மா. இளங்கண்ணனின்,‘பரிதியைக் கண்ட பனி’
சுப்பிரமணியன் ரமேஷ்
மனித வாழ்க்கையே அலைகடலில் அகப்பட்ட துரும்புதான். அதிலும் அவன் ஏழையாய் இருந்து விட்டால் அந்த ஏழைபடும் பாட்டை இலக்கியத்தில் சொல்லி மாளாது.
மா.இளங்கண்ணன் அவர்களின் ‘ பரிதியைக் கண்ட பனி’ இப்படியான ஒரு ஏழையின் உணர்ச்சிக் கொந்தளிப்பினை ஒரு புகைப்படம் போலக் காட்டுகிறது. அண்ணாமலையின் நெஞ்சம் விம்ம, மனம் கனன்று கொண்டிருக்கும் சூழலில் ஆரம்பிக்கும் கதை, உணர்ச்சிப் பெருக்கின் மறு எல்லை தொட்டு அவர் களிப்பு கொள்ளுகையில் முடிவடைகிறது. உணர்ச்சி நிலையில் தாளமாற்றமோ, அல்லது கதை முன்னகர்ந்து விரிவடைவதையோ ஆசிரியர் கருத்தாக கொள்ளாமல், மனித வாழ்வின் உணர்ச்சிச் சுழிப்பினை உணர்த்துவதில் குறியாய் இருக்கிறார்.
குப்பை அள்ளும் அண்ணாமலை குடும்பத்தையும், தன் மகன் திருமேனியையும் கரைசேர்க்க தன்னால் முடிந்த மட்டிலும் பாடு படுகிறார். பகுதி நேர வேலையாக அம்பலவாணர் வீட்டுத் தோட்டவேலைகளையும் செய்து மகனை வளர்க்கிறார். அம்பலவாணர் உதவி புரிய மகனின் மனதறிந்து அவனை மேலும் படிக்க வைத்து பட்டதாரியாக்க கனவு காண்கிறார். அடித்தட்டிலிருக்கும் தன் வம்சம், படித்த தன் பிள்ளையால் முன்னுக்கு வந்து விடும் என்ற அவரது ஆசையில் மண் விழுகிறது. பொறுப்பில்லாமல் யாரோ நாலாவது மாடியில் வைத்திருக்கும் பூந்தொட்டி தன் மகனின் தலையில் விழுந்து அவன் மண்டையை உடைப்பதன் மூலமாக . . . அலைபாய ஆரம்பிக்கும் அவரது மனம் மகன் ஆபரேஷன் முடிந்து கண்திறப்பானோ என்ற ஆவலாதியில் உணர்ச்சிக் கொந்தளிப்பாய் அவரைப் பந்தாடுகிறது, அவரது மகன் திருமேனி கண்திறந்து அவரைப் பார்க்கும் பார்வையில் சூரியனைக் கண்ட பனிபோல அவரின் துன்பமெல்லாம் பறந்தோடி விடுகிறது, என கதை முடிகிறது.
சிறு கதைக்கேற்ற கால அளவு கச்சிதமாகப் பொருந்திய கதை. கதை நிகழும் காலத்தில் அப்போதைய சமூகச் சித்திரங்களைப் பதிவு செய்த படியும் சென்றிருக்கிறது. ஓட்டைக்குப்பைத் தொட்டியிலிருந்து நீர் ஒழுக குப்பை அள்ளப்படும் காட்சி, மாடியிலே கல்லுரலில் இடிக்கும் சூழல், பணியாளர்களின் மனமறிந்து உதவிடும் முதலாளிகள், பொறுப்பில்லாமல், மாடிப்படிச் சுவரில் பூந்தொட்டிகளை வைத்து வளர்க்கும் சூழல் இப்படி.
ஆசிரியர் உணர்ச்சிப் பெருக்கினை முற்றிலுமாக உடலின் மோழியாக உரைப்பதன் மூலமாக உள்ளத்து நிலையை நயமாகக் காட்டுகிறார். ‘உள்ளம் வெந்து கொண்டிருப்பதனால் அண்ணாமலைக்கு வாய் அடைத்து விடுகிறது.’ ‘ மூச்சு விடக்கூட நேரமில்லை’ ‘இரத்த வேர்வை சிந்துகிறார்.’ ‘ பசி வயிற்றைக்கிள்ளுகிறது.’ ‘கண்களில் அருவி கொட்டுகிறது வாயில் துவாலை வைத்துக் கடித்துக் கொண்டு அழுகிறார்’ ‘ உணர்ச்சி வசப் பட்டதால் அவர் உடல் புல்லரிக்கிறது. கண்களில் இன்பக் கண்ணீர் மல்கி கன்னங்களில் உருண்டு உதட்டில் பட்டு இனிக்கிறது, உள்ளம் வேகிறது, நெஞ்சினில் தீயை அள்ளிக் கொட்டுகிறாள், நெஞ்சினில் அடித்துக் கொண்டு குருதிக் கண்ணீர் கொட்டுகிறாள், அண்ணாமலை நெஞ்சத்தைக் கசக்கிப் பிழிகிறது, நெஞ்சில் ஆயிரமாயிரம் ஈட்டிகள் பாய்கின்றன, நெஞ்சம் உருகுகின்றது, தளும்பி நிற்க்கும் கண்ணீரில் தத்தளிக்கும் சிவந்த விழிகள், வாய் வரவில்லை, நா எழவில்லை, புறங்கையைக் கட்டிக் கொண்டு, துக்கத்தை மென்று விழுங்குகிறார், நீண்ட பேருமூச்சு வெளியேறுகிறது. அவர் உள்ளத்தைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த பளு பறக்கிறது பன்னீர் சிந்துகிறது. உதடுகளில் புன்னகை மின்ன, கரு விழிகளில் இன்பக் கண்ணீர் மல்குகிறது. இப்படி உணர்வுகளின் மொழியை ஆசிரியர் உடல் அசைவுகளாக விவரிப்பதன் மூலமாக குறிப்புணர்த்துகிறார்.
@ @ @

Labels:

இராமகண்ணபிரானின், ‘நாடோடிகள்’
சுப்பிரமணியன் ரமேஷ்
வேரில்லாமல் அலையும் நவீன வாழ்க்கைச் சூழலில் மரபும், பண்பாடும் ஒரு சமூகம் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ள, தங்களின் இருப்பினை நிலை நிறுத்திக் கொள்ள உதவும் நங்கூரங்கள் போன்றவை அவற்றை ஒருமனிதன் எப்போதும் கைவிடுதல் கூடாது என்பது நாடோடிகள் சிறுகதையின் மையக் கருத்து.
பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகள், இன, மொழி, மதங்கள் புழங்கும் சிங்கப்பூர் சூழலில் எளிதாகவும், இயல்பாகவும், ஒரு சமூகம் தங்களின் அடையாளத்தை இழந்துவிடமுடியும், ஒரு சமூகம் வளர்ச்சிக்கு விலையாக எதை எல்லாம் இழக்கலாம், எதையெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது மிகவும் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம். தன்னுடைய பலங்களாக ஒரு மனிதன் எவற்றையெல்லாம் உணருகிறானோ அவற்றை இயல்பாகவே தக்க வைத்துக் கொள்கிறான். அப்படி தன் சமூகத்தையும், அதன் கலாச்சாரத்தையும் தன்னுடைய பலமாக உணர்வதற்கு ஒருவனுக்கு அளவற்ற விழிப்புணர்வும், சுய-விசாரமும் தேவைப்படுகிறது.
இத்தகைய சுய விசாரணைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழிப்பாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் பின் புலத்திலுள்ள மேலான சாரத்தை உணர்ந்து கொள்ள வழி செய்யும், ‘குணம் நாடி, குற்றமும் நாடி’ குணங்களைக் கொள்ளவும், பலவீனங்களை களையவும், வழி செய்வதின் மூலமாக ஒரு சமூகம் மேலும் வளர வழி செய்யும்.
@ @ @
மேம்போக்காக பார்க்கையில் மிக எளிதென தோன்றும் சில கேள்விகளைப் பார்க்கலாம். எது நமது பண்பாடு? எது நமது மரபு? எது நமது கலாச்சாரம்? நம் கலாச்சாரத்தின் குறைகள் எவை, அவை நமது தமிழ் சமூகத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது? நமது கலாச்சாரத்தின் நிறைகளைப் பற்றிய விழிப்புடன் நாம் இருக்கிறோமா? நமது மரபென்பது நமது தளைகளா, கண்ணிகளா, பொறிகளா? அல்லது மலையேறும் மனிதனுக்கான பாதுகாப்பு பெல்ட்டுகள் போன்றவையா நமது கலாச்சாரம்? தமிழர் பண்பாடு என்பதும் ஆரியப் பண்பாடு என்பதும் வேறுவேறானவையா அப்படியானால் இப்போதைய நமது பண்பாடு எது? நம் பண்பாடு எவ்வாறு மற்றைய பண்பாடுகளைக் காட்டிலும் மேலானது? பண்பாடு என்பது நாகரீகத்திற்கு எதிரானதா, அல்லது அனுசரணையானதா?
ஒவ்வொரு தலைமுறைக்கு கைமாறும் போதும் நாம் நமது கலாச்சாரத்தின் நுண்மையான சில இழைகளை இழந்து விடுகிறோம், நமது வாழ்க்கைச் சூழல் மாறுகையிலும், நமது வாழ்க்கை நாளுக்கு நாள் நவீனமடைகையிலும் தவிர்க்க முடியாமல் சில விஷயங்களை இழந்து, சில விஷயங்களைப் பெறுகிறோம், இழப்பினைக் குறித்தும், அதற்கு விலையாக பெற்றுக்கொண்ட விஷயங்கள் நம் வாழ்வினை செழிக்கச் செய்கிறதா அல்லது நம்மை மெல்ல இயந்திரங்களாக்கி அழிக்கிறதா என்பதைக் குறித்துமான விழிப்புணர்வு நமக்கு இருக்கிறதா?
இந்துமதம் தன் சிந்தனை, சடங்குகளுக்கெதிராக புரண்டவர்களையும் தனது அங்கத்தில் ஒரு பாதியாக மாற்றிக்கொண்டதைப் போன்று (உதாரணமாக சார்வாக சிந்தனை, மற்றும் பௌத்த கோட்பாடுகள் ) பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான ஒரு கலாச்சாரம் தன்னுள்ளே முரண்பாடான கருத்துகளையும் தக்க வைத்துக்கொண்டிருப்பது இயல்பானதுதான், அது ஒருவிதத்தில் கண்ணகியும், மாதவியும் நம் மூதாதையர் என்று ஏற்றுக் கொள்வதைப் போல, ஒரு தார ராமனும், பலதார தசரதனும் மூதாதையர் என்று கொள்வதைப்போல... அப்படியானால் நாம் அவற்றில் எதை எப்படி தெரிவு செய்யப் போகிறோம்? எந்த அடிப்படையில்?
@ @ @
தனபாலனின் வாழ்க்கையையும் அதற்கு முரணாக அவனது பால்யத்தோழன் பார்த்திபனின் வாழ்க்கையையும் அருகருகே வைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். தனபாலன் தன் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள விழைந்து, தன் பண்பாட்டையும், தான் சார்ந்த சமூகத்தையும் வலிந்து புறக்கணிக்கிறான்... மொஸ்தரான நாகரீகத்தையும், மேலைய பண்பாட்டையும் தழுவுகிறான். பொருளாதார ரீதியாக அவன் சுபீட்சம் அடைவது, சமூகத்தின் மெல்தட்டு வாசியாக அவனை மாற்றுகிறது. ஆனால் நண்பர்கள், உறவுகளை மதிக்காத தன்மை, சந்தர்ப்பவாதம் அவனது குண இயல்பாகிறது. அதே சந்தர்ப்பவாதமும், மேம்போக்கான தன்மையும் அவனது மகளுக்கும் வாய்க்க ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த தனபாலனை தவிக்க விட்டு அவரின் மகள் ஒரு அமெரிக்கனுடன் சொல்லாமல் ஓடிப்போய் அவளின் வாழ்வினை நிர்ணயித்துக் கொள்கிறாள்... அந்த சோகத்தில் மனைவி பத்மினியும் இறக்கிறாள். சோகத் தனிமையில் தன் வாழ்க்கையை சுய பரிசீலனை செய்யும் தனபாலன் தமிழர்தம் பண்பாட்டை அவர் சார்ந்திருந்தால் தம் வாழ்க்கை மகிழ்வுடன் இருந்திருக்கும் என்னும் முடிவுக்கு வருகிறார், இந்த மனமாற்றத்திற்கு அறிகுறியாக, தமிழர் பண்பான பிறர்க்கு உதவுதல், தன்னலமற்ற சேவை போக்கை அவர் மனம் நாடுகிறது என்பது தன் சேமிப்பிலிருந்து அவர் தமிழர் முன்னேற்றத்திற்காக நன்கொடை தருவதில் குறிப்புணர்த்தப்படுகிறது.
பார்த்தீபனோ ஆடம்பரமில்லாத எளிய வாழ்க்கையைத் தெரிவு செய்கிறான். வேகமான பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டிலும், அகவாழ்வை செழுமை செய்யும் கலாச்சாரத்தை தெரிவு செய்கிறான். உறவுகளையும், நட்பையும் பேணிக் காப்பதன் மூலமாக அவன் மனம் விசாலமடைகிறது, அது அவன் வாழ்விற்கு அமைதியையும், தெளிவையும் தருகிறது. அந்தத் தெளிவு மெல்ல விரிவடைந்து, தான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற தன் சமூகநலன் சார்ந்த விஷயங்களில் பிணைத்துக் கொள்ள வைக்கிறது.
கதைக்களம் மு.வா.வின் கதைக் களத்திற்கு நெருக்கமானதாக இருக்கிறது. குறிப்பாக அகல்விளக்கு கதையையும், நாடோடிகளையும் சேர்த்து வாசித்து, வாசிப்பைச் செழுமைப் படுத்திக் கொள்ளலாம்.
கதைக்கான காலம் நீண்டதாக இருப்பதன் காரணமாக நிறைய உணர்ச்சிமாற்றங்களை மிகச் சுருக்கமாக சொல்ல நேர்ந்திருக்கிறது, இது ஒரு நாவல் சுருக்கத்தை வாசிப்பதைப் போன்ற அனுபவத்தை தந்துவிடுகிறது.
@ @ @

Labels: