தாட்சாயணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்'-மானஸாஜென்.

ஒரு மரணமும் சில மனிதர்களும்
ஒரு வாசிப்பும் சில கருத்துகளும்!
மானஸாஜென்



காரிருள்...ஏதோ அரவம் உங்களுக்கு அருகில்...பயமும், திகைப்பும், ஆர்வமுமாய், தீக்குச்சியைப் பற்றவைத்து ஊன்றிக் கவனிக்கிறீர்கள்!
பொன் பூத்த வெளிச்சத்தில் அழகின் அற்புத விசிறலும், கடவுளின்
கனிவினை ஏந்திய கண்களுமாய், ஒரு சின்னஞ்சிறு மழலை, தன் புன்னகையால் உங்களைக் கிறங்க அடிக்கிறது. உன்மத்தம் ஏறிய நிலையில் மர்மமாய்த் துலங்கும் அந்த அழகினை என்றென்றைக்கும் நிறுத்திக் கொண்டாட வேண்டி, தீக்குச்சி அணையும் முன்னர் புகைப்படம் எடுக்க விழைகிறீர்கள்....

நல்ல எழுத்து என்பதை அத்தகைய கணத்தை நிரந்தரமாக்க விழையும் ஒரு நிழற்படம் எனலாம்.

உத்தி, வார்த்தைகள், தொனி, வடிவம் ஆகியவற்றை புகைப்படக் கருவியோடு ஒப்பிடலாம். உள்ளுணர்வு, அழகியல், கலைமனம், தேடல் ஆகியவற்றினால் அடையும் ஒளியே பரவச அனுபவத்தை காட்டித் தருகிறது.


தொழில் நுட்பம், கலைத்திட்பம் இரண்டும் பொருந்தும் கச்சிதமே படைப்பை உன்னதமாக்குகிறது. கச்சிதத்தை இழந்த கதை அற்புத கணங்களை நீர்க்க விட்டு தீக்குச்சி எரிந்து கரிந்த பின் புகைப்படத்தை எடுத்தார் போலக்கெடும்.


சுருங்கக் கூறின் ஒரு நல்ல படைப்புதன் வாழ்வின் சாரத்தில் பரவசமூட்டிய கணங்களைக் கருவாக்கித் தேவையான அளவிற்கு, தேர்ந்தெடுத்த வரிசையில் சரியான சொற்களை உபயோகிப்பதன் மூலமாக சொல்ல முடிவதைக் கொண்டு சொல்ல முடியாத அரூபத் தளங்களின் திறப்புகளைக் காட்டித்தருகிறது.

@ @ @

தாட்சாயிணியின் 'ஒரு மரணமும் சில மனிதர்களும்' சிறுகதைத் தொகுதியில், சமூக அமைப்புகளுக்குப் பணிந்து வாழும் பெண்ணின் வாழ்க்கைச் சூழலின் பல்வேறு பட்ட காட்சிகள் அவதானிக்கக் கிடக்கின்றன. கரிசனமும், அக்கரையும்கொண்ட பதிவுகள். போர் ஒரு மாபெரும் பின்புலமாய் சம்பவங்களின் கோர்வைகளையும், அதனூடே பெறப்படும் அர்த்தங்களையும் மாற்றிப் போடுகிறது. வேறெங்கும் நாடகத்தனமாய் துருத்தக் கூடிய சம்பவங்கள், இலங்கைத் தமிழரின் அவல வாழ்வியல் சூழலில் இயைந்து பொருந்திப் போகிறது.


'விடுபடல்' , 'சோதனைகள்', 'வெடிக்காய்', 'தீவிளிம்பு', 'ஒரு மரணமும் சில மனிதர்களும்', போன்ற சிறுகதைகள் இவரை சராசரி கதை சொல்லிகளிலிருந்து ஒருபடி மேலேயே வைக்கின்றன எனினும் அனுபவங்கள் அதன் ஆழத்தில் ஊடுருவிப் பொதுத் தளத்திற்கு திறவு கொள்ளாமல் முடிந்துப் போய்விடுகின்றன. தேவைக்கும் அதிகமாக விரயம் செய்யப் பட்ட வரிகள் தாளலயத்தில் இசைக்கேடான ஸ்வரங்களை எழுப்பி தேர்ந்த கலைப் படைப்பு நிகழ்த்தக் கூடிய் சூட்சுமப் பாய்ச்சலை வெறும் அனுபவங்களாகக் குறுக்கிப் போடுகின்றன. கலை அமைதி கூடிவந்த வெடிக்காய், விடுபடல் போன்ற கதைகளிலும் கூட இத்தகைய குறைபாடுகள் உண்டு.


'விடுபடல்' கதையை , வண்ணதாசனின் 'சில பழைய பாடல்கள்' சிறுகதையுடன் ஒப்பிட்டு வாசித்துப் பார்த்து புதிய இடங்களை அடையலாம். வெடிக்காய், காயங்கள் பட்டு கன்றிப் போய் பெரியவர்களாய் வளர்கையில் நாம் தொலைத்து விட்ட விளையாட்டுப் பருவங்களையும், சகமனிதர்களின் மீதான நேசத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. அதே வேளையில் நேசமிழந்து பெரியவர்களான நம்முடைய முரட்டு விளையாட்டுகளையும்.


சோதனைகள் பெண்களுக்கேயான துயரத்தை பதிவு செய்யும் கணத்தில், சகமனிதர்களின் கருணையையும் பதிவு செய்து, மனிதனை விரிவு கொள்ளச் செய்யும் பண்பினைக் கதையாக்குகிறது. கிட்டத்தட்ட இதே கதையினை மறுபடியும் எழுதிப் பார்த்தது போல 'பெண்' எனும் சிறுகதை.



'துளிர்ப்பு' ,'ரங்கனாதனும் ரஞ்சித் பெரேராவும்', பொன்ற கதைகள், தங்களின் கருப் பொருளின் தேர்வால் பலம் கொண்டதானாலும், அதனுடைய நேரடித் தன்மையினால் அறிவுறுத்தும் தொனியையும், நாடகத்தன்மையையும் கொண்டு சுருங்கிப் போகின்றன. இவற்றோடு ஒப்பிடுகையில் சிறுவனின் கோணத்திலிருந்து சொல்லப் படும்'வெளியில் வாழ்தல் ' மேலான கதை.



@ @ @

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு