வாசகர் வட்டம் ஓர் அறிமுகம்!

நண்பர்களே! சிங்கப்பூரில் 'வாசகர் வட்டம்' என்ற அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதன் செயல்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பதிவு செய்யவும், இன்னமும் பரவலான நண்பர்களை அடையவும் வேண்டி இந்த வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறோம். உங்களின் பங்களிப்பு இந்த காரியத்தை இன்னமும் சிறப்பாக்கும் என்று நம்புகிறோம்.


'வாசகர் வட்டம்' என்ன செய்ய முயல்கிறது? தமிழகத்திலும், வேறு எங்கு கவனித்தாலும், ஒத்த சிந்தனையுடைய படைப்பாளிகள், ஒன்றாகப் பேசி, எழுதி, பிடித்த-பிடிக்காத, படித்த-பயனுள்ள விஷயங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலமாக சிறப்பாக வளர்ந்துள்ளதைக் கவனிக்கலாம். (உதாரணங்கள் வேண்டுமா? டில்லியில் ஒன்றாகச் சேர்ந்த சுஜாதா-கஸ்தூரிரங்கன் -இந்திரா பார்த்தசாரதி, சுரா- கிருஷ்ணன் நம்பி, வண்ணதாசன்-வண்ணந்¢லவன்-விக்கிரமாதித்யன், பாலகுமாரன்-மாலன்- தி.சா.ராஜு, கி.ராஜநாராயணன் - கு.அழகிரிசாமி, சுகுமாரன் -ஆத்மாநாம்- விமலாதித்த மாமல்லன், நா-முத்துசாமி-சா.கந்தசாமி-சி.மணி- ஞானக்கூத்தன் -நகுலன், சி.சு. செல்லப்பா-கா.நா.சு-பிரமிள், கல்கி-சிதம்பரநாத முதலியார்-ராஜாஜி-சின்ன அண்ணாமலை-மா.பொ.சி, ஜெயகாந்தன் -விந்தன், புதுமைப்பித்தன்-சிதம்பர ரகுநாதன், நா.பிச்சமூர்த்தி-கு.பா.ரா, அமைப்புகளான மணிக்கொடி, எழுத்து, கசடதபற, கணையாழி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! )


நட்ப்பார்ந்த சூழலில் இலக்கிய வாசிப்பு, விமர்சனக் கூட்டங்கள் நடத்துவதன் மூலமும், நல்ல இலக்கியங்களைக் குறித்த ஆரோகியமான விவாதங்களின் மூலமும், நல்ல இலக்கியங்களை புரிந்து கொள்ளுதல் குறிப்பாக சமகால நவீன இலக்கியங்கள் மீதான மேம்போக்கான, தவறான புரிதல்களைக் களைதல்! தனித் தன்மையுடன் கூடிய சிங்கை இலக்கியத்தை உலகின் தரமான இலக்கியவரிசையில் அமரச் செய்தல்.


நல்ல இலக்கியங்களை சிங்கப்பூரின் இளைஞர்களுக்கு கொண்டு சேர்ப்பது, படைப்பார்வம் உள்ளவர்களை ஊக்கப்படுத்துவது, தமிழிலக்கியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது.



@ @ @

நீங்கள் எந்த விதத்தில் பங்களிக்கக் கூடும். இரண்டுமாதத்திற்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நூல் மீது சிங்கப்பூர் நூலகம் எதிலேனும் விவாதம் நடக்கும், நீங்கள் சிங்கப்பூரிலிருந்தால் அந்தப் புத்தகம் குறித்த உங்களின் வாசிப்பை கூட்டத்தில் முன் வைக்கலாம், அல்லது அவற்றை கட்டுரையாக்கி vasagarvattam@yahoo.com.sg என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவற்றை 'வாசகர் வட்டம்' என்ற வலைப்பூவில் இடுவோம். ஒரே நூலைக் குறித்த பல்வேறு வாசிப்பு அனுபவங்கள், வாசகன் அந்நூலை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், அவனது வாசிப்புத் திறனுக்கு உரைகல்லாகவும், இருக்கும் என நம்புகிறோம்.

இது தவிரவும் தமிழிலக்கியத்தைப் புரிந்து கொள்ளத் துணை செய்யும், நல்ல இலக்கியங்கள் என நீங்கள் நம்பும், ஆரம்ப எழுத்தாளனுக்கு உதவக் கூடும் என நீங்கள் நினைக்கும் எதையும் பகிர்ந்து கொள்ளலாம். இலக்கிய வம்புகள், கிசுசிசுகள், அக்க போர்களைத் தவிர்ப்பது நலம்.

@ @ @

வாருங்கள் நண்பர்களே! நற்றமிழுக்கு நல்லதொரு வாசலைத் திறப்போம்!

வாசகர் வட்டம் சார்பாக
என்றென்றும் அன்புடன்,

மானஸாஜென்.
08-02-2006

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு