நெடுங்குருதி :வாசிப்பு ரெ. பாண்டியன்

எஸ் ராமகிருஷ்ணனின் “நெடுங்குருதி”
களவாடப்பட்ட வாழ்வின் மெல்ல கலையும் நிச்சலனம்

ரெ.பாண்டியன்


இது யாருடைய கதை ?

முதலில் இது நாகுவின் கதை; அடுத்து நாகுவின் குடும்பத்தின், சந்ததியின் கதை ; பிறகு இது வேம்பலை கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் கதை ; அப்புறம் இது வேம்பர்கள் என்னும் குழுவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை. இன்னும் அதே வேம்பலையில் வாழும் வேம்பர்களின் கதை.
நாவல் மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் சமூகத்தின் பார்வை எது ?
கள்ளர்கள் அல்லது கொலைஞர்கள் பிறர் பொருளை அபகரிப்பதை தொழிலாகக்கொண்டு வாழ்பவர்கள்.
எந்த நிலையிலும் அடுத்தவனை வஞ்சிக்காமல் இருக்கவேண்டும் என்பது காவியங்கள் ஏற்றிப்பிடிக்கும் தர்மம்.
ஆனால், வேம்பர்களின் வாழ்வை அபகரித்த வரலாற்று , அரசியல், சமூகவியல் காரணிகள் யாவை ? அவற்றை எளிதாக கண்முன் அடையாளப்படுத்த முடியுமா?
இந்த காரணிகளை வேம்பர்களே எதிர்கொண்டுள்ளனரா? அல்லது அவர்களை எதிர்கொள்ள விடாமல் வைத்திருக்கும் உள் நிலவரம் என்ன? வேம்பர்கள் அவர்களது களவு வாழ்வில்கூட கடைப்பிடிக்கும் சில நெறிமுறைகளுக்கான அர்த்தம் என்ன? அவன் அந்த நெறிமுறைகளுக்கு வந்தடைந்த அனுபவம் என்ன?
அவர்களின் சந்ததியில் விலகல்கள் உண்டா? (இவை நாவல் ஆராயும் கேள்விகள்)
ஒரு வேம்பனின் கதையை எப்படிச் சொல்லலாம்?
கதையின் பிரதான கதாபாத்திரங்கள் நாகு, நாகு அய்யா, ரத்னா.
நாகு இரண்டுங்கெட்டான் மனநிலை வளர்ச்சியுடையவன்; அவன் அவனது அய்யாவைப்போல திடசித்தமான திருடனில்லை; பயப்பிராந்தியோடு வளர்ந்தவன். ஆனாலும் திருட்டில் ஈடுபட்டு, குறை ஆயுளில்
இறந்துபோகிறான்.
ரத்னா நாகுவின் நகர்புறத்து வடிவம். பர்மாக்காரனின் வன்புணர்ச்சியில் தைரியம் எல்லாம் வடிந்துபோகிறது; காலம் முழுக்க தனது தனிமையை தொலைக்க, போராடி தோற்றுப்போகிறாள்.
நாகு, ரத்னா இருவருமே தனியான ஆளுமை உடையவர்கள் இல்லை. கள்ளன் என்றும் விலைமாது என்றும் பொதுமைப்படுத்தும் பெயர்களுக்குள் பெரும் தத்தளிப்பு நிறைந்த மனிதர்கள் இருப்பதை இருவரும் பிரதிநிதிக்கிறார்கள்.
வெளியில் “சாமி மாதிரி”யான கடினசித்தம் படைத்த நாகுவின் அய்யா தனது குடும்ப வாழ்வில் ஏற்படும் வீழ்ச்சிகளால் (பொருள் ஈட்டுவதில் தோல்வி, நீலாவின் , நாகுவின் மரணங்கள்) உள்ளூர உடைந்துபோகிறார்.
ஒரு காலத்தில் பலராலும் அஞ்சப்பட்ட சிங்கி என்கிற வேம்பன் காதலுக்காக திருட்டுத்தொழிலையே விட்டுவிட்ட பிறகும், மீதி வாழ்வை சீரழிந்த நிலையிலேயே தொடரவேண்டிய அவலம்; அவன் ஒரு சிறுவனாக, தன் தாய் வேம்பனின் மனைவி என்பதால் அடைந்த அவமானங்களை பற்றிய ஞாபகங்களோடு முதுமையின் தனிமையில் கழித்துக்கொண்டு, இறந்துபோன கூட்டாளி குருவனோடு ஆடுபுலி ஆட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான்.
இடுப்பு விலகிய லட்சுமணனை திருடு போன களவு நகைகளுக்காக அவன் மகன் சீனி வேல்கம்பால் கொன்றுவிட்டு, பிறகு உண்மையை தெரிந்துகொண்டு, பழிவாங்க புறப்பட்டு, அவனும் பழியாகிறான்.
இடுப்பு விலகி, கழுத்தில் ஆயுளுக்கும் கொண்டி மாட்டப்பட்ட வேதனைக்குரல் ஊர் முழுக்க கேட்டுக்கொண்டிருக்கும் சூழல்.
வேம்பர் குடும்பத்து பெண்களான சுப்புத்தாய், வேணி, மல்லிகா போன்றவர்கள் ஆளுமையற்றவர்களாக, துயரத்தை மௌனமாக எதிர்கொள்பவர்களாக இருக்க, பக்கீரின் விதவை மனைவி ஆளுமைமிக்கவளாக வேம்பலைக்குள் நுழைகிறாள். வேம்பர் சந்ததியில் கண்ணீரை விலக்கி வைக்கும் முதல் பெண் வசந்தா.
வசந்தாவும் திருமாலும் நாகு அய்யாவின் நிகழ்கால தலைமுறை சந்ததியினர் (சிறு கதாபாத்திரங்கள் தான்). நாகு அய்யாவின் / வேம்பர்களின் பரம்பரையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களின் குறியீடாக வசந்தாவும், திருமாலும் வருகிறார்கள்.
வசந்தாவின் ஆளுமை துலங்க கிட்ணா-சேது-சங்கு, தோழி-குருநாதன் ஆகியோருடனான அனுபவங்கள் விரிகின்றன; திருமாலின் ஆளுமை துலங்க பவுல்-கிருபை-தங்கபுஷ்பம்-லயனல்சார்-இறையியல் பள்ளி அனுபவங்கள் விரிகின்றன.
புத்திசாலித்தனமாக பிழைத்துக்கொள்பவன் காயம்பு.
இவ்வளவு பேர் இருக்க, குறை ஆயுள் உடைய நாகு பிரதான பாத்திரம் ஆனது ஏன்?
கள்வர்களின் சந்ததியின் விலகல் புள்ளி நாகு. முதன்முதலாக (சின்னுவின்) இரத்தம் பார்த்து, மனக்கலக்கத்துக்கு உள்ளானவன். அத்தோடு அவனது சந்ததி வேம்பலையின் சாபத்தை எதிர்கொள்ள இரண்டு வழிகளில் பிரிகிறது. ஒன்று, வேம்பர் மரபோடு தன்னை துண்டித்துக்கொள்கிறது (திருமாலின் பாதை) ; மற்றொன்று, வளர்த்துக்கொண்ட தனது ஆளுமையோடு, வேம்பலைக்குத் திரும்புகிறது (வசந்தாவின் பாதை).
நாகு அய்யாவின் வீழ்ச்சியின் தொடர்ச்சி நாகு ; நாகு அய்யாவின் பாதிப்பு வசந்தாவிடமே தொடர்கிறது. தானறியாத, குறை ஆயுளில் மறைந்த தந்தை பற்றிய ஏக்கம் ஒரு புதிய கனவின் தொடக்கமாகிறது .

வேம்பர் வாழ்வின் கதியில் எதிர்படும் முரண் எது ?

1. இயற்கையின் வஞ்சனை : பகல் பற்றி எரிவது போன்ற தீவிரம் கொள்ளும் வெக்கை.
வெக்கையின் விளைவான வறட்சி. ஊரைவிட்டு கிளம்பிபோன மனிதர்களால், சூன்யமாய் காட்சியளிக்கும் கிராமம். அன்றாட வாழ்விற்கு அலைக்கழிக்கப்படும் நிலையும், கடுமையான தனிமை உணர்வும் மனிதர்களை உள்ளூர இறுகிப் போக வைக்கிறது.
2. வாழ்க்கையின் வஞ்சனை : அசம்பாவிதங்களின் தொடர் சம்பவிப்பு.
நீலாவின் மரணம் அம்மாவைக் கொல்கிறது; அம்மாவின் மரணம் நாகுவை தடம் புரள வைக்கிறது ; சின்னுவின் இரத்தம் பார்த்தல், நாகுவை அதிர வைக்கிறது. நாகுவின் மரணம் மல்லிகா / ரத்னாவதி ஆகியோரின் வாழ்வை நிர்க்கதியாக்குகிறது; இரண்டாவது வாய்ப்பாக வரும் பூபாலனின் மரணம் ரத்னாவதியை பழைய வாழ்வுக்கு திரும்பச் செய்கிறது.
3. காலத்தின் வஞ்சனை
கொற்கை பாண்டியனின் வீரர்களுக்கு தப்பி வந்த வரலாறு ; வேல்சி துரையால் துன்புறுத்தலுக்கு உள்ளானது; 42 வேம்பர்கள் கொல்லப்பட்டது ; மற்றவர்களின் குதிகால் நரம்பும் குரல்வளை நரம்பும் வெட்டப்பட்டது ; வேம்பனின் கண்களில் நிரந்திரமாக குடிகொண்ட பயம்.
பிறகு மீண்டும் களவுக்குப் புறப்பட்டு, போலீசின் கைரேகை வேட்டை, கச்சேரி காவல் என்று அவர்களின் வீழ்ச்சி தொடர்கிறது.
‘நாகு’ வின் சாத்தியப்பாடுகள்
திருட்டுத் தொழிலிலிருந்து நாகுவின் விலகலை சாத்தியப்படுத்தியிருக்கக்கூடியவள் அவனின் அம்மா சுப்புத்தாய். கனகாம்பரத்தின் தலையை அவன் உடைத்ததற்காக, அவனுக்கு சூடு போட்டவள். அவன் சூரிக்கத்தியைத் தீட்டுவதை தாத்தாவைப்போல பார்த்துக்கொண்டிருந்திருக்கமாட்டாள்.
நாகு பழைய வரலாற்றை நேர் செய்யக் கூடிய வாய்ப்பைப்பெறவேண்டி இருந்தவன்; அம்மாவின் மரணம் அவனை திசையற்ற வெளியில் அலையவைத்து விடுகிறது. ஆனால், சிங்கி திருட்டுத்தொழிலை தெய்வானை மீது கொண்ட காதலினால் விட்டுவிட்டாலும், தெய்வானை கொடூரமானவளாக மாறிப்போகிறாள்.
வழிதவறி திருட்டில் நுழைந்து, அதன் சவாலை எதிர்கொள்ளமுடியாமல் வாழ்வை இழக்கிறான் ஒருவன் ; வழிதவறி திருட்டை கைவிட்டு குடும்ப வாழ்வில் நுழைந்தவன், தாம்பத்யத்தின் சவாலை எதிர்கொள்ளமுடியாமல் தனிமைபடுகிறான்.
நாவலின் ஆரம்பத்தில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கடும் சண்டை நடக்கிறது; வேணி அக்காள் அழும் குரல் தெருவில் வீட்டை நோக்கி நடந்துவந்து கொண்டிருக்கும் நாகுவுக்கு கேட்கிறது. உடனே அவன் திரும்பி தெருவை நோக்கி நடக்கிறான். சிறுவயது மனதில் ஏற்படும் இது போன்ற பதட்டங்கள் எவ்வளவு தூரம் பிற்கால வாழ்வை தடுமாற்றங்கள் உள்ளதாக ஆக்குமென்பதற்கு நாகுவின் பிற்பகுதி வாழ்வே உதாரணம்.
நாகு அய்யாவின் பாதை
பக்கீரைக் கொன்றது நாகு அய்யா; பக்கீரின் மனைவி இரு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு, சுயதொழில் முயற்சியாலும் பிறகு ரெட்டியாருக்கு ‘தொடுப்பாகி’ போவதாலும் குடும்பத்தை கரையேற்றுகிறாள்; நாகுவும் வேணியும் வேம்பலைக்கு வரும்போதெல்லாம், பக்கீரின் மனைவியை காணச்செல்கின்றனர். ஆனால், நாகு அய்யா பக்கீரின் மனைவியை நடத்தைக் கெட்டவள் என்று திட்டுகிறார்.
இந்த இடத்தில் நாகு அய்யாவின் மனோபவம் என்ன? அவர் என்ன எதிர்பார்க்கிறார் ?
விதவையானவுடன் பக்கீரின் மனைவி சுப்புத்தாயைப்போல கண்ணீரும் கம்பலையுமாக காலம் தள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். வேணி திருமணமாகி போகும் தருணத்தில் “என்ன கஷ்டம் வந்தாலும் உன் அம்மாவைப்போல தைரியாமாய் இருக்கணும் “ என்கிறார் - அதாவது, சுப்புத்தாயின் வாழ்வை உருக்குலைக்க செய்வதையெல்லாம் செய்துவிட்டு. அவர் நினைத்தால் குடும்பத்தைவிட்டு ஓடிப்போய்விடுவார், பிறகு சாவகாசமாக திரும்பி வருவார். இருக்கும் கொஞ்சநஞ்ச குடிநீரையும் கால்கழுவ பயன்படுத்துபவராக நாவலில் அவர் அறிமுகமாகிறார்.
ஆணாதிக்கம் பற்றி நேரடியாக நாவலில் பேசப்படாவிட்டாலும், நாவலின் வரும் அத்தனை பெண்களும் (சுப்புத்தாய், மல்லிகா, வேணி, ரத்னாவின் பிற்பகுதி வாழ்வு) துயர நிழல்களாகவே வருகிறார்கள் – வசந்தாவையும் பக்கீரின் மனைவியைத் தவிர.
பிறகு பெண்களுக்கு பேய் பிடிப்பது பற்றியும், ஆண்களுக்கு பேய் பிடிப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த பெண்களைப் பிடித்த பேய் ஆணைத் தவிர வேறு யார் ?
வேம்பலையின் சாபத்துக்கும் இவர்களின் கண்ணீருக்கும் சம்பந்தம் உண்டா? ரத்னா ‘வேட்டைக்கு தப்பிய மிருகங்களுக்கு ஏற்படும் மூர்க்கம்போல ஏற்பட்டு மாறிவிடுகிறாள்; மல்லிகா “வேலை பைத்தியமா”கிறாள்; ஏன் என்று கேட்டால், ஓங்காரித்து அழத் தொடங்கிறாள்; சிடுசிடுப்பாகி போகிறாள்;
நாகு அய்யாவின் பிற்பகுதி வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது; வாழ்வின் கொடும் வெக்கையிலிருந்தும் தாங்கொண்ணா துயரத்திலிருந்தும் ஓடி ஒளிவதல்ல, மல்லிகாவிற்கும் வசந்தாவிற்கும் ஆசுவாசத்திற்காக சாய்ந்துகொள்ளும் ஒரு சுவராகவாவது இருப்பதுதான் தனது குறைந்தபட்ச நல்லது செய்தலாக இருக்கும் என்கிற நிலைக்கு வருகிறார்.
நாகு அய்யாவோடு ஒப்பிடும்போது நாகுவுக்கு தன் வேணி அக்கா வாழ்நிலைப்பற்றியும் வெற்றிலைச் சத்திர விலைமாதுபற்றியும் வருத்தம் ஏற்படுகிறது. ரத்னாவின் தோழியின் மகளை மடியில் வைத்து முடி இறக்க சம்மதிக்கிற அளவுக்கு திறந்த மனோபாவம் அவனுக்கு இருக்கிறது.
வேம்பனின் நிகழ்கால வேர் 1 : வசந்தா
கல்லூரிக்குமேல் வட்டமிடும் பருந்து வேம்பலையைச் சேர்ந்தது என்று வசந்தாவுக்குத் தோன்றுகிறது. நாவலில் அவள் தற்கொலையிலிருந்து உயிர்பிழைப்பதன்மூலம், அவள் “மறுபிறப்பு எடுத்துவிட்டாள்; அவளை இனி வேம்பலையின் சாபம் ஒன்றும் செய்யாது “.
வசந்தாவுக்கு படிப்பு பிடிக்கவில்லை; தினமும் தலையில் கொட்டுவாங்கும் வசந்தா; ஆனால் அவள் அழுவதேயில்லை; யாரும் அழுதாலும் பிடிப்பதேயில்லை; அவள் புது டீச்சருக்கு வணக்கம் சொல்வதில்லை; அதனால் ஏற்படும் தண்டனைக்கு வேதனைப்படுவதில்லை; அவளுக்கு இருட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்கும்; அவளைப் பார்க்க யாரும் வருவதில்லை ; அவளுக்கும் அம்மாவிடம் பேசப்பிடிப்பதில்லை; ஆனால், வேம்பலைக்கு வந்துவிட்டுச் சென்றபிறகு, அம்மாவின் நிலை மீது வருத்தம் ஏற்படுகிறது. பழைய வேம்பலை வாழ்வு அம்மாவைப்போன்ற எளிய மனிதர்களின் வாழ்வின் மீது நிகழ்த்திய தாக்குதல் பற்றிய புரிதல் அது.
பதின்ம வயதில் ஒரே ஆளைத் திருமணம் செய்யமுடியாத காரணத்தால், தோழியின் பேச்சைக்கேட்டு கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வசந்தாதான், தனது கணவன் சேதுவை கிட்ணா அபகரிப்பதை கண்டு, கணவனை விட்டு விலகுகிறாள்.
ஒரு சிறு குற்றத்திற்காக, சின்னுவை தண்டிக்கிறான் நாகு; ஆனால், நாகுவின் மகள் வசந்தா சேதுவின் அண்ணியிடம் சேதுவுக்குள்ள கள்ள உறவை மன்னித்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை ஏற்றுகொள்கிறாள். நாகுவின் வம்சகுணத்திலிருந்து வசந்தா விலகும் புள்ளி இது.
நாகு வேம்பர்களின் தற்கால நிர்க்கதி வாழ்வின் குறியீடு; அடுத்த தலைமுறை வசந்தா வேர்களைத் தேடி வருகிறாள். வேர்களின் பலவீனமான அம்சங்களை அவள் மீறவேண்டும். அதற்கான ஆளுமை அவளிடம் இருக்கிறது. (சுப்புத்தாயிடமும் மல்லிகாவிடமும் இல்லாதது )
அவள் வேர்களின் பலவீன அம்சங்களை மீறும் தருணங்கள் நாவலுக்கு வெளியே இருக்கிறது (முடிவுக்கு பின்னால்)
ஊமைவேம்பு நாகுவின் காலத்தில் காய்ப்பதோ பூப்பதோ இல்லை; வசந்தாவின் காலத்தில்தான் பூக்கிறது.
வேம்பனின் நிகழ்கால வேர் 2 : திருமால்
பூபாலனின் மரணமும் அத்தைக்காரியின் திடீர் மனமாற்றங்களும் ரத்னாவை பழைய வாழ்வை நோக்கி திருப்புகிறது. இது திருமாலின் வாழ்வின் கதியை மாற்றிவிடுகின்றன.
வேம்பர் வாழ்ககைச்சூழலிலிருந்தும் ரத்னாவின் நகர்ப்புறச் சூழலிலிருந்தும் துண்டிக்கப்பட்டு, மிஷன் பள்ளியின் பாதுகாப்பு விதிகளுக்குள் தன்னிச்சையாக வளர்கிறான்.
அவன் சிறுவர்விடுதி கம்பிகளைப் பிடித்துக்கொண்டு எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறான்; காலப்போக்கில், அம்மா அவனது மனத்திலிருந்து விலகிப்போகத் தொடங்கினாள்; பள்ளிக்கூடத்தின் நெல்லிமரத்தடியும் கிழிந்த காகிதங்களின் மக்கிய வாசனையும் அவனை வளர்த்தன. ஓட்டு அணில்களைப் போல தன்னிச்சையாக பள்ளியினுள் அவன் உலா வர ஆரம்பித்தான்.
லயனல்சாரின் தந்தையைப்போன்ற பராமரிப்பில் எதையும் நடுநிலையிலிருந்து பார்க்க கற்றுக்கொள்கிறான்.
பவுல் மார்க்சியம் பற்றி பேசுகிறான்; இறையியலின் போதாமைகளையும் இறுக்கத்தையும் பற்றி பேசுகிறான்; அவன் தன் அப்பா கிருபையை வெறுக்கிறான், அம்மாவின் பாதையில். ஆனால், பவுலின் அப்பாவின் மீது தான் திருமாலுக்கு வாஞ்சை பிறக்கிறது. கிருபையை சந்தேக நோயாளியாக மாற்றியது யார்? தங்கபுஷ்பம் கிருபைக்குத் தெரியாமல் திருடி பரண்மீது சேர்த்துவைத்த பணமா ? இது வீட்டிற்குள் நடந்த திருட்டு; கிருபையிடம் திருடியது பணம் மட்டும்தானா ?
கிருபைக்கு விஷம் வைத்து தங்கபுஷ்பம் கொன்றுவிடுகிறாள். இதைப்பற்றி பவுலுக்கு உள்ளுணர்வு தட்டும்போது, இந்த புரிதலுக்கு காரணமான திருமால்மீது மனவிலகல் ஏற்படுகிறது; “நீ தோழர் சீனிவாசனை இனி சந்திக்கவேண்டாம்“ என்கிறான். மார்க்சியமும், ஏங்கல்சும் தோழர் சீனிவாசனும் பவுலின் தனியுடைமையன்றோ?

வேம்பனின் நகர்புற பிரதிபலிப்பு : ரத்னாவதி

பர்மாக்காரனுடனான வன்புணர்ச்சி அனுபவத்திற்கு பிறகு, அவளது தைரியம் யாவும் வடிந்துவிடுகிறது. முன்பின் அறியாதவர்களோடு படுக்கையை பகிர்ந்துகொள்ளும் வாழ்விலிருந்து விலக ரத்னா விலக விரும்புகிறாள். முதலில் நாகு, பிறகு பூபாலன், அத்தைக்காரி. எல்லாம் பொய்த்து போகிறது.
யாருமற்ற தனிமை என்கிற அச்சம் அவளை துரத்துகிறது. சினிமாவுக்கு வருகிறாயா என்று அழைத்தவன் தொடங்கி, அஸ்ரஸ் முதலாளிவரை அவள் தனது தனிமையை வெல்ல நடத்தும் அவல முயற்சிகள்; மேக நோய் வந்த பிறகு மீண்டும் தனிமை. ஜெயராணியோடு தங்க வருகிறாள்; அவளும் இவளை ஒரு லாட்ஜில் ரூமில் தள்ளிவிட்டு, கிளம்பிவிடுகிறாள். தற்கொலை அவள் தனது தனிமைக்கு எதிராக தொடுக்கும் இறுதி அஸ்திரம்.
ரத்னாவுக்கு ஏன் மிஷன் பள்ளி பிடித்திருக்கிறது ?
அவள் கோயிலுக்கு வெளியே கடை வைத்திருந்தாலும், கோயிலுக்குள் போக விரும்பியதில்லை; ஒருதடவை பூபாலனோடு போனபோது ஒரு போலீஸ்காரன் (பழைய வாடிக்கையாளன்?) “இப்பொழுதெல்லாம் பார்க்கவே முடிவதில்லையே, ஆமா இது யாரு? “ என்கிறான். அவள் விட்டு விலகினாலும் அவளது பழைய வாழ்வு அவளை பின்தொடர்கிறது;
அவள் தனது மகனுக்கு விரும்பும் ஒரு புதிய தொடக்கம் மிஷன்பள்ளி மூலமாகத் தான் சாத்தியம் என்று நினைக்கிறாள்; கிறிஸ்தவம் வெளிப்படையாக வழங்கும் மன்னிப்பு, பரிசுத்தம், எளிமை என்கிற மாற்று யதார்த்தம் பற்றிய அவளது எண்ணங்கள் அவளுக்கு மன ஆசுவாசத்தை வழங்குகிறது.
மாற்றங்களை எதிர்கொள்ளும் வேம்பர்கள்
கல்வியின் அறிமுகத்தை, கிறிஸ்தவ மதத்தின் அறிமுகத்தை, தூக்கம் பற்றிய ஆராய்ச்சியை போனால்போகிறது என ஏற்றுக்கொள்ளும் வேம்பர்கள் மின்சாரத்தை நிராகரித்துவிடுகிறார்கள். மின்சாரம் வேம்பர்கள் மிகவும் நேசிக்கும் இருட்டைப் போக்கிவிடும். அவர்களின் வாழ்க்கைப்பாட்டையும் நிறுத்திவிடும் என்பதால்.
நாவலின் சொல்முறை
நாவலில் எங்குமே கள்ளர்கள்மீது நமக்கு எதிர்மறையான என்ணம் ஏற்படவில்லை. காரணம் அவர்களின் வாழ்நிலையின் மீதான சோகம்.
ஆனால், கள்ளர்கள் மீதான எதிர்மறையான எண்ணம் சமூகத்தின் பொது நனைவிலியில் இருக்கிறது; வேல்சு துரை வரலாற்றில் எப்படி வேம்பர்களை ஒடுக்கினான் என்கிற சமூக பார்வை அல்லது பிரதாபம் நாவலின் தொடக்கத்துக்கு முன்னே உள்ளது. நாவல் இந்த பொது பார்வை தாண்டிய உள்-நிலவரங்களுக்குள் தனது விசாரணையை செய்கிறது.
நாகு அய்யா ஒரு “சாமி” மாதிரி ஆள் என்பது மிகவும் பிற்பாடு போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. மாட்டுத் திருட்டு பற்றி துப்பு சொல்பவர்கள்மீது விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகமும் கோபமும் மட்டுமே எதிர்மறையான ஒரே பதிவு. நாகு அய்யா செய்த பக்கீரின் கொலையும் நேரடியாகச் சொல்லப்படவில்லை.
நாவலின் தொனி ஒரு சீரான நீரோடை ; பகீரதன பாய்ச்சல்கள் இல்லை; நாகுவின் மரணம் கடைசிக்கு மூன்றாவது பாராவில் நடுவரியில் சொல்லப்படுகிறது; நீலாவின் மரணமும் ரத்னாவின் தற்கொலையும் அவ்வாறே.
‘கோடைகாலத்’தை நாகுவின் எங்கும் தப்பிச்செல்லமுடியாத கஷ்டமான பால்யம், ‘காற்றடிக்கும் காலத்’தை நாகுவின் வாலிப சாகஸம் மற்றும் திடீர் மரணம், ‘மழைக் காலத்’தை அடுத்த தலைமுறையின் பள்ளிகளுக்குள் சிறைப்பட்ட பால்யம், ‘பனிக்காலத்’தை மூன்றாம் தலைமுறையின் அளுமையின் சோதனைக்காலம், மற்றும் ரத்னாவதியின் மரணம் ஆகியவற்றை சுட்டி நிற்கிறதாக வாசிக்கலாம்.

எஸ்ராவின் கலை

நாவலில் எந்த ஒரு நிகழ்வின்மீதோ ஒரு கதாபாத்திரத்தின்மீதோ ஆசிரியர் தனது அபிப்பிராயத்தையோ அல்லது ஒரு எள்ளலையோகூட தெரிவிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு தொனி மாறுதலையோ அல்லது புனைவின் ஏதோ ஒன்றிற்கு தரும் முக்கியத்துவத்தையோ எங்கும் உணரமுடியவில்லை; இந்த நாவல் எழுதப்பட்டதன் அல்லது செதுக்கப்பட்டதன் தடயத்தை இதன் பக்கங்களில் எங்கும் காணமுடியவில்லை.
எந்த குறிப்பிட்ட இலக்குகளையும் அவர் நாவலில் வலியுறுத்தவில்லை; நாவலில் வேம்பர்களின் உள்நிலவரங்கள் கூடிய வரலாற்றை நிகழ்கால தலைமுறையான வசந்தாவிற்கும் திருமாலுக்கும் விரித்து இணைப்பதன்மூலம், கள்ளர்கள் விலைமாதுகள் என்கிற பொதுமைக்கு பின்னே இருக்கும் பொது மனநனைவிலியின் அந்தரங்க மனத்தீட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறார்.

அதியற்புத யதார்த்த அம்சங்கள்

1)இறந்த மனைவியிடமிருந்து பச்சைக்குத்தப்பட்ட தேளை சிங்கி கிழவன் பெற்றுக்கொள்ளும் இடம்.
2)ஊமை வேம்பை தஞ்சமடையும் பேய் பிடித்த பெண்கள் ; அவர்களின் கூந்தலைப் பிடித்து ஊமைவேம்போடு ஆணியடித்துவிடும் கோடங்கி.
[கோடாங்கியாக வேல்சு துரையும் உள்ளூர் போலிசும்; பேய் பிடித்த பெண்களாக வேம்பர்கள்; வேம்பலை அவர்களது சரணாலயம் – சுபிட்சத்திற்கு வழியில்லாத “ஊமைவேம்பு” ஊர் ; அவர்களது தைரியம் வேல்சு துரையாலும் / தலைவிதி வேம்பலையின் சாபத்தாலும் அங்கே நிரந்திரமாக ஆணியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் இதை வாசிக்கலாம்.]
3) சென்னம்மாளின் முற்றிய வயதும், வாய்க்காத மரணமும் தீராத தாகமும் : வேம்பலையின்மீதான சாபத்தின் மனித உரு (personification).
4) இரு வேம்பலைகள் : இறந்தவருக்கு ஒன்று, இருப்பவருக்கு ஒன்று.
5) பக்கீரின் மனைவியின் கனவு : அவளுக்கும் கணவனுக்கும் ஏற்பட்டுவிட்ட நிரந்திர பிரிவைத் தெரிவிக்கும் கனவு.
6) வேணிக்கு கிணற்றுத் தண்ணீர் கைக்கு எட்டாததாகவே கனவு வருகிறது ; கனவு முடிந்து, கதவு வழியே வீட்டிற்குள் திறந்த மார்புடன் கிடக்கும் தாயைப் பார்க்கிறாள்; பசியடங்காத பூனை ஒன்று இரவில் அலைகிறது; கனவும் நனவும் வேம்பலை பெண்ணின் வாழ்வு வாழ்க்கைப்பற்றிய ஈரத்தின் ஏக்கத்திற்கும் ஆணின் அடங்காதபசிக்கும் இடையிலான சிறுவட்டத்தின் பரப்பளவுக்குள்தான் என்பதன் சூசகம்.
7) வீட்டிற்கு ஆகாத கோயிலுக்கு நேர்ந்துவிட்ட செவலைப்பசு.
8) உள்ளங்கையைப்போல பாதுகாக்கும், தப்பிப்போகாமல் சிறைவைக்கும், தப்பிப் போனவரை மீண்டும் தன்வசமாக்கும் தன்மை
9) ஆணியைப் பிடுங்கியதும் தேள் கொட்டுவது, பிடுங்கிய ஆணியை திரும்ப அடிக்க முடியாது தடுமாறும் வீரம்மாள்
10) வேம்பர் குதிகாலில் தழும்பு, இன்னும் பல.

கிராமத்து வாழ்வில் அதியற்புத யதார்த்தத்தின் அர்த்தம் என்ன ?

நூறு குடும்பங்களே உள்ள ஒரு சிறு கிராமம். எந்த நவீன வசதிகளும் சென்றடையாத, வெக்கையும் அடைமழையும் சூறைக்காற்றும் துர்மரணங்களும் அலைக்கழிக்கும் நிலவெளி.
எந்த நவீன அறிவும் வந்துசேராத மனிதன்.
அவன் தன் சூழல் சார்ந்த, இருப்பு சார்ந்த , துர்மரணங்கள் சார்ந்த அச்சத்தைப் போக்கவேண்டும். என்ன செய்வான் ?

தன்னை அச்சுறுத்தும் கொடும் வெக்கை வயது முற்றி மரணம் வாய்க்காத சென்னம்மாளின் தீராத தாகமாகத்தான் இருக்கவேண்டும். சென்னம்மாள் அவர்களோடு வாழ்ந்தவள். அவளுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்தால் அவளைப்பற்றி அச்சமின்றி வாழலாம்.
வெக்கை தீர்ந்து வந்த அடைமழை நிச்சயமாக சென்னம்மாள் கொண்டுவந்ததாகத்தான் இருக்கவேண்டும். அப்படிச் சொன்னால்தான் சென்னம்மாளோடு நன்றி பாராட்டியதாகும் . அவளின் ஆசியையும் பெற்றதாகும். தனக்கு முன்னால் இறந்தவள் தனக்கு தாய்தானே ? தாய் காக்கும் தெய்வமும் தானே ?
வேல்சின் போலீஸ்காரர்கள் துரத்திவந்தபோது வேம்பர்கள் வேம்பின்கீழ் ஒளிந்துகொண்டார்கள் ; வேம்பு தனது அடர்த்தியாலும், அது தந்த இருட்டாலும், நிசப்தத்தாலும் காட்டின் ஒலிகளாலும் அவர்களைக் காத்தது.
ஆனால், அதை அப்படிச் சொன்னால் நன்றி பாராட்டியதாகுமா ?
ஆக வேம்பு தங்களின் குலதெய்வம்போல, தாயைப்போல வயிற்றைத் திறந்து அவர்கள் அனைவரையும் உள்வாங்கி, அவர்களைக் காத்ததுதானே உண்மை ?
தனது சூழலின் மீதான அச்சத்தை வெல்ல, வேம்பன் தன் சூழல்மீது நட்பும், உறவும் கொண்டாடியே ஆக வேண்டும். வெக்கையும் அடைமழையும் சூறைக்காற்றும் அவனது தாயின் சேய் மீதான கோபமன்றி வேறென்ன ?
தெய்வானையின் கையிலிருந்த தேளை சிங்கி தன் உள்ளங்கையில் பெற்றுக்கொள்வதன் அர்த்தமென்ன ?
தேள் வேம்பர்களின் பச்சைக்குத்தப்பட்ட சின்னம் ; சிங்கியைப் பிரிந்த பிறகு பண்டாரத்தின் மகளான தெய்வானை செய்துகொண்ட இந்த சின்னம் கணவன்மீதான அன்பின் குறியீடு ? அவளது கொடுங்குணம் தன்னால் தாயாக முடியாததின் சுய கோபமாய் இருக்கலாம்; மரணத்திற்கு பின்னாலான அவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட மௌன சம்பாஷணை அது? அதில் அவள் தன் உள்ளார்ந்த அன்பை அவனுக்கு தெரிவித்துவிட்டாள். அன்பு தேளாய் கொட்டுவது யார் வாழ்வில்தான் புதிது?
நகரத்து வாழ்வின் அதியற்புத யதார்த்தத்தின் அம்சங்கள்
மூச்சிரைப்பு நோய் உள்ள லயனல் சாரின் மனைவி. இவ்வளவு இறையுணர்வு உள்ள குடும்பத்தில் ஏன் இவ்வளவு துன்பம் என்று பிரான்சிஸ் திருமால் நினைக்கிறான்.
கேள்வியை மாற்றியும் வாசிக்கலாம் : இவ்வளவு மரண பயம் இருப்பதால்தான், உயிரைப் பற்றிக்கொள்ள இவ்வளவு பிராயத்தனம் (பிரார்த்தனையும் அதன் வழியான வாழ்வும்) பத்ததிகள் நிரம்பிய சடங்காய் (stylized rituals) ஆக செயல்படுத்தப்படுகிறது. குடும்பத்து நால்வரின் பிரார்த்தனைகளில் அவளது உயிர் காக்கப்படும் என்ற நம்பிக்கைக்கும் சென்னம்மாள் வேம்பலையை காக்கிறாள் , ஊமைவேம்பு வேம்பனின் முன்னோர்களை காத்த தெய்வம் என்று சொல்வதற்கும் வேறுபாடு என்ன ?
மிஷன்பள்ளி பற்றிய ரத்னாவதியின் மாற்று யதார்த்தம் மீதான ஈர்ப்பும் இதோடு சேர்ந்ததுதான்.
கிராமத்தில் காடு, மலை, மிருகங்கள், பூச்சிகள், இருட்டு, மழை, காற்று, துர்மரணம் என்கிற அச்சங்கள்.
(நாகுவின் பயப்பிரமைகளுக்கு நிர்வாணப் பரதேசிகள்தான் நிவாரணம் தருகிறார்கள் : “எல்லாம் சரியாகிவிடும்” )
நகரத்தில் நம்மை சிறைவைத்திருக்கும் நகரத்தின் இயக்கம், அதன் கதி, சுற்றுச்சூழ நிறைந்திருக்கும் மனிதர்கள், நோய்கள், தனிமை பற்றிய அச்சங்கள்.
அச்சங்கள் தான் வேறுபடுகின்றன தவிர, அச்சங்களே மனிதனுக்கு நடுக்கமேற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அச்சத்தை வெல்ல நம்பிக்கைகள் தேவை - அது நிறுவனமாக்கப்பட்டிருக்கும் இறையியலாகவோ மார்க்சியமாகவோ இருக்கலாம் .
நாவலின் மையச்சரடு
நாவல் வேம்பனின் வாழ்வின் விரிவுகளைக்கொண்டு விசாரிக்க விரும்புவனவற்றை ஒற்றைப் பதத்தில் குறிப்பாலுணர்த்த முடியுமா?
‘கள்ளர் பயம்’
எந்த பழிக்கும் அஞ்சாத கள்ளனைப்பற்றி கள்ளர் அல்லாதவர் கொள்ளும் பயம் இது. யாருமற்ற சூழ்நிலையும் இருட்டும் அவன் இல்லாதபோதும் அவனைப் பற்றிய நினைவை கிளறுபவை.
கடினசித்தம் படைத்த கள்ளனுக்குள்ளும் இருக்குமா பயங்கள் ?
கள்ளர் அல்லாதவர்களின் பயங்களிலிருந்து வேறுபட்டவையா அவை ? கள்ளர் அல்லாதவர்களின் வாழ்விலும் சாதாரணமாய் ததும்பி வழியும் கள்ளத்தனங்களை நியாயப்படுத்தும் அச்சங்கள் மாதிரித்தானா அவையும் ?

**********

1 மறுமொழிகள்:

At , Blogger Umabathy மொழிந்தது...

கதையை மிகவும் ஆழமாக அலசியுள்ளீர்கள். நன்று.

 

Post a Comment

<< முகப்பு