அடுத்த வாசகர் வட்டம்

அடுத்த வாசகர் வட்ட வாசிப்புக்காக "வண்ணதாசனின் சிறுகதைகள்" தெரிவு செய்யப்பட்டுள்ளது. சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள "வண்ணதாசன் சிறுகதைகள்" என்ற தொகுதியில் அவரது சில சமீபத்திய சிறுகதைகளைத் தவிர்த்து பிற கதைகள் அனைத்தும் தொகுக்கப் பட்டுள்ளது. அவைகள் பத்திற்கும் மேற்பட்ட சிறுகதை தொகுதிகளாகவும் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூரின் நூலகத்தில் பிரதிகள் கிடைக்கின்றன.

இன்றைய பகட்டும், ஆரவாரமும் நிறைந்த வாழ்க்கைச் சூழலில், மென்மையும், நுட்பமும், அழகும் நிறைந்த அவரது மனம் எளிதில் தட்டுப்படாததும்
உதாசீனப் படுத்துவதற்கு எளிதானதும் ஆகும்...ஒரு மலர்ந்த மலரை அலுவலகம் செல்லும் வழியில் பார்க்க வாய்ப்பதைப்போல...
என்பது என் கருத்து.

அவரது சிறுகதைகளில், நிறை, கூறல், சமவெளி, தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள், பெயர் தெரியாமலே ஒரு பறவை, கிருஷ்ணன் வைத்த வீடு, தனுமை, போன்ற நல்ல கதைகளை தவற விடாதீர்கள். (எல்லாகதைகளையும் படிக்க இயலாமல் போனால்). இது போல உங்களுக்கும் ஒரு பட்டியல் இருந்தால் அதையும் அனுப்பிவையுங்கள், எல்லோரிடமும் பகிர்ந்துக் கொள்ளுவோம்.

விடுமுறைகள் முடிந்த பின்னர், நூலக அதிகாரியிடம் கலந்து பேசி கூட்டத்திற்கான தேதியை பின்னொரு மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன்.
(ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி ஆரம்பத்தில் இருக்கலாம்.)

நகுலனின் கவிதையுலகு

மயக்கும்- சங்கமம், சங்கமம்- மயக்கம் என்பதனால் என்பதனால்? ஒன்றுமில்லை - நகுலனின் கவிதையுலகம்.
மானஸாஜென்.


வெளியும் உள்ளிருட்டும் முயக்கம் கொள்ளும் அறை, வெருட்டும் உச்சிப் பொழுதில் பிணத்தின் அடியில் தொடரும் நாய், அல்லது நட்சத்திரங்கள் சிரிக்க பாரவண்டி உருளும் ஓசை, மரங்களாய் இருந்து சூரல் நாற்காலிகளாகவும், மேஜைகளாகவும் மௌனித்து பரிமாணானித்திருக்கும் அறை, குப்பிகளும், நூல்களும் மயக்கத்திற்கு உதவ இருட்திட்டுகளின் ஊடாக மூச்சு நின்றால் பேச்சும் நிற்க அங்கே நகுலன் எப்போதும் இருக்கலாம் அல்லது எப்போதும் போல இல்லாமலேயும் இருக்கலாம். இவை எதற்கும் அர்த்தமில்லை. நகுலன் எழுதினால் அவை வேறு கதை அப்போது அர்த்தத்திற்கு முக்கியம் ஏதுமில்லை. அர்த்தமின்மை வலுப் பெற்று அர்த்தம் கொள்ளும்.

நகுலனும், நவீனனும் தனிமையும் வெறுமையும் போந்த ஒரு கோட்டின் இரு முனையில் ஒருவரை ஒருவர் மிக ஆழமாகவும், நுட்பமாகவும் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள். சுசீலா கோட்டின் இங்கும் அங்கும் தென்படுகிறாள். அவர்கள் எல்லோரும் டி.கே.துரைசாமியைத் தேட முற்படுகின்றனர், அவரோ காணாமல் போகும் அவரின் நிழலைத்தேடி அலைகிறார், அலைச்சலுக்கு இடையூறான தன் உடலையும் கழற்றிக் கோட் ஸ்டேண்டில் மாட்டியும் அலைச்சல் நிற்பதில்லை. சுசீலாவோ எப்போதும் போல ஏதும் சொல்வதில்லை எனினும் நிழல் தேடும்-சாவில் தேடி என்ன ஆகப்போகிறது என்பதை யாரும் அவருக்கு சொல்லத் தேவையில்லை, அதனால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை நகுலனோ, நவீனனோ ஏற்கனவே அவருக்கு சொல்லியிருக்கக் கூடும், அல்லது துரைசாமி அவர்களிருவருக்கும். அவர்களுக்கும் அது குறித்த பெரிய விளக்கங்கள் ஏதும் தேவையாயில்லை, அல்லது அவருக்கும்... ஏனெனில் அவரும் புறுந்தையை, அல்லது அந்த மஞ்சள் வண்ணப் பூனையை, அல்லது அந்த செங்கல்வண்ண நாயை, அல்லது இந்திரகோபப் பூச்சியைப் பார்த்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லது வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
முற்றாகவிடுபடாத தனிமை உண்மையில் இருண்மை கொண்டது. வள்ளலாரின் தனித்திருத்தலுக்கும், ஒரு இருத்தலியலாளரின் தனிமைக்குமான மெல்லிய கோடு. பெயரில் என்ன ஆகப்போகிறது நகுலனின் தனிமைக்கும் அவரின் நாயின் தனிமைக்குமான வேறுபாடு. ‘நாய்கள் வயதாவது குறித்து கவனம் கொள்வதில்லை’ என்னும் போது நகுலன் இங்கிருந்து அங்கு நகர்கிறார். அதாவது அங்கும் இருக்கிறார். முற்றாக கரையும் தனிமையை, சாவை ஒரு நிம்மதிக்கான வேண்டுதலாக கொள்வது அவரது நோக்கமல்ல. வாய்த்திருக்கும் தனிமையை தீர்க்கமாக அவதானித்தால் அதன் முடிவான இடம் அது என்ற அவரது தத்துவத்தின் முடிபை, அனுபவமாகப் பெற்றிட ஒரு எதிர்பார்ப்பும், அதற்குத் தயாரான நிலைமையுமே, சாவிடம் அவர் கொள்ளும் உறவு.


நகுலனின் தனிமை ஒரு கோணத்தில் சொன்னால், தீவிரமான தன் முனைப்பானது. அதன் காரணமாகவே பிளவு பட்டது. அவரது பலம் அத்வைதத்தின்பால் அவருக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக இப்பிளவு பட்ட மனப் பிழற்வையும் குறியீட்டுகளாக்கி அவரது கலை மனம் படைப்புகளாக்குகிறது. மனப்பிழற்வின் ஆகக் கூடிய கணங்களைக் காட்சிப்படுத்துகிறதன் மூலமாக மனப்பிளவின் கோட்டினை வெற்றிகரமாக நிரம்ப இடங்களில் அழித்து போதம் கொள்கிறது அவரது படைப்புகள், முக்கியமாகக் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்னால் கூர்ந்த அவதானிப்பில் நகுலன் சென்றடையும் இடம் உயிர்ப்பின் விளையாட்டாய் சதா நிகழ்ந்தவாரிருக்க, துரைசாமியோ, நவீனனோ, தானோ அல்லது யாரோ நினைவுப் பாதையின் குறுக்கும் நெடுக்குமாக அவரை இழுத்துக் கொண்டு அலைய ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போது தட்டுப்படும் வார்த்தைகளில் ஒளிரும் வார்த்தைகளை அது தன்னிடமிருந்தாலும், வாசிப்பின் அடுக்குகளில் இருந்தாலும் அள்ளி சிந்திவிடுகிறார் சித்தத்தை... அவரே சொல்வது போல சிமெண்ட் தரையில் தானிய மணிகளைப் போல. வெற்றிகரமான கவிஞன், தோல்வி அடைந்த ஞானி.

இருண்மை மிக இயல்பாக மயக்கம் கொள்வது அவரது படைபின் விசேஷமான அம்சம் இத்தகைய எதிர்நிலைகளின் சாதகமான ஒத்திசைவு அவரது படைப்புகளின் தனித்துவமான மனோநிலையையும், உணர்வு நிலையையும் வாசகர்களுக்கு பரிச்சியப் படுத்துகிறது. நகுலனுக்கும் அவரது படைப்பின் உலகத்திற்குமான உறவும் அத்தகைய மயக்கத்தினை தன்னுடைய ஆதாரப் புள்ளியாகக் கொண்டிருக்கிறது. அவரது மரபான பின்புலம்(Traditional)-நவீனத்திற்கான(Avant-garde ) இலக்கிய ஈடுபாடும், வார்த்தைகளைத் தெரிவு செய்வதில் உள்ள நுட்பம் மற்றும் அவைகளைக் கொண்டாடும் மனோநிலை, இதன் எதிர்நிலையாக வார்த்தைகளின் சம்பிரதாயமான அர்த்தங்களை உதாசித்து தனக்கான அர்த்தத்தை ஸ்தாபித்துக் கொள்வது, தமிழ் புலமையும் - ஆங்கிலப் படிப்பும், மனப்பிழற்வும்-போதமும், நாவலில் கவிதை முயங்குவதும், சாதாரண வார்த்தைகள் நகுலனின் விசேஷ ஆளுமையில் கவிதையாக மிளிர்வதும், இருத்தலுக்கும், சாவுக்குமான அவரது விசாரத்தில் அடையும் மனோநிலை, கற்பனைக்கும்- நினைவுக்கும், மற்றும் நினைவுக்கும்-நிகழ்காலத்திற்கும் இப்படி எதிர்நிலைகளின் மயக்கம் படைப்பில் கலாப்பூர்வமான வெற்றியை நல்குகின்றன. ஏராளமான கதவுகள் மூடியும் திறந்தபடியும் எந்தக் கதவு எப்போது திறக்கும் என சொல்லமுடியாதபடி வாசிப்பவனை பிரமிப்பூட்டுகின்றன.

நகுலனின் மொழியைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். தீவிர அனுபவத்தின் சாரமாகத் தெரிக்கும் சில வார்த்தைகள், செங்குத்தான பாறையில் தொற்றி ஏறும் மலையேற்ற வீரனுக்கு கைப்பிடி பள்ளங்களாகவும், பற்றியேற துருதிக் கொண்டிருக்கும் பாறை நீட்சிகளைப் போன்றும் பயன்படுபன. வார்த்தைகளின் கண்ணிகள் சம்பிரதாயமான தர்கத்தளத்தில் இயங்குவதை குலைக்கிறது, நகுலனின் கவி ஆளுமை. மொழியில் புழங்கும் சாதாரண வார்த்தைகளை, வாக்கிய அமைப்புகளை தன் ஆளுமைக்கேற்ப மாற்றிப் போடுவதன் மூலமாக அர்த்தமிழக்கச் செய்தோ, அல்லது நகுலனின் பிரத்யோக உலகிற்கேற்ப தனித்த அர்த்தங்களைக் கொள்ளும் தனித்துவமான பதங்களோ அல்லது சாதாரண வார்த்தைகள் திரும்பத் திரும்ப வேறு விதமான அர்த்த பாவங்களில் பயன்படுத்தப்பட்டதாலேயே நகுலனின் உலகின் விசேஷ கருவிகளாகவோ மாறி அவரின் உலகை சிருஷ்ட்டிக்கின்றன. மௌனி, லா.சா.ரா. போன்றவர்களை நகுலன் இவ்விஷயத்தில் ஒத்துப் போகிறார் எனலாம். மேலும் அவர்கள் உலகமும் குறுகிய வட்டத்துக்குள் அமைவுறுவதோடு, மொழியின் மனவெளி, வாசிப்பு அனுபவத்தில்அதிர்வுகளை உண்டாக்குவது.

மொழியின் அர்த்தங்கள் கைவிட்ட நிலையில், அர்த்தங்களைக் கோர்ப்பதன் மூலமாக இயந்திரத்தனமாக தர்கங்களையும், நினைவுகளையும் தொடர்ந்து வலைப்பின்னும் மனம், ஸ்தம்பித்துப் போகிறது. இத்தகைய ஸடோரி (satori)கள் நகுலனின் கவிதையின் சாத்தியப்பாடுகள். அந்த அர்த்தத்தில் இவரது குறுங்கவிதைகள் ஒரு வித புதிர்கள். (koan)

கவிதைகளில் நகுலனின் இடம் எல்லோருக்கும் வசீகரமானது, ஆனால் ‘நகுலனாகாமல்’ நகுலனின் இடம் கைகூடாது, அல்லது நகுலனால் மட்டுமே நகுலனின் கவிதைகள் சாத்தியம். ஏனெனில் நகுலனும் நகுலனின் கவிதைகளும் வேறானதல்ல.

@ @ @