ஜெயமோகனின் 'காடு'- மானஸாஜென்
ஜெயமோகனின் காடு ஒரு வாசிப்பு.
-மானஸாஜென்
எந்த ஒரு சிறந்த இலக்கியப் படைப்பும், சிக்கலாக்கிக் கொண்டு விடுபட வழிதெரியாது விழிக்கும் மனிதர்களின் வாழ்க்கையை குறித்தோ, சமூகத்தைக் குறித்தோ பேசுவதாகவும், மனித வாழ்வின் சிக்கல்களை ஒரு முழுமையான பார்வை கொண்டு தெளிவாக, புதிதாக, தற்சார்பில்லாமல் பார்க்கவும், அதன் அலைகளாய் எழும் உணர்வெழுற்சியோ, சிந்தனையின் கோணத்தில் மாற்றமோ, (paradigm shift), பெற்று புதிய விகாசத்தையும், தரிசனத்தையும் அடைய உதவுகிறது. இப்படியான தரிசனம், நீதி நெறி சொல்லும் போதனை தத்துவங்களாக புத்தியின் தளத்திலேயே நின்று விடாமல், ஆன்மாவின் சாரமாக இறங்குவதால் நிஜமான மாற்றம் சாத்தியமாகிறது. டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’- கதை வெறும் கதையாக நின்றுவிடாமல், அகிம்சைக்கான ஒரு தரிசனமாக காந்தியின் வாழ்வை மலரச் செய்ததை இச் சமயத்தில் நினைவு கூறலாம்.
நம் மனம் பழக்கப் பட்டதாய்த் தோன்றும், வார்த்தைகளையும், வடிவங்களை யும், ஒருவித இயந்திரத் தன்மையுடன் கையாள்கிறது, (இது ஒரு விதத்தில் உடலில் அனிச்சை செயலைப் போன்றது.) இதன் விளைவாக நம் சிந்தனை ஏற்கனவே அர்த்தங்கள் பழகியிருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ஏற்கனவே பழகிய சிந்தனையின் தடத்திலேயே பயணித்து, ஏற்கனவே நம் மனம் அறிந்திருக்கும் இடத்தையே அடைகிறது. படைப்பு முழுமையாக பார்க்கப் படாமல் வெ றும் வார்த்தைகளாய், நின்று விடும் அபாயம் இருப்பதினால், மறைத்துக் கூற ல், வடிவப் பரிசோதனை, புதிய வார்த்தைகளில் கூறல், உள்ளிட்ட பல்வேறு உத்திகளை படைப்பாளி கையாள நேர்கிறது. இவை நம்முடைய வாசிப்பு அனுபவத்தை கடினமாக்கி விட்டாலும், தவிர்க்கவியலாதது.
@ @ @ @
ஜெயமோகனின் காடு நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு குறிப்பிடத்தகுந்த நாவல் என்பதற்குப் பின் வரு ம் காரணங்களைக் கூறலாம்.
1. நவீன வாழ்வு,- பெரு நகரங்கள், மற்றும் நகரங்களின் கேன்ஸர் கட்டிகளென உலகமெங்கும் மனிதர்களின் வாழ்வை சிக்கலாக்கி அலைகழிக்கிறது. சந்தைப் பொருளாதாரத்தில் வசதிகளும், வசதிகள் தரும் சாதனங்களும், மனித வாழ்வை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறன் கொண்டதென மனிதன் நம்ப வைக்கப் பட்டுள்ளான். இவற்றை வாங்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் பணம் அடிப்படைத் தேவையாகிப் போய்விடுகிறது. உறவுகளும்கூட பணத்தால் நிர்ணயம் செய்யப் படுகிறது. பொருளீட்டும் அலைச்சலில், அவசரம், இயந்திரத்தனமான வாழ்க்கை, சுயநலம், போட்டி, பொறாமை, சந்தேகம், பயம், நம்பிக்கையிழப்பு, போர், உறவுச் சிக்கல்கள், விவாகரத்து, தனிமை, என நோயுற்ற சமுதாயத்தின் கிடங்காக தேசங்களும், உலகமும் மாறிக்கொண்டு வருவது ஒரு முக்கியமான பிரச்சனை. இத் தன்மையான வாழ்க்கை முறை, மேற்கத்திய கொடை. இயற்கையோடு இசைந்த கீழைய சிந்தனைகளைக் கொண்ட மரபின் கூறுகளை, செழுமைப் படுத்தி வாழும் வாழ்க்கையை, மரபின் மூலமாக நவீன வாழ்வினை எதிர்கொள்ளும் சிந்தனை முறையினை ஜெயமோகன் இந்த நாவலிலும் முன்வைக்கிறார்.
2. காமம், உடலுறவு நம் தமிழ் சமூகத்தில் சங்க காலம் தொட்டு வெளிப்படையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்த நிலைமாறி இடையில் மூடி வைக்கப் பட்டும், அழுத்தப் பட்டும் ஒவ்வாத உணர்வாகவும் மாற்றப் பட்டதில், பாசாங்குகள் நிறைந்த சமூகமாக மாறி அழுகிக்கொண்டு இருக்கிறது. வன்முறையும், பாலுணர்வையும் அதீதமாய் தூண்டிப் பிழைக்கும் தமிழ் திரைப்படங்களே இதற்கான சாட்சிகள். காமத்தை வெளிப்படையாய் பேச முயன்றிருப்பது தேவையான ஒரு சிகிட்சை என்பதுவும் காரணம்.
3. நாவல் முழுவதும் சங்கப் பாடல்களை எடுத்து ஆண்டும், அவற்றை நம் வாழ்க்கையில் எப்படி தொடர்பு படுத்தி யோசிப்பது என்றும் குறிப்புகள் விட்டுச் சென்றிருக்கிறார். இலக்கியத்தின் அழகியலை ரசிப்பதும், அதை நம் வாழ்வில் பயன்படுத்துவதும் ஒரு கலை. நம் தமிழ் இலக்கியங்களை தினவாழ்வில் தொடர்பு படுத்தி யோசிப்பதும் முடிவெடுப்பதும், நம் வாழ்வை செழுமைப் படுத்தவும், மரபை நவீனப் படுத்தவும் என இரு விதங்களிலும் பயனளிப்பது.
4. வளி மண்டலத்தில் துளைகள், காற்று, நீர் மாசுபடுதல், ஆலை, எண்ணை, கதிரியக்கக் கழிவுகள், காடுகள் அழிப்பு என சமூகத்தின் இயந்திரத்தனமான பொறுப்பின்மைக்கு எதிராக இத்தகைய நாவல்கள் கவனிக்கப் படவேண்டிய தேவை இருக்கின்றது.
@ @ @ @
அலங்காரங்களை நீக்கிப் பார்த்தால் காடு, ஒரு எளிமையான முதற்காதலைச் சொல்லும் கதை. நிறைய படைப்பாளிகளால் பல முறை பயன்படுத்தப் பட்ட சாதாரண கரு. துர்கனேவ், செகாவ், தாஸ்தாவ்ஸ்கி, வா.வே. சு. அய்யர், பாரதி, கு.பா.ர., சுஜாதா, போன்ற மேதைகள் அவர்களின் மேதமையினால் இலக்கியப் படைப்பாக்கி இருக்கிறார்கள். எனவே கதையைக் காட்டிலும், கதை கையாளும், காமமும் பின்புலத்தில் குறியீடாக விரியும், காடும், வார்த்தைகளின் ஊடாக ஜெயமோகன் பிடிக்க முயலும் அருபமான விரிவும்தான் முக்கியமானவைகளாகின்றன.
காமம், மலின படைப்புகளில் வலிந்து திணிக்கப் பட்டதாகவும், தினவெடுத்த குறிகளை உரசிக் கொள்ள ஓயாது விழையும் மனநோய் கூறுள்ள சமூகத்திற்கு தீனிபோடவுமே உதவுகின்றன. கு.பா.ரா., தி.ஜா., கரிச்சான் குஞ்சு, பாலகுமாரன், ஜெயமோகன் போன்றோர்
காமத்தை கருவாக்கியதில் கவனிக்கத் தகுந்த படைப்பாளிகள்.
தி.ஜா வின் மோகமுள்ளில் பாபு காமத்தால் அலைகழிக்கப் பட்டவனாகவும், காமம் அவன் சக்திகளை சிதறடிக்கும் தடையாகவுமே இருக்க, ஜமுனா அவனுக்குள்ளிருக்கும் காமத்தை ஆக்கபூர்வமான சக்தியாக்குகிறாள்.
ஜெயமோகனின் கன்யாகுமரி காமத்தை அறிவின் தளத்தில் வைத்து அலசமுற்படுகிறது. காமமும், கூடலும் ஆணுக்கும், பெண்ணுக்குமான ஈகோ போராட்டமாகவும், ஒருவரை ஒருவர் ஆதிக்கம் கொள்ள விழையும் இடையறாத போராட்டத்திற்கான தந்திரோபயமாகவும், திருமணம் சார்ந்த உறவுகள் சடங்காகவும், நவீன வாழ்க்கை நிர்பந்திக்கும் மன உளைச்சல்களிலிருந்து தற்காலிகமாகவேணும் விடுபட விழையும் நம்பிக்கையாகவும் காட்சிப் படுகிறது. (அந் நம்பிக்கையும் ஓட்டைப் பாத்திரத்தில் நிரம்பிய நீராக ஈகோ போராட்டத்தில் கசிந்து போக நேர்வது துரதிர்ஷ்ட்டம்.)
காமம் கன்யாகுமரியின் நகர்புற சூழலில், அறிவுஜீவித்தனத்தோடு, வரண்டு வெறுமை கொள்ளும் சூழலாய் வெளிப்பட்டு அதன் இருண்ட முகம் காட்ட, காட்டில் காமம் பசுமையான மலைகளூம், மழையிலும் செழித்து மனிதர்களின் மகிழ்ச்சியாகவும், வாழ்வின் கொண்டாட்டமாகவும், அன்பின் ஊற்றாகவும் கவித்துவம் கொள்கிறது. அம்பிகா அக்காவின் அவயங்கள் கிரிதரனின் பால்யபருவத்தின் அறியாமையோடு கூடிய குறுகுறுப்புடன் அறிமுகமாகின்றன. பின்னாளில் குட்டப்பன், சினேகம்மை, இரட்டையர் மூலமாக உடல்பூர்வமான காமம் அறிமுகப் படுகிறது. இயற்கையோடு இயைந்த சூழலில் காமமும் கலவியும் உண்பது உறங்குவது போன்ற அத்யாவசிய தேவையாகவும், குற்ற உணர்வுகள் எதையும் கிளர்த்தாத செயல்பாடாகவும், ஆட்டத்தின் மகிழ்ச்சியையும் விளையாட்டையும் தவற விடாத செயலாகவும் ஆகிறது. ( மாறாக நகரின் பின்புலத்தில் அறிமுகமாகும் மாமியும், காட்டைச் சுரண்டி அழிக்கும் நகரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எஞ்சினியர் மேனனின் மனைவியும் காமத்தின் இருண்ட மூலைகளில் கிரிதரனைப் பிணைத்து அவன் ஆன்மாவை குதறுகின்றனர்.)
எஞ்சினியர் வீட்டில் சரித்திரத்தில் தன்னொத்த இடம் என்பதாய் கொள்ளும் மிளாவின் கறியோடு, வன்புணர்ச்சியும் அவனது பாலைத் திணைக்கு அச்சாரமிடுகிறது. பிளவுபட்ட மனம் மனப்பிழற்வுக்கும் இழுத்துச் செல்கிறது.
அய்யர் அழகியல் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும், காமத்தை ரசிக்கும் நுண்மனவுலகை அறிமுகப் படுத்திவைக்கிறார். ஏற்கனவே தெரிந்த அகப்பாடல்களின் வரிகள் தன் வாழ்வில் அப்போது நீலியின் மூலமாக ஏறியிருக்கும், காதலுக்கு, மலைகளுக்கு, அருவிகளுக்கு, காட்டுக்கு ஒரு புதிய தரிசனத்தைத் தருகிறது. அத்தரிசனம், அவன் வாழ்வின் குறிஞ்சியில் துவங்கி, பாலைவரையிலும் அவனது வாழ்வை ஆழப்படுத்துகிறது. வாழ்வினை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் அய்யர் அவரது ரசனையின் கூர்மையால் வரிகளைக் கடந்த அத்வைத வெளிக்கு நகர்ந்து கொண்டிருக்கிறார். நீலியைக் கொண்டு சில உயரங்களை தொட்டிருக்கும் கிரிதரனுக்கு, அய்யரின் வீச்சு உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அய்யரும், கிரிதரனும் அடையும் பரிணாமமும் இன்னமும் செல்லக்கூடிய சாத்தியப் பாடுகளும் நமக்கு ஒன்றும் புதிதானதல்ல, சக்தி வழிபாடும், காஷ்மீர சைவமும், திபெத்திய பௌத்தமும் சென்றடையும் அதே இடம்தான். ஒரு நவீன மனம் அத்தகைய இடத்தை அடைவது மரபின் மூலம் நவீனத்தை எதிர்கொள்வதே!
மலையாளம் கலந்த வட்டார வழக்கும் நம் பொறுமையை சோதிக்கிறது. காடு பற்றிய அதீதமான விவரிப்பும் சில இடங்களில் சொற்களாகவே நின்று விடுகிறது.
காட்டைப் பார்க்காதவனுக்கு விவரிப்புகளினால் பயன் கிடையாது. காட்டைப் பார்த்தவனுக்கு இவை தேவை கிடையாது.
@ @ @ @ @
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு