காகிதமலர்கள்- சித்ரா ரமேஷ்
ஆதவனின் 'காகித மலர்கள்' -சித்ரா ரமேஷ்
தொலைக்காட்சியில் வலுக்கட்டாயமாக குழந்தை போன்று முகத்தை வைத்துக் கொண்டு உலகின் துயரங்களையெல்லாம் சுமக்கும் சோக பாவங்களோடு தோன்றும் கதாநாயகியின் மெகாத் தொடரின் ஆரம்பப் பாடல் ஒருபக்கம்! சுத்தம் செய்யப்படாத சமையலறை பிசுக்குப் பாத்திரங்கள் ஒரு பக்கம்! இவற்றிற்கிடையில் கையில் ஆதவனின் காகித மலர்கள். அவர் காட்டும் முரண்பாடான வாழ்க்கையின் மிச்சமிருக்கும் பகுதியாக என்னைச் சுற்றி இயங்கும் ஒரு உலகம். அவர் காட்டும் மனவெளிகளின் தொடர்ச்சியாக நான். இப்படித்தான் என்னால் காகித மலர்களில் வரும் ஒவ்வொரு கதை மாந்தர்களோடு என்னை நான் தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது.
கணவனிடம் கூட சுதந்திரமாக தன்னிச்சையாக இணைய முடியாத,
கணவனின் குறிப்பறிந்து வாழ்ந்து, அவரின் குணநலன்களையும், குணக்கேடுகளையும் அப்படியே சகித்துக் கொள்ளும் விசுவத்தின் பாட்டி, அழகு, அறிவு, திறமை, அந்தஸ்து வசதியான வாழ்க்கை எல்லாமிருந்து, நவீன யுகத்து யுவதிகளிலிருந்து சற்றும் நான் குறைந்தவளல்ல என்று பாலுறவுச் சுதந்திரத்தையும் அனுபவிக்கும் விசுவத்தின் அம்மா, பெண் விடுதலை பெண் சுதந்திரம் இவற்றின் மொத்த வடிவமாக சிகரெட் பிடித்து, வேலை பார்த்து சுதந்திரமாக வாழும் விசுவத்தின் மனைவி, இவர்களுக்கு இடையில் கணேசனின் அம்மா, தாராவின் அம்மா போன்ற சராசரி மத்திய வர்க்கத்துப் பெண் பிரதிநிதிகள், மேலும் எழுபதுகளின் பிரபலமான ஹிந்திக் கதாநாயகிகள் என்று மொத்தமாக எல்லாப் பெண் கதாபாத்திரங்களியும் பார்க்கும் போது பெண்களை சற்று கேலியாகவும்இகுதர்க்கமாகவும் கவனிக்கிறாரோஆதவன்! என்ன செய்வது பெண்கள் தங்களை இயல்பாகவோ, அல்லது இயல்புக்கு மாறாகவோ வெளிப்படுத்திக் கொள்ள முயலும் போது கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த நாடகங்கள் பிடிபட்டுவிடுகின்றன.
நாவல் விசுவத்தை மையமாகக் கொண்டு விசுவத்தின் அம்மா அப்பா சகோதரர்கள் நண்பர்கள் என இவர்களைச் சுற்றி நடக்கிறதா? செல்லப்பாவைச் சுற்றி இயக்குகிறதா? இல்லை கணேசனைப் பற்றியா? என்பதை உணரும் முன் முடிந்து விடுகிறது. பல மனிதர்கள், அவர்களின் உள்மனம், வெளியுலக வேஷம், போடும் வித வித முகமூடிகள் இவற்றிற்கிடையில்ஆதவனின் நாவல் ஒரு கொலாஜ் வடிவ ஓவியமாக தீட்டப்பட்டிருக்கிறது. சிறு சிறு சிதறல்களாக பார்க்கும் போது இது எப்படி ஓவியமாகும் என்ற கேள்விக்குறி, ஆனால் முடிந்த பிறகு ஒரு அற்புதக் கலை வடிவம். இதுதான் ஆதவனின் காகித மலர்கள்.
விசுவத்தின் ஒரு பக்கம் புதுமையை புரட்சியை விரும்பி ஏற்கிறது. மறுபக்கம், காலந்தோறும் பார்த்துப் பழகிய மரபுகளை மீறாதப் பெண்ணைத் தேடிக்கொண்டேயிருக்கிறது. பாட்டியையும், சிறு வயதுத் தோழியையும் பார்க்கும் பெண்களிடம் தேடுகிறான். அந்தத் தேடல் நண்பனின் மனைவிடம் மானசீகமாக மையல் கொள்ள வைக்கிறது. சிறுவயதில் தன்னை வளர்த்தப் பாட்டியின்ஆதர்ச பிம்பத்தையும் தன்னோடுப் பழகிய தோழியின் முகத்¨யும் உண்ணியின் மனைவியைப் பார்த்ததும் பரவசமாகிறான். அவள் தன்னை குடிக்கக் கூடாது என்று கண்டிப்பதாக கற்பனை செய்து கொள்வதும் இந்த மனபிம்பத்தின் தொடர்ச்சியே!
செல்லப்பாவின் கற்பனை உலகம் பெண்களால் சூழப்பட்டிருக்கிறது. பெண்களின் ஸ்பரிசம் அதைத் தேடி அலையும்அலைச்சல்கள்! இதையும் மீறி தொடுதலின் பரவசத்தை ஒரு அனுபவிக்கிறான். அவனுடைய பருமனான அந்த "ஆண் நண்பர்" மூலம் அதை இயல்பாகப் பெறுகிறான். அவன் நண்பன் ரமணியுடன் சேர்ந்து அவன் எதிர்காலத்தில் நடத்தப்போகும் ஹோட்டல் எப்படியெல்லாம் இருக்கக் கூடும் என்பதை விவரிப்பது அவன் இயலாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. எந்த பாடமும் சரியாக படிக்க முடியாமல் பரீட்சைகள் வெறும் தோல்விகளாகத் தோன்றும் போது வாழ்க்கைய குரூர நகைச்சுவையாகப் பார்ப்பதும் புரிகிறது.
நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமான புலம் பெயர்தல். கிராமங்களை விட்டு நகரத்திற்கு நகரும் மனிதர்கள். எந்த இடத்தில் எப்படி வாழ்ந்தாலும் தன்ஆசார அனுஷ்டானங்களைக் கை விடாமல் வாழும் மத்தியதர பிராம்மணக் குடும்பங்கள்! அதன் உண்மையான அர்த்தங்கள் திரிந்து போய் வேறு விதமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்தப் பின்னும் தமிழ் நாட்டுக் கிராமத்தில் ஒரு அக்ரஹாரத்தில் வாழும் வாழ்க்கையைத் தொடரும் மேம்போக்கான மனிதர்கள். உள்மனதில் தோன்றும் எண்ணங்கள், வெளியில் அதற்கு முகப் பூச்சுப் பூசி காட்டும் நாசூக்குத்தனம், தன்னைப் பற்றிய சுய மதிப்பீடுகள்இ வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள், அவரவர்கள் இடத்திலிருந்து பார்க்கும் போது மாறுபடும் கோணங்கள். மனதிற்குள் எத்தனைப் பெரிய குப்பைத்தொட்டி ஒளிந்திருந்தாலும் வெளியில் ஒரு புன்னகைப் பூங்கொத்தை நீட்டி பொய்யான மதிபீடுகளால் தன்னை உயர்த்திக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கை சாகசங்களை தானே வெளியில் நின்று பார்த்து எழுதியிருக்கிறார்ஆதவன் என்பதை மட்டும் சற்றுப் புன்னகையோடும் வேதனையோடும் ரசிக்க முடிகிறது.
புதுதில்லிக் கதைகள் என்றால் இன்னும் மனதிற்கு அதிக நெருக்கமாக உணர்வதற்கு சற்றுத் தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. குளிர்காலத் தொடக்கதில் தொடங்கும் கதை மழைக் காலத்தில் முடிகிறது. டெல்லி குளிர் இன்னும் கைகளில் வெண்ணெய் பிசுபிசுப்பாக, ரஜாய் என்று அழைக்கப் படும் கனத்த போர்வைகளின் அடியில், அந்தக் குளிருக்கு ஒத்து வராத தென்னிந்தியச் சமையலோடு செருப்பணியாதக் கால்களில் பனிக்கட்டியாகக் குத்துகிறது.பிறகு வரும் வசந்தக் காலம். அந்த இனிமை கொஞ்ச நாட்களுக்குத்தான். பிறகுஆந்தி என்று அழைக்கப்படும் புழுதி புயலோடு சுட்டெரிக்கும் வெய்யில்! தென்னிந்தியர்களுக்குப் பழகாத குளிர்காலத்தை நினைந்து ஏங்க வைக்கும் வெய்யில் காலம்! இவற்றிற்கு இடையே எழுபதுகளின் மத்தியில் உள்ள காலக் கட்டம். ஹிப்பிகள் கலாச்சாரம், ஜெயாபாதுரி, ஹேமமாலினி, மும்தாஜ் போன்ற கனவுக்கன்னிகள்! கோல் மார்க்கெட், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட அதன் அரசாங்க வீடுகள், கன்னாட் ப்ளேஸ், ரிவோலி தியேட்டர் என்று டெல்லியைச் சுற்றி வலம் வருகிற கதை.
வாழ்க்கையின் சகிக்க முடியாத அபத்தங்கள் நிறைந்த ஒரு தொலைக்காட்சித் தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்து முதலிடம் பெறுவது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எழும் போதெல்லாம் இதை விட மோசமான தவிர்க்க முடியாத அபத்தங்களையெல்லாம் நிஜ வாழ்க்கையில் சந்தித்து ஒத்துப் போய்கொண்டிருக்கும் உண்மைகள் காகித மலர்களின் நிஜ வாசனையில் வெறும் கேள்விகளாக மட்டும் தொடரும் வாழ்க்கையை ஒரு நொடி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
@ @ @
1 மறுமொழிகள்:
//விசுவத்தின் ஒரு பக்கம் புதுமையை புரட்சியை விரும்பி ஏற்கிறது. மறுபக்கம், காலந்தோறும் பார்த்துப் பழகிய மரபுகளை மீறாதப் பெண்ணைத் தேடிக்கொண்டேயிருக்கிறது. பாட்டியையும், சிறு வயதுத் தோழியையும் பார்க்கும் பெண்களிடம் தேடுகிறான்.//
பத்மினி:சில சமயம், நீ என் பாட்டியோட சந்தோஷமா இருப்பன்னு தோணுது
:))
Post a Comment
<< முகப்பு