சித்தன்: மகாபாரதத்தில் பெண்ணியம் நாடகம் குறித்து
மகாபாரதத்தில் பெண்ணியம்.
சித்தன்
நீரின்றி அமையாது உலகு; பெண்களின்றியும்! யுகம் யுகமாக பெண்கள் துய்க்கும் வலிகளையும் கடந்துவரும் பாதையின் கூரிய முட்களையும் மெல்லிய வெளிச்சமிட்டும் மிகுதியான உணர்வுகளைச்சொல்ல ஒரு கதைசொல்லி விளக்கு கொண்டும் மலரகங்களையும் அதன் கருகிப்போன வாசனைகளையும் களமாக்கியிருக்கிறது இப்படைப்பு.
பெண்குழந்தைகளைக் கடத்தி பாலியல் மற்றும் கொத்தடிமை தொழிலுக்கென வேற்று மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் குழுவிடமிருந்து அப்பெண்குழந்தைகளை மீட்டுக்கொண்டு வருகிறாள் ஒரு பெண். ரயில் பயணத்தின்போது எதேச்சையாக அக்கொடூரத்தைக்காண நேருகிறது அவளுக்கு. பிஞ்சுப்பெண்குழந்தைகளைக் கண்டு நெஞ்சம் கொதிக்கிறது. மீட்டு வந்த குழந்தைகளில் விவரம் தெரிந்த இரு பெண்களை ஒப்படைத்திருந்த இடத்தில் காணவில்லை. எங்கே அவர்கள் என்று படபடப்புடன் விசாரிக்கும்பொழுது தன்னையே காட்டிக்கொடுக்க முனைந்தவர்களை என்ன செய்வதாம், கடலுக்குள் போட்டுவிட்டேன் என்கிறான் வில்லன். மனதில் ஆங்காரமும் வலியும் இயலாமையும் அச்சமும் கோபமும் சேர்ந்து கலங்கடிக்க, என்ன சொல்வது? என்ன சொல்லமுடியும்? ஒரு பெண்ணால் என்ன பெரிதாய்ப் பேசமுடியும்; எப்படித்தான் போராடமுடியும்?
நீருக்குள் மூழ்கும் உடலைப்போல மனம் இயலாமைக்குள் நழுவ, என்ன சொல்கிறாள் தெரியுமா?
“சாமியார்கள்; பீடாதிபதிகள்; பொறுக்கிகள்; போலீஸ்காரர்கள்; அயோக்கியர்கள்; பெண்பித்தர்கள்; ரவுடிகள்; அரசியல்வாதிகள்; பொறுப்பற்ற கணவர்கள் என எத்தனை பேரிடமிருந்து தாண்டா பெண்கள் நாங்கள் பயந்து ஓடுவது?” (இத்திரைவரிகளே இப்படைப்பின் வாசிப்பு நிறைவில் எனக்குத் தோன்றியவை என்பதால் இந்த இடைச்செறுகல்.)
மகாபாரதம் என்பது ஏதோ ஒரு யுகத்தில் நடந்த வரலாறோ புராணமோ ஆசிரியமனத்தில் தோன்றிய புதினமோ புனைகதையோ எதுவாகிலும் இருக்கலாம். பன்னெடுங்காலத்திற்கு முன்பெழுதினாலும் சரி பன்னெடுங்காலத்திற்குப் பின் நாடகமாக்கினாலும் சரி, எங்கும் அது ஒரு களம் அவ்வளவுதான். இப்படைப்பிலும் அது ஒரு கலைப்பின்னணியாக மட்டுமே வந்துபோகிறது. முன்னணியில் நடக்கும் காட்சிகளில் உங்களுக்குத்தெரிந்த, எனக்குத்தெரிந்த சுபா, அம்பிகா, அம்பமாலிகா, சத்யவதி, குந்தி, சர்மிஷ்டை, பிந்துமதி மற்றும் இன்னபிற பெயர்களுடன் பெண்கள் உலவிக்கொண்டும் சில சமயங்களில் அப்பெயருக்காக வாழ்ந்து கொண்டுந்தான் இருக்கிறார்கள்.
வரலாற்றின் மூக்குநுனிவரை நமது விரலைக்கொண்டு செல்லலாம் என்கிற கூற்றின்படி சுபா என்கிற பாத்திரத்தை நாடகத்திற்காக பேசவைத்து கற்பனையாக்கியது ஆசிரியரின் அன்பான வரம்புமீறலெனினும் சிலசமயம் பார்வையாளர்களுக்கும் தத்தம் முதுகுகளைப் பார்க்க கண்ணாடி தேவைப்படுவதையும் அது விளக்க முயல்கிறது. கட்டுரைகளிலே மனச்சாட்சியை உருக்கொணரலாம்; பேசவைக்கலாம்; நாடகத்தில்?
மிகுந்த வலிமையையும் பௌருஷத்தையும் தேஜஸ்சையும் பராக்கிரமத்தையும் அழகையும் கொண்ட பிதாமகர் பீஷ்மனை முகத்தில் அறைந்து, காலில் மிதித்து மார்பில் குத்தி இழுக்கும் சுபாவின் கத்தி என்றோ ஒருநாள் அம்பிகா கொடுத்ததாக இருக்கவேண்டும். அவளது வலியின், நிராசையின், உயர்தர அடக்குமுறையின் ரண வீர்யம் தலைமுறை கடந்தும் மீள்தொடர்வதை சுபாவும் அவளது கத்தியும் காட்டுகின்றன.
தனது தாபத்தைத் தணிக்கமுடியாத நன்றிகலந்த கடமையுணர்வு தாண்டவும் தயாராகும் ஒருபெண்; ஆசையில்லாத நிலத்தில் உடல் தர்மத்திற்கெதிராக விதை போடத்தூண்டும் இன்னொரு பெண்; தவம், ஞானம், மகா தபஸ்வம் தரும் அச்சம் மற்றும் விகாரம் இவைகளைத்தான்டியும் மகா புருஷராக்கிக் கொண்டாடும் இன்னொடு பெண்; பெருமை கொண்ட குருவம்சத்தைவிட பெண்மையை முன்னிறுத்தும் மற்றொரு (கற்பனைப்)பெண் என சிதறிய சித்தாந்தங்களாய் பரவிக்கிடக்கிறார்கள் பெண்கள்.
கற்பனை சுபாக்களைவிட கத்தியையும் புத்தியையும் தீட்டிக்கொண்டுவரும் அம்பிகாக்களையும் சுபாக்களையும் நவீன அஸ்தினாபுரத்திற்கு நான் வரவேற்கிறேன். ஆயிரம் பக்கங்களைக்கொன்ட ஒரு நாவலாக எழுதினால் கூட உணர்த்தமுடியாத 'சாரத்தை' சுருக்கென்று மிளகுக்காரமாய் கொடுத்த ஆசிரியரைப் பாராட்டத்தான் வேண்டும்.
****
இந்துமதம் எப்படி ஒரு மகாசமுத்திரம் எனப்படுகிறதோ அதைப்போல மகாபாரதம் ஒரு இந்துமகாசமுத்திரம். இதற்குள் பரவிக்கிடக்கும் மாந்தர்களும் சம்பவங்களும் மதமூடிகளைத் தவிர்த்து நேரிடை பார்வைக்கு உலகெங்கும் கிடைப்பவை. அதிலிருந்து இன்னொன்றும் வருகிறது ஓங்கி உரைக்கும் ஒரு மனமுரசாக!
ஆன்மாக்களின் புணைவைப்பேசும் அதிகார தலைவனுக்கு முதுமை தவிர்க்க துப்பில்லை; ஆத்மார்த்த உறவு பேணும் இனிமையான நினைவு பேசும் தலைவிக்கு முகவரி கொண்ட இளமை மீறத் துணிவில்லை; அழிவற்ற ஆண்மை புணரும் நிலையான பௌருஷத்தை நோக்கிய வழி மாறிய பாவையின் பயணம் ஒருபக்கம்; மீந்துபோன நினைவுகளையும் தவறிப்போன கனவுகளையும் கொண்டு புதியதாய் உதிக்கும் இன்னொரு ஜீவன் மறுபக்கம்; இவைகளின் முடிவு என்ன? விடை சொல்கிறது ‘உடலுக்கப்பால்.’
ஒரு மனத்தின் முழு ஆக்கிரமிப்பை மெல்லிய கோடு போல நுழைத்து முழுதையும் பிறகு வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். சர்மிஷ்டை துடிப்பதும் புரூ துடிப்பதும் எதிரெதிராகத்தோன்றினாலும் ஒரே கோட்டில் பயணிப்பவையே எனினும் ஆணின் தவிப்பு சமரசமாக்கப்படுவதும் பெண்ணின் தவிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதும் இறுதியில் வியப்பையே தருகின்றன.
புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரும் மழுங்கடிக்கப்பட்ட பெண்ணுணர்வுகளின் எழுச்சிப்பேரணிக்கு புத்தம் புது இலக்கிய வாசல் அகலத்திறந்து கிடப்பதையும் அதில் ஏற்கனவே அகல்யாவாகவும் அகலிகையாகவும் புகுந்தவர்களையும் நினைவிற்கு உணர்த்துகிறது இந்நூல்.
‘ஒரு மனிதன் தனது சூழ்நிலைகளின் காரணமாய்த்தான் தன் காதலின் அழைப்பிற்கு பதிலளிக்க முடிவதில்லை.’
‘மனம் விரும்பாமல் தன்னை அளிக்கவேண்டிய நிலை எத்தனை வேதனையான வலி என்பதை யாரறிவார்?’‘
‘தனக்குச் சாதகமாக இல்லாவிடில் இந்த படைப்பு முழுவதுமே பைத்தியக்காரத்தனமாகத் தோன்றிவிடுகிறது.’
என்பவைபோன்ற சாதாரணத்தோற்றம் கொண்ட வரிகள் எவ்வளவு ஆழமானவை என்பதை முற்றிலுமாக உணர்ந்துகொள்ளமுடிகிறது.
யுகங்கள் கடந்து தொடரும் சக ஜனங்களின் கதையை வித்தியாச களத்தினுள் நுழைத்து எழுதிய ஆசிரியருக்கும் அழகாக மொழிபெயர்த்தவருக்கும் இங்கு பரிந்துரை செய்தவருக்கும் எனது வாழ்த்துகள்; நன்றிகள்.
அன்பன்
சித்தன். 91087672
<< முகப்பு