வெறும் பொழுது - நேர் திசையில் இசைவின் குரல்- ரெ.செல்வம்.
நேர் திசையில் இசைவின் குரல்-ரெ.செல்வம்
தன் புற வாழ்வின் மரபான நிகழ்வுகளோடு குறிப்பிடத் தகுந்த இசைவுத்தன்மை கொண்டவை உமாமகேஸ்வரியின் கவிதைகள் என்பதை இக்கவிதை தொகுப்பின் மொத்த வாசிப்பில் முடிகிறது. இம்மாதிரியான இசைவுதன்மை இன்றைய பெண் கவிஞர்களின் படைப்புகளின் நுண்மையான வாசிப்பின் மூலம் அறியமுடியும். உரத்துப் பேசாத வார்த்தைகள் மூலம் இவர் எழுப்ப முயலும் பிம்பமே சமகால படப்பாளிகளிடமிருந்து இவரை வேறுபடுத்தி காட்டுகிறது. ஆழமான படிமங்களை நம்பாத இயல்பான வார்த்தைகள் ஊடாக இவர் முன் வைக்கும் புறவுலகம் அதன் தாக்கத்திலிருந்து அகம் நோக்கிய தேடலே இவரின் ஆரம்ப புள்ளியாக உணர முடிகிறது. இதை விரிவாகக் காண முயல்வோமாயின் தமிழில் காலப்பிரியாவின் கவிதைகள் புறவுலகின் அதீதமான எல்லையில் நிற்பவை. அவை புறவுலகிலிருந்து மேலெழும்பி வாழ்வியலின் அகம் சார்ந்த கேள்விகள எழுப்ப முயல்வதில்லை ஆனால் வாசகன் அகம் சார்ந்து தூண்டக்கூடிய சாத்தியங்களை அவை சார்ந்திருந்தன என்பதை நாம் ஒப்புக் கொள்ள முடியும்.
உமாமகேஸ்வரி தன் புறவுலகிலிருந்து அகம் நோக்கிய கேள்விகளை நேரடியாக முன் வைக்க முயல்கிறார். அவற்றின் சாத்தியப்பாடுகள் குறித்த எல்லையே அவரின் கவிதைகளின் முன் நகர்வாகக் கொள்ள முடியும். கவிதையின் முன் நகர்வையும் புரிதலையும் விலக்க முற்படும் புதுமைபித்தன் கவிதை (நல்ல) குழந்தைத்தனமானது என்கிறார். மொழியின் குழந்தையான கவிதை கலை இலக்கியத்தின் மற்றைய படைப்புத் தளங்களைவிட தனக்கேயான உள்ளீடான சுயமான மொழியையும் தளத்தையும் தோற்றுவித்துக் கொள்கிறது, பிறகு தன் சிதைவுகளின் ஊடாக எல்லையற்ற தன்மையயும் அவை பெற்றுவிடுகின்றன. நவீன கவிதைகளுக்குறிய இந்த எல்லையற்ற தன்மையே வெகுசன வாசிப்பிற்குறிய கவிதை என்பவற்றிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுபவை உமாமகேஸ்வரியின் கவிதைகள் குறிப்பிடத்தகுந்த விமர்சன நிகழ்வுகளில் முன்னெடுத்துச் செல்லப்படாமக்கு அவை தீவிர அரசியல் தன்மையிலிருந்து விலகியிருப்பதே, இன்றையச் சூழலில் கவிதை குறித்த விவாதங்கள் அதன் அமைப்பில் மற்றும் அரசியல் சார்ந்த மதிப்பீடாகவே முன் வைக்கப் படுகிற தீவிரமான கவிதை தளங்களின் பிரக்ஞைப் பூர்வமான மையங்கள் குறித்த விவாதங்களும், ஆய்வுகளும் இன்றைய வாசகன் முன் வைக்கப்படுவதில்லை என்றே சொல்லமுடியும். இச்சூழலில் உமாமகேஸ்வரி போன்றோரின் கவிதையின் சூழலும் கவனிக்கப்பட வேண்டிய ஆளுமையும் பின் தங்கிவிடவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தனிப்பட்ட சுய புலம்பல்களும், வலியும் கவனிக்கப்படாமை போன்ற எஞ்சிய உணர்வுகள் இன்றையத் தமிழ் கவிதையின் மையச்சரடாக காண முடிவது இத்தொனியிலிருந்து அவை மேலெழுந்த படைப்பாக மாறும் புள்ளி அல்ல மையம் குறிப்பிட்ட சமூகத்தின் குரலாக அல்ல ஒரே திசையில் இயங்கக்கூடிய மனித மனங்களின் குரலாகவும் மாறுவது ஆகும்.
அவ்வகையில் இத்தொகுப்பின் மேலெழந்த படைப்பின் தொனியை நம்மால் அடையாளங்காண முடியும். ஆழமான படிமங்களை விளக்கிச் சொல்லும் இவரின் கவிதை உலகு 'வீடு முழுக்க அப்பியிருக்கும் இழப்பின் உலர்ந்த யரம்' போன்ற குறிப்பிடத்தகுந்த காட்சி படிமங்கள் மூலம் வாசகனை நேரடியான புறவுலகின் தாக்கத்திற்கு இட்டுச் செல்பவை. ஆதிக்க மனோபாவத்திற்கு எதிரான இவரின் கவிதைகள் இன்று அறியமுடிகிற பெண்ணீய படைப்பாளிகள் போன்றே நேர் திசையிலேயே செயல்படும் தன்மையுடயவை. எதிர் திசையிலான ஆழமுடைய படைப்புகள் எதிர்காலத்தில் நாம் கண்டடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் படைப்பாளனும், வாசகனும் சந்திக்கும் கவித்துவமான மையத்தை வாசகன் அடையக்கூடிய நம்பிக்கைத் தரும் கவிதைகள் இம்முழுதொகுப்பில் பரவலாய்க் காணமுடிகிறது.
@ @ @
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு