ஆதவனின் 'காகிதமலர்கள்'-ரே. பாண்டியன்.

வாய் நிறைய உண்மை பேச முடியாத வாழ்க்கை

ரெ.பாண்டியன் / நவம்பர் 06

இருபது வருடங்களுக்கு முன்பு நான் இந்த நாவலை வாசித்தபோது, செல்லப்பா விசுவத்தை சந்திக்க விமான நிலையத்துக்கு போய்க்கொண்டிருந்தான். இருவரும் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு சந்திக்கப் போகும் தருணத்தில், பழைய செல்லப்பா இறந்துவிடுவான் என்று செல்லப்பாவின் மனதில் எண்ணம் ஓடும். அந்த வரிகள் அன்றைய காலத்தில் என்னை பெரும் உத்வேகத்துக்கு உள்ளாக்கிய வரிகள்.

அப்பொழுது நான் “தேடல்”, “அடையாளச்சிக்கல்” போன்ற வார்த்தைகளை அறிந்திருக்கவில்லை. ஆனால், அந்த வார்த்தைகள் பிரதிநுவப்படுத்தும் குழப்பங்களுக்கு உள்ளாகியிருந்தேன்.

குழப்பங்களைத் தீர்த்துவைக்க எந்த நாவலும் எழுதப்படுவதில்லை என்றாலும், அடையாளச்சிக்கல் பற்றிய குழப்பங்களை வார்த்தைப்படுத்த சொற்களை தந்துதவிய நாவல் இது எனலாம்.

அகிலன், நாபா, சாண்டில்யன் வாசகனாக இருந்த என்னை, வெகு தூரம் நிர்வாணப்படுத்திய நாவல் “காகித மலர்களு”ம் “ என் பெயர் ராமசேஷன்” ஆகும். இந்த நிர்வாணப்படுத்துதல் நான் ஏற்கனவே அந்தரங்கமாய் உணர்ந்திருந்த உண்மைகளுக்கான அங்கீகாரம் கூட.

இந்த நிர்வாணப்படுத்துதலுக்கு நானும் வெகுகாலமாய் காத்திருந்தேன், ஆர்வத்துடன் வரவேற்றேன் என்பதின் வெளிப்பாடுதான் இந்த நாவலை தமிழின் சிறந்த நாவலாக நண்பர்களிடம் பலகாலம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

ஒரு மனிதன் தன்னைத்தானே புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு நீண்ட பயணம். ஆனால், அப்படி ஒரு பயணம் என்ற ஒன்று செல்லவேண்டி இருப்பதையே உணர்ந்துகொள்ள நேர்வது இன்னொரு பயணம்.

ஒரு பயணம் எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளமுடியாத நிலையில், பயணத்தின் நோக்கத்தில் யாருக்கும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

மார்க்கப் போலோ அய்ரோப்பாவிலிருந்து சீனாவைச் சென்று அடைய பல ஆண்டுகள் கடல்மார்க்கமாக பயணித்தான். சென்று சேர்வோம் என்ற நம்பிக்கையில் அவன் ஆரம்பித்திருந்தாலும், அந்த நம்பிக்கை அந்த பயண காலம் முழுக்க ஒரே புரிதல் தளத்தில் நீடித்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு கடுமையான சோதனைக்குப் பிறகும் அவனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு புதிய வெளிச்சத்தில் அவனது நோக்கம் ஒரு புது பரிமாணம் கொண்டிருக்கும். ஆனால், பல நேரங்களில், கடலில் வேறு ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் அவன் வேறுவழியின்றி, கடலில் வெறுமனே மிதந்து கொண்டிருந்திருப்பான்.
(இது மார்க்கபோலோவைப் போல பயணம் செல்ல உத்வேகம் கொண்டிருப்பவர்களுக்கு உவப்பான செய்தியல்ல.)

போவதற்கு வேறு வழியில்லை, இது மட்டுமே தான் செய்வதற்கு இருக்கிறது, இதுதான் என்முகம், இதுதான் நான் என்கிற விசை தான்(பழக்க தோஷத்தினால் பழிகிடப்பதாயும் இருக்கலாம்) “நான் யார்” என்கிற தேடலில் காலங்காலமாக பயணம் செய்பவர்களை உந்திச் சென்றுகொண்டிருப்பது.

ஆனால், பலர் பாதையில்லா நடைக்கு தயாராய் இருப்பதில்லை.

நாவலில் பலருக்கு பல ஆசைகள் இருக்கின்றன. ஆனால், அவரவர் ஆற்றலும் பின்னணியும் சார்ந்து, அந்த ஆசைகளை எய்தமுடியாமல் இருக்கிறது. நிறைவேற்றத்திற்கான தீவிர முயற்சியில், தங்களின் இயல்புகளை துறக்கவேண்டியிருக்கிறது. நேர்மையை ஈடு வைத்து விலைபோக வேண்டியிருக்கிறது. மற்றவர்களை சலனமின்றி காவுகொடுத்துவிட்டு முன்னேற வேண்டியிருக்கிறது.

ஈடேறாத ஆசைகளுக்கு, அடிவாங்கிய ‘ஈகோ’விற்காக பழிவாங்க வேண்டியிருக்கிறது. தாரா செல்லப்பாவைச் சேரும்போது, பத்ரியையும் கணேசனையும் பழிவாங்கிவிட்டதாக நினைக்கிறாள்.

ஒருவனிடம் வாங்கிய அடிக்கு இன்னொருவனை உதைக்க வேண்டியிருக்கிறது. மாணவர்களிடம் வாங்கிய அடிக்கு, ராம் பிரசாத் செல்லப்பாவை மிரட்டி மகிழ்கிறான்.

வாலிபக் கனவுகளை தொண்டைச் சிரமம் ஏதுமின்றி எச்சில்கூட்டி விழுங்கிவிட்டு, கால்கட்டு போட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. (ரமணி-செல்லப்பா கல்யாண முடிவுகள்) லட்சியங்கள் கைவிட்டு போவதை தனக்குத்தானே எந்த பெரிய ஏமாற்றமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளமுடிவதை கசப்புடன் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. யார் யாரையோ கனவுகண்டு இறுதியில் கைமாட்டில் இருந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். இருவரது திருமணமும் இடைவெளிவரைக்குமான ஒரு திரைப்படத்தின் முடிவுபோலத்தான். இரண்டாவது பாதியில் ஏமாற்றங்கள் தொடர்வதற்கான தடயங்கள் முதல் பாதியிலேயே இருக்கின்றன (“கிராமத்து அடக்கவொடுக்கமான பெண்” என்கிற ரமணியின் ஆசுவாசமும் “எனக்கு தாராதான் சரி” என்கிற செல்லப்பாவின் கண்டுபிடிப்பும் மனபிம்பங்கள்தான்)

அம்மாவின் மீதான தனது உணர்வும் சரி, அவள் பிறரை தன்னிடம் அனுமதிக்கும் அளவும் சரி - இரண்டையுமே பிரக்ஞையின் பின்கட்டுக்கு தள்ளிவிட்டு போய்க்கொண்டிருக்கும்போது, ஒருவன் அதனை பச்சையாக சொல்லி, பிரக்ஞையின் முன்கட்டுக்கு கொண்டுவருவது சகிக்கமுடியாததாகிவிடுகிறது. (செல்லப்பா-மிஸஸ் பசுபதி-ரமணி)

நிஜவாழ்க்கையில் மிஸஸ் பசுபதியின் வேடங்களுக்கு( வங்காளி நாடக ரசிகை, பஜனை மாமி, மாடர்ன் மாமியார்) கிடைக்காத கரகோஷத்திற்கு ஏங்கித்தான் அவள் மேடையேறி நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகையாக வேண்டியிருக்கிறது.

உடலுறவின் திருப்தி / திருப்தியின்மையை பற்றி பேசும் திஜாவின் கதாபாத்திரங்கள் விநோதமானவர்களாக தோன்றுவதுண்டு. ஆனால், ஆதவன் அவர்களை இயல்பானவர்களாக காட்டியவர்.

பெண்ணைப்பற்றிய ‘பூச்சிப்பார்வை’ அல்லது ‘லட்சியப்பார்வை’ இந்த நாவலில் அகல்கிறது; பெண்கள் பற்றிய அந்தரங்கங்களை ஆண்கள் பகிர்ந்து கொள்வதைவிடவும், ஆண்கள் பற்றிய அந்தரங்கங்களை பெண்கள் எப்போதும் பகிர்ந்து வந்திருக்கிறார்கள் என்பது இந்த பார்வைகளுக்கு கிடைக்கும் சம்மட்டி.

அட வேறொன்றும் இல்லாவிட்டாலும், “நீ நார்மலாக இருக்கிறாய், செய்வதையெல்லாம் நன்றாகத்தான் செய்கிறாய்” என்று சமாதானம் சொல்லவாவது ஒரு ஆத்மா தேவைப்படுகிறது. அது ஒரு கைத்தட்டலாக, கழுத்துக்கு மாலையாக, பத்திரிக்கையில் பெயர் வருவதாக இருக்கலாம். (தாரா, செல்லப்பா, மிஸஸ் பசுபதி)

நாவலில் எல்லோரும் முடுக்கிவிடப்பட்ட குதிரைகளாக, பசுபதியின் பதவியும் வாழ்க்கைத்தரமும் பிரதிநுவப்படுத்தும் வெற்றி ஒன்றை அடைய துடிக்கிறார்கள். ஆனால், அதற்கு, ஆற்றலோ பொறுமையோ இன்றி அதனை எப்படியாவது அடைய நினைக்கிறார்கள். தங்களது நோக்கத்தை தங்களது குறைவான ஆற்றலை முன்னிட்டு மறுபரிசீலனை செய்யவும் தயாராயில்லை. இங்கிருந்து பிரச்னை தொடங்குகிறது.

பசுபதி போன்றவர்களுக்கு இன்னும் மேலே மேலே என்கிற பதட்டம் (தற்போதைய வெற்றியை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் ஒரே வழி) இருக்கிறது. மகன், மருமகள் என்கிற இளைஞர்களுக்கு முன்னால், இளைஞர்களின் அலைவரிசையில் செயல்படும் அனுபவசாலி என்கிற அடையாளத்தைப் பெறவும் துடிக்கிறார்கள்.

ஒரு மனிதன் போலித்தனமே இல்லாது இருப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. (இந்த வரி எழுதப்பட எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்கிறது !)

தன்மீது சதா கவியும் பொய்மை, தன்னில் சதா ஊறும் பொய்மை பற்றிய விழிப்புணர்வே மனிதனின் கைவிளக்கு. இந்த கைவிளக்கைக் கொண்டு, மனிதன் வாழ்க்கையின் நோக்கம் என்றோ, வாழ்க்கையின் வெற்றி என்றோ அவன் நிர்ணயித்துக்கொள்ளும் ஒன்றை நோக்கி பயணிக்கலாம்.

நாவலின் உருவம்

நாம் நம் கண்களால் உலகைப் பார்க்கிறோம். என் உலகில் நான் கதாநாயகன்; அடுத்தவன் உலகில் நான் துணை பாத்திரம்; ஒரே நிகழ்வை இரண்டு தடவைகள் ஆதவன் சொல்லி இதனை செய்து காட்டுகிறார்.

பௌதிக நிகழ்வுகளைவிடவும் மன உலகின் தோற்றப்பாடுகள் அமைவது, களைவது, ஆராயப்படுவது, ஏற்றுக்கொள்ளமுடியாமல் தத்தளிப்பது, தற்காலிகமாவாவது சமாதானம் அடைவது என்று கதை நகர்கிறது.

ஆதவனின் கலை

தமிழ் இளைஞனுக்கான எழுத்தாளர் ஆதவன். தமிழ் இளைஞிக்கு அம்பை. ஆதவனது கதைகளில் வரும் மனிதர்களின் பேச்சுமொழியும் உடல்மொழியும் மனமொழியும் ஒரே நேரத்தில் சதா பதிவாகியவண்ணம் இருக்கும்.

இது இளைஞர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடிய சொல்முறை; ஆனால், இது நாவல் வடிவத்தின் வீச்சை பெருமளவு குறைத்துவிடும் காரியமும் கூட.

சில இடங்களில் இந்த மனமொழி அளவுக்கதிகமாய் ஆராய்வதாய் இருக்கிறது : எ-கா- விஸ்வத்தின் மௌனத்தை நடராஜர் நடனத்திலிருந்து ஒதுங்கி இருப்பதாய் சொல்வது; தாயின் உடலைப் பார்த்து செல்லப்பாவின் உடல் தீப்பற்றிக்கொள்வது.

தேர்ந்த வாசகர்கள் பலர் கடந்துவந்த நிழல் விழுந்த பாதை ஆதவன்; மனவிகாசத்தின் கரடுபாதைகளை நினைவில் எழுப்பும் ஒரு பழுப்புநிற புகைப்படமாய் அவரது கதைகள் என்றும் இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------------------------------

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு