செவ்வாய், மார்ச் 20, 2007

ஜே.பி. சாணக்கனவுப்புத்தகம்-ஜெயந்தி சங்கர்

ஜே.பி.சாணக்யாவின் 'கனவுப் புத்தகம்'

- வாசிப்பு: ஜெயந்தி சங்கர் -

ஆணின் ego சீண்டப்படும் போது அவன் கொள்ளும் ஆக்ரோஷம், தன்னுடைய அபரிமிதமான பாலியல் உணர்வையே ஆணாதிக்கத்திற்கு எதிரான தனது பலமானத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணின் இயல்பு, என்று சில விநோத உணர்வுகள் இக்கதைகளில் சொல்லப் பட்டிருந்தாலும் அதிகமும் தாய்-மகள் அல்லது அக்கா-தங்கை ஒரே ஆணை விரும்புவது போன்ற உறவுச் சிக்கல்களே அதிகம் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகின்றன. இவ்வகை உணர்வுப் போராட்டங்களைப் படிக்கும் போது கிருஷ்ண சோப்தியின் சிறிய இந்தி நாவல் (தமிழில் - லட்சுமி விஸ்வநாதன் / நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா) 'மித்ர வந்தி'யின் நினைவு வந்தது. இரண்டும் வேறு பட்டிருந்தாலும் சில ஒற்றுமைகளைக் கொண்டவை. இந்த விதமான கருக்களைக் கொண்ட கதைகள் 'கண்ணாமூச்சி, 'ஆண்களின் 'படித்துறை', 'இரண்டாவது ஆப்பிள்' ,'அமராவதியின் பூனை' இதிலிருந்து மாறுபட்ட கதைகள் 'கடவுளின் நூலகம்', 'பதியம்', 'கனவுப்புத்தகம்', 'கோடை வெயில்', 'கருப்புக் குதிரைகள்', 'மஞ்சள் நீலம் வெள்ளை' போன்றவை.


விதவிதமான அனுமானங்களுக்கு வழிவிடக் கூடியது தொகுப்பின் முதல் கதையான 'கடவுளின் நூலகம்' (ப. 11). ஒரு அனுமானத்தை கதைஞரே கதையினூடாகச் சொல்லி விடுகிறார். அதுவும் நம்பக் கூடியதாக இருந்த போதிலும் உண்மையில் நாற்பது வயதைக் கடந்த கதையின் நாயகன் தான் ஏதோ காரணத்தினால் தன் கடந்த கால வாழ்க்கையின் நினைவுகளை இழந்திருப்பதாகத் தோன்றுகிறது. 'பேசாம நான் எங்கியாவது அடிபட்டுச் செத்திருக்கலாம்' ( ப.33) என்று நாயகி சொல்லுமிடமும் நாயகி கட்டிக் கொண்டிருந்த பழைய மாடல் வாட்ச்சும் (ப.34) இதை உறுதி செய்கின்றன. இக்கதையின் தலைப்பு நிச்சயம் ஆய்வுக்குறியது. நாயகனின் கடந்த காலமான ஆசிரியர் பணி ஊகிக்கக் கூடியது. அதே போல ஆசிரியர்-மாணவி காதலும் கூட. பாத்திரங்களுக்குப் பெயர் கொடுக்காமலே எழுதி முடித்திருக்கிறார். படிக்கும் தறுவாயில் இது வாசகனுக்கு உரைக்காத வகையில் நாயகனின் எண்ணவோட்டமும் நேர்த்தியான கதையின் கட்டமைப்பும் பலமாக அமைந்திருக்கின்றன. வாசகனின் ஏற்படும் எதிர்பார்ப்பு கதை சட்டென்று முடியும் போது ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். நீண்ட ஒரே வரியினைக் கொண்ட கடைசி பத்தி அவசியமா என்று தொன்றுவதையும் தவிர்க்க முடிவதில்லை.


தனது பிரதியாகவோ தனது பிம்பமாகவோ தன் மகளையோ மகனையோ நினைக்கும் ஒரு பெற்றோரின் நிலையினைத் துல்லியமாகச் சொல்லும் கதை 'பதியம்' (ப. 51). ஆனாலும், எத்தனை பெற்றோருக்கு அவனும்/ அவளும் ஒரு தனி மனிதன் / மனுஷி (an individual) என்ற சிந்தனை வந்து விடுகிறது? மகளைப் பற்றி செல்லம் விரித்திருந்த அனைத்துக் கற்பனைகளையும் மறந்து யதார்த்தத்தை விழுங்குவது வாழ்க்கையின் நிதர்சனத்தைப் புட்டுப்புட்டு வைக்கிறது.


எளிய சரள மொழி ஜே.பி. சாணக்கியாவின் பலம். life span என்பதற்கிணையான 'வாழ்வின் சட்டகம்' (ப. 17), 'தவறுணர்ச்சி' போன்ற சொற்களை கொஞ்சமும் துருத்திக் கொண்டிராத வகையில் மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தியிருக்கிறார். தனது உரைநடைக்கென்று உருவாக்கிக் கொண்ட மொழியை இவர் மிகக் கவனமாகக் கையாள்வது வாசகன் உணரக் கூடியது. இருந்தாலும், அவ்வப்போது ஆசிரியரினுள் இருக்கும் கவிஞன் எட்டிப் பார்க்கவே செய்கிறான். சாணக்கியாவின் உரைநடையில் 'காடு' லலிதாவின் தனியான நடையைப் பார்க்கும் (ப. 108); 'அன்னத்தின் உடலுறுப்புகள்' ஆண்களைப் பார்க்கும் (ப. 97); 'சாயங்காலம்' மெதுவாக எட்டிப் பார்க்கும் (ப. 111); 'கூரை' பார்த்துக் கொண்டிருக்கும் (ப. 114). இவையெல்லாமே ரசிக்கக் கூடியவை.


'கோடை வெயில்' கதையில் விவரிக்கப் படும் வெயிலைப் படிக்கப் படிக்க எனக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை நினைவு படுத்தியது. அவருக்கு 'வெயில்' மிகவும் பிடிக்குமாமே. கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் வழியில் உள்ளுணர்வினால் போலீஸ்காரரின் சூழ்ச்சியினை உணர்கிறான் சேகர். மனைவியிடம் அவனுக்கு இருந்த ஒருவித possessiveness தான் அவனில் அந்தக் கற்பனையை விரிக்கிறது. வரப் போகும் ஏதோ ஒரு இக்கட்டை முன்பே கற்பனையாகவோ கனவாகவோ நம்மில் உணர்த்தி விடும் விநோத கணங்களை நான் எல்லோரும் அனுபவித்திருப்போம். அது இங்கும் இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கிறது. போலீஸ்காரர் தன் பெண்டாட்டி செத்த அன்றே வசந்தாவின் மீது கண் வைத்து விடுகிறார். 'கறி சமைக்குமா?' என்று போலிஸ்காரர் கேட்பது சேகருக்குள் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது என்றே தோன்றுகிறது. கதை வளர வளர ஆசிரியரின் நடையும் பலவிதமான ஊகங்களுக்கும் வழிவிடுகிறது. கடைசியில் உண்மையிலேயே போலீஸ்காரர் அவர்களின் ஏழ்மையையும் சேகரின் வேலையில்லாத நிலையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு பாலியல் சுரண்டலில் இறங்குகிறார். வேலை வாகிக் கொடுக்கிறேன் என்று சொன்னதுமே வசந்தாவைத் தனதாகவே நினைக்கிறார் போலீஸ்காரர். அது அவர் சேகரை அப்புறப்படுத்தப்படும் அவசரத்திலும் (ப. 48 - 'நாளைக்கி காலைல எங்கூடவே கிளம்பி வந்திரு,..') கணவன்-மனைவி மகிழ்ச்சியில் மறைவில் கொஞ்சிக் கொள்வதை உணர்ந்து (ப. 47) குரல் கொடுத்து தடுத்து விடுவதிலும் தெரிகிறது. 'மாமா' என்று சேகர் போலீஸ்காரரைக் கூப்பிடுவது வசந்தா அவரை 'அண்ணா' என்று கூப்பிடுவதும் உறவுகளில் குழப்பத்தைக் கொடுக்கின்றன. திட்டமிட்டே தான் ஆசிரியர் இதைச் செய்தாரா என்றும் தெரியவில்லை.


'ஆண்களின் படித்துறை' யில் லலிதா தனது அம்மா அன்னத்திடமிருந்து தான் வேறுபட்டவள் என்று மற்றவர்களுக்குக் காட்டிக் கொள்ளவும் தனதும் ஒழுக்கத்தினை எல்லோர் மனதிலும் பதிய வைக்கவும் வேண்டிய நெருக்கடியில் இருக்கிறாள். அவளின் எண்ணங்களும் செயல்களும் (ப. 105) இயல்பாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. பல முறை நிராகரித்துக் கடந்து விட்டு, எல்லாக் கதைகளையும் படித்த பிறகு இக்கட்டுரைக்கென்று இந்தக் கதையினையும் படித்து முடித்தேன். அன்னத்தின் போக்கும் எந்த ஒரு ஆணிடமும் பொருளாகவோ பணமாகவோ பெற்றுக் கொள்வதில்லை என்ற அவளின் கொள்கையும் முரண்பட்டிருப்பதைப் போல முதலில் தோன்றக் கூடும். தன்னைச் சுற்றியிருக்கக் கூடிய ஆண்களின் பார்வையில் தன்னைக் கொஞ்சமும் தாழ்த்திக் கொண்டு விடாமல் நிமிர்ந்து நிற்க நினைக்கிறாள் என்பதும் புரியத் தான் செய்கிறது. இருந்தாலும், அன்னத்தின் பாத்திரப் படைப்பு எதார்த்தத்தையும் தாண்டி ஆச்சரியத்தையும் பல்வேறு விதமான உணர்வுகளையும் வாசகனின் மனதில் எற்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது. செல்வம் திட்டமிட்டு லலிதாவைக் காதலித்து தாய் மகள் இருவரையும் குறிவைப்பது என்பதை ஒரு ஆணின் குணநலனாகப் பார்க்க முடிகிறது. அதே சமயம் செல்வத்துடன் உடலுறவு கொண்டு விட்டு தன் மகள் லலிதாவுடன் அவனின் திருமணம் பற்றி பேசுவது பயங்கர அதிர்ச்சியைக் கொடுக்கிறது. இதெல்லாம் சாத்தியமா? இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? என்று ஏராளமான கேள்விகள் எழுகின்றன. கடைசியில் லலிதாவின் தற்கொலை அநியாயமாகவோ மிகைப் படுத்தப் பட்டதாகவோ தெரியவில்லை. தற்கொலைக்குத் துணியும் ஒருவரின் எண்ணங்களில் இருக்கக் கூடிய குழப்ப நிலையைச் சொல்லியிருக்கும் விதம் அருமை. லலிதாவின் தற்கொலை முயற்சி வெற்றியா தோல்வியா என்று சொல்லாமல் விட்டதும் நன்றாக இருக்கிறது.


'ஆண்களின் படித்துறை' கதையில் ஒரு இடத்தில் கூட 'குளித்தல்' எனும் சொல்லைப் பயன் படுத்தாமல் ஒவ்வொரு இடத்திலும் 'நீராடுதல்' எனும் சொல்லையே பயன்படுத்துவது ஏன்? தற்சயலா இல்லை திட்டமிட்டா? வேண்டுமென்றே என்றால் ஏன் அப்படி? தாவணி என்று சொல்லாமல் லலிதா 'அரைப் புடவை' உடுத்திச் செல்வதாகச் சொல்வதும் புதியதாக இருக்கிறது. பழைய சொற்களைப் புதுப்பிக்கும் நோக்கமோ என்னவோ. 'மஞ்சள் நீலம் வெள்ளை' கதையிலும் கூட கதையின் முதல் வரியே - சாலையாந்தோப்பில் அப்பு, குப்பு என்ற இரு நண்பர்கள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தார்கள்- என்பது. மிகவும் பழையரக வாக்கியமான இது அப்புக்கும் குப்புக்கும் பின்னால் வரப் போகும் இடைவிடாத சண்டையினை குறிப்பாக உணர்த்திடவா? 'ரெண்டாளம் கெட்டவள்' (ப. 105) என்றால் என்ன? 'வெகுளி'யா? ரிக்ஷாக்காரன், சேரி/சென்னை வட்டார மொழி, குடி, குழப்பங்கள் என்று ஜெயகாந்தனின் கதா மாந்தர்களையும் கதைச் சாயலையும் நினைவு படுத்துவதாக அமைந்திருக்கிறது 'கண்ணாமூச்சி' ( ப.70). விநோதமான தாய்-மகள் சக்களத்தி உறவும் போராட்டமும் பி.ஏ.கிருஷ்ணனின் 'புலிநகக் கொன்றையில்' வரும் விஷமிரக்கும் இளைஞனைப் பற்றிய பொன்னம்மாள்-ஆண்டாள் இருவரின் சிந்தனை ஓட்டங்கள் கொடுத்த அதே போன்றதொரு அதிர்வைக் கொடுக்கத் தான் செய்கிறது.


எடுத்துக் கொண்ட விளிம்பு நிலை மாந்தர்களின் கதைகளைச் சொல்லும் நூலாசிரியர் அதையே தன் எழுத்துக்குச் சாதகமாக்கிக் கொண்டு பாலியல் சொற்களையும் விவரிப்புகளையும் தேவைக்கதிகமாகவே கையாள்வதை நெருடலுடன் உணர முடிகிறது. (போர்னோ என்றால் என்ன என்று சொல்லக்கேட்ட அளவில், அவ்வகைகளின் பரிச்சயம் இல்லாத நிலையில்) porno வகையில் துளியும் தயக்கமில்லாமல் சேர்த்து விடக்கூடிய விவரிப்புகள் பெரும்பாலான கதைகளில். இவ்வளவு துக்கலாக (பச்சையாக?) தமிழில் இதுவரை யாரும் எழுதியிருக்கிறார்களா என்று யோசித்ததில் 'இல்லை' என்ற (இன்றைய எனது வாசிப்பில்) பதிலே மிஞ்சியது. கரிச்சான் குஞ்சின் 'பசித்த மானிடம்' பேசிய ஒரு பால் உறவு போன்ற எடுத்துக்காட்டுக்கள் பலவற்றில் சொல்லப் பட்டிருந்த கண்ணியமான மொழி இங்கு நினைவில் கொள்ளத் தக்கது. எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொண்டால் எழுதப்பட்ட விஷயம் மிகவும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியது. இருப்பினும் எதார்த்தம் என்ற பெயரிலோ மொழி என்ற பெயரிலோ வரம்புகள் மீறப்படாமல் இருக்கும் நடை மேலும் பரவலாம வாசகர்களைக் கண்டடையுமோ?


***

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு