இராம.கண்ணபிரான்- “மகாபாரதத்தில் பெண்ணியம்” குறித்து:
இராம.கண்ணபிரான்- “மகாபாரதத்தில் பெண்ணியம்” குறித்து:
01
பேராசிரியர் நந்தகிஷோர் ஆச்சார்யா, மகாபாரதம் கூறும் வழக்கமான கதையில் வருகின்ற பீஷ்மர் சபதம், குருஷேத்திரப் போருக்குப் பிந்திய பாண்டவர் இராஜ்ஜியம் முதலிய கூறுகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு, மகாபாரதக் கதையின் ஊடே தென்படும்சாத்தியப்பாடுக் கதை அம்சங்களைத் தம் கற்பனையில் உருவாக்கி, பீஷ்மர் சபதம் வெவ்வேறு நிலைகளில் எதிர்நோக்கும் சவால்கள், குருவம்சத்து வாரிசுகள் கோரும் இராஜ்ஜிய அரசுரிமை போன்றவற்றை பின்னணிச் செய்திகளாக ஆக்கி, அரண்மனைப் பெண்டிர் அனுபவித்த உடல்-மன வேதனைகளை இன்றைய பார்வையில் தருகிறார், ‘ அஸ்தினாபுரம்’ என்ற தம் நாடகத்தின் மூலம்.
02
சந்துனு மஹாராஜா ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, இளம்பெண் சத்யவதியைக் கண்டு மையல் கொள்கிறார். திருமணம் புரிந்தால், தம் மகள் சத்தியவதியின் வாரிசுகளே சந்துனுவின் நாட்டை ஆளும் உரிமை பெற வேண்டும் என்று, சத்யவதியின் தந்தை அவரிடம் கேரிக்கை விடுகிறார்.
சந்துனு ராஜாவின் மூத்த மனைவி கங்காதேவி மூலம் பிறந்திருந்த பீஷ்மர், தம் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தமக்குச் சூட்டப்பட்டிருந்த யுவராஜா பட்டத்தைத் துறந்து, எதிர்காலக் குருவம்ச அரச பதவிக்குத் தம்மால் எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக, தம் ஆயுள் முழுவதும் பிரமச்சரிய விரதம் பூண்டு நிற்பதாகச் சபதம் செய்கிறார். அதன் பிறகு, சந்துனு மன்னருக்குச் சத்யவதி இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள்.
சத்யவதிக்குச் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் என்ற இரு மகன்கள் பிறக்கிறார்கள். மன வலிமை குறைந்த சித்திராங்கதன் முதலில் இறந்துபோக, சந்துனு மஹாராஜாவுக்குப் பிறகு, விசித்திரவீர்யன் அஸ்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இராஜ்ஜியத்தை ஆள்கிறான். கொஞ்ச காலத்திற்குப் பின்னர், காச நோயால் அவதியுற்ற விசித்திரவீர்யனும், சந்ததி இல்லாமல் மரணமடைகிறான். அவனுடைய அம்பிகா, அம்ப பாலிகா என்ற இரு மனைவியரும் தம் இளவயதில் விதவைகள் ஆகின்றனர். அஸ்தினாபுர இராஜ்ஜியம் அரசன் இல்லாமல் தவிக்கிறது. அன்றாட அரச காரியங்கள், சத்யவதி பீஷ்மர் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன.
03
இதுவரை நாம் கண்ட கதைக்கூறு, மகாபாரதம், சொல்லும் வழக்கமான கதையின் ஒரு பகுதி ஆகும். இனி, பீஷ்மரின் சபதம் கேள்விக்கும், குற்றச்சாட்டுக்கும் உள்ளாகும் நாடகக் காட்சிகளைப் பார்ப்போம்.
இரண்டாவது காட்சியில், பீஷ்மரும் அவரது சிற்றன்னை சத்யவதியும் உரையாடுகிறார்கள்.
“உன் சபதம் எனக்கு வியாகூலத்தைத் தருகிறது. என் வயிற்றுப் பிள்ளைகள் சித்திராங்கதன், விசித்திரவீர்யன் ஆகியோர் அரச உரிமையில் எந்தக் குறுக்கீடும் ஏற்படக்கூடாது என்றுதானே, என் தந்தை உன்னிடம் வாக்குறுதி பெற்றார். இப்போது சந்ததியே இல்லாத நிலையில், உன்னுடைய சபதம் அர்த்தம் இழந்து நிற்கிறது, பீஷ்மா! நான் உனக்கு உன் சபதத்திலிருந்து விலக்கு அளிக்கிறேன். என் மகன் விசித்திரவீர்யன் மனைவிகளாக இருந்த அம்பிகா, அம்ப பாலிகா ஆகிய இருவரையும் நீ மணந்து வம்ச விருத்தி செய்”, என்று சத்யவதி பீஷ்மரிடம் கூறுகிறாள்.
“என் ஆயுள் பூராவும் பிரம்மச்சாரியாக இருப்பேன் என்ற விரதத்தைப் பூண்டிருக்கிறேன். பெண்ணுடன் சரீரச் சேர்க்கை என்ற எண்ணமே, எனக்கு நடுக்கத்தைத் தருகிறது, தாயே!” என்கிறார் பீஷ்மர்.
“ பெண்ணைக் கண்டு நடுங்கும் நீ, ஒரு கோழை! குருவம்ச வாரிசுக்குப் பயன்படாமல், என்றோ செய்த ஒரு சபதத்துடன் ஒட்டிக் கொண்டு, மூவுலகிலும் புகழ் பெற்றுவிட்ட ஒரு சுய பிம்பத்துடன் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்,” என்று சத்யவதி பீஷ்மரின் சபதத்தைக் குறை கூறுகிறாள்.
ஆறாம் காட்சியில் பீஷ்மர், இறந்து போன தன் தம்பி விசித்திரவீர்யனின் மனைவி அம்பிகாவிடம் உரையாடுகிறார்.
“திருதராஷ்டிரன் பார்வை அற்றவன், பாண்டுவோ இரத்தச் சோகை பிடித்த நோயாளி. நீயும், அம்பபாலிகையும் என் மூத்த சகோதரர் வியாசரிடம் விருப்பம் இல்லாமல் உங்களை ஒப்படைத்ததாலேயே, இவர்கள் இருவரும் குறைகள் உடையவர்களாகப் பிறந்திருக்கிறார்கள். குருவம்சத்திற்கு ஒரு ஆரோகியமான ஓர் அரசகுமாரன் வேண்டும். அதனால், சிற்றன்னை சத்யவதி மீண்டும் வியாசரை நியோக் ஏற்பாட்டுக்கு அழைத்திருக்கிறார்,” என்று பீஷ்மர் அம்பிகாவிடம் சொல்கிறார்.
“காசியில் நடைபெற்ற எங்கள் சுயவரத்தில் கலந்து கொண்டு, அங்கு வந்திருந்த பல நாட்டு இராஜகுமாரர்களை வென்றீர்கள். உங்களின் வலிமையும், வீரமும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அப்போதே உங்களை நான் என் மனதில் மணவாளராக வரித்துக் கொண்டேன். காசியிலிருந்து அஸ்தினாபுரம் வந்த பிறகுதான், உங்கள் பிரம்மச்சரிய விரதம் பற்றியும், உங்கள் தம்பி விசித்திரவீர்யனுக்கு, என்னையும், என் இரு சகோதரிகளையும் தாரங்களாகக் கொண்டுவந்திருப்பதைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். இன்றுவரை உங்கள் பால் உள்ள என் காதல் உணர்வு குறையவில்லை நியோக் உறவில், ஆண் பெண் இருபாலரிடமும் பரிபூரண சமர்ப்பணம் தேவை. அப்போதுதான் குழந்தை விக்கினம் இல்லாமல் பிறக்கும். வியாசரின் முதல் தீண்டுதலில் நான் ஜடமாகிப் போனேன். மீண்டும் அவர் எதற்கு? இப்போது தாங்கள் இல்லையா? என்னைக் கலந்து வம்ச விருத்தி செய்யுங்கள். உங்களுக்கு ஏற்ற வகையில், என்னிடம் நிறையவே இருக்கிறது”, என்று கூறி அம்பிகாதன் மனக் கதவைத் திறக்கிறாள்.
அப்போது தற்செயலாக அங்கு வந்த தன் மாமியார் சத்யவதியிடம், “பீஷ்மரின் சபதம், குருவம்சத்தின் வாரிசு விருத்திக்கு ஏற்பட்டுள்ள ஒரு சாபம் தன் தந்தையை சந்துனு மன்னரின் கிழ வயதுக் காம ஆசையை அன்றே இவர் தடுத்திருக்க வேண்டும் ஆனால், இவர் தன்னையே அவருக்குத் தியாகம் செய்தார். சந்துனு மகாராஜாவின் பலவீனத்திற்குப் பீஷ்மர் சபதம் வழி, குருவம்ச நாடு ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?” என்று அம்பிகா வெடிக்கிறாள்.
நாடகத்தின் இரண்டாம் காட்சியில், சத்யவதி வம்ச விழுதுக்காகப் பீஷ்மரிடம் அவருடைய சபதத்தை விடும்படி கேட்டதையும், ஆறாம் காட்சியில் அம்பிகா தன் ஒருதலைக் காதலை பீஷ்மரிடம் கூறி, அவருடைய சபதத்தைத் துறக்கும்படி வேண்டியதையும் நாம் கண்டோம்.
எட்டாம் காட்சி, தம் தந்தைக்கு செய்திருந்த தியாகத்தாலும், தம் பிரம்மச்சரிய விரதத்தாலும் மூவுலகிலும் பெருமையடைந்திருந்த பீஷ்மர், குருவம்சத்தில் தூய இரத்த வாரிசு பற்றி ஒரு மதர்ப்பு எண்ணம் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. இக்காட்சியில்தான் விதுரரின் அன்னை சுபா, பீஷ்மரிடம் நேரடியாக அவர் சபதத்தை இடித்துரைக்கிறாள்.
பாண்டுராஜா மரணமுற்றதும், பீஷ்மர் சத்யவதியின் ஆதரவோடு, திருதராஷ்டிரரை அஸ்தினாபுர அரியணையில் அமர்த்துகிறார்.
பார்வையற்ற திருதராஷ்டிரரை விட, ஆரோக்கியமான தன் மகன் விதுரன் அரசாள எல்லாத் தகுதிகளும் பெற்றவன் என சுபா பீஷ்மரிடம் வாதிடுகிறாள்.
அதற்குப் பீஷ்மர், “ நீ முன்பு அம்பிகாவுக்குத் தாதிப் பெண்ணாகப் பணி புரிந்தவள். நியோக் வழி, விதுரன் வியாசருக்கு உறாவானவன், என்றாலும், அவன் உன் வயிற்றில் பிறந்ததால் ஒரு சூத்திரன் ஆகிறான். க்ஷத்திரியன் பாண்டுவுக்கு, விதுரன் சகோதரன் என்றாலும், அவன் பாண்டுவுக்குப் பந்துவாகவே இருக்க முடியும்; அரசனாக முடியாது. குருசபையினரும், அமைச்சர் சபையினரும், பிரஜைகளும் விதுரனை குருவம்சத்தவனாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், “ என்கிறார்.
ஆவேசம் கொண்ட சுபா, “ வாரிசு விஷயத்தில் இரத்தத் தூய்மை பற்றி உங்களுக்கு ஓர் அழுத்தமான எண்ணம் இருப்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது, அரண்மனைக் குருசபையிலும், அமைச்சர் அவையிலும் இருப்பவர்கள் உங்கள் வம்சத்தவர்கள்தானே! குருவம்சம் சார்ந்த நன்மைகளே நாட்டுக்கும் நன்மைகள் என்று பிரஜைகளுக்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து கற்பிதம் செய்து, அவர்கள் மனங்களில் ஒரு பொய்யான பிரமையை உருவாக்கி வைத்துள்ளீர்கள். பீஷ்மரே நீர் சபதம் மேற்கொண்ட தினத்தன்றே உம்முடைய உண்மையான, தூய இரத்தம் கொண்ட குருவம்சம் செத்துப் போய்விட்டது!” என்று கொட்டுகிறாள்.
04
பேராசிரியர் நந்தகிஷோர் ஆச்சார்யா, ‘அஸ்தினாபுரம்’ என்ற தம் நாடகத்தை ஒன்பது காட்சிகளாக எழுதியிருக்கிறார். காட்சிகள் இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஆகியவற்றை, அவர் பின்னோக்கும் காட்சிகளாக அமைத்து, அவற்றில் பீஷ்மரின் சபதம் வேறுவேறு நிலைகளில் எதிர்நோக்கும் சவால்களையும், அவர் தம் குருவம்சத்தின்பால் காட்டிய பாரபட்சப் பிடிப்பையும் காட்டுகிறார்.
ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய ஐந்து காட்சிகளில், வயோதிகப் பெண்களான சுபாவும் குந்தியும் விதுரர் இல்லத்தில் அமர்ந்து, ஓர் இரவு முழுவதும் அதிகம் உரையாடுவதாக நாடகாசிரியர் அமைத்துள்ளார்.
பதினெட்டு நாள் குருக்ஷேத்திரப் போரில், குரு வம்சக் கௌரவர்களை தங்கள் வீரத்தால் வென்ற குருவம்சம் இல்லாத பாண்டவர்கள், அஸ்தினாபுர இராஜ்ஜியத்தை ஆளத் தொடங்கிய நேரம் திருதராஷ்டிரரும், அவர் மனைவி காந்தாரியும் காட்டுக்குச் செல்லவிருக்கிறார்கள் அவர்களுடன் போரில் மடியாது எஞ்சிய குருவம்சத்தினரும், குந்தியும், விதுரரும் கானகம் செல்லவிருக்கிறார்கள்.
சுபா மட்டும் அஸ்தினாபுரத்தில் தங்கிவிடுகின்றாள். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பீஷ்மர் சபதம் மீதும், குருவம்சத்தின்பால் அவர்காட்டிய ஒருதலைப் பட்ச விசுவாசம் மீதும், சுபாவுக்குத் தாங்கவொண்ணா வெறுப்பு அரண்மனைப் பெண்டுகள் சத்யவதி, அம்பா, அம்பிகாம் அம்பபாலிகா ஆகியோரின் துயரங்களைத் தன் துயரங்களாகச் சுபா ஏற்றிருந்தாள், ஒருவேலைக்காரியின் மகன் என்ற அடைப்படையில், விதுரனுக்கு அரச உரிமை இல்லாமல் போனதை சுபா வர்க்க ரீதியாக அனுபவித்திருந்தாள். அவளுடைய பார்வை குருவம்சத்தினர் இல்லாத பாண்டவர்கள் ஆளும் புது அஸ்தினாபுரமே அவளுக்கு ஒரு விடுதலை பூமியாகப் படுகிறது.
நாடகத்தின் இறுதிக் காட்சியில், “குருவம்சமே இல்லாத ஓர் இடத்தில்தான், உன்னுடைய முக்தி என்ற எண்ணம் உனக்கு ஏன் அம்மா வந்தது?” என்று விதுரர் கேட்க, “ இள்ம் பெண்ணான சத்யவதி, வயதான சந்துனு மன்னரின் காம இச்சையைத் திருப்தி செய்வதற்கு, ஒரு கருவியாக இருக்கவேண்டிய நிர்பந்த நிலையில், அவளது மனநிலையை நீ உணரமுடிந்தால், அம்பாவை எவரும் ஏற்கத் தயாராக இல்லாத நிலையில்தான், அவளுடைய அகால உயிர்த் துறப்பு ஏற்பட்டது என்ற உண்மையை நீ அறிய நேர்ந்திருந்தால், தங்களுடைய விருப்பங்களுக்கு மாறாகத் தங்களின் உடல்களை ஒருவருக்கு ஒப்படைக்க வேண்டியிருந்த அம்பிகா, அம்பபாலிகா ஆகியோரின் மன வலிகளையும் உடல் வலிகளையும் நீ உணரமுடிந்திருந்தால், ஆணாதிக்கம் மிக்க குருவம்ச அரண்மனையில், பெண்டிரின் வேதனைகள் எத்தகையன என்பது உனக்குப் புரிந்திருக்கும். குருவம்சமே இல்லாத விடியல் அஸ்தினாபுரம் என்ற இந்த இடத்தில், என் விடுதலை எண்ணம் ஏன் பதிந்திருக்கிறது என்பதும் உனக்குத் தெளிவாகியிருக்கும்,” என்று விரிவாகப் பதிலுரைக்கிறாள்.
நாடக்த்தின் முதல் காட்சியில் காணப்படும் தொடக்க வரிகளும், இறுதிக் காட்சியில் இடம்பெறும் வரிகளும் நாடகப் பொருளை விளங்கிக் கொள்ள உதவுகின்றன.
ஆரம்பத்தில், “ எந்த மகாராஜாவுடன் நீ இரவு உணவு அருந்தினாய், விதுரா? திருதராஷ்டிரருடனா? அல்லது யுதிஷ்டிரருடனா?” என்று சுபா, விதுரரிடம் கேட்கும் வரிகள், நாடகக் கருப் பொருளைச் சூசகமாக உணர்த்துகின்றன.
‘குருவம்சத்து திருதராஷ்டிரன் ஒழிந்த அஸ்தினாபுரத்தில்தான் என் விடுதலை உள்ளது,” என்று சுபா விதுரரிடம் கூறும் இறுதிக் காட்சி வைர்கள், தன் துயரங்களுக்கும், சகப் பெண்களின் துயரங்களுக்கும் துணிவாய்க் குரல் கொடுத்து, தன்னிச்சையாய் முடிவெடுக்கும் ஒரு பெண்ணின் சுதந்திர செயல்பாடுதான்’ நாடகத்தின் பாடு பொருள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன.
@ @ @
<< முகப்பு