'வெறும் பொழுது' ஒரு பார்வை- பொன். இராமச்சந்திரன்

'வெறும் பொழுது' ... ஓரு பார்வை

வாசிப்பு என்பது ஒரு தேடல். வாசகனின் கருத்தோட்டத்தோடு இணையும் பொழுது அந்தத் தேடலில் ஒரு மன நிறைவு ஏற்படுகிறது. என்னதான் எழுத்துச் செழுமை இருந்த போதிலும், தேடலில் சிராய்ப்பு ஏற்படுமானால், பயணம் தொடர்வது சற்று சிரமம் தான். ‘வெறும் பொழுதிலும்' அந்த நெருடல்கள் தொடர்கின்றன. இவரின் கவிதைகளின் கருத்து செறிவும், காலத்திற்கேற்ற கற்பனைத் திறனும் பயன்பாட்டிற்கு உகந்ததாகவே காணமுடியவில்லை. பெண்ணியல் பார்வையில் இவர் கவிதைகள் சென்ற போதிலும், தனது எதிர்மறை எண்ணங்களை நிறையவே பதித்திருக்கிறார் இந்தக் கவிஞர். வெளிச்சத்தின் தேடல்கள் இவர் கவிதையில் இடம் பெறும் பொழுதும், இரவின் கருமையைக் கொண்டு அதனைக் கட்டிப் போட்டு விடுகிறார். வேதனை தான் வாழ்க்கையோ என்று எல்லோரையும் தடுமாறச் செய்யும் ஒரு அறைகூவல் அவரது கவிதைகளில் நிரம்பி வழிகின்றன. இவரது கவிதை வரிகளிலால் இதனைக் கூறவேண்டுமானால்,

"சொற்களின் பின்னலில்

சிக்காது நழுவுமோர்

புரியா உணர்வு

பேனாவோ முக்காடிட்டு

எந்தக் கவிதையோ

எழுதப்படவில்லை இன்னும்"

இருந்தபோதிலும், பெண்மையின் செறிவிற்கு வழி தேடும் இவரது கவிதை வரிகள், ஆண்மையின் அடக்குமுறைகளையும் அதனால் கல்வி இயலில் கூட கருத்தூன்ற முடியாத வெறுமையின் நிகழ்வுகளையும் இவரது கவிதைகளில் பதிவு செய்துள்ளார். ஆண் வர்க்க வெறுப்பிலும் கூட,பெண் நிறைவு அம்சங்களைத் தன் கற்பனைக் காதலனிடம் தேடுகின்றார் இக்கவிஞர். இவரது ஆண்வர்க்க வெறுப்பின் உச்சக்கட்டமாக இப்படி வருகிறது அவரது கவிதை வரிகள்.

"அளைகிறேன் தடை விதிகளின் கருங்கற்களை

அச்சுப்பிசகாத ஆண்களின் நிழல்கள்"

சில இரசிக்கத் தகுந்த கவிதைகளைக் குறிப்பிடும்போது, அவரது "செடி" என்னும் கவிதை இப்படி முடிகிறது.

"சிறு தொட்டியின்

ஒருங்கிய சுவர்களிலிருந்து

மறுகி மறுகிக் கேட்கிறது

அந்தச் செடியின் காடாகும் கனவு"

இதனை படிக்கும் பொழுது மற்றொரு கவிஞனின் வரிகளும் என் நினைவுக்கு வருகின்றன.

"கல்லறைக்கு அடியில் நான்.

சுவாசிக்க எத்தணித்தும்

காற்று வர மறுப்பதால்

காலத்தின் சுவடுகளுள்

அடங்கிப் போகிறேன்

நான் ஆணா...பெண்ணா...?"

பண்பாட்டு சுமைகளுக்கு சுமைதாங்கியாய் இருப்பதை விட, காற்றின் உணர்வாய், சில்லிட்ட நீரோடையின் சலசலப்பாய், பேரோசைகளின் உயர்ந்த அருவியாய் இலக்கியப்படுத்த விரும்பும் இவரது வாழ்க்கைக் கனவுகள், கனவுகளால் மட்டுமே நினைவு கூறப்படுகின்றன. நவீனம் என்பது பழமைக்கு முற்றுப்புள்ளி வைத்துத் துவங்குவதல்ல, பழமையும் பலவீனம் நிறைந்த வாழ்க்கை அல்ல. இன்று தேடலே வாழ்க்கையாய், இருப்பதையும் தொலைத்துக்கொண்டிருக்கும் அவல நிலை. 'அடிமை' என்ற வார்த்தைக்கு எத்தனையோ அர்த்தங்கள் நம் வாழ்க்கையில். இந்தச் சிந்தனைகளின் முகவரிகளை இவரது கவிதைகளில் காணமுடிகிறது.

@ @ @ @

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு