நகுலன் ஒரு வாசகப் பார்வை -ஜெயந்தி சங்கர்
போவதையே நினைத்தபடி இருந்தவன் வாசகப் பார்வை: ஜெயந்தி சங்கர்
While I thought that I was learning how to live, I have been learning how to die. -Leonardo da Vinci
மரபிலிருந்து வெளியேறிட முடியாத அல்லது விரும்பாத தத்துவங்களை உதிர்க்கும் ஒரு தனித்துவமான கவிதை மொழி நகுலனுடையது. மரபில் ஒரு காலும் நவீனத்தில் ஒரு காலுமாக இருக்கும் நகுலன் தன் சாதிப் பின்னணியை எழுத்திலும் வாழ்விலும் நிராகரித்த நகுலன் தன் கவிதை மொழியில் மரபை விடாது பற்றியிருப்பது ஒரு சுவாரஸியமான முரண் என்று எனக்குத் தோன்றுகிறது. நவீன தமிழ் கவிதையின் துவக்க கட்டத்தில் வாழ்ந்த கவிஞர் எனும் நியாயமான காரணத்தையும் மறந்திட முடியாது தான். 'நாயர்' என்று புனைப்பெயரில் எழுதியிருக்கிறார் என்பதை அறியும் போது பொதுவாக சாதிப்பிரிவில் இல்லை அவரின் வெறுப்பு, தன் சாதியின் மீது மட்டுமே என்பதும் நிரூபணமாகிறது என்று நினைக்கிறேன்.
சிலர் வந்ததும் வந்து சென்ற பிறகும் சூன்யமாகவே மிஞ்சுகிறார்கள்
என்ற அனுபவம் நாம் அறிந்திருக்கக் கூடிய எல்லோரிடமும் நமக்கு ஏற்படுவதில்லை என்றாலும் சில தருணங்களில் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும்.
எதைத் திறந்தால் என்ன கிடைக்கும் என்று திறந்துகொண்டே இருக்கிறார்கள்.
இதைவிட எளிமையாகவும் குறைந்த சொற்களிலும் தேடலைச் சொல்லிவிட முடியாது என்று நான் வியந்தேன்.
'உரையாடல்' என்ற கவிதையில்
பிராந்தி அருந்திய உச்ச நிலையில் நான் என்னுடனேயே பேசுகிறேன்; என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் என்னையே நான் அதட்டுகிறேன்
என்று சொல்லும் நகுலன் தன் தனிமையை அப்பட்டமாகச் சொல்லி விட்டார்.
யாருமில்லாத பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? எல்லாம்
என்று சொல்லும் போது நகுலனுக்கு தனிமையில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
மொழிபெயர்ப்பு மற்றும் பழம் இலக்கியங்களின் தாக்கம் கொண்ட கவிதைகளைக் காட்டிலும் முதல் வாசிப்பில் வார்த்தை விளையாட்டு போலத் தோன்றி அடுத்த வாசிப்பில் தத்துவம் கூறும் முறையில் அமைந்திருக்கும் கவிதைகளே நகுலனின் கவிதைகளில் பரவலான கவனமும் முக்கியத்துவமும் பெரும் போலத் தெரிகிறது. வார்த்தை விளையாட்டு போலத் தோற்றம் தரும் இவ்வகையான கவிதைகள் தான் நகுலனிடமிருந்து அதிகம் கிடைத்திருக்கின்றன.
நினைவு ஊர்ந்து செல்கிறது பார்க்கப் பயமாக இருக்கிறது பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.
என்ற வரிகளிலும் சதா ஊர்ந்துசெல்லும் நினைவுகளைக் குறித்து ஒருவிதமான பயமும் ஆர்வமும் கொள்வதை தனக்கே உரித்தான பாணியில் சொல்லும் அனுபவமும் நமக்கு அறிமுகமானது தான்.
***
அதிகமும் மரணத்தைப் பாடியிருப்பதாகத் தெரிகிறது. அந்த மரணத்திற்குக் காத்திருக்கவே தனிமையைத் தனதென ஏற்றிருக்கிறார் இந்தக் கவி. அல்லது நிழலென ஒரு அடர் தனிமையில் வாழ முடிவெடுத்ததால் சாவை எதிர்பார்த்துத் தன் வாயிலையே பார்த்திருந்தாரோ? வாழ்க்கையில் வெறுப்புற்றோ அல்லது வாழ்ந்து முடித்து போதுமென்று நினைத்துத் தான் தான் மரணத்தை விரும்பினாரோ?! வாழ பயந்து தான் மரணத்தை விரும்பினாரா என்ற கேள்விகளுண்டு என்னில். மரணத்தை எள்ளிடம் கவிகளுக்கு மத்தியில், மரணமேயில்லாத உலகைக் கற்பனைசெய்து காட்சிப்படுத்தி மகிழும் கவிஞர்களுக்கிடையே இவரளவுக்கு மரணத்தை மிகத் தீவிரமாக சந்திக்கத் துடித்த ஒரு கவிஞர் இருப்பாரா என்றே தெரியவில்லை.
மரணத்துக்குப் பின் என்ன, மரணத்துக்குப் பின்னான வாழ்வு என்று ஏதேனும் ஒன்று உண்டா என்று பல்வேறு கேள்விகளையும் தாங்கிய மரணம் குறித்த மர்மங்களில் சாதாரணமாக மற்றெவருக்குமே இருக்கக் கூடிய ஆர்வத்தின்/ஈடுபாட்டின் தீவிரத்தைக்காட்டிலும் நகுலனில் இருந்த தீவிரம் 'தேகத்தையே உரித்து கோட்- ஸ்டேண்டில் தொங்க விடுகிற' அளவிற்கு பன்மடங்கு அதிகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. உடலைத் துறந்து உணர்ந்துவிடத் தவிக்கும் அந்தத் தீவிரத்தின் தாக்கம் தான் அவர் வாழ்க்கை முறையிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கின்றது என்று நினைக்கிறேன்.
தன் தேகத்திடம்
"இல்லை நீ அங்கேயே தொங்கிக் கொண்டிரு; உன்னைப்பிடித்துக் கொண்டு நான் தொங்குவதை விட நீ தனியாகத் தொங்கிக் கொண்டிருப்பது தான் ரண்டு பேருக்கும் நல்லது" என்று, சொல்லிவிட்டு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியே செல்கிறான்.
என்று நகுலன் சொல்லுபோது தன் உடலையே பாரமாக நினைப்பதை நம்மால் மேலும் உறுதிசெய்து விடமுடிகிறது. உடலின்றி உலகை ஒரு பார்வையாளனாகக் காணும் ஆசையும் இதில் கசிவதை நம்மால் உணரமுடியும்.
மனிதருள் சிலந்தியும் பெண்டிருள் சிதலும் உண்டு.
எனும் போது ஏன் //மனிதருள் சிதலும் பெண்டிருள் சிலந்தியும்// என்று பாடக் கூடாது என்று எனக்குத் தோன்றியது. இடக்கா? இருக்கலாம். ஆனால், தோன்றியதென்னவோ உண்மை.
இருப்பதற்கு என்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்
என்று ஒருவித pessimistic தொனியில் சொன்ன நகுலன் தமிழ் நவீன கவிதையின் துவக்கமாக என்றென்றும் தமிழிலக்கியத்தில் இருக்கத் தான் போகிறார் என்று தோன்றுவதையும் உணர்கிறேன். அதிக அங்கீகாரம் இல்லாததால் அவருக்கு ஏதேனும் ஆதங்கம் இருந்திருக்குமோ?
***
எப்பொழுதும் அவள் நினைவு தான் அவள் யார் என்று கேட்காதீர்கள் சுசீலாவின் பல உருவங்களில் இரு உருவம்
என்று சொல்லும் தன் 'சுசிலா'வைப் பற்றி எல்லோரும் யார் என்று துருவிப் பார்க்கும் பார்வைகளாலும் கேள்விகளாலும் வெறுப்படைந்த நகுலனின் உணர்ச்சி வெளிப்பாட்டை கீழ்காணும் வரிகளில் நாம் புரிந்து கொள்ளலாம்.
அவள் யார் என்று கேட்காதீர்கள் உங்கள் துருவிப்பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வு கொடுங்கள் உங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது அக்கறையுமில்லை.
சுசீலாவைக் குறித்து மற்றொரு கவிதையில்,
நேற்று ஒரு கனவு முதல் பேற்றில் சுசீலாவின் கர்ப்பம் அலசிவிட்டதாக இந்த மனதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
என்று அவர் சொல்லும் போது கட்டுப்பாடற்று அலையும் தன் மனதைக் குறித்து அலுத்துக் கொண்டு சொல்லுமிடத்தில் ஆழ்மனம் பலவேளைகளில் கொள்ளும் விசித்திர விகாரங்கள் கனவுகளாக மேலெழுவதை இயல்பாகச் சொல்கிறார். அதுவும் நம் மனதுக்கு நெருக்கமானவர்களைப் பற்றியே இவ்வகைக் கனவுகள் அமைவதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். சுசிலாவுடன் மனதளவில் வாழ்ந்து வரும் நகுலன் அவள் கர்ப்பம் தரித்திருப்பதாகவும் கரு கலைந்தது போன்றும் கனவு காண்வது இதையே தான் உறுதி செய்கிறது.
வேளைக்குத் தகுந்த வேஷம் ஆளுக்கேற்ற அபிநயம் இதுதான் வாழ்வென்றால் சாவதே சாலச் சிறப்பு
என்று சொல்லும் நகுலனுக்கு பாசாங்குகளில் இருக்கும் வெறுப்பு தெளிவாக நமக்குப் புரிகிறது. அதனால் தான்,
மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்
என்று சொல்லும் நகுலகின் கோபம் பாசாங்கு செய்யும் அனைவரின் மீதுமாகப் பாய்கிறது. வாய் பேசாத போதிலும் சதா நம் உள்ளம் பேசிக் கொண்டே தானே இருக்கிறது? மூச்சடங்கும் போது தான் அது அடங்குமோ என்னவோ. அத்தகைய அமைதியைத்தான் நகுலன் தான் காத்திருந்த மரணத்தில் தேடினாரோ!? அவரின் தனிமை அதற்குத் துணை போனதோ அல்லது அதற்கென்றே தனிமையை சுவீகரித்தாரோ தெரியவில்லை.
மனங்கொள்ளும் விபரீத கற்பனைக்குச் சான்றாக நகுலன் எழுதிய
யார் தலையையோ சீவுகிற மாதிரி அவன் பென்சில் சீவிக் கொண்டிருந்தான்
என்ற கவிதை குழந்தை உருவில் உருகி வழியும் மெழுகுவர்த்தியைப் பற்றி யாரோ எழுதிய கவிதையை நினைவூட்டுகிறது.
***
நான் உண்மையில் 'ராமச்சந்திரா' கவிதையை மனதில் வைத்துக் கொண்டு தான் நான் இந்தத் தொகுப்பை அணுகினேன். ஆகவே, பெரிய முன்முடிவென்று என் மனதில் எதுவும் இல்லாதிருந்தாலும் ஒரு வித எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதே நேரத்தில் நகுலனின் உரைநடையை (நாவல்கள்!) விட அவரின் சில கவிதைகள் எனக்குப் பிடித்தே இருந்தன, வேறு சில கவிதைகள் ஒரு வித சோர்வு கலந்த சலிப்பை ஏற்படுத்திய போதிலும் கூட.
கை எழுதி அலுத்துவிட்டது. கண் பார்த்து மூளை சிந்தித்து மனம் அதையும் - இதையும் நினைத்து நினைத்து
என்பது போன்ற பல வரிகளில் கவிஞருக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையின்மை தூக்கலாக தெறிக்கிறது. காலனைக் காலால் மிதிப்பேன் என்ற பாரதியின் கவிமொழியில் வாழ்வதற்கான ஆர்வம் இருக்கும். ஏழ்மை போன்ற பல நெருக்கடிகள் மிகுந்த அவரது வாழ்க்கையிலும் அவருக்கு வாழ ஆசை இருந்தது என்பதில் இருக்கக்கூடிய சுவாரஸியத்துக்கு நகுலனின் இந்த நம்பிக்கையின்மையின் தீவிரத்தின் சுவாரஸியம் ஒருவிதத்திலும் குறைந்தில்லை.
'Death most resembles a prophet who is without honor in his own land or a poet who is a stranger among his people' என்று Kahlil Gibran சொன்னது நகுலனுக்கு மிகவும் பொருந்துகிறது. 'கோட்- ஸ்டேண்ட்' கவிதைகள் பரவலாக அறியப் படுகிற நியாயம் யாருக்கும் புரியும். நகுலனின் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசிக்கும் போது ஏற்படக் கூடிய உணர்வு முற்றிலும் வேறு விதமாக இருக்கும் என்று தோன்றும் வேளையில், ஒரு தொகுப்பாக வாசிக்கும் நாட்களில் என்னிலும் ஒருவித மனச்சோர்வு (depression) படிந்ததை உணர முடிந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
***
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு