நெடுங்குருதி எஸ்.ராமகிருஷ்ணன்

நெடுங்குருதி எஸ்.ராமகிருஷ்ணன்

வேம்பலை ஒரு கற்பனையூர். ஆனால் வேம்பர்கள் கற்பனை மனிதர்கள் இல்லை. ஊரின் கதை. அதில் வாழ்ந்த மனிதர்களின் கதை. அந்த மனிதர்கள் வீரர்கள். நெஞ்சுரம் மிக்கவர்கள். அசாத்திய தைரியசாலிகள். ஆனால் இந்த குணங்கள் அவர்கள் அறம் வளர்க்காமல் மறம் வளர்க்க மட்டுமே உதவுகின்றது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற அப்பாவித்தனங்கள் கிடையாது. ஐந்து மிகப் பெரிய பாவங்களின் ஒன்றாக கருதப்படும் களவுத் தொழிலே இவர்களது தொழில். கதைகள், காவியங்கள், திரைப்படங்கள் போன்ற அழகியல் கலை வடிவங்கள் அனைத்தும் எதிர்மறையான மனிதர்களை கதாநாயகனாக்கி அப்படிப்பட்ட மனிதர்களாக இருப்பது ஒன்றும் தவறில்லை என்ற ஒரு தவறான போதனையைத் தருவது சரியா தவறா என்ற பட்டிமன்றம் நடத்த வேண்டாம். காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் நாயகன் ஒரு திருடன். மலைக்கள்ளன், ராபின்ஹ¥ட், வேலுச்சாமி நாயக்கர், கொக்கி குமார், தளபதி சூர்யா, மலையூர் மம்மட்டியான், ஜம்புலிங்கம், வீரப்பன், நம்ப திருமங்கையாழ்வார் கடைசியாக தொழிலதிபர் வேடம் போட்டுக் கொண்ட குரு இப்படி எக்கச்சக்க கதாபாத்திரங்கள் எங்கோ சட்டத்தை மீறுபவர்களாகவும் செய்தது திருத்தொண்டிற்காக, மக்களுக்காக, ஏழைபாழைகளுக்கு ஒரு கதி மோட்சம் கிடைக்காதா என்று ஆயிரம் காரணங்கள் நியாயப்படுத்த முயன்றாலும் சரியாகத்தான் இருக்கும் என்று சில சமயங்கள் நம்மையறியாமல் அவர்கள் பக்கம் திரும்பினாலும் தவறு தவறுதான்! சிகரெட் குடித்து ஸ்டைலாக புகை விடுவது, சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பது போன்ற விஷயங்களால் சிகரெட் பிடிப்பது நல்ல விஷயமாகாது. மது குடித்து விட்டு தங்கள் மனத்தடைகளை உடைத்தெறிந்து விட்டு மனதில் இருப்பதை உளறிக் கொட்டுவது ரியலிசம். ஆனால் மது அருந்திவிட்டு வீரனாய் மாறுவது மாஜிக்கல் ரியலிசமா? அதே போல் நெடுங்குருதியும் யதார்த்தம், அதியற்புதங்கள் நிறைந்த யதார்த்தம் இரண்டுக்கும் நடுவில் ஓடிகொண்டிருக்கிறது.

கள்ளர் பயம் என்பது வெறும் பொருளைத் தொலைத்து விட்டுத் தேடும் துயரமா? இல்லை வெறும் பொருள் போனால் பரவாயில்லை உயிர் போகும் பயமா? கள்ளர்கள் களவாடுவதோடு தங்கள் தொழிலை நிறுத்தி விடுவதில்லை. கொலை செய்யவும் அஞ்சாதவர்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மைதானே! திருடக் கொடுத்துவிட்டுப் பரிதவிப்பது வாழ்க்கையின் மிகப் பெரிய சோகங்களில் ஒன்று. மாதம் முழுவதும் உழைத்து அதை சம்பளத் தேதியன்று ஒரு கணத்தில் பிக் பாக்கெட்காரனிடம் பறி கொடுப்பதன் அவலத்தை நேரில் கண்டவர்கள் இருப்பார்கள். கூட்ட நெரிசலில் பஸ் கண்டக்டருக்குத் தெரிந்த முகம் தென்பட்டவுடன் லேசுபாசாக சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு அபாய அறிவிப்புத் தந்த பின்பும் பர்ஸ் தொலைந்தது என்று புகார் கொடுக்க முற்படும் போதே நாந்தான் அப்பவே ஜாக்கிரதையா இருங்கன்னு சொன்னேனே என்று கூறும் பஸ் கண்டக்டர்கள். எந்த பஸ்ஸ¤ல போனீங்க என்று விசாரிக்கும் போலிஸ் "ஓ 12Cயா" என்று அர்த்தம் நிறைந்த "ஓ" போடும் காவலர்கள். குற்றங்கள் மிகக் குறைந்தே அளவுக் கொண்ட சிங்கப்பூரில் கூட அசந்து மறந்து சைக்கிளை சரியாகப் பூட்டாமல் வைத்து விட்டால் அப்புறம் சைக்கிளை மறந்து விட வேண்டியதுதான். யானை விலை 60 வெள்ளி என்றால் அங்குசத்தின் விலை 50 வெள்ளி! சைக்கிளின் விலை 60 வெள்ளி என்றால் அதை பூட்டுவதற்கு தோதாய் வாங்கும் சங்கிலி, பூட்டு பொன்ற உபரிச் சாமானகளின் விலை கிட்டத்த்ட்ட 30 வெள்ளி!
நல்ல மார்க் வாங்கினால் ஸ்கூல் போவதற்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி தந்து பின் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய கடமை தவறா பெற்றோர்கள் ரொம்ப நெருக்கமாகத் தெரிந்தவர்கள் தான்! முதல் நாள் புது சைக்கிளோடு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பையன். மத்தியானம் அரக்க பரக்க முகம் முழுக்க பதட்டமாக "அம்மா! சைக்கிள்ல •பிரன்ட் வீல் மட்டும் தான் இருக்கு. மிச்சத்தைக் காணும்", என்றான். முன் பக்கச் சக்கரத்தில் கனமான சங்கிலிப் போட்டுக் கட்டி வைத்து விட்டுப் போனதால் அது மட்டும் மிச்சம். சரி போய் அதையாவது எடுத்துக் கொண்டு வருவோம் என்று போனால் போகும் நேரத்தில் அதையும் காணும். பெரிய ரம்பத்தை எடுத்துக் கொண்டு வந்து சங்கிலியை அறுத்து முன் பக்கச் சக்கரத்தையும் எடுத்துக் கொண்டு போகத் தேவையான அவகாசத்தை கொடுத்து விட்டு வீட்டுக்கு ஓடி வந்த அசட்டுப் பையன். அதன் பிறகு சைக்கிள் என்று வாயேத் திறக்கவில்லை. ஆனால் எட்டு வருடங்களுக்குப் பிறகும் 'அம்மா என்னோட ப்ளூ சைக்கிள் மாதிரியே இன்னிக்கிப் பாத்தேன் அவன் தான் என்னோட சைக்கிளை திருடியிருப்பானோ" என்று சைக்கிள்,பள்ளி, பரபரப்பு எல்லாம் கடந்த பெரிய மனிதனாக ஆன பிறகும் அவனுள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் அந்த குழந்தைத் தனமும் ஏக்கமும்! வீட்டில் பால்கனியை தண்ணீர் விட்டு கழுவினால் நன்றாக இருக்கும் என்று பால்கனியில் இருந்த சைக்கிளை வெளியில் வைத்து விட்டு அலம்பித் தள்ளி விட்டு வெளியே வந்து பார்த்தால்????பெற்ற பெண்ணிடம் திட்டு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டத் தாய். இந்த அவமானத்தைத் தங்க முடியாமல் அடுக்கு மாடி தளத்தின் கீழே சுற்றிக் கொண்டிருந்த போலீஸிடம் சொன்னால் "ஹவ் டு •பைன்ட்பைசைக்கிள்? ஈவன் ஐ ஹவ் லாஸ்ட் மைன்", என்று சக சோகத்தை இருவரும் பகிர்ந்து கொண்டதோடு சரி! சைக்கிள் போனது போனதுதான்!அப்புறம் என்ன நினைத்தாரோ என்னவோ "டிட் யூ சீ எனிபடி டேக்கிங் யுவர் சைக்கிள்? யூ ஷோ மீ தென் ஐ வில் கெட் இட்!", என்று வேறு சொல்லி வெறுப்பேற்றினார். சைக்கிளை எடுத்துக் கொண்டுப் போவதைப் பார்த்திருந்தால் இந்த வீர மங்கை அவளே துரத்திக் கொண்டுப் போய் பேசியே அவனைத் திருத்தி சைக்கிளை மீட்டு 'பைசைக்கிளை மீட்ட பைங்கிளி' என்று ஒரு திரைப் படமே எடுத்திருக்கலாமே!

எனவே இதிலிருந்து அறியும் நீதி யாதெனின் வேம்பர்கள் போன்றவர்கள் வேறு வடிவங்களில் சில சமயம் சமுதாயத்தில் மிகப் பெரிய மனிதர்களாக நன்கொடை என்று கேட்டால் வாரித் தரும் ராபின்ஹ¤ட் வள்ளல்களாக மாறுவேடங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். திருடர்களாகப் பார்த்து ஏதாவது திருப்பித் தந்தால், இல்லை திருந்தினால் நம்மைப் போன்ற அப்பாவிகள் பிழைப்பார்கள்!!

எல்லாரும் வெறும் கதையைப் பற்றியே எழுதினால் எப்படி? அதற்குத்தான் இவ்வளவு முன்னுரை! என்பிலதனை வெயில் போலக் காயுமே... என்ற கோடைக் காலத்தில் துவங்கும் கதை, ஆண்டாள் பாடிப் பரவசமாய் ஆண்டவனுடன் கலந்த மேன்மைமிக்க பனிக்காலத்தில் முடிகிறது. கோடையின் கொடுமை, சினம், வெம்மை, பஞ்சம், வறட்சி இவையெல்லாம் அடுத்தெடுத்து வரும் பருவங்களின் சுழற்சியில் மாறி குளுமை பரவுவது போல் வேம்பர்களின் வாழ்க்கை முறைகள், அவநம்பிக்கைகள், வேதனைகள்,கயமைகள் காலசுழற்சியில் மாறி வேறு ஊர்களுக்குச் சென்று வேறு விதமான வாழ்க்கை முறைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்வதைக் காலக்குறீயீடுகளாகக் காடுகிறாரா ஆசிரியர்?

கோடைக்காலம், காற்றடிக்காலம், மழைக்காலம், பனிக்காலம் என்ற நாலு காலம் தான் வேம்பர்களுக்கு! வானம் பார்த்த வறண்ட செம்மண்பூமியில் வசந்த காலம் ஏது? ஆங்கில துரைமார்களின் சட்டங்களை எதிர்த்தவர்களுக்கு அவர்கள் வகுத்த பருவகாலங்களையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லையே!நாகு என்ற பதினோரு வயது சிற்வனின் பார்வையில் கதை தொடங்குகிறது. கதை ஒரு நூறு வருடங்களுக்குப் பின்னோக்கிப் பார்க்கிறது. ஆதிலட்சுமியக்கா சொல்லும் கதைகளை அப்படியே நம்பி விடும் அப்பவித்தனம். சென்னம்மாக் கிழவி பிடிச்சித் தின்னுருவா என்று மிரட்டுவதும், இன்னிக்கி ராத்திரி சென்னம்மா வானத்தில பறப்பா முழுச்சுக்கிட்டு இருந்தாப் பாரு என்று சொல்வதை நம்புகிறான்.

நாகு பறவைகளின் கூட்டத்தை ரசிப்பது பின்னாளில் ரத்தினாவதி மூலம் பிறந்த ஆண் குழந்தை திருமாலின் விசித்திர ரசனையை ஒத்திருக்கிறது. கல்யானை, மண்புழு, தவளைகளைத் தோழனாக்கிக் கொள்கிறான். கதை முழுவதும் யாரும் அவர்கள் வாழும் வாழ்க்கையில் நிறைவடையாமல் வாழ்கிறார்கள். சாகிறார்கள். களவாடிக் கொண்டு வந்த பணம் பொருள் எதுவுமே அவர்கள் வாழ்க்கைக்கு அடைப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. ஏழ்மை, பஞ்சம், பசி பட்டினியுடன் தான் வாழ்கிறார்கள். எப்போதும் ஏதோ ஒரு போராட்டம், பிடிபட்டு விடுவொமா என்ற பயம், நம்மை யாராவது காட்டிக் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம், நம்மை யாராவது காட்டிக் கொடுக்கும் முன்பாக நாம் முந்திக் கொண்டு விடலாமே என்ற நயவஞ்சகத்தனம் இவற்றோடு வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட பயங்களோடு சமூகத்தில் குற்றப்பரம்பரையாக அடையாளம் காணப்பட்டு வேறு விதமாக வாழ்க்கையைத் தொடர வாய்ப்புகள் கிடைத்தும் நீ யார் என்னை திருடக் கூடாது என்று சொல்லும் என்ற வீம்பு அதன் பின் தொடரும் வன்முறையில் நிகழும் நாகுவின் குரூரச்சாவு, உடலை விற்றுப் பிழைக்கும் ரத்தினாவதிக்கு நிகழும் வன் புணர்ச்சி, வலிகள் நிறைந்த வாழ்க்கை, திருமாலின் நினைவாக அவன் பிள்ளையை பெற்று வளர்த்தல், உடலை விற்றுப் பிழைக்கும் தொழில் வேண்டாம் என்று விலகி கடை வைத்துப் பிழைப்பு நடத்தினாலும் அவளைத் துரத்தும் பழைய வாழ்க்கை, வாட்டும் காமம், அவளது கான்வெண்ட் படிக்க வேண்டும் என்ற நிறைவேறாதக் கனவு, அதை தன் பிள்ளைத் திருமால் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை இவையனைத்தும் ரத்தினாவதி வாழ்க்கையைச் சுற்றிப் பிணைந்து கிடக்கின்றன. ஆனால் எதுவுமே நிறைவேறாமல், திருமணப் பந்தம் பாதியிலேயே முடிந்து,திருமாலுக்கும் நல்ல அம்மாவாக நடந்து கொள்ளாமல், ஆசைநாயகியாய் வாழும் வாழ்க்கையையும் தொடர முடியாமல் மேகவெட்டை நோய் வந்து தற்கொலை செய்து கொள்வது யதார்த்தத்தின் ஒரு பக்கம். மறுபக்கம் நாகு முறைப் படி மணந்த மனைவி மல்லிகா அவன் மகள் வசந்தாவின் கதை.

நடுவே வரும் வேம்பர்களின் கதை, வெஸ்லி துரையை துரத்தி துரத்திக் கொல்லும் வேம்பன், தேவானை சிங்கி• இவர்களின் கதை, பகீரின் மனைவி, மகள்கள், இப்படி மனிதர்கள் வருகிறார்கள். யாராலும் வெல்ல முடியாத விஷயங்கள் இவர்கள் மூலம் சொல்லாமல் சொல்லப் படுகின்றன. வேட்கைகள், உடலைச் சார்ந்த காம வேட்கைகள்,• உள்ளத்தைச் சுடும் காதல்கள், வாழ்தலுக்குரிய வேட்கைகள், கனவுகள் காண முடியாத கட்டில் வேண்டும் கேட்கும் பகீரின் மனைவி வேம்பலைக்கு ஒரு விசித்திரப் பரிசு கொடுக்கிறாள். குரங்குகள் கைகளை உயர்த்தி மணி அடிக்கும் மணிக்கூண்டு! இதன் மூலம் வேம்பலை தன் கைக்குள் அடங்கி விட்டதாக அவள் எண்ணுகிறாள்.ஆனால் ஊர் மக்களுக்கு அவை ஒன்றும் சந்தோஷப்படுத்தவில்லை. மாறாக பயமுறுத்துகின்றன. ஊமை வேம்பு இரவு நேரங்களில் உம் உம் என்று சத்தமிடுவது, வாங்கி வந்த பசுமாட்டில் தெய்வத்தைக் காண்பது, காமதேனு என்பது,• பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் வசந்தா, அவள் தோழி ஜெயக்கொடி இருவரும் ஒரே ஆளைக் காலிப்பதும், ஒருவனையேத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதும் இப்படி சில சமயம் எதார்த்தத்தை மீறிய கதைகளோடு எதார்த்தப் புனைவுகளும் ராமகிருஷ்ணனை ஒரு சிறந்த கதை சொல்லியாக்குகிறது.

கதை முழுக்க பெண்கள், பெண்களைச் சுற்றி வரும் சோகங்கள், கண்ணீர் இப்படி பரிதாபத்துக்குரியப் பெண்கள் நிறைய பேர். ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்கள், அவர்கள் அதற்குத் தேடும் தீர்வுகள் இவற்றை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை. வசந்தா பார்த்துப் பேசி பழகியறியாத தந்தை, வாழாத அவரது ஊர் இதை நாடிச் செல்கிறாள். எந்த இடத்தில் இருந்தாலும் அவள் விரும்பிய ஒன்றுமே நடக்காத போது மீண்டும் பழைய சுழற்சிக்குச் செல்வதை விரும்புகிறாளோ என்று எண்ண வைக்கும் முடிவு!

சித்ரா

நெடுங்குருதி ஒரு பார்வை-ஜெயந்தி சங்கர்

எஸ் ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி'

வாசிப்பு: ஜெயந்தி சங்கர்


உறுபசி கொண்ட ஊர் - வேம்பலை

ஊரையும் உணர்வையும் பாத்திரங்களாக்கும் வித்தை எஸ் ராவின் எழுத்துக்குப் பலம். மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் 'நெடுங்குருதி'யின் முக்கிய கதாபாத்திரம் வெம்மை என்றால் 'உறுபசி'யில் காமம். நூலாசிரியருக்குப் பிடித்தமான வ்ய்யில் அவரின் எளிய நடையைத் தொடர்ந்து நிழலெனக் கூடவே வருகிறது. வெயில் மீதான எஸ் ராவின் காதல் உறுபசையில் வெளிப்படும் இடங்களெல்லாம் கதையோடு ஒட்டாமல் துருத்திக்கொண்டு நின்றிருக்கும். ஆனால், அதற்கு நேர்மாறாய் 'நெடுங்குருதியில்' பின்னிப் பிணைந்து கிடக்கிறது. வெயில் மீது தன்க்கிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டை அனுபவித்து வெளிப்படுத்திடக் கிடைத்த பெரிய வாய்ப்பாக இந்நாவலை சிறிய வாய்ப்பாக வெயில் திரைப்பட விமர்சனத்தையும் (ஜனவர் 07 - உயிர்மை) மிகச்சரியாகப் பயன் படுத்திக் கொண்டுவிடுகிறார் என்பதை நாம் சுவாரஸியத்துடன் அவதானிக்க முடிகிறது.

இந்நாவலை படித்து முடிக்கும் வரையில் நமக்குள்ளும் வெம்மை படர்வதை உணர முடியும். வெய்யிலில்லாமல் வேம்பலை இல்லை. சரி, ஆனால் படித்து முடிக்கும் போது 'வேம்பலை'யில்லாமல் பூமியில் வெயிலே இருக்காதோ என்ற பிரமை ஏற்பட்டு விடுமளவிற்கும் வேம்பலை என்றால் வெயில், வெயில் என்றால் வேம்பலை என்று தீர்மானித்து விடக் கூடிய மனநிலைக்கு நம்மை கொணர்ந்து விட எஸ் ராவால் முடிகிறது. வேம்பலையைப் பிரிந்த நாகு, வசந்த போன்ற பாத்திரங்களின் ஊர்பற்றிய உணர்வுகளுடன் நம்மால் எளிதில் பொருந்தி விட முடிகிறது. ஏனென்றால் ஒவ்வொருக்குள்ளும் ஏதோ ஒரு ஊர் பால் இத்தகைய ஒரு பற்றுதல் இருந்து தானே விடுகிறது.

கிராமம் பரிச்சயமில்லாத என்னைப் போன்றவர்களுக்கு நாவலின் துவக்கத்திலிருந்தே புதிய ஓர் உலகதிற்குள் பிரவேசிக்கும் அனுபவம் உண்டாகவே செய்யும். வெய்யில் உக்கரமேறிப் போன 'வேம்பலை' என்ற கிராமம் தான் கதையின் முக்கியப் பாத்திரமும் முக்கியக் களமும். அதே நேரத்தில் இரவில் பிசுபிசுக்கும் இருளும், வெயிலுக்கு இணையான கதைஞரின் கவனத்தை ஆங்காங்கே பெற்று விடுகிறது. எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சுற்றி வராமல் நிகழ்வுகள் வேம்பலையைச் சுற்றியே வருகின்றன.
குருதிக் கறையும், அதன் ருசியைக் கண்ட நிலமும், சதா முறுக்கேறித் திரியும் அதன் வாலிபர்களும் திடீரென்று காணாமல் போகும் ஆண்களை நினைத்துக் கண்ணீர் விடும் பெண்களும் என்று நெடுங்குருதியில் மக்கள் அலைந்தபடியிருக்கிறார்கள். கதையில் நெடுக படிந்திருப்பது வேம்பலையின் வெக்கையுடனான நிழல் மட்டுமல்ல, வேண்டாமென்று ஊரை விட்டு ஓடிச்சென்று ஒளிந்து கொண்ட எண்ணற்ற நபர்களின் இழப்புகளும், தூரத்தே இருக்கும் போது ஊரின் பால் அவர்கள் கொள்ளும் ஏக்கமும் தான். ஏனென்றால், ஊரை தாம் வாழும் நிலமாகப் பார்க்காமல் உறவாகப் பார்க்கிறார்கள் அம்மக்கள். ஊரைத் தம் சொந்தமாகக் கருதும் அவர்களால் தம் ஊருடன் வெயிலுடன் கோபிக்கவும் கொஞ்சவும் முடிகிறது.

கத்தியை எடுத்துக் காட்டி வெயிலோடு சண்டைக்குக் கிளம்பிவிடும் அளவுக்கு வேம்பலையின் மக்களால் சூரியனையும் அது கக்கும் வெய்யிலையும் கூட தமதென்று எற்று இயைந்து விட முடிவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆசிரியர் சொல்வது போல பெரும்பாலும் 'ஊர்ந்தும்' சிலவேளைகளில் 'பாம்பென நெளிந்தும்' செல்லும் வெய்யிலைக் 'குடித்து' ஆட்கள் வாழவும் கருவிலிருந்து சிசுக்கள் வளரவும் செய்கின்றனர். அவ்வாறு வெயிலைக் குடித்தபடியே வெம்மையேறியிருக்கும் இவர்கள் மழைக்குப் பிறகான காலையில் குளிர்மை கொண்டு புன்னகைத்தபடியே இருக்கிறார்கள்.

தம் வீட்டின் கால்நடைகளை தங்களின் பிள்ளைகளைப்போல் நேசித்திடும் வேம்பலையின் மக்கள் விசித்திரமானவர்களாய் இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைகள், வழிபாடுகள் அனைத்துமே ஏன் பல்வேறு அமானுஷ்யங்களும் கூட நான் இதுவரை கேட்டிராதவையாகவே இருக்கின்றன. ஆசிரியர் மிகுந்த கலையுணர்வோடு சொன்னபோதிலும் கூட அம்மக்களின் வறுமையானது மனதை மிகவும் கனக்கத்தான் செய்துவிடுகிறது. பரதேசிகள் இருவரும் பசி மிகுந்த நேரத்தில் ஊரில் உணவு எதுவும் கிடைக்காது ஏமாற்றத்துடனும் கோபமாகவும் ஊரை விட்டுப் போகும் போது மனதைப் பிசைகிறது.

எறும்புகள் குறித்து ஆதிலட்சுமி நாகுவிடம் சொல்வதெல்லாம் அவனால் நம்ப முடிந்த அளவிற்கு நம்மாலும் ஒன்றிவிட முடிகிறது. குறீயீடுகளாக பறவைகளும் புழுக்களும் கதையோட்டத்திற்கு சுவாரஸியத்தை மட்டுமில்லாமல் பல்வேறு அனுமானங்களையும் விட்டுச் செல்கின்றன. ஆதிலட்சுமி, நீலா, வேணி, பக்கீர் போன்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவத்துடன் உலவுகின்றன. சிறுவயதில் நாகுவின் பெற்றோர் சண்டை போட்டுக் கொள்ளும் இடங்களும் நிகழ்வுகளும் கண்முன் நடப்பதைப் போலவே விரிகின்றன. ப்க்கீருக்கு என்னதான் ஆயிற்று என்று கடைசி வரை சொல்லாமல் ஊகங்களுக்கு விட்டு விடுகிறார் ஆசிரியர். பக்கீரின் மனைவி தன் கணவனுக்காகக் காத்திருக்காமல் வாழ்க்கையை நடைமுறையில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுகிறாள்.ரத்தினாவதி கடைசி வரை நாகுவை நினைத்தபடியே வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஓடி, பாலியல் நோய் பீடித்து, இறுதியில் தற்கொலை செய்து கொள்வது பரிதாபமாக இருக்கிறது. குழந்தைமை மறுக்கப்பட்ட திருமால் சூழ்நிலையின் குழந்தையாகிவிடுவதும் இயல்பாகச் சொல்லப்பட்டுள்ளது. பவுலின் கடந்த காலம் திருமலுக்கு ஏற்படும் பாதிப்பை நமக்குள்ளும் விட்டுச் செல்லத் தவறவில்லை. இறையியல் படிப்பை மேற்கொண்ட திருமால் மற்றும் பவுல் ஆகியோரின் உள்மனப் போராட்டங்களும் நம்பகத்தன்மையோடு நகர்கின்றன.

கதையை ஆசிரியர் உண்மைக்கு மிக நெருங்கி சொல்வது மாதிரியும் அதே வேளையில் அதை விட்டு தூரத்திலிருந்து சொல்வது மாதிரியும் உணர முடிவது ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு நவீன கவிதைக் கொடுக்கும் உள்ளார்ந்த ஒரு லயம் மற்றும் அனுபவதிற்கிணையான ஓர் அனுபவத்தை கொடுத்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு வாழ்வியலை கலை நேர்த்தியோடு சொல்வதால் இந்நாவல் தமிழின் முக்கிய நவீன நாவல் பட்டியலில் நிச்சயம் அதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாவல் என்ற பொதுவான வடிவத்திலிருந்து கொஞ்சம் விலகி சில சோதனை முயற்சிகளில் ஈடுபடும் எஸ் ரா உறுபசியிலும் சரி, நெடுங்குருதியிலும் சரி நல்லதொரு வாசிப்பனுபவத்தினைக் கொடுத்து விட்டே செல்கிறார்.

pithcher plant, venus flytrap போன்ற மாமிசமுண்ணும் செடிகளை (carnivores) நினைவு படுத்துகிறது தன் நாவால் சுழற்றிச் சுழற்றி தன்னுள் மக்களை இழுத்துக் கொள்ளும் வேம்பலை. ஊரின் மீதும், தன் அய்யாவின் மீதும் தனக்கிருக்கும் பற்றை வெளிப்படுத்திக்கொண்டு வசந்தா பேசிடும் வேளையில் அவளிடம் "ஏய் வசந்தா, உங்கப்பா ஜாடையிலேயே, அவரப்போலவே கால்ல வடுவோட திருமால்னு உனக்கொரு அண்ணன் தூரத்துல வடக்க இருக்காண்டி", என்று சொல்லிடத் தோன்றுகிறது. வேம்பலையை நோக்கிப் பயணப்படும் அவ்வேளையில் வசந்தா ஓரகத்தி பெற்றுடுத்த தன் கணவனின் குழந்தைக்கு ஆசையாக 'நாகு' என்று தன் தந்தையின் பெயரைச் சூட்டுவதும் அதைத் தாமே வளர்க்கலாம் என்று சொல்லுவதும் இன்னொரு 'நாகு' உருவாகப் போகிறான் என்று குறிப்பால் உணர்த்துவதைப் போலிருக்கிறது. வேம்பலையைப் போலவே மேலும் மேலும் நாகுக்ககளை உருவாக்கும் தாகமானது ஆசிரியருக்கும் தீராது தொடர்ந்திடுமோ......

@ @ @