மனிதனில் மண்டிக்கிடக்கும் காமத்தைச் சொல்ல காடாய் மண்டும்
புனைவு:ஜெயமோகனின் "காடு"
ரெ.பாண்டியன் / நவம்பர் 05
1. களம் கிரிதரன் என்கிற இளைஞனின் காம உணர்வுகள் விழிப்படைவதையும், அதில் பங்கு வகிக்கும் சூழலையும், வழி தவறிப் பாய்ந்த காம உணர்வுகளின் காட்டாற்றில் தங்களது இருப்பின் அடையாளத்தை இழந்து போனவர்களையும் பற்றிய களம் "காடு".
கிரியின் காம விழிப்பிற்கு சூழலில் இருக்கக்கூடிய சகஜமான உரையாடல்கள், கிண்டல்கள், நுட்பமான குறிப்புணர்த்தல்கள் பின்னணியாக அமைகின்றன.
காமவிழிப்பில் ஆரம்பித்து, மாமியின் சேட்டைகளில் தடுமாறி, பெண் உடல் நிர்வாணம் பார்த்து, சுயபோகத்தில் ஆழ்ந்து, நீலியின்மீது காதலாகி நின்று , இறுதியில் முதல் உடல் உறவு அனுபவம் மேனத்தியுடன் ஏற்படுகிறது.
காட்டாற்றில் தடுமாறி காணமற் போனவர்களாக (ஆண் பெண் சரிசமமாக) :
அ) மாமாவின் காமம் - இளமை முதல் படுகொலை செய்யப்படுவதுவரை,
ஆ) மாமியின் கண்டன் புலையனுடனான காமம் கிரிமுதல் இளைஞனுடன் ஓடிப்போவது வரை,
இ) அனந்தலட்சுமியின் விதவை வாழ்வின் காமம்
ஈ) நாணம்மை, ஸ்தாணு அய்யர் போன்றோரின் கற்பனையில் காம பயணம்(voyeurism)
உ) ஈழவ ஆசாரியின் காமம் படுகொலை வரைஊ) ஷாடனனின் காமம் தம்பியால் கொல்லப்படுவதுவரை
எ) சாவில் விடுதலை பெற, பொழுதுபோக்கி காத்திருக்கும் சிவகுமாரன் அண்ணாச்சியின் மனைவியின் காமம்.
காமத்தை அனுபவித்து கடந்தவர்களாக:
அ) பருவம்தோறுமான காதலிகளை கடந்துவரும் போத்தி
ஆ) காமம் கடந்து, அய்யரின் 'மிஷின் வேலை செய்யாத' காதல் /காமம்
இ) காமத்தை அனுபவித்து, பைபிள் காட்டை கடக்கும் குரிசுஈ) காட்டு வாழ்வில் குட்டப்பனின் வேலிகளற்ற காமம்.
காமத்தின் எதிர்திசையில் இருப்பவர்களாக:
வாழ்வின் இன்பத்தை இயல்பாக துய்க்காத, பஸ்ஸில் வேலைக்குப் போகும்போதும் சதா ஜெபம் செய்யும் மகள்-மருமகள்ஆகியோரின் கவனிப்பு கிடைக்காத சோகத்தை பரமசிவ பெருமாள் கம்பனின் சோகவரிகளில்தான் மூழ்கடிக்கிறார். துக்கத்தை மறக்க கம்பராமயணக் காட்டில் அலைகிறார். ஊர், காடு என்று இரு களங்கள் நாவலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் மாறி மாறி இடம்பெறுகின்றன.
2. கதையமைப்பும் நடையும் :
2.1) நடு வாழ்வில் காணமற்போகும் காதலின் துயரத்தை கதை சொல்லலின் முத்தாய்ப்பாக வைத்து, வாழ்வு கலைத்துப் போடப்பட்டு அழுத்தமான ஞாபகப்பதிவுகளாக கதைசொல்லல் நடைபெறுகிறது. முதுமையில் தனது பழைய சுவட்டை தேட ஆரம்பித்து, இளமைக்காலம் சொல்லப்பட்டு, நீலியுடன் காதலாகி நிற்கும் தருணத்தில், இரண்டு குழந்தைகளின் குடும்ப மனிதனாக இருப்பதைச்சொல்லி, அம்மாவின் பேச்சைத்தட்ட விரும்பாது வேணியை திருமணம் செய்துகொள்வது முதல் முகச்சுழிப்பு இறுதிவரை மாறாது நாகர்கோயில் மருத்துவமனையில் வேணி இறந்துபோகும்வரைக்கும் சொல்லப்பட்டு, மாமாவின் படுகொலையும் நீலியின் மரணமும் கதையின் முடிவில் சொல்லப்படுகிறது.
கதை அமைப்பை இவ்வாறு சொல்லலாம் :1) இளமை வாழ்வும் காம விழிப்பும் (காத்திருத்தல் - முல்லைத் திணை -மாலை (night) )2) காட்டுடனும் நீலியுடனுமான காதல் (கூடல் - குறிஞ்சித் திணை -நள்ளிரவு )3) காட்டின் 'விலகு' என்ற சொல், காட்டுநீலியோ என்கிற சந்தேகம் (ஊடல் - மருதத் திணை -வைகறை )4) நீலியின் மரணமும், மாமா, குட்டப்பன் ஆகியோரின் பிரிவும் (பிரிவு - பாலைத் திணை - நண்பகல்)5) நிராதரவாகிப்போன பிற்பகுதி வாழ்வும் நீலியின் ஞாபகங்களும் (இரங்கல் -நெய்தல் திணை-ஏற்படுபொழுது (evening) )
ஆனால் கதைசொல்லல்முறை : 5->1->2->5->2->3->5->2->4.
வேணி அம்மாவிடம் கிடைக்காத அன்பை கிரியிடம் ஒருதலைபட்சமாக வைப்பது கைக்கிளை திணை; மாமி, மாமா மற்றும் பலரது பொருந்தாக் காமம் பெருந்திணை.
காமவிழிப்பை செழுமைப்படுத்துபவர்களாக போத்தியும் நாணம்மையும் வருகிறார்கள். காட்டுடனான மோகத்தையும் நீலியுனான காதலையும் செழுமைப்படுத்துபவர்களாக குட்டப்பனும் அய்யரும் வருகிறார்கள்.
2.2) நடைகாட்டினுடனான அனுபவத்தையும் காதல் வயப்பட்ட ஆனந்தத்தையும் மேன்மையானமொழியில் சொல்ல, ஆசிரியரின் சொந்தக்கவிதைகளைக் காட்டிலும் கபிலரும் குறுந்தொகையும் துணைவருகிறார்கள். பிற்கால வாழ்வின் துயரத்தைச் சொல்ல கம்பனின் வரிகள் தேவையாயிருக்கின்றன. நவீன இலக்கிய வரிசையில் சங்க இலக்கிய வரிகளின்மீது இவ்வளவு ஆதர்சத்தை தெரிவிக்கும் நாவல் "காடு" தான்.
3. நாவலின் தரிசனம் :
3.1) கிரி காட்டின் மீதும் மலையணுத்தியின்மீதும் காதல்கொள்கிறான். காதலின் தீவிரம் எதன்மீது அதிகம் என்கிற மனப்போராட்டம் கூட அவனுக்கு எழுகிறது. ஆனால், இறுதியில், இரண்டிடமும் கிரியினால் தன்னை முழுதாக இழக்கமுடியவில்லை. அவன் தன்னை இழந்திருந்தால், குட்டப்பனாகவோ மலையனாகவோ அவன் மாறியிருக்கவேண்டும். அல்லது அய்யரைப்போல மௌனம் கவிந்து, சங்கீதம் மற்றும் இலக்கிய சஞ்சாரத்தை விடுத்து, காட்டின் சஞ்சாரத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்.
மலையணுத்தி காட்டின்நீலியின் மறு உருவோ என்கிற குழப்பமும், தான் அமர்ந்திருக்கும் அயனி மரத்தின் உயிர்ப் படைகளைக்கூட தான் சரிவர காணப்போவதில்லை என்கிற அதைரியமும் ( அல்லது நேர்மையும்) அவனைப் பின் வாங்க வைக்கின்றன.
காட்டு குத்தகைவேலையும் கிரிக்கு ஒத்துவரவில்லை. பெட்டிக்கடைதான் சரி வருகிறது. பெரிய கனவுகளும் கவிதை ரசனைகளுமாக வளர்ந்தவன். ஆனால், காட்டின் பேரனுபவம் பற்றி கிலியடைந்து, பின்வாங்க நேரிடுகிறது. அவனால் மாமாவைப்போல பிறரை ஏய்த்துப் பிழைக்கமுடியாது. ஆனால், அம்மாவின் ஏய்ப்புக்குத் துணைபோய், வேணியை திருமணம் செய்துகொள்ளமுடியும். பத்து வயது வரையிலும், கிரியை இடுப்பில் சுமந்த அம்மாதான், மாமாவின் சொத்தை அனுபவிக்க பாதைப் போட்டுத் தருகிறாள். அப்பாவுக்கு நிகழ்காலம் ஒரு பொருட்டில்லை. அவரது வாரிசுதான் கிரி.
இதற்குமாறாக, அய்யர் காமத்தைத் தாண்டி, கலாரசனை தாண்டி, காட்டின் பேரனுபவத்தை நோக்கி நகர்ந்து "யாரிடமும் பகிர முடியாத யாளின் வாய் உருளையாக" மௌனமாகிறார்.
குட்டப்பனுக்கு ரசனைகள் கிடையாது. அவன் காட்டின், உடம்பின் மனிதன். உச்சிப்பாறைகள் "படச்ச தம்புரானுக்க களி" என்று நம்புபவன். விரும்பியபடி "ஆனை சவிட்டிக்கொன்னு" மோட்சம் கிடைக்கிறது. அவனது வக்கீல் மகன் அப்பாவின் ஆளுமையை அறிந்தவனில்லை.
மாமா காமத்தை மட்டும் கண்டவர். காட்டை ஏய்ப்பதற்கு பயன்படுத்தியவர்.
கயிற்றை துப்பவும் முடியாது கழிக்கவும் முடியாது சிக்கிக்கொண்ட மிளாவைப்போல குரிசு காட்டிற்குள் பைபிளோடு மல்லுக்கட்டுகிறார். பிறகு, ரெஜினாளுக்கு இரண்டு குழந்தைகளை தந்தபிறகுதான், அவர் பைபிளை கண்டடைகிறார்.
3.2) வாசிப்பில் மிகவும் நெருக்கத்தை உணர்வது குட்டப்பனிடமும் போத்தியிடமும்தான். அய்யர் கொஞ்சம் அதிகமாகவே சஞ்சரிக்கிறார். ஆனால், இசைத்தட்டு ஏன் கறுப்பு நிறம் தெரியுமா என்று கேட்டுவிட்டு அவர் சொல்லும் பதில் நிஜமான தேடல் சார்ந்ததுதான். நமக்கு இந்த மாதிரி குட்டப்பன் கிடைத்தால், காட்டைப்பற்றி எவ்வளவு அனுபவங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. ஆனால், அதற்கு, ஒரு "ஏமானா"க பிறந்திருக்கவேண்டும், இல்லையென்றால், அவனிடம் ஒரு "சவமா"கத்தான் மிஞ்ச நேரிடும்.
3.3) அம்பிகா அக்கா தனியாக குறிப்பிடவேண்டிய ஒரு பாத்திரம். தனது மார்புகளை புளிமாங்காயாக காணும் அசட்டு குழந்தை-தம்பியின் அக்கா, நீலியைச் சந்தித்துவிட்டு காட்டிலிருந்து திரும்பும் தம்பியின் புதிய கம்பீரத்தை வியக்கும் அக்கா,மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக நடமாடும் தம்பியை 'சொத்துக்குத்தானே' என்றும் 'நம்பி வந்தவளை அழவிடாதே' என்றும் கண்டிக்கும் அக்கா. கிரியின் நனவுலக லட்சியங்களுக்கு ஆசவாசம் அவள்; அவனது கனவுலக அலட்சியங்களுக்கு அவள் ஒரு துன்புறுத்தும் மனசாட்சி.
3.4) காட்டினால் வசீகரிக்கப்பட்டவர்கள் கிரிதரனும் அய்யரும். அய்யர் காட்டினால் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகிறார். கிரிதரன் காட்டினுள் சென்றுவிட்டு வெளியேறிவிட்டவன். ஆனால், பிரக்ஞையில் சதா காட்டையும் நீலியையும் சுமந்து திரிபவன். இருவரையும் மனநோயாளிகளென சமூகம் கருதினாலும், அவர்கள் காட்டின்-காய்ச்சல் கண்டவர்கள் என்று அறிந்தவன் காட்டை அறிந்த குட்டப்பன் மட்டுமே.
மேற்கத்தியவர்களின் வாழ்வு பொதுவாக புறவாழ்வு சாகசத்தின் துடிப்பு நிறைந்தது. உதாரணமாக, ஹெமிங்வேயின்"கடலும் கிழவனும்" நாவலில் கிழவனின் கடலில் மீன்பிடிக்க சென்ற அனுபவத்தின் மெய்ம்மையைச் சொல்லும் கதை. நம்மவர்களின் புறவாழ்வு சாகசத்தின் மெய்ம்மையைச் சொல்லும் பதிவுகளோ புனைவுகளோ குறைவு. அந்த வகையில், "காடு" முக்கியமான ஒரு முயற்சி என்றாலும், அது குட்டப்பனின் தேடலைச் சொல்ல முயன்றிருந்தால், அது தமிழுக்கு புது வரவாகியிருந்திருக்கும். ஆனால், கிரியோ அய்யரோ நம்மை அதிக தூரம் பயணப்பட வைப்பதில்லை.
4) வேதசகாயகுமார் சொல்லும் "எல்லையற்ற விரிவை" நோக்கி நாவலின் யத்தனங்கள் :
4.1) காமம் மனிதனை வாழ்வுமுழுக்க அலைகழிக்கும் ஆதாரமான விஷயங்களில் ஒன்று. ஆனால், இதனைப்பற்றி சமுகத்தில் நிலவிவரும் மௌனத்தையும் அதற்கு எதிராக சதா பேசிக்கொண்டிருக்கும் போத்தியின் வழியும், நாணம்மை வழியும், குட்டப்பன் வழியும் அய்யர் வழியும் ஏராளமானோரின் கதைகள் செவிவழிசெய்தியாகின்றன. இச்செய்திகளைச் சொல்லும்பொழுது, குட்டப்பனும் நாணம்மையும் போத்தியும் அய்யரும் அறிவுபூர்வமாக இல்லாது, அனுபவபூர்வமாக (வேதசகாயகுமாரின் வார்த்தைகளில் "உணர்வுபூர்வமாக") முன்வைக்கும் வாழ்க்கைப்பற்றிய பார்வைகள் அல்லது விவாதங்கள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவை. வெவ்வேறு திசைகளில் சஞ்சரிப்பவை அல்லது நகர்பவை. புது அனுபவத்திற்கான திறந்த முடிவுகளை கொண்டிருப்பவை.
எ-கா : அலகுக்காரி நாணம்மை(புழக்கடை வம்பளப்பில் ஈடுபடும் வம்சபாடகி, சரித்திர ஆசிரியை) சொல்லும் "வித்து குணம் பத்து குணமாக்கும்" ; போத்தி சொல்லும் " வளக்குழியிலே பத்துநிமிஷம் காலை பூந்த வச்சிட்டு நிப்பியா?திளைச்சுக்கிட்டே கிடக்குமிடே. உள்ள தீயாக்கும்.."
4.2) கூடலையும் கூடல்நிமித்தத்தைப்பற்றியும் குறுந்தொகை வரிகளிலிருந்தும் அதன்பின்னான துக்கத்தை கம்பனின் வரிகளிலிருந்தும் சொல்வதன்மூலம் காலந்தோறுமான காமம் பற்றிய பார்வையின் மரபோடு நாவல் தன்னை அடையாளப்படுத்தி கொள்கிறது.
4.3) மோசமான மனிதர்களிடம்கூட தங்கள் நல்லதனத்தை(goodness) தொடும்கணங்கள் வந்துபோகின்றன: மாமா மனம்விட்டு கிரியிடம் பேசுவது, அப்பா அம்மாவின் விஷம் வைக்கும் செயல்களுக்கு மன்னிப்பு கோருமிடம், சிவக்குமாரன் அண்ணாச்சி தன் மகன் தனக்காக மொட்டைபோட்டு நீர்த்தலையுடன் தன்சிதைக்கு தீமூட்டவேண்டும் என்பதுவும், திருமூலர் தன்னைப்பார்த்து கிண்டலாக சிரிப்பதுபற்றி சொல்வதும்.
4.4) நாவலில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் தங்களைச்சுற்றி புனைவை விரித்தவண்ணம் இருக்கின்றன. ஆனால், இந்த அத்தனை புனைவுகளும் நாவலின் மையச்சரடான காமத்தின் ஊடாட்டத்தினை ஆதார சுருதியாக கொண்டிருக்கின்றன.
@ @ @ @