'நகுலன் கவிதைகள்' வாசிப்பு: ரெ பாண்டியன்
நகுலனின் கவிதைகள்யாருமில்லாத பிரதேசத்தில் காலியான பின்னும் வெட்டவெளி நோக்கி அசைந்தாடிக் கொண்டிருக்கும் சூரல் நாற்காலி
ரெ.பாண்டியன்.
ரெ.பாண்டியன்.
வந்தவன் கேட்டான்“என்னைத் தெரியுமா?
“தெரியவில்லையே “ என்றேன்
“உன்னைத் தெரியுமா ?” என்று கேட்டான்
“தெரியவில்லையே “ என்றேன்
“பின் என்னதான் தெரியும் ? “ என்றான்
உன்னையும் என்னையும் தவிர வேறு எல்லாம் தெரியும்
என்றேன். (பக்கம் 198, நகுலன் கவிதைகள், காவ்யா வெளியீடு, 2001)
உலகத்தைப்பற்றி நாளிதழின் சேதிகளாய், தடித்த புத்தகங்களின் பக்கங்களாய் எழுத்துக்களாய், தகவலாய் தெரியும். என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் (அதாவது எனது சுற்றம்) பற்றியும் அனுபவபூர்வமாய் இன்னும் எதுவும் நிச்சயமாகத் தெரியாது.
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை” (பக்கம் 184)
முதல் “எல்லாம்” போத புத்தியால் ஒரு செயல்பாட்டை, அதன் உப-செயல்பாடுகளுடன், செயல்பாட்டின் கொள்கை அடிப்படைகளை அறிந்து வைத்திருப்பது; இரண்டாவது “எல்லாம்” அபோதபூர்வமாய் ( அதே செயல்பாட்டை சுயமான அனுபவமாக உள்வாங்கி ) உணர்தல் அல்லது நான் உள்வாங்கியிருக்கும் அனுபவத்தளம் எவ்வளவு தூரம் அரைக்கிணறு தாண்டிய தனமானது என்பதை புரியவைக்கும் ஒரு தூரத்து வெளிச்சம்.
அங்கு
இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீகளா? “
என்று
கேட்டார்
“எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்”
என்றேன். (பக்கம் 191)
அவர் தன் முன்தீர்மானத்தில் இவரை வைத்திருக்கும் இடம், போட்டு வைத்திருக்கும் புறக்கணிப்பின் பின்வாசல்கடை - இவற்றிலிருந்து இவராய் நகர்ந்துவிடமுடியுமா ?
சந்தை
செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல் “ (பக்கம் 189 )
இழவு வீட்டின் மௌனத்தை சடங்குபூர்வமாய் கடைப்பிடிப்பதை எதிர்பார்த்து சென்ற மனம் அங்கிருந்த இயல்பு நிலையை “இரைச்சலாய்” பார்த்து அதிர்ச்சி கொள்கிறது.
உள்
வீட்டிற்குள்
இருந்தோம்
வெளியில்
நல்ல மழை
ஒரு சொரூப நிலை (பக்கம் 186 )
வெட்டவெளியை நம்மிடமிருந்து அடைமழை அடைத்து, தடுத்துவிடும் வேளை (water curtain போல) – மழை சுழ, வீடு மட்டும் என்கிற ஒற்றை இருப்பும், வீட்டிற்குள்ளான ஓசைகளின் லயத்திலும் தட்பத்திலும் நனையாது நனைந்து லயிக்கும் அனுபவம்.
கடைசிக் கவிதை
யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது ?
எல்லாம். (பக்கம் 177 )
நிழலேயற்ற, கண்கூசும், வெயில் எரிக்கும் பாலைவனத்தில் யானைகள் நீர் அருந்த பத்து கிலோமீட்டர் தூரம் நடக்கின்றன. அதுபோன்ற ஒரு பகல்வேளையில் ஒரு நகர்புறத்து அலுவலக அவசரகதியில் மனிதர்கள் தங்களை மறந்த காரியங்களில். ஒரே தருணத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அறிந்த யதார்த்தங்கள் தவிர்த்து, அறியாத யதார்த்தங்கள் எத்தனை?
இதைப்போலவே இன்னொரு கவிதை:
இங்கும்
கத்தாழைச் செடி
சப்பாத்தி முள்
பாலைவனச் சோலைகள்
எனத்
தோற்றமளிக்கும்
கானல்நீர்ப் பரப்புகள்
ஊர்ந்து செல்லும்
ஒட்டகங்கள்
இங்கும்
உயிர் சலித்துக்கொண்டிருக்கிறது (பக்கம் 187 )
ஸ்டேஷன்
ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை;
ஸ்டேஷன் இருந்தது
என்பதை
“அது ஸ்டேஷன் இல்லை”
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது. (பக்கம் 169 )
ஸ்டேஷனில் இப்பொழுது யாருமில்லை. ஆனால் வேறு யார் யாரோ வெவ்வேறு காலங்களில் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்போது வந்த ரயிலிலும் (நினைவுகள் பயணம் போன பாதை) வந்து நின்ற ஸ்டேஷனிலும் (நினைவுகள் வந்துசேர்ந்து, உலவி நிற்கும் இடத்திலும்) யாருமில்லை என்பதால், இது ஸ்டேஷன் இல்லை (இதற்கு முன் இந்த இடம்வரை யாருடைய நினைவுப்பாதையும் நீண்டதில்லை) என்றாகுமா?
ராமச்சந்திரன்
ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவுமில்லை. (பக்கம் 169)
அவசரகதி என்கிற வெள்ளத்தில் தனக்குள்ளேயே மனிதன் மூழ்கிப்போனான். அதற்குப் பிறகு அடுத்த மனிதனின் தனித்த அடையாளங்களில் அக்கறை கொள்ளுமளவிற்கு அவன் பொறுமையற்று போனான். “ராமச்சந்திரனா” என்பது தனது அலுவலை விரைந்து முடிக்க எண்ணி கேட்கப்படும் கேள்வி. அதற்கு அவர் “ராமச்சந்திரன் “ என்றதும் வந்த காரியம் உடனே நிறைவேறியதின் ஆசுவாசம் உள்ளுக்குள். புதுமைப்பித்தனின் “மனித யந்திரம் “ கதையில் இயந்திரமாய் இயங்கும் சர்வர் மனிதனாகும் தருணம் (கீழே விழுந்த கைக்குட்டையை அவன் கவனிப்பது) இங்கே நிகழாமல் போகிறது. நிகழாமல் போன “எந்த ராமச்சந்திரன் “ என்கிற கேள்வியைத் தொடர்ந்திருக்கக்கூடிய சம்பாஷணை தொடர்பு, பின்னர் நினைவு கூரப்பட்டு, மனிதர்களுக்கிடையில் பாதாளமாய் விழுந்துவிட்ட மௌனம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
வழக்கம் போல்
வழக்கம்போல் வெளிவாசல்
திண்ணையில் சூரல் நாற்காலியில்
உட்கார்ந்திருக்கிறான்.
அந்தி மயங்கும் வேளை
..
மண்சுவரில் இலை, நிழல்களைக்
காணும்போது கலையின்
வசீகர சக்தி அவனை ஆட்கொள்கிறது.
வெயில் மறைகிறது
..
கையெழுத்து மறையும் வேளை
..
“பட்”டென்று நிழல்கூட
இல்லாமல் போகிறது. இருள்
எங்கும் “கப்”பென்று பரவுகிறது.
மரம், தந்திக்கம்பம், வீடு –
எல்லாமே மறைகின்றன.
எங்கும் “திட்டு திட்டாக”
இருள் மாத்திரம் எஞ்சி நிற்கிறது. (பக்கம் 168)
வழக்கம்போல தொடங்கும் ஒரு அந்திவேளை – இருள் விழுந்தபிறகு, அசேதனப்பொருட்களின் சேதன வடிவம் “திட்டு திட்டாக “ எஞ்சி நிற்கிறது. பழக்கத்தின் களிம்பேறிப்போன மனதின் ரசிப்புத்தன்மைக்கு, கலையின் வசீகரச் சக்தி ஒரு புது அதிர்ச்சியை தந்து செல்கிறது : எது உண்மையில் அழகு ? வெயிலும் வெளிச்சமும் அதன் வெவ்வேறான நிறச்சாயல்களும் - அவை சிந்திவைக்கும் நிழல்களுமா அல்லது அங்கு பகல்-இரவு எப்பொழுதும் இருக்கும் இயற்கையா ?
அவர் பல உண்மைகளைச் சொல்கிறார்
ஒரு உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு (பக்கம் 181 )
ஒரு உண்மையை மறைக்கவேண்டுமானால், அதன் வெற்றிடத்தை மறைக்க அதன் அருகருகே இருக்கும் பிற பாதகமற்ற உண்மைகளை இலை, தழைகளை இழுத்துப்போட்டு ஒரு குழியை மூடுவதுபோல மூடவேண்டும்.
நகுலனின் கலை
“எவற்றின் நடமாடும் சாயைகள் நாம்? “ என்ற மௌனியின் கதாபாத்திரத்தின் கேள்வி நகுலனது கவிதைகளின் ஆதார கேள்விகளில் ஒன்றாக இருக்கிறது. தனிமையின் சஞ்சாரத்தில் மொழியின் வார்த்தைகள் மீதும், புலன்கள்வழி அவரை வந்தடையும் காட்சிகள் மீதும், ஒலிகளின்மீதும் (குயிலின் கூகூ),உணர்வுநிலைகள் மீதும் அவரது பரந்த வாசிப்பின்மீதும், மரணத்தின்மீதும், தன்னிலிருந்து விடுபட்டு தன்னையே பார்த்துக்கொள்ளும் முயற்சிமீதும்(கோட்ஸ்டாண்ட்-ல் உடலை கழற்றி தொங்கவிட்டதும் காணமற்போகும் அவரது நிழல்) அவரது கேள்விகள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.
சூரல் நாற்காலி காலியாகிவிட்டது. ஆனால், நகுலனோடு பயணிக்கவிரும்பும் வாசகனின் பார்வையில் அது அசைந்தாடுவது இன்னும் நிற்கவில்லை.
@ @ @
(புதிய வாசகனுக்கு நகுலனை அறிமுகப்படுத்தும் விதமாய் இக்கட்டுரை தொடங்கப்பட்டது. நகுலன் மேலும் அனுமதிக்கும் இன்னொரு சந்தர்ப்பத்தில் இது முற்றுப்பெறலாம் )
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு