ஜே.பி. சாணக்யாவின் 'கனவுப்புத்தகம்'- ஒரு பார்வை

ஜே. பி. சாணக்யாவின் 'கனவுப்புத்தகம்'.
மானஸாஜென்.
ஜே. பி. சாணக்யாவின் படைப்புகள் பாலுணர்வுகள் அழுத்தப்பட்டிருக்கு ஒரு சமகால தமிழ் மற்றும் இந்திய பசப்பல்களை தவிர்ப்பதற்காக பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து விழுபவை. இதன் காரணமாக பல அடுக்குகள் கொண்ட கதைகளானாலும் 'புணர்தல், புணர்தல் நிமித்தம்' என வகைப்படுத்தி விடலாம் அவரது கனவுப் புத்தகத்தின் பெரும்பாலான கதைகளை. உடலின் இச்சைகளை போற்றுவதும், துய்ப்பதும், கீழ்த்தரமான வெளிப்பாடுகள் என்றும் அவற்றை ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும், கடந்து செல்ல வெண்டுமென்றே கிட்டத்தட்ட எல்லா மத தத்துவங்களும் அறிவுறுத்தினாலும், இந்திய (இந்து, பெளத்த, ஜைன) மத தத்துவங்களில் இக்கருத்தின் ஆதிக்கம் ஆழமானது, அல்லது அப்படி அறிவுறுத்துவதாகத்தான் சராசரியான சமகால இந்தியன் புரிந்து கொண்டுள்ளான்.(காமத்தை அங்கீகரிக்கும் தந்திரசாஸ்திரங்களும் கூட புணர்தலை ஒரு கதவு போலத்தான் பாவிக்கின்றன. அது ஒரு இடமல்ல, வேறு ஒரு இடத்தை சென்றடைவதற்கான ஒரு வாயில்.) இதன் காரணமாக காமத்தை, காதலாக்குவதும், காதலை தெய்வீகமாக்குவதுமான ஒரு பாசாங்கு விரிவு கொள்கிறது. இன்னொரு புறம் உடலின் இச்சைகள் மனிதனை அலைக்கழிக்கிறது. சமூகக் கோட்பாடுகளையோ, மதிப்பீடுகளையோ ஒழுக்க விதிகளையோ அவை அறிவதில்லை, சுமத்தப்பட்டாலோ சமூகத்தின் ஒப்புதலுக்காக அவைகளை உடல் கைவிடுவதுமில்லை, காத்திருப்பதுமில்லை. தான் மதிப்பிடப் படுவதற்கான சமுகத்தின் அளவு கோலுக்கும் தன் உடலின் தேவைகளுக்கும் இடையே மாட்டிக்கொள்ளும் மனிதன் பிளவுபட்டவனாகிறான், குற்றவுணர்வு கொள்கிறான். தேவை, நிராகரிப்பு, குற்றவுணர்வு என பல கோணங்களில் அசைந்து கொண்டிருக்கும் ஆடிகளுக்கிடையில் மாட்டிக் கொள்ளும் ஒரு சிறுவனும், சிறுமியும் பின் எப்போதுமே திரும்ப முடியாத பிம்பங்களின் அலைகழிப்பில் சிக்கிக் கொள்வதன் ஊடாக ஆணும், பெண்ணுமாகத் திடப்படுகின்றனர்.புணர்விற்கான வழியாகவும், சமூகத்தின் அங்கிகரிப்பிற்குமான அடையாளமாகவும் இந்திய சமூகத்தின் பிரஜை, குடும்ப அமைப்பையும் கணவன் மனைவி உறவையும் அடையாளம் காண்கிறான். உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், நிர்பந்தம் உளவியல் ரீதியான பெரும் பாரமாகக் கவிழ்கிறது அவர்கள் மீது. அது பயம், கவலை, அதிகாரம், ஆதிக்கம், ஒடுக்குமுறை என சிராய்ப்புகளையும், காயங்களையும், புண்களையும், வடுக்களையும் நிரந்தரமாய் உற்பத்தி செய்து கொண்டே வாழ்வினை புரையோடிப் போன ஒரு வதைக் கூடமாக மாற்றிவிடுகிறது. நடுத்தர, கீழ் தட்டு நிலையிலிருக்கும் ஆண்களும், பெண்களும், காமத்தை தன் உறவின் சிக்கல்களோடு எதிர் கொள்வதும், தந்திர யுக்திகளின் ஊடாக அதிகாரத்திற்கான சமன்பாடுகளை மாற்றிக் கொண்டே இருப்பதுமான படக்காட்சிகளாக கனவுப் புத்தகம் விரிவு கொள்கிறது. கலவி, கரும்பாகவும், கம்பாகவும் மாறி மாறி சுவைக்கவும், துவைக்கவும் செய்கிறது. இன்னொரு கோணத்தில் இந்திய சமூகத்தில் பாலுணர்வு ஒடுக்கம் என்பதை ஆரிய சிந்தனை முறையாகக் கருதினால், அதன் ஆதிக்கம் குறித்த எதிர்ப்புணர்வில் விளைந்த திராவிடப் படைப்புகள் இவை என்றும் கருதலாம்.




* * * * * * * * * * * *


ஜே. பி. சாணக்யாவின் கதா மாந்தர்கள் நுணுக்கமான சித்தரிப்பின் ஊடாக உயிர்க்கிறார்கள். இரையைப் பின் தொடரும் புலியென சத்தமின்றி பின் தொடரும் கவனத்தில் ஒரு சமூகத்தட்டு மனிதர்களின் அநிச்சையாய் இயல்பான உடல் மொழிகள், பாவனைகள், பேச்சு பழக்கங்கள், எதுவும் விடுபடுவதில்லை. இத்தனைக்கும் அக உலக எண்ணங்களை அவர் பெரும்பாலும் தொடர்வதில்லை. கச்சிதமான புற சித்தரிப்புகளின் ஊடாகவே கடினமான உடல் உழைப்புக்குச் சொந்தமான அம் மக்களின் வாழ்வினை நமக்கு அறிமுகப் படுத்திவிடுகிறார். தன்னைச் சூழ்ந்த மக்களின் வாழ்க்கை மீது பிரக்ஞையும், அக்கரையும், அன்பும் கொண்ட மனதிலிருந்தே இத்தகைய புனைவுகள் சாத்யமாகின்றன என்பதே ஜே. பி. சாணக்யாவின் பலம். இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகளின் மையங்கள் ஒருமை கொள்வதற்கு மாறாக சிதறியே காணப்படுகின்றன. இக் குவிமையச் சிதறல் ஒரு சிறுகதை வாசிப்பு அனுபவத்தை அதன் முடிவில் இருத்தாமல் அதன் பயணத்திலேயே தக்கவைத்துக் கொள்கிறது. கனவுப்புத்தகம், ஆண்களின் படித்துறை, கடவுளின் நூலகம், கறுப்புக்குதிரைகள் போன்ற கதைகள் கறாராக எடிட் செய்யப்பட்டிருந்தால் நவீன சிறுகதைப் போக்கிற்கான மாதிரிகளாக தன்னைப் பிரஸ்தாபித்துக் கொள்ளாவிட்டாலும், இன்னமும் சிறப்பான இடத்தை அடைந்திருக்கும் என்பது எனது எண்ணம். கனவுப் புத்தகத்தின் கதைகளை அதன் தன்மைகளைக் கொண்டு மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம். இரண்டாவது ஆப்பிள், கனவுப்புத்தகம், கடவுளின் நூலகம், ஆண்களின் படித்துறையின் முற்பகுதி ‘ஆதியில் எல்லாம் ஒளியாய் இருந்தது’ என்னும் வாக்கியம் போல புனைவு கொள்ளும் கதைகள். அமராவதியின் பூனை, மஞ்சள் நீலம், ஆண்களின் படித்துறையின் பிற்பகுதி, வெள்ளை, கண்ணாம்பூச்சி போன்ற கதைகள் மறு அடுக்கு. உடலின் இச்சைகள் அலைகழிக்கும் வாழ்க்கையில் ஆண்களால் திருப்திபடுத்தவே இயலாத பெண்களும், அவர்களின் ‘உறவுகளுக்கு விஸ்வாசமற்ற’ தன்மையும், அவர்களை தக்கவைத்துக் கொள்ள விழையும் ஆண்கள் தங்களின் சகல வீரத்தையும், ஆண்மையும் வெளிப்படுத்தியும் கூட புரிந்து கொள்ள முடியாத புதிர்களாய் பெண்கள் விரிவுகொள்வதையும், தங்களின் சந்தேகங்களிலும், பயங்களிலும் சிறு குழந்தைகளாய் அவமானப்பட்டு சிறுத்துவிடும் ஆண்களும், என விரியும் கதைகள். கோடைவெயில், பதியம், கறுப்புக்குதிரைகள் போன்ற சமூக அலைகழிப்பில் சிதறும் மனித சித்தரிப்புகளின் கதைகள். சிறுபத்திரிக்கைச் சூழலில் பழக்கமான கதைகள். திரும்பத் திரும்ப அறிமுகப் படுத்தப்பட்டதாலேயே அவை அதிர்வுகள் ஏதும் ஏற்படுத்தாமல் சற்றே மிகை போலத் தோற்றம் கொள்கின்றன.

பாலுணர்வுகள் குறித்த பாசாங்குகள் குறைந்த சமூகத்தில் இக் கதைகளின் பின்னுள்ள ‘புரட்சி’ பெரிதும் மட்டுப் படுகிறது. ஆனால் காமம் சார்ந்த அரசியல் கூர்மைப்படுகிறது என்பதையும் சிங்கப்பூரின் சூழலில் வாழும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.


* * * * * * * * * *

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு