் பயணக்கட்டணம் வாங்க மறுத்து விடுகின்றார். அவரைப் போற்றும் வகையில், அவர் பெயர், அவருடைய காரின் எண் முதலியவற்றைக் குறிப்பிட்டு, ஆங்கில நாளிதழ் “தி ஸ்ரெயிட்ஸ் டைம்ஸ¤க்குச் செய்தி அனுப்புகிறாள் யுகனேஷ்வரி.
நன்றி கூறும் செயல்கள் மேலும் தொடர்கின்றன. எம்.ஆர்.டி இரயில் நிலையங்களுக்கு வெளியே உள்ள பலககைகளில் சார்ஸ் நோயாளிகளைப் பராமரிக்கும் மருத்துவ அன்பர்களுக்கு நன்றி வார்த்தைகள் எழுதி, பொதுமக்கல் தங்கள் கையெழுத்துக்களை இடுகிறார்கள்.

மருத்துவமனைகளில் வாழ்த்துகளும், மலர்க்கொத்துகளும் வந்து குவிகின்றன. ஆறுவ்யதுச் சிறுமி ஒருத்தி தானே தயாரித்த ஒரு வண்ண அட்டிஅயில், தாதியர் படங்கள், மருத்துவ உபகரணப் படங்கள் முதலியவற்றை வரைந்து அனுப்புகிறாள். அது ஒரு மருத்துவ அறிவிப்புப் பலகையில் ஒட்டப்ப்ட்டு, அங்கு நீண்ட கலம் வாசம் புரிகிறது.

சார்ஸ் நோய் சிங்கப்பூரை உலுக்கிய அந்த மூன்று மாதங்களில் வெளிநாடுகளில் நடைப்பெற்ற நிகழ்ச்சிகளை, ஏராக் போர், இந்தோனேசியத் தீமோர் பிரிவினைக் கலவரங்கள், இயற்கையின் சீற்றங்கள் வெள்ளம், பூகம்மபம், என்று கதாசிரியர் குறிப்பிடுவதும், சார்ஸ் நோய் தணிந்து சிங்கப்பூர் சீரடந்து வருவதை அங்கங்கே ‘கூல் சிங்கப்பூர்’ ‘சிங்கப்பூர் இஸ் ஓகே” என்ற வரிகள் முழங்குகின்றன. என்று கூறுவதும், கதையின் பிண்ணனி யதார்த்ததுக்கு வலு சேர்க்கின்றன, ***********
கதை முழுவதும் நம்பகத்தன்னமையுடன் அமந்துள்ளது. அண்ணன் கிஷ்கிந்தனோடு யுகனேஷ்வரி தங்கியிருந்தாலும், அவளுக்குத் திருமணம் இராண்டு கழித்தே நடைபெறும். டாக்டர் அரவிந்தனோடு வாலண்டரி தொண்டூழியும் செய்ய மூன்றாம் உலக நாடுகளுக்கு அவள் செல்லப் போவதும் ஈராண்டு விடுப்பில் தான். அரவிந்தனின் உள்ளத்தை நன்கு உணர்ந்திருந்தஅவளே விண்ணப்பத் தாளைப் பெற்று, முன் கூட்டியே அதில் கையெழுத்திட்டு அவனை அவள் சந்திக்க வருகிறாள். எனினும் அவளிடம் தன் திருமணம் குறித்து ஒரு துளி எதிர்பார்ப்பு இருந்திருக்க வேண்டும். ‘அரவிந்தன் பேசிக் கொண்டே போனான். அவள் இரண்டு கண்களிலிருந்தும் தாரையாக தாரையாகக் கண்ணீர்”, என்றும் அன்று அவள் தன்னை எளிமையாக, ஆனால் அழகாக அலங்கரித்துக் கொண்டு வந்தாள்’, என்றும் கதையில் குறிப்பிடப்படும் வரிகள், சார்ஸ் காலத்திற்குப் பின்னர், அரவிந்தன் தன்னைத் திருமணம் செய்து கொள்வான் என்று யுகனேஷ்வரி எண்னியிருக்கக் கூடும் என்ற இலட்சியம் மீறிய யதார்த்த அம்சத்தைக் கோடிடுகின்றன.

டாக்டர் அரவிந்தன் விய்ட்னாம் போன்ற நாட்டிற்கு மருத்துவத் தொண்டூழியம் புரிய புறப்படுவது, கதையில் இலட்சியவாதத்தை நிறுவினாலும் அவன் செய்கை நடை முறையில் சாத்தியப்பாடு உடைய ஒன்றுதான்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த பிளாஸ்ட்டிக் அறுவை நிபுணர் டாக்டர் லீ செங் டெய்க் என்பவர், லாவோஸ், மியன்மார் போன்ற தேசங்களுக்கு தம் மருத்துவக் குழுவினரோடுச் சென்றுசங்குள்ள ஐந்நூறுக்கும்மேலான ஏழை எளியவர்களின் பிளவுப்பட்ட உதடுகளையும், உள்வாயின் மேலண்ணக் குறைபாடுகளையும் தம் பிளாஸ்ட்டிக் சர்ஜரி மூலம் குணப்படுத்தியிருப்பதை அறிந்து அவரி சிங்கப்பூர் சர்வதேச அறக்கட்டளையினர் சமீபத்தில் அதிபர் எஸ் ஆர் நாதன் வாயிலாகக் கௌரவித்துள்ளனர்.டாக்டர் லீ செங் டெய்க்கின் வாலிண்டியர் சேவை கதைத் தலைவன் டாக்டர் அரவிந்தன் செய்யவிருக்கும் தொண்டுச் செயலும் யதார்த்தமான ஒன்றுதான் என்பதை மெய்ப்பிக்கிறது.

தன்னலமற்ற பொதுநலப் பின்புலத்தில் பெரும்பாலான இலட்சியப் பாத்திரங்கள் இயங்கப்பெற்று, நம்பகத்தன்மை வாய்ந்த பல கூடுகளைப்’ பெரிதினும் பெரிது கேள்’ என்ற சிறுகதை தன்னகத்தே பொதிந்திருப்பதால், இந்தப் புனைவு ‘இலட்சிய யதார்த்தம்’ என்னும் எழுத்து வகைக்கு ஒரு நல்ல மாதிரியாக விளங்குகிறது என்று கூறலாம்.

( இந்த நூல் விமர்சனம் பெரிதினும் பெரிது கேள் என்ற சிறுகதைக்குதிரு. ராம கண்ணபிரான் எழுதி அங் மோ கியோ நூல் நிலையத்தில் நவம்பர் பன்னிரெண்டாம் தேதி 2006 அன்று வாசிக்கப்பட்டது)