வெறும் பொழுது - நேர் திசையில் இசைவின் குரல்- ரெ.செல்வம்.

நேர் திசையில் இசைவின் குரல்-ரெ.செல்வம்

தன் புற வாழ்வின் மரபான நிகழ்வுகளோடு குறிப்பிடத் தகுந்த இசைவுத்தன்மை கொண்டவை உமாமகேஸ்வரியின் கவிதைகள் என்பதை இக்கவிதை தொகுப்பின் மொத்த வாசிப்பில் முடிகிறது. இம்மாதிரியான இசைவுதன்மை இன்றைய பெண் கவிஞர்களின் படைப்புகளின் நுண்மையான வாசிப்பின் மூலம் அறியமுடியும். உரத்துப் பேசாத வார்த்தைகள் மூலம் இவர் எழுப்ப முயலும் பிம்பமே சமகால படப்பாளிகளிடமிருந்து இவரை வேறுபடுத்தி காட்டுகிறது. ஆழமான படிமங்களை நம்பாத இயல்பான வார்த்தைகள் ஊடாக இவர் முன் வைக்கும் புறவுலகம் அதன் தாக்கத்திலிருந்து அகம் நோக்கிய தேடலே இவரின் ஆரம்ப புள்ளியாக உணர முடிகிறது. இதை விரிவாகக் காண முயல்வோமாயின் தமிழில் காலப்பிரியாவின் கவிதைகள் புறவுலகின் அதீதமான எல்லையில் நிற்பவை. அவை புறவுலகிலிருந்து மேலெழும்பி வாழ்வியலின் அகம் சார்ந்த கேள்விகள எழுப்ப முயல்வதில்லை ஆனால் வாசகன் அகம் சார்ந்து தூண்டக்கூடிய சாத்தியங்களை அவை சார்ந்திருந்தன என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியும்.

உமாமகேஸ்வரி தன் புறவுலகிலிருந்து அகம் நோக்கிய கேள்விகளை நேரடியாக முன் வைக்க முயல்கிறார். அவற்றின் சாத்தியப்பாடுகள் குறித்த எல்லையே அவரின் கவிதைகளின் முன் நகர்வாகக் கொள்ள முடியும். கவிதையின் முன் நகர்வையும் புரிதலையும் விலக்க முற்படும் புதுமைபித்தன் கவிதை (நல்ல) குழந்தைத்தனமானது என்கிறார். மொழியின் குழந்தையான கவிதை கலை இலக்கியத்தின் மற்றைய படைப்புத் தளங்களைவிட தனக்கேயான உள்ளீடான சுயமான மொழியையும் தளத்தையும் தோற்றுவித்துக் கொள்கிறது, பிறகு தன் சிதைவுகளின் ஊடாக எல்லையற்ற தன்மையயும் அவை பெற்றுவிடுகின்றன. நவீன கவிதைகளுக்குறிய இந்த எல்லையற்ற தன்மையே வெகுசன வாசிப்பிற்குறிய கவிதை என்பவற்றிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுபவை உமாமகேஸ்வரியின் கவிதைகள் குறிப்பிடத்தகுந்த விமர்சன நிகழ்வுகளில் முன்னெடுத்துச் செல்லப்படாமக்கு அவை தீவிர அரசியல் தன்மையிலிருந்து விலகியிருப்பதே, இன்றையச் சூழலில் கவிதை குறித்த விவாதங்கள் அதன் அமைப்பில் மற்றும் அரசியல் சார்ந்த மதிப்பீடாகவே முன் வைக்கப் படுகிற தீவிரமான கவிதை தளங்களின் பிரக்ஞைப் பூர்வமான மையங்கள் குறித்த விவாதங்களும், ஆய்வுகளும் இன்றைய வாசகன் முன் வைக்கப்படுவதில்லை என்றே சொல்லமுடியும். இச்சூழலில் உமாமகேஸ்வரி போன்றோரின் கவிதையின் சூழலும் கவனிக்கப்பட வேண்டிய ஆளுமையும் பின் தங்கிவிடவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தனிப்பட்ட சுய புலம்பல்களும், வலியும் கவனிக்கப்படாமை போன்ற எஞ்சிய உணர்வுகள் இன்றையத் தமிழ் கவிதையின் மையச்சரடாக காண முடிவது இத்தொனியிலிருந்து அவை மேலெழுந்த படைப்பாக மாறும் புள்ளி அல்ல மையம் குறிப்பிட்ட சமூகத்தின் குரலாக அல்ல ஒரே திசையில் இயங்கக்கூடிய மனித மனங்களின் குரலாகவும் மாறுவது ஆகும்.
அவ்வகையில் இத்தொகுப்பின் மேலெழந்த படைப்பின் தொனியை நம்மால் அடையாளங்காண முடியும். ஆழமான படிமங்களை விளக்கிச் சொல்லும் இவரின் கவிதை உலகு 'வீடு முழுக்க அப்பியிருக்கும் இழப்பின் உலர்ந்த யரம்' போன்ற குறிப்பிடத்தகுந்த காட்சி படிமங்கள் மூலம் வாசகனை நேரடியான புறவுலகின் தாக்கத்திற்கு இட்டுச் செல்பவை. ஆதிக்க மனோபாவத்திற்கு எதிரான இவரின் கவிதைகள் இன்று அறியமுடிகிற பெண்ணீய படைப்பாளிகள் போன்றே நேர் திசையிலேயே செயல்படும் தன்மையுடயவை. எதிர் திசையிலான ஆழமுடைய படைப்புகள் எதிர்காலத்தில் நாம் கண்டடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் படைப்பாளனும், வாசகனும் சந்திக்கும் கவித்துவமான மையத்தை வாசகன் அடையக்கூடிய நம்பிக்கைத் தரும் கவிதைகள் இம்முழுதொகுப்பில் பரவலாய்க் காணமுடிகிறது
.
@ @ @

'வெறும் பொழுது' ஒரு பார்வை- பொன். இராமச்சந்திரன்

'வெறும் பொழுது' ... ஓரு பார்வை

வாசிப்பு என்பது ஒரு தேடல். வாசகனின் கருத்தோட்டத்தோடு இணையும் பொழுது அந்தத் தேடலில் ஒரு மன நிறைவு ஏற்படுகிறது. என்னதான் எழுத்துச் செழுமை இருந்த போதிலும், தேடலில் சிராய்ப்பு ஏற்படுமானால், பயணம் தொடர்வது சற்று சிரமம் தான். ‘வெறும் பொழுதிலும்' அந்த நெருடல்கள் தொடர்கின்றன. இவரின் கவிதைகளின் கருத்து செறிவும், காலத்திற்கேற்ற கற்பனைத் திறனும் பயன்பாட்டிற்கு உகந்ததாகவே காணமுடியவில்லை. பெண்ணியல் பார்வையில் இவர் கவிதைகள் சென்ற போதிலும், தனது எதிர்மறை எண்ணங்களை நிறையவே பதித்திருக்கிறார் இந்தக் கவிஞர். வெளிச்சத்தின் தேடல்கள் இவர் கவிதையில் இடம் பெறும் பொழுதும், இரவின் கருமையைக் கொண்டு அதனைக் கட்டிப் போட்டு விடுகிறார். வேதனை தான் வாழ்க்கையோ என்று எல்லோரையும் தடுமாறச் செய்யும் ஒரு அறைகூவல் அவரது கவிதைகளில் நிரம்பி வழிகின்றன. இவரது கவிதை வரிகளிலால் இதனைக் கூறவேண்டுமானால்,

"சொற்களின் பின்னலில்

சிக்காது நழுவுமோர்

புரியா உணர்வு

பேனாவோ முக்காடிட்டு

எந்தக் கவிதையோ

எழுதப்படவில்லை இன்னும்"

இருந்தபோதிலும், பெண்மையின் செறிவிற்கு வழி தேடும் இவரது கவிதை வரிகள், ஆண்மையின் அடக்குமுறைகளையும் அதனால் கல்வி இயலில் கூட கருத்தூன்ற முடியாத வெறுமையின் நிகழ்வுகளையும் இவரது கவிதைகளில் பதிவு செய்துள்ளார். ஆண் வர்க்க வெறுப்பிலும் கூட,பெண் நிறைவு அம்சங்களைத் தன் கற்பனைக் காதலனிடம் தேடுகின்றார் இக்கவிஞர். இவரது ஆண்வர்க்க வெறுப்பின் உச்சக்கட்டமாக இப்படி வருகிறது அவரது கவிதை வரிகள்.

"அளைகிறேன் தடை விதிகளின் கருங்கற்களை

அச்சுப்பிசகாத ஆண்களின் நிழல்கள்"

சில இரசிக்கத் தகுந்த கவிதைகளைக் குறிப்பிடும்போது, அவரது "செடி" என்னும் கவிதை இப்படி முடிகிறது.

"சிறு தொட்டியின்

ஒருங்கிய சுவர்களிலிருந்து

மறுகி மறுகிக் கேட்கிறது

அந்தச் செடியின் காடாகும் கனவு"

இதனை படிக்கும் பொழுது மற்றொரு கவிஞனின் வரிகளும் என் நினைவுக்கு வருகின்றன.

"கல்லறைக்கு அடியில் நான்.

சுவாசிக்க எத்தணித்தும்

காற்று வர மறுப்பதால்

காலத்தின் சுவடுகளுள்

அடங்கிப் போகிறேன்

நான் ஆணா...பெண்ணா...?"

பண்பாட்டு சுமைகளுக்கு சுமைதாங்கியாய் இருப்பதை விட, காற்றின் உணர்வாய், சில்லிட்ட நீரோடையின் சலசலப்பாய், பேரோசைகளின் உயர்ந்த அருவியாய் இலக்கியப்படுத்த விரும்பும் இவரது வாழ்க்கைக் கனவுகள், கனவுகளால் மட்டுமே நினைவு கூறப்படுகின்றன. நவீனம் என்பது பழமைக்கு முற்றுப்புள்ளி வைத்துத் துவங்குவதல்ல, பழமையும் பலவீனம் நிறைந்த வாழ்க்கை அல்ல. இன்று தேடலே வாழ்க்கையாய், இருப்பதையும் தொலைத்துக்கொண்டிருக்கும் அவல நிலை. 'அடிமை' என்ற வார்த்தைக்கு எத்தனையோ அர்த்தங்கள் நம் வாழ்க்கையில். இந்தச் சிந்தனைகளின் முகவரிகளை இவரது கவிதைகளில் காணமுடிகிறது.

@ @ @ @

உமா மகேஸ்வரியின் "வெறும்பொழுது"-ரெ.பாண்டியன்.

உமா மகேஸ்வரியின் “வெறும்பொழுது”

கவித்துவ கணங்களுக்கு குறைவில்லாத மாறாத தினங்களின் கொழுத்த பகல்கள்


ரெ.பாண்டியன் / ஆகஸ்ட் 06

உமாவின் கவிதை செய்யும் செயல்பாட்டை பிம்பப்படுத்தும் இரு இடங்களைச் சொல்லலாம் :

ஒற்றைத்துளி (ப.12)
...
வறண்ட காலத்தையோ,
கொட்டுகிற மழையையோ,
அது பிம்பப்படுத்துவதில்லை.
இருந்தால் உலர்ந்துவிடும்;
விழுந்தால் சிதறிவிடும்.


ஏதோ ஒரு பறவை (ப.14)

கையிலோ குப்பைக் கனக்கும்;
கதவு திறந்த வீட்டில் காரியங்களிருக்கும்;
ஓசையற்றுக் குப்பை சரித்தாலும்
உலுக்கிப் பறக்கும் அது ;
ஒரு முறையேனும் குரலைக் காட்டாமல் –
வண்ண அம்பு போல்

உமா இருந்த இடத்தில் இருந்து கொண்டே இருக்கிறார். அவரைக் கடந்து மாறாத தினங்களின் கொழுத்த பகல்கள்
நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றின் ஒவ்வொரு சலனம் குறித்தும் பல வரிகள் எழுதப்படுகின்றன. அவற்றில்
சில கவிதைகள் ஆகின்றன. சில ஆவதில்லை.

உதாரணமாக:

“ஒளி” (ப.10) அழகிய ஒரு கவிதை மிகச் சாதாரணமாக இப்படி முடிகிறது:

இருந்தும் உன்னை ஏற்றுவேன்
எப்படியாவது
என் குட்டிச் சுடரே!
உன் விழிமூடலில்
ஓய்ந்து மடியக்கூடும்
என் வாழ்வின் கரைகள்.

ஒரு கடைசி அரை வரி “ ஒரு வாழ்வைத் ” தாங்காது.

இதற்கு மாற்றாக : “சன்னல் விளிம்பிலாடும்” (ப.12)

மழையின் குட்டிதானே.
அது அழியப்போகிறது அல்லது
மழைக்குள் பொழியப்போகிறது
என நிச்சயித்தபடி
மழையற்ற வீட்டுக்குள்
தலை நுழைக்க வேண்டியிருக்கிறது
மறுபடி

இரண்டு கவிதைகளும் அவநம்பிக்கையைச் சொல்பவைதான். ஆனால், இரண்டாவது கவிதையில் மழைப்பற்றிய ஒரு
சுதந்திரமான, உற்சாகமான அனுபவத்திற்குப்பிறகு ஒரு இறுக்கமான கூட்டுக்குள் நுழையவேண்டியிருக்கிறது. “ஓய்ந்து
மடியக்கூடும் என் வாழ்வின் கரைகள்” என்கிற நீ-ண்-ட வாழ்க்கை பரப்பு ட்ரமடிசெ செய்யாத அனுபவத்தின்
முரணை, “மழையற்ற வீட்டுக்குள் தலை நுழைக்க வேண்டியிருக்கிறது மறுபடி “ என்கிற அனுபவத்தின் அடுத்த காலடி
செய்துவிடுகிறது.

“சிலந்தி” (ப.29) யில்:

எதுவும் செய்யக்
கூடுவதில்லை என்னால்
என்னுள் இருக்கும்
இந்தச் சிலந்தியை

இந்த வரிக்குப்பிறகு வாசகனுக்கு யோசிக்க ஒன்றுமில்லை.

“அவளும் நானும்” (ப.24) வில் :

நாளையும் அவள் நகர்வாள்
இப்படியே
புரியாத குற்றக் குமிழொன்றை
என்மீது நட்டுவிட்டு

அந்த புரியாத குற்றக் குமிழ் என்ன என்கிற கேள்வியோடு “உள்ளீடற்ற என் சோகங்கள்” என்கிற வரியும்
சேரும்போது, நமக்கேற்பட்ட ஒரு பழைய அனுபவம் அதிர்வடைந்து, புதிய அர்த்தம் ஊற்றெடுக்கும்.

“கவிதை“ (ப.30) கவிதைக்கான சாத்தியபாடுகள் கொண்ட காட்சிகளை வரிசையாக பட்டியலிட்டுவிட்டு

“எந்தக் கவிதையோ எழுதப்படவில்லை இன்னும்” என்று முடிகிறது.

கிட்டத்தட்ட இதே போன்ற பட்டியலைச் சொல்லிவிட்டு, இந்திரஜித் இவ்வாறு முடித்திருப்பார் :

“ இவர்களில் யாருக்காக கிழக்கு வெடித்து, கதிர் வழிகிறது ?”

இந்த வரி எழுதக் காத்திருப்பவனுக்கு தனி ஆசனம் வழங்குவதில்லை.

உமாவின் கலை

அன்றாட வாழ்வில் அவரது வாழ்நிலையின் குறுகிய எல்லைகள் எழுப்பும் விரக்தியும் ஏமாற்றமுமே அவரது பெரும்பாலான
கவிதைகளின் பாடுபொருளாக இருப்பதை முன்னுரையில் உமாவும் குறிப்பிடுகிறார். அவரது நிலையில் இருக்கும்
லட்சக்கணக்கான பெண்கள், உமாவைப் போல அல்லாது, தங்களுக்கு “பழக்கமாகிப்போன” வாழ்வின் பழக்கத்தின்
களிம்பை அகற்றிவிட்டு, அவர்களது வாழ்நிலையின் மர்மத்தை விளங்கிக் கொள்ள முனைவதில்லை.

மாறாத தினங்களின் கொழுத்த பகல்களின் நகர்வின் ஊடே, உயிரோட்டமிக்க வரிகள் உமாவிடம் சதா
பிரவகித்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலான கவிதைகள் ஆரம்ப வரிகளிலும் விவரிப்பிலுமே
கவித்துவத்தின் உயிரைக் கொண்டிருக்கின்றன. முத்தாய்ப்பு வரிகள் பெரும்பாலும் கீழிறங்கி விடுகின்றன.


“மரம்”(ப.32) –ல்

“ஒருமுறை கவனி அந்த மரத்தை
அது வெறும் மரமல்ல
என்பதையறியவாவது “

போன்ற பலவீனமான முடிவு வரிகள் அந்த கவிதையின் சாத்தியபாடுகளுக்கு போதிய நியாயம் செய்பவை ஆகாது.
இதற்கு மாறாக,

அடுத்தமுறை எனை நீ
அழுத்தும் இரவுகளில்
வெளியிலசையும் தென்னையை
வெறிப்பதையாவது
விசாரி ஏன் என்று எப்போதாவது

என்பது தன்னோடு ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டாவது பேசவோ , தன்னை ரசிக்கவோ இயலாத ஒருவன், அவன்
தன்மீது கவனம் குவிக்கும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில், தனது கவனத்தை சிதறவிடுவதாவது அவனது கவனத்தில் வருமா
என்பது அவளின் எதிர்பார்ப்பின் கடைசி தேசல்.

தன்மீது அன்பு செலுத்தாத துணையைப்பற்றி நிறைய எழுதியபின்னரும்,
வெட்டிவிட நினைத்தாயெனில்
வீழ்ந்துவிடக்கூடும் நான் நிரந்திரமாய்.
நிழலாய் உடன் வரவே விருப்பம்
நீயே மிதித்து நடந்தாலும். (ப.58)

என்றுதான் முடிக்கிறார். இதைப்போலவே “”எடுப்பாரற்ற தொலைபேசியோலி” யும்.

தொட்டி மண்ணிற்குள்
இட்ட விதையின் மௌனம்
கூடவருகிறது என்னோடு.
...
என்னுடன்
தன் வீர்யத்தால்
என் பசுமை தழைக்கட்டுமென்று

அவரது வாழ்வின் ஏமாற்றங்களுக்கு, அவரைச் சுற்றியுள்ள கவித்துவ கணங்கள் தான் அவரை ஆசுவாசப்
படுத்திக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதுவே இவரது இறுதி இலக்கு அல்ல; அவரது வாழ்க்கைத் துணையின் பாராமுகம்
ஒரு நாள் கனிவாய் திரும்பிப்பார்க்கப்போகும் அந்த தருணம்தான் அவருக்கு எல்லாம் :

கதவு திறந்ததும்-
காத்துச் சலித்த
மூர்க்கக் காதலோடு
முகத்தில் மோதும்
காற்று


கத்தரிக்கவே முடியாது (ப.92)
கூடக்கூடவே வரும் - என்
கற்பனைக் காதலனின் காலடிகளை.
...
தாலிக் கொடியைப் புறந்தள்ளி அவன்
தருகிற முத்தங்களை ரசிப்பதில்
எனக்கில்லை எந்தக் குற்ற உணர்வும்.

என்று முடிக்கிறார். இந்த முடிவுவரிகள் வரை எந்த உறுத்துதலும் இல்லாமல் கவிதையை வாசித்தவர்கள் கடைசி
வரியைப் படித்ததும் மன அழுத்தத்துக்கு ஆளாகி, கூக்குரலிடத் தொடங்குவதை சர்வ சாதாரணமாக கேட்க முடிகிறது.

தாலிக்கொடியை பற்றிய இந்த வரிகள் எப்பொழுதும் அதை அணிந்துகொண்டிருப்பவளை முன்னிட்டே வாசிக்கப்படுவதன்
இரட்டைநிலையே இந்த சர்ச்சைகளின் ஆதாரம். தாலிக்கொடியை அணிவித்தவனது அணிவிப்பதற்கு முன்பும் (ஆதி
ரகசிய காதலன்) / அணிவித்தபின்புமான(கணவன்) மாற்றங்களை இந்த கவிதை பேசுவதாக வாசிக்க இடமுண்டு.
தாலியை அணிவித்தவிட்ட உரிமையே எல்லா ஆதிக்க மனோபாவங்களுக்குமான ஆதாரமாக இருப்பதால்,
“தாலிக்கொடியை புறந்தள்ளு” தல் மாற்றத்திற்கான முதல் போராட்டமாகிறது.

“தாயின்மை” (ப.141) யில்:

தீக் கம்பியென இறங்கும்
அவளது ரகசியக் கண்ணீர்
அறுக்கிறது என்னை.
தடைகளற்று வீடெங்கும் பரவும்
தாய்மைகளில் கரைவுறாது
விறைத்துக் குத்திட்டு
ஓங்கி வளர்கிறது
அவளது தாயின்மை.

என்கிற வரிகள் அனாதையாக வளரும் குழந்தையைக் காணநேரும் மனவலியினைச் சொல்பவை.

“படையல்” (ப.142) லில் :

மாலையிட முனையும்
அம்மாவைத் தடுத்து,
திருப்பி வைக்கிறேன் உன் நிழற்படத்தை
அது நீயில்லையென்று

மரணம் பற்றிய சோகம் இன்னும் முற்றாக விலகாத சூழலில் அது ஒரு சடங்காக அனுசரிக்கப்படும் அபத்தத்தைச்
சொல்கிறது.

சாயல்கள்
“வன்மம்” (ப.33) “இடமும் இருப்பும்” காலத்து மனுஷ்யப்புத்திரன் கவிதை. (மனுஷ்யபுத்திரன் “நீராலானது” க்கு
நகர்ந்துவிட்டிருக்கிறார்.)

“வெறும்பொழுது “(ப.26) வில் இடம்பெறும் பட்டியல் செய்திகளும்

இவையன்றி
காரணமற்ற உற்சாகத்தோடு
கருஞ்சாம்பல் அணிலொன்று
களித்துத் திரியும் தனித்து

என்கிற முடிவு வரியும் கலாப்ரியாவின் சொல்முறையை ஞாபகப்படுத்துபவை.

தேவதேவனின் கவிதையை மிக ஒத்த கவிதை:

மழையின்
உடைந்த துயரம்போல தோன்றும்
சிறு தேக்கங்களில் இசை நெளிகிறது
கீழே இறங்கி
ஓடிப்பார்க்கும்முன்
நீரைவிட்டுவிட்டு
நின்றுபோகிறது இசை மட்டும்

தேவதேவனில் ‘இலைகளின் அசைவில் இசை ஓடிப்பார்க்கும்முன் இலைகளை விட்டு நின்றுபோயிருக்கும்’. (இது ஜே
கிருஷ்ணமூர்த்தி சொன்ன வரியென்று தேவதேவன் குறிப்பிட்டிருந்தார்.)

@ @ @