உத்ராபதி- மகாபாரதத்தில் பெண்ணியம் பற்றி
மகாபாரதத்தில் பெண்ணியம் (இரு நாடகங்கள்)
இந்தி மூலம் : நந்தகிஷோர் ஆச்சார்யா தமிழில் : சரஸ்வதி ராம்நாத்
உத்ராபதியின் பார்வையில்
மகாபாரதம் உண்மையில் நடந்ததா? என்ற கேள்வி எழுவதோடு ஒர் சமூகத்தின் கலாசாரத்தை பாதுகாக்க எழுதப் பட்ட புராணங்களில் ஒன்று என்பதையும் கேள்விக்குள்ளாக்கிய ஒரு சராசரி வாசகனின் ஓர் புரிதல் தொகுப்பே இது
முதல் நாடகம்:
'அஸ்தினாபுரம்' இது மறு வாசிப்பு முறையில் படைக்கப்பட்ட நாடகம். இதன் பாத்திரங்களில் முதன்மையானது `சுபா' என்ற பாத்திரமே. இதன் மூலம் நம் காலத்தில் நமக்கு எழும் கேள்விகளை மகாபாரதத்தின் வரலாற்று தழும்புகளுக்கு காரணமான ஒருவரோடு போரிட வைத்திருப்பது சிறப்பாக உள்ளது.
வாரிசு இன்றி தவிக்கும் அரசின் வம்சக் கொடிக்கு நீர்வாற்று வளர்க்க துடிப்பதன் மூலம் பெண்களின் உணர்வுகளை சிக்கலுக்குள்ளாக்கும் ராஜ மாதா சத்தியவதி ஆணாதிக்க உணர்வுள்ள பெண்ணாகவே காணப்படுகிறாள்
`நியோக்' முறைக்கு சம்மதிக்க வைக்க முயற்சிக்கும் போதும் இவர் பீஷ்மரோடு வாதிடும் போதும்`சத்தியம்' (பிரதிக்ஞை) தர்மத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
மகாபாரதத்தின் `நியோக்' என்ற வழக்கத்தின் நீட்சியாகவே இன்றும் சொத்துடமை பாது காக்கும் சமூகத்தில் தமது பரம்பரை சொத்துக்களை தொடர்ந்து பாதுகாக்க உறவுகளுக்குள்ளேயே கட்டாய திருமணங்கள் நடந்துவருவதை புறிந்து கொள்ள முடிகிறது.
அன்றய அரசியல் தர்மமாக கருதப்பட்ட `நியோக்' மூலம் கேள்விக்குள்ளான பெண்களின் உணர்வுகளுக்குஆதரவாக போரடிய போராளியாக நாடகத்தின் நாயகி `சுபா' நமக்கு தெரிகிறாள்.பெண்கள் கற்பனை மகத்துவத்துடன் கூடிய விளைச்சல் நிலமாக கற்பிக்கப் பட்டிருந்ததால் அவர்களது உணர்வுகள் அடக்கிவைக்கப் படுவதற்கே உதவியது.அரசியல் தருமமாக கருதப் பட்டது பெண்களின் மன உணர்வுகளின் தருமத்தோடு போரிட்டுக் கொண்டிருந்தது
பெண்களின் உணர்வுகள் அவர்களுக்கு எதிரான சாஸ்த்திர சம்பிரதாயங்களிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததது (இன்றும் அதன் தொடர்ச்சிகள் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன.)
இந்த நாடகத்தில் சுபாவின் கதாப் பாத்திரம் பெண் சமூகத்தின் பிரதிதி என்று சொன்னால் மிகையாகாது. பீஷ்மரின் சித்தாந்ததை விமர்சிக்கும் சுபா, நடைமுறையில் அவரது சித்தாந்துடன் அவரே முறண்படுவதைச் சுட்டிக்காட்டுவதும் சித்தாந்தத்துக்கும் நடைமுறைகளுக்கும் உள்ள இடைவெளியை நீக்குபவர்கள் யாரோ அவர்தான் 'லட்சிய புருஷர்' என்பதும் அத்தகைய நபர்கள் யாரும் குருவம்சத்தில் இல்லை என்பதோடு யாவரையும் முட்டாள்கள் என்பதும், இறுதியில் அத்தகய முட்டாள்கள் இல்லாத அஸ்தினாபுரத்தில் வாழும் அவளது ஆசையை பூர்த்தி செய்து கொள்வதும்
இத்தகய விடுதலை உணர்வுகளை பெறும் வாய்ப்புகள் இன்றையப் பெண் சமூகத்தில் யாருக்கும் கிடைக்காது. வாரிசு உரிமைப்பற்றி பேசும் போது சுபாவின் வாதத்திலிருந்து ஓர் முக்கிய கருத்தை இன்றும் நாம் மனதில்கொள்ள வேண்டும். "அரசாட்சியை ரத்தத்தின் தூய்மை மற்றும் வம்சப் பரம்பரையுடன் இணைக்காதீர்கள், அது ஒருவனது சிறப்பியல்புகள் மற்றும் குணங்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்" இந்த நாடகத்தின் முறண்பாடுகளாக சில சம்பவங்களைப் பார்ப்போம்:
1. `நியோக்' என்ற வழக்க முறையில் அரசாழும் வரிசுக்குக்காக முயற்சிக்கும் கட்டங்களில் ஒரு காட்சியில் பீஷ்மரிடம் பேசும் ராஜ மாதா சத்தியவதி (பக்கம் 15) "கிடைக்கும் வீரிய விதை சரியானதாக இல்லாவிடில் ராஜ்யத்திற்கே ஆபத்தாகமுடியலாம்" என விதைத்தான் முக்கியம் என்று சொல்லும் போது, பீஷ்மர் ஏற்றுக் கொள்வதைத் தொடர்ந்து வரும் மற்றொரு காட்சியில், மாதா சத்தியவதியின் கட்டளையை நிறைவேற்ற வரும் வியாசர், அம்பிகாவிடம் பேசும்போது (பக்கம் 25) "விதைக்கு எந்தவித மகத்துவமும் இல்லை மகத்துவம் எல்லாம் நிலத்திற்கே" என்பது...
2. வாரிசு உரிமை பற்றி விவாதிக்கும்போது, விதுரரை சூத்திரன் என்று கூறும் பீஷ்மர், துரியோதனன் கர்ணனுக்கு பட்டம் சூட்டும் போது (அவன் அரசாளும் உரிமையுடைய குந்தியின் மகன் என யாரும் அறியாமல் இருக்கும் போது) பேசாமல் இருந்துவிட்டு தாதியின் மகன் என்பதால் விதுரரை ஏற்றுக் கொள்ளாதது.
3. தொடர்ந்து பேசும் பீஷ்மர் "பெண்களுக்கென்று சாதி ஏதுமில்லை அவள் தன் கணவனின் சாதியால் அறியப்படுகிறாள்" என்று கூறும் (பக்கம் 43) ராஜா விசித்திர வீரியனை, எஜமானராகவும் எல்லாமுமாக கொண்ட சுபாவின் மகன் விதுரரை சூத்திரன் என்று கூறுவது...
4. "கர்ணனை துரியோதனன் அரசனாக்கியபோது பீஷ்மர் ஏன் தடுக்கவில்லை?" என்று கேட்ட குந்தியிடம் சுபா, `அவன் அம்பிகாவின் பேரன்.' கூறுகிறாள், அப்படியானால் கர்ணனைப் பற்றி முன்கூட்டியே தெரிந்ததால் தடுக்கவில்லை என்றாகிறது, ஆனால் இதற்கும் முந்திய காட்சியில் `கர்ணன் முடிசூட்டிக் கொள்ளும்போது பீஷ்மர் ஏன் சும்மா இருந்தார்?' என்றகேள்வி எழுப்பப் படுகிறது
இறுதியில் இந்த நாடகத்தை படித்து முடிக்கும் போது நம் மனதில் முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட கருத்துக்கள் இரண்டு. முதலாவதாக அன்றைய காலம் தொட்டு பெண்களது உணர்வுகள் ஆண்களுக்கு நிகராய் மதிக்கபடாததோடு பல சமயங்களில் கேவலப்படுத்தப் பட்டு வருவது இன்றளவும் தொடர்வதை சுட்டிக் காட்டுகிறது; இரண்டாவதாக
வாரிசு உரிமைப்பற்றி பேசும் போது சுபாவின் வாதத்திலிருந்து ஓர் முக்கிய கருத்தை இன்றும் நாம் மனதில் சுழல விட்ட ஒன்று "அரசாட்சியை ரத்தத்தின் தூய்மை மற்றும் வம்சப் பரம்பரையுடன் இணைக்காமல், அது ஒருவனது சிறப்பியல்புகள் மற்றும் குணங்களை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்" என்பதாகும்.
******
இரண்டாவது நாடகம் "உடலுக்காப்பால்"
இதில் சாபத்திற்குள்ளான ஒரு சக்ரவர்த்தி தனது முதுமையிலும் காம உணர்வால் பாதிக்கப் படுகிறார்தனது மகன்களில் ஒருவரான இளவரசன்`புரு'வின் இளமையை இரவலாகப் பெற்று தன் காம உணர்சிகளோடு போராடுகிறார்
தான் பெற்ற பிள்ளையின் இளமையைத் தாங்கி வந்திருக்கும் சக்ரவர்த்தியுடன் சேர மறுக்கும் ராணியின் உணர்வுகள், அதே சமயம் இளவரசன்`புரு'வின் இளமையை விரும்பும் தேவலோகப் பெண் சக்ரவர்த்தியுடன் சேர்ந்து அணுபவித்துவிட்டு போகும் போது சக்ரவர்த்தியிடம் எழுப்பிவிட்டு போகும் விவாதங்கள்இறுதியில் சக்ரவர்த்தி தான் இரவலாகப் பெற்ற இளமையை தனது மகன் `புரு'விடமே திருப்பி தரும் போது தனது தந்தை தாங்கிய இளமையை திரும்பப் பெற மறுக்கும் அவனது உணர்வுகள்,
இவையாவும் மனித சமூகத்தில் காம உணர்ச்சிகளுக்கு அடிமையாகிப் போகும் மனிதர்களயும் (சக்ரவர்த்தி மற்றும் தேவலோகப் பெண் போன்றவர்கள்)அதே சமயம் மனித உறவுகளை மதிக்க விரும்பும் மனிதர்களின் (ராணி மற்றும் இளவரசன் புரு போன்றவர்கள்)மனப் போரட்டத்தையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது.
இந்த நாடகத்தைப் படித்து முடித்த போது நமது சிங்கை நாளிதழ் தமிழ் முரசில் ஒரு செய்தி என்னை பாதித்தது`தான் பெற்ற மகளை தொடர்ந்து சில மாதமாக கற்பழித்து வந்த தந்தையைப் பற்றியது'
கூடவே நமது சமூகத்துக்கு சரியான பால் கல்வி தேவை என்ற உணர்வையும் ஏற்படுத்தியது
இப்போது உள்ள அறிவியல் பாடங்களில் உள்ள இரு பாலரின் உடல் கூறுகள் பற்றிய கருத்துக்களோடு மனித வாழ்வில் வயதுகளுக்கு ஏற்ப உண்டாகும் உணர்வுகளின் மாற்றங்கள்,உறவுகளுக்கிடையே உள்ள அன்பு, உறவுகளுக்கு அப்பார்ப்பட்டவர்களிடம் காட்டப்படும் அன்பு,காம உணர்ச்சிகளின் வேறுபாடுகள், உண்மையான காதல், மோகம் மற்றும் infactution எனப்படும் முறையற்ற மோகம் போன்றவைகளை முறையாக கல்வியில் சேர்ப்பதன் மூலம் இனி வரும் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்பதை உறுதியாக நம்புகிறேன்