காகிதமலர்கள் - மூன்றாவது கோணம்!
இந்நாவலைப் படித்து முடித்த பின் எனக்குத்தெரிந்த சிலபேர் சொன்னது:
பாக்கியம் மாமி:
ஆனாலும் இந்த மிஸஸ் பசுபதிக்கு இவ்வளவு ஆகாதாக்கும். பத்மினி இந்தக்காலத்தவ, அவ ஆடுறான்னு இவாளும் ஆடலாமா? பத்மினிக்கு போட்டியா வாறா, மனசாலே நாமளும் அழகிதான்னும் நமக்கும் நாலாம்பளையை பாக்கவைக்கிற, கவனிக்கவைக்கிற சொரூபங்கள் இருக்குறதா மனசாலே நெனச்சுண்டு இப்படிக் காலம் போகுற போக்குல சுத்துனா கலிகாலம் ஆகாம என்னதான் ஆகும்? பத்துப்பேரு வந்தாலும் ஹிஹின்னு பேசிச் சமாளிச்சுண்டு போற இக்காலத்து பொண்ணுக்குப் போட்டியாய் பத்து ஆம்பளைங்களை இவளும் சமாளிக்க இறங்குனா, முடியுமா? அந்தளவுக்கு அவாளுக்கு மனதைர்யம் இருக்கா சொல்லுங்கோ? இத்தனை ஆம்பிளையைப் பாத்தபின்னும் இத்தனை வயசு ஆனபின்னும் மனசுல ஒரு பக்குவம் வராம இருபத்தஞ்சாட்டம் மந்திரியைப் பாத்ததும் மோகவெறி வருமோ சொல்லுங்கோ?
பாருங்கன்னா, பதினாறு வயசுப்பொண்ணாட்டம், இன்ஃபேச்சுவேஷன்ல மாட்டிண்டவாளாட்டம், மந்திரி ஏமாத்திட்டாருன்னு மண்டையப் போட்டுக் குழப்பிண்டு படக்குன்னு போயி மோதிண்டா! பாவம், இந்த ஆதவன்அம்பியும் என்னதான் பண்ணுவான்? இப்படிக்குழப்பிண்ட, வாழ்க்கையைப் பொசுக்கிண்ட பொண் ஜென்மத்தையெல்லாம் படக்குன்னு கொன்னுடவேண்டும் இல்லாட்டி மனநலகாப்பகத்தை முன்புறம் காட்டி கதையை முடிச்சுக்கவேண்டும். வேறு என்னதான் எங்க பொறப்புக்கெல்லாம்? அந்த சண்டாளன் பசுபதி ஆரம்பிச்சு வைச்சான். இந்த ஆதவன் அம்பி முடிச்சுவைச்சான். ம்க்கும்!
பத்மினியப் பாத்து பொறாமப்பட்டு பழமைக்குள்ளேயும் புதுமைக்குள்ளேயும் மாட்டிண்டு அவ படுறத விடுங்கன்னா, அவாளும் பொம்பளதானே, தாய்தானேன்னா, விசுவம் தன்மேல பாசம் வைக்கலேன்னு பொலம்பித்திரியுறா, செல்லப்பா மேல இருக்கும் பாசத்தை வெளிப்படுத்த வழியில்லாமயும் விட்டேற்றியா வளந்துட்ட பத்ரி மேல பாசத்தை எப்படிக் காட்டுறதுன்னா தெரியாமயும் தடுமாறுறா, தேவையின்னா வாறவன்னா இருக்கான் புருஷன் (யாருடைய தேவைக்கும்!), நாடகத்துல நடிக்கிறதுல ஒரு நிம்மதி, அங்கேயும் ஆம்பிளைங்க தானெ, அவாளும் எல்லாரும் மாதிரிதானே! அட, புருஷன் மட்டுமே பாக்கணுன்னாதான் எந்தப்பொண்ணும் வீட்டுக்குள்ளே அழகா மேக்கப் போட்டுட்டு உக்காந்துடலாமேன்னா, வெளியில வாறபோது எதுக்காக அழகா வாறோம்? நாலு பேரோட வெளிப்படையான மதிப்பீட்டுக்கு அர்த்தம் சொல்லத்தானேன்னா. அந்த நாலு பேரோட மதிப்பீடும் புதுமையோடு நம்மைப் பொருத்திப்பாத்தா எப்படித்தான் நம்ம தரத்தை ஏத்திக்கிறது சொல்லுங்கன்னா. மிஸஸ் பசுபதி, இந்த மதிப்பீட்டை வேற மாதிரி நெனச்சிண்டு செயலாக்கிண்டா, பாவம்!
விசுவத்தின் அப்பா:
ஆக்சுவல்லி.... உங்களையும் என்னையும் போல பசுபதியும் நல்லவர்தான் சார். என்ன, சான்ஸ் கெடைக்காதவரைக்கும் நாம நல்லவனா இருக்கோம். சான்ஸ் கெடச்சிதுன்னா நாமளும் சறுக்கிடுறோம். எங்காவது இருக்குற ஒண்ணுரெண்டைப் பாக்காதீங்க. நம்ம ஐயரை எடுத்துக்குங்க, மனுஷனுடைய போக்கு சுத்தமா பசுபதிக்குப் பிடிக்காது, தன்னளவில அவர் ரொம்ப நல்லவர்ன்னு நெனச்சிண்டு வாழ்றார், ஆனா எதுவரைக்கும் வாழ்றார்? சான்ஸ் கெடைக்கிறவரைக்கும்.! சத்தியமாச் சொல்லுறேன் சார், பசுபதிகூடவே அவரும் ஸ்டெனோவா சேர்ந்திருந்தா, அய்யரு பசுபதியை விட மோசமா இருந்திருப்பாருன்னு நான் நெனைக்கிறேன். இந்நேரம் மந்திரி லிஸ்ட்ல கூட அவரு பேரு இருந்திருக்குமோ என்னவோ!
வாழ்க்கையோட கடைசிவரைக்கும் எதுதான் சார் நம்மள ஓட்டிட்டுப்போவுது? புரோகிரஸ், வளர்ச்சி, இன்பமயமான வாழ்க்கை, உயர்ந்த பதவி, நல்ல குடும்பம் இப்படி எதுன்னு எடுத்துண்டாலும் பணம் முக்கியம் சார். நம்மள மாதிரி ஒரு பிற்போக்கான சமூகத்துல இருந்துகிட்டு முற்போக்கான வாழ்க்கைக்கு வரணுமுன்னா நம்ம மனைவிங்களையும் அதுக்கு கொண்டுவரணுமுன்னு அவர் மனைவி மனைவி பாக்கியத்தைக் கொண்டுவந்தார், பாருங்க, சீறுகெட்ட சமுதாயத்துல ஒரு எஸ்.கே, ஒரு மந்திரின்னு எல்லாரும் ஒரு அங்கம் சார். ஸ்டெனோவா அவர் வேலையை அவங்க பாத்துருக்கலாம்; பாராட்டியிருக்கலாம், கூட்டத்துக்கு வந்த அவரு பொண்டாட்டிய பாத்து அவரைப் பாராட்டினா பசுபதி என்ன சார் செய்யமுடியும்? பாக்கியமும் பளார்ன்னு ரெண்டு அறை அறைஞ்சி வாழ்க்கையோட ஸ்ருதி எதுன்னு பசுபதிக்குக் காட்டியிருக்கலாம். அவ என்ன பண்ணினா, வாழ்க்கையோட அடிப்படை மூலக்கூறுகள் பெண்ணழகோட இணைஞ்சதுன்னு முடிவு பண்ணிட்டா, எப்படி பணம் பதவியோட அது இணைஞ்சதுன்னு பசுபதி முடிவு பண்ணினமாதிரி!
நீங்க சொல்லுங்க சார், இங்க உங்க முன்னாடி உக்காந்திருக்க எத்தனை பேரை உங்களுக்குப்பிடிக்கிது? அதோ அவரைப் பிடிக்குமா உங்களுக்கு? எது சார் அதைத் தீர்மானிக்கிது? அந்தாளு கருப்புச்சட்டை போட்டுவந்ததாலே பிடிக்காதுப் போயிருக்கலாம், அட ஒண்ணும் வேண்டாம். நீங்க பாக்கும்போது ஒரு இஞ்ச் விரியிற சிரிப்புக்குப்பதிலா அரை இஞ்ச் விரிஞ்சதாலே 'மூடி'ன்னு அவரை உங்களுக்குப் பிடிக்காம போகலாம். ஆனா ஒண்ணு சார், ஆதவன் சொன்னதுமாதிரி, ஒரு மாநிலத்தோட, மக்களோட பிரச்சனைக்குத்தீர்வு ஒரு ஸ்டேனோவால மாறுது பாருங்க. இதுதான் சார் வாழ்க்கை! அந்த ஸ்டேனோக்கள் நல்லவரா இருந்தா போதும், இந்தியா மட்டுமில்லை எந்த நாடும் முன்னுக்கு வந்துடலாம்.
விசுவத்தின் மனைவி:
யு பெலீவ் ஆர் வோண்ட் பெலீவ் ஐ டோண்ட் நோ, ஆல் மென் ஆர் ஸ்டுபிட்; அசடுங்க! நிஜமாச் சொல்லுறேன். அதிலேயும் பத்மினியின் கணவர்...விசுவம்! அய்யோ..! அவர்கூடல்லாம் வாழவேண்டியிருக்கேனு ரொம்ப நாள் அவ நொந்திருப்பாள்ன்னு நெனைக்கிறேன்! ஆனா சில நேரங்கள்லெ பாருங்க, இந்தமாதிரி அசடுங்களாலெ சில நன்மைகள் இருக்கும். நமக்கு வேண்டியதை நாம ஈஸியா அடஞ்சிக்கலாம்.
யு மைட் ஹேவ் நோட்டீஸ்டு, பத்மினியும் விசுவமும் காரசாரமா விவாதம் பண்னிண்டு இருப்பா ஒரு கட்டத்துல, எந்த ஹஸ்பெண்ட் - ஒய்ப்ப்புக்கும் இந்த ஆர்க்யூமெண்ட் வந்தப்பறம் சேர்ந்து படுக்குறது பேசுறது ஏன் வாழறது கூட கஷ்டமாகலாம், ஆனா அவங்க சேர்ந்துக்குறாங்க, ஏன்? ரெண்டு பேருக்கும் தெரியுது, இந்த அசடைவிட்டா எந்த அசடை நாம புடிக்கிறதுன்னு அவ யோசிக்கிறா! இப்போது இருக்குற அரைகுறை நிம்மதியும் போகனுமான்னு அவன் நெனைக்கிறான். அப்புறம் எப்படி பிரிவாங்க. என்ன, அவங்களுக்குள்லே இருக்குற அந்நியோன்யமும் அப்பப்போ மாறி மாறி வந்துபோகும்; அவ்வள்வுதான்! அதானே மிஸ்டர் இந்த இடியட் குடும்ப வாழ்க்கைக்கி ஆதாரம்?! அதை வெச்சித்தானே ஏகப்பட்ட திருமண வாழ்க்கைங்க ஓடிட்டு இருக்கு? கரெக்ட் ஒர் னோட்?
விசுவத்தோட அக்கப்போர் தாங்க முடியலேன்னு பாத்தா, அவங்க அம்மா பாக்கியம் மாமி அய்யோ..! ஏந்தான் இந்த கிழவிக்கு இப்படிப்புத்தி போகுதோ தெரியலை! ஒரு ஆம்பளையோட பார்வையை தன்னை நோக்கி அடைய வைக்கிறதுதுதான் பொண்ணோட அழகுக்கும் / அலங்காரத்திற்கும் வெற்றின்னு நெனச்சிக்கலாம். பத்மினிகூட பலசமயங்கள்லெ பலபார்ட்டிகள்லெ அந்தமாதிரி நடந்திருப்பா, அந்த மெடிக்கல் ரெப்புகூட பேசினது மாதிரி! ஆனா இந்தமாமியார் இருக்காங்களெ அவங்க, பத்மினிகூட போட்டிபோடுறதா நெனச்சிண்டு அந்த ஆம்பளையை தன்னை அடைய வைக்கிறதுதான் தன்னோட வெற்றின்னு நெனச்சிட்டாளே பாவம்! எல்லா ஆம்பளைங்களும் கோகுலகிருஸ்ணனா என்ன?
பாக்கவைக்கிறது ரிசல்டா இருக்கிறதை மாத்தி படுக்கைக்கு வாற வைக்கிறதை அவங்க வெற்றியின்னு நெனச்சி ஏமாந்திட்டாங்க, அதுக்கு அனுசரனையா எரியுற தீபத்துக்கு எண்ணெய் ஊத்திட்டார் நம்ம பசுபதி அங்கிள்! நல்லவேளை, பத்மினியும் அவர்கூட ஏதாவது மந்திரி மீட்டிங்குப்போகலை, போயிருந்தால் அவ பேசுற தத்துவமெல்லாம் இப்போ எடுபட்டிருக்குமோ என்னவோ?!
சமத்துன்னா, காகிதமலர்கள்லெ எனக்குத்தெரிஞ்சு யாரும் இல்லே. படிக்கிறவங்கள்ளெ(?!) வேணுன்னா யாராச்சும் இருக்கலாம். பத்ரி ஒரு யூஸ்லெஸ். லைஃப் ஜாலியா போய்க்கிட்டு இருக்கும்போது மாணவர் அணி, கட்சி, போராட்டம்! கடைசில எல்லாரையும் விட பெரிய போக்கிரியா அரசியல்ல வந்து நிக்கலாம் அவன். அல்லது வெட்டிக்கொல்லப்படலாம்! யார் கண்டது?
செல்லப்பா...chikky fellow. ஒரு தைர்யம் ம்ஹூம், மண்ணு! வெறுங்கையாலே உலகத்தைப்பிடிக்க முடியுமா? யாராவது ஒரு பொண்ணு வந்து மாரு காட்டி மயக்கி கல்யாணம் பண்ணவெச்சி முதுகுல ரெண்டு போட்ட புத்தி வரும்..இவன மாதிரி கேசுங்கள்லாம் இப்படித்தான் மாறும். இல்லாட்டி வானத்தைப் பிடிக்கிறேன், பூனையைப்பிடிக்கிறேன்னுட்டு அலையும். இவனோட அம்மாவா நான் இருந்தா இந்நேரம் படக்குன்னு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சி சுகமான சுமையை போட்டு மடக்கி வெச்சிருப்பேன்.
மெடிக்கல் ரெப் - நான் சென்ஸ். ரெண்டு மூணு காஸ்ட்லி ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப்போயி பில்ல பல ஆயிரத்துக்கு எகிறவிட்டா அடுத்த தடவை அப்பீட்டாயிடுவான். கொஞ்சம் வெவரம்ன்னா, கணேசன். யா.... ஐ திங் பத்மினி வில் லைக் தேட் ஃபெல்லோ.
செல்லப்பாவின் அண்ணன்:
இந்த விசுவத்தைப்பத்தி கொஞ்சம் பேசலாம் இப்போ. இவனைபாக்கும்போது சார், ரெண்டு விஷயம் தான் ஞாபகத்து வருது, ஒண்ணு 'ஜானி' படத்து ரஜினி வசனம், வாழ்க்கையில ஒன்னைவிட ஒன்னு எப்பவும் பெட்டராத்தான் தெரியும். ரெண்டு, கமல் பாடும் பாட்டு வாழ்வே மாயம்..இந்த வாழ்வே மாயம்!
பத்மினிய முதன்முதலா பாத்தபோது வந்த அந்த ஒரு நிமிடநெகிழ்ச்சி அவன் நண்பன் உண்ணி 'ஒய்ஃபைப்' பாக்கும்போது வாறதாம். ஹம்பக். அந்த நிமிடம் ஏன் தப்பானது? இந்த நிமிடம் எப்படி சரியாகும், சொல்லத்தெரியுமா இவனுக்கு?
புவியின் அறிவியலை முழுக்க முழுக்க புரிந்துகொண்ட இவன் பெண்களையும் அப்படிப்புரிந்துகொள்ள முயல்கிறானா? பெண்ணையும் பூமியையும் ஒப்பிடுவது சரி. பருவகால மாற்றத்தை புரிந்துகொள்ளும் வரையறுக்க முயலும் இவனுக்கு பத்மினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா? பத்மினி மட்டுமல்ல; எந்தப்பெண்ணையும் அப்படிச் சொல்லமுடியுமா? பத்மினி, மெடிக்கல் ரெப்பிடம் அந்நியோன்யமாய் பேசினபிறகே ஏதோ கொஞ்சம் வாழ்க்கைப்பக்கம் வருகிறான். பத்மினிக்கு இவனைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கிறது, இந்தமாதிரி அசடுகளை இப்படித்தான் வழிக்கு வரவைக்கவேண்டும் என்று. அதான் தனிவீடு! ம்..தூக்கு தண்ணீரை! கழுவு பாத்திரத்தை!
கிரீன்ஹவுஸ் எஃபெக்டால், மரம் வெட்டுதலால், குளங்களைப் பாழ்படுத்துவதால், பிளாஸ்டிக்குகளை அதிகமாய்ப் பயன்படுத்தவதால், ஆழமாய்த்தோண்டி எண்ணெயையும் தண்ணீரையும் நிலக்கரியையும் எடுப்பதால் புவிக்கு வரப்போகும் ஆபத்தை பத்மினி போன்ற பெண்ணுடன் அல்லது ஒரு பெண்ணுடன்(?!) வாழ முனைந்தவன் ஆராய முயலலாமா? இல்லை கீழ்த்தர சுயலாபங்கள் நிறைந்த அரசியல் விளையாடும் இந்தியப்பதவி ஒன்றில் நேர்மையை எதிர்பார்க்கலாமா? இவனது தாத்தா திரும்பி எழுந்து வந்தால் ஏதாவது நடக்கும். ம்க்கூம்!
பத்ரியின் நடு அண்ணன்:
இந்த செல்லப்பா இருக்கானே சார், கொஞ்சம் நல்லவன்சார். என்ன..எந்த நேரம் பாத்தாலும் ஒரே ஃபீலீங்க்ஸ். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ்! இருக்கட்டுமே சார், ஃபீலீங்க்ஸ் இல்லாம யாருதான் இருக்கா? இவனையெல்லாம் கவிதை எழுத விடணும் சார். என்ன சொல்றீங்க. இந்த மாதிரி அணிலோடவும் புல்லோடவும் மரத்தோடவும் ரசனையா கெடக்குற ஒருத்தன் என்னடா பொண்னோட ஒடம்பு மேல படுற அந்த சொகத்துக்கே ஏகப்பட்ட பஸ் ஏறி அலையுறான்னு நாம நெனைக்கக்கூடாது சார். அது ஒரு ரசனை! அளவுக்கு மீறிய ரசனை! அந்த ரசனையின் வேகம்; இன்னும் அதிகமானா வெறி!
படிப்பை விட்டுடா என் செல்லம்ன்னு சொல்லி (மனுஷன் எவ்வளவு சந்தோசப்படுவான்!), நல்ல ஒரு அழகியாப் பாத்து இவனுக்கு கல்யாணம் பண்ணிவெச்சிட்டீங்கன்னு வெச்சீங்க, நாலு வருஷத்து ரெண்டு கவிதைப்புத்தகம் அல்லது மூணு புள்ளையப்பெத்துடுவான். கூட, வாற பொண்ணும் நம்ம தாரா மாதிரி வெவெரமா இருந்ததுன்னு வெச்சுக்குங்க, ஏதாவது வேலயைப்புடிச்சு முன்னேறிடுவான் சார். செக்ஸூவல் ஃபீலிங்க்ஸ் அதிகமானா தப்பா நெனக்கக்கூடாது சார். அததுக்கு நாட்ல மனுஷன் மாத்திரயெல்லாம் வாங்கிச்சாப்பாடுறான் நாம என்னடான்னா? சார், செல்லப்பாவோட தாத்தா இருந்தாருன்னா கண்டிப்பா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவெச்சிருப்பாரு. சீக்கிரமா கல்யாணம் பண்ணுறதும் நல்லதுதானே சார். புத்தகத்தைப் படிச்சு வாழ்க்கையைப் புரிஞ்சுக்குறது ஒரு வகை! பொண்ணைப் படிச்சு வாழ்வைப் புரிஞ்சுக்கிறது (புரிஞ்சும் என்ன புண்ணியம்!) இன்னொரு வகை! செல்லப்பாவுக்கு ரெண்டாவது நல்லா ஒர்க்அவுட் ஆகும் சார்.
எல்லா இடத்திலேயும் ஏதாவது அன்பையோ அரவணைப்பையோ எதிர்பாக்குறோம், அது இல்லாட்டி ஏமாத்தமா வாறது, எல்லாரும் ஏமாத்த வந்தவங்கன்னு தோணுறது. கொஞ்சம் பக்குவப்பட்டா போதும். அனுசரனையா பேசுறார்ன்னு உக்காந்து பேசுனா காலுக்கெடையில் கையை விட்டுத் தடவுறாரு அந்த குண்டு மனுஷன். இந்த ஸ்ரீதர் இன்னொரு செல்லப்பா. என்னன்னா கொஞ்சம் வெவரமான செல்லப்பா! எல்லோருக்கும் ஏதாவது தேவை. அதை நம்ம தேவையோட ஒத்தி தேடிக்கிறாங்க! நாம அதை அடையமுடியாம ஏமாந்து நிக்கிறோம், அவங்களெல்லாம் அதை எடுத்துட்டுபோனப் பின்னால!
செல்லப்பாவின் தம்பி:
இப்போ பத்ரியைப் பத்தி பேசுவோம் மிஸ்டர். 'அம்மா ஒரு இடியட் - அப்பா ஒரு ஜெண்டில்மேன். அண்ணன் ஒருத்தன் படிச்ச கிறுக்கு இன்னொருத்தன் படிக்காத கிறுக்கு. யாருக்காவது வாழ்க்கையோட நிஜம் புரியுதா? அம்மா - நாடகம், பார்ட்டி! விசுவம் - புவியியல், பொண்டாட்டி பத்மினி, செல்லப்பா-செக்ஸ் படத்து தியேட்டர் இல்லை எக்ஸாம், அப்பா-பதவி அன் வேலை (அட்லீஸ்ட் ஹி இஸ் ஓகே!).
ஒரு காலேஜ் இருக்கு, அங்க பிராப்ளம்ஸ் இருக்கு, ஒரு கட்சி தலையிடுது, மாணவர்களோட எதிர்காலம் தடுமாறுது! என்ன செய்யலாம் என்ன இதில சாதிக்கலாம்? யாருக்காவது அக்கறை! கணேசன் நல்லா பேசுறான். இவனையே பேச வெச்சுக்கலாம். கணேசன் சொன்னது மாதிரி நாமளே தலைவராயிடவேண்டியதுதான். அப்பா இருப்பார் ஃபுல் சப்போர்ட்டுக்கு. ஆளுங்கட்சி மந்திரி வேற அப்பாவுக்கு குளோஸ்.'
பாத்தீங்களா மிஸ்டர், பத்ரியும் மிஸ்டர் பசுபதி மாதிரி ஒருகட்டத்துல ஆயிடுவான்னு தோன்றது. அவன் அப்பாவெ ரொம்ப சார்ந்திருக்கான்; அப்பா அரசியலையும் அதன் சூழ்ச்சிச்சுழற்சியையும் சார்ந்திருக்கார்; அதே சூழ்ச்சிதான் பத்ரியையும் சூழ்ந்திருக்கு; இப்போ என்ன ஆகும்? இன்னொரு மிஸ்டர் பசுபதி இல்லாட்டி மரத்தில் மோதும் மிஸஸ் பசுபதி.
காகிதமலர்கள் டைட்டில் பேசுகிறது:
அண்ணே, எனக்கெதுக்குன்னே காகிதமலர்கள்ன்னு பேரு வெச்சிருக்காங்கெ? வாசம் இல்லாத மலர்கள்ன்னா? நாமளும் சிறந்து விளங்குற உயர்ந்த மனிதர்கள்ன்னு சில பேரு நெனைச்சிக்கிற மாதிரி இக்கதையில் வாற மலர்களும் நெனைக்கிதுனா? என்னவோ இருந்துட்டுப் போகட்டும்ண்ணே, மனிதர்கள்ன்னே தலைப்பு வெச்சிருக்கலாம். இந்தியாவில மட்டுமான்னே இப்படி, 12,756.3 கி.மீட்டரை விட்டமாகக் கொண்ட இந்தப் பூமியில எங்கேயும் இப்படித்தானேன்னெ மனுசங்கெ இருக்காய்ங்கெ.
ஆளுக்கொரு தேவை, அதற்கொரு முகம், அது அசிங்கமானதுன்னா அதுக்கொரு முகமூடி! கண்டதுக்கெல்லாம் அலையிறாங்கண்ணே. காசுபணம், காமம், அங்கீகாரம், பீடம், அலங்காரம், பாசம், பந்தம் எல்லாத்துக்கும் பலமுகமா அலையிறாய்ங்கண்ணே! ஒருமுகத்தை மறைக்க இன்னொரு முகம்! அந்த முகத்தை மறைக்க அடுத்த இடத்தில் இன்னொரு முகம், அதுவும் சரிவரவில்லையென்றால் ஓரு அழகான முகமூடி. முகமூடின்னு பேரு வெச்சிருக்கலாமோ நாவலுக்கு?
சிறந்த முகமூடிக்காரர்ன்னு யாருக்குண்ணே பட்டம் கொடுக்கலாம்? மிஸ்டர் பசுபதி? பாவம்ணே அவரு! பல இடங்கள்லே அவரு முகமூடி கிழிஞ்சி தொங்கி அசிங்கப்படுறார்ணே. மிஸஸ் பசுபதி? கொடுக்கலாம்ணே, ஆனாலும் அந்தம்மாவுக்கே தெரிஞ்சும்தெரியாம இருக்குண்ணே அது முகமூடின்னு. அநியாயமா செத்துப்போயிட்டதாலே 'போஸ்துமஸ் அவார்ட்' வேண்டாம்ண்ணே. பத்மினிக்கு.. அருமையான சாய்ஸ்ண்ணே. ஆனா பத்மினிக்கி கொடுத்தா நாட்டுல இருக்க எல்லா பொண்ணுங்களுக்கும் கொடுக்கணுமுண்ணே, கட்டுபடியாகாது. விசுவம்...இல்லேண்ணெ, இந்தாளுக்கு முகமூடி போட்டாலும் வேலைக்கு ஆவாது. செல்லப்பா..சிறந்த ஏமாளின்னு வேணா பட்டம் கொடுக்கலாம்ணே! பத்ரி...சிறந்த அப்பாவின்னு பட்டம் கொடுக்கலாம்ணே!
டென்ஷன் ஆகாதீங்கண்ணே, இன்னும் எத்தனை பேர் இருக்காங்க? செல்லப்பாவின் சைட்டு, ஸ்ரீதர், குண்டு ஆள், ஐயர், ஐயரோட எடுபிடி சிங், கிருஷ்ணன், எஸ்.கே, மந்திரி, சமையல்காரர் நரசிம்மையர், பத்திரிகையாசிரியர், தாத்தாவின் வேலையாள், ஜோசியர், பத்ரியின் சைட்டு, ஆங்..முக்கியமான ஆள் கணேசன்...அவனோட அம்மா, தங்கச்சி, அப்பா அந்த குடும்பம்....
ம்ம். இந்தாங்கண்ணே...மூன்றாம் பரிசு.. ஸ்ரீதருக்கு கொடுக்கலாம்ண்ணே...படவா. பெரிய ஆளுண்ணே அவன். செல்லப்பாவிற்கு நல்ல முகமூடி போடும் அவன், செல்லப்பா அம்மாவுக்கொரு முகமூடி போடுறான் பாருங்க,அது அசத்தல்ண்ணே. அப்படியே அவன் மன்னிக்கும்.
இரண்டாம் பரிசு..சில காட்சிகள்லெ வந்து போனாலும் பத்ரியோட கேர்ள் ஃபிரெண்டுக்குண்ணே! நடு ரோட்ல இறங்கி மவனேன்னு அவனை அல்லாட விட்டு படக்குன்னு அவனைப்பாத்து சிரிச்சி மயக்குறா பாருங்க...இது சூப்பருண்ணே!
முதல்பரிசு ஐயருக்கு கொடுக்கலாம்ன்னா, அவருக்கு வயசாயிருச்சுண்ணே! அதனாலே வேற யாருக்குன்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சுண்ணே...வீட்டுக்குள்ளேயும் காலேஜ்லேயும் நண்பர்கள்ட்டேயும் என எல்லா இடத்திலும் முகமூடியோடு அலையும் திரு. கணேசன்! பெரிய ஆளுண்ணே அவரு!
@ @ @