'நேற்றிருந்தோம்' - "நினைவு நதியில் அள்ளிய நுரைப்பூக்கள்"

'நேற்றிருந்தோம்' - "நினைவு நதியில் அள்ளிய நுரைப்பூக்கள்"


அங்மோ கியோ தேசிய நூலகத்தின் முதல் மாடியில் இருக்கும் தக்காளி அறை. வாசகர் வட்டம் நண்பர்கள் குழு தாங்கள் வாழ்ந்த 2008 ஆம் ஆண்டு காலகட்டத்தை விடுத்து காலயந்திரத்தில் கிட்டத்தட்ட ஐம்பத்தியைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அந்த நினைவு நதியில் பயணித்து, குதூகலித்து நதியில் மிதந்து வந்த பல பூக்களை வாரியெடுத்தோம். அன்று காலயந்திரமாக செயல்பட்டவர் சிங்கை வானொலியின் ஒலி 96.8 மூத்ததயாரிப்பாளராகப் பணி புரியும் திரு செ ப பன்னீர்செல்வம்.


மாதம் ஒரு முறை நண்பர்கள் ஒன்று கூடி வாசகர் வட்டத்தில் நல்ல இலக்கியம் பற்றிய பகிர்தல் நடைபெறும். இந்த இலக்கியப் பகிர்தலின் ஒரு அங்கமாக 'நேற்றிருந்தோம்' என்ற நிகழ்வு. 'நேற்றிருந்தோம்' முதல் முறை நடைபெற்ற போது மூத்த எழுத்தாளர் திரு ராம கண்ணபிரான் சிராங்கூன் சாலை ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எப்படியிருந்தது என்னென்ன கடைகள் எங்கேயிருந்தன என்பதைப் பற்றிய விரிவாக விவரித்தார்.

இரண்டாம் முறையாக 'நேற்றிருந்தோம்' நிகழ்ச்சியில் பேசியவர் திரு செ ப பன்னீர்செல்வம். அவர் வசித்த புக்கிட் பாஞ்சாங் பகுதியைப் பற்றி உற்சாகத் துள்ளலோடு விவரித்த போது காலச்சக்கரத்தில் நம்முடன் அவர் பயணித்தது மட்டுமல்லாமால் அமிர்தம் குடித்து என்றும் இளமையோடு இருக்கும் தேவர்களையும் சந்தித்து வந்தாரோ என்று நினைக்கத் தோன்றியது.
ஒரு பேருந்து பயணத்தின் மூலம் தன் நினைவுப் பயணத்தைத் தொடங்கினார். பேருந்து எண் 170 - குவீன்ஸ்ரீட்டிலிருந்து ஜோகூர் பாரு பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழிப்பாதை. இன்றும் அதே தட எண் 170 அதே பகுதிகளுக்குச் செல்கிறது. வழித்தடங்கள் மாறியிருக்கலாம். ஆனால் அவர் நினைவுத்தடங்களில் இன்றும் மறையாமல் அதில் ஏறி சிங்கப்பூரின் முக்கிய நகரப் பகுதிகளுக்குச் சென்றதையும் பின்னர் ஜோகூர் வரை கடவுச்சீட்டு அனுமதிச்சீட்டு என்ற தடைகள் எதுவுமில்லால் சென்று வந்ததையும் நினைவு கூர்ந்தார்.

புக்கிட் பாஞ்சாங் வட்டாரம் புக்கித்தீமா சாலையில் பத்தாவது மைலில் அமைந்திருந்தது. மேலும் ஒன்பதாவது மைல், பத்தாவது மைல், பத்தரை மைல் என்றே குறிப்பிடப்பட்டு வந்தன. அந்த சாலை நீண்டு கிராஞ்சி உட்லண்ட்ஸ் பகுதிகளையும் உள்ளடக்கி அந்த வழியெங்கும் சிறு வசிப்பிடங்கள் இருந்து வந்தன என்று குறிப்பிட்டார். இன்று அவை பலமாடிக்கட்டடங்கள் நிறைந்த வட்டாரங்களாகவும், பெரு விரைவுச் சாலைகளும் எம்ஆர்டி பெருவிரைவு ரயில் பாதைகளும் அமையப் பெற்ற பெரு நகரத்தின் விரிவாகவும் இன்று காணப்பட்டாலும் அன்று அவை இருந்த அந்த இயற்கைச் சூழலையும் எளிய மக்களையும் கொண்ட அற்புதமான ஒரு வாழ்க்கையைப்பற்றி குறிப்பிட்ட போது விருப்பமான விளையாட்டுப் பொருளை தொலைத்து விட்டுத் தேடும் ஒரு சிறுவனின் மனத்தோடு அவர் விவரித்தக் காட்சிகள் நம்மையும் அந்த உலகத்திற்கே அழைத்துச் சென்றது.

50 களில் தொடக்கத்தில் அவர் விவரித்த அந்த வாழ்க்கை கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் ஒரு சிறு நகரத்தின் வாழ்க்கையை ஒத்திருந்தது. சுற்றிலும் நிறைய இந்தியக் குடும்பங்கள். வஉசி தமிழ்ப்பள்ளி, நாகம்மை தமிழ்ப்பள்ளி போன்ற தமிழ் வழிக் கல்வியைக் கற்பித்த தமிழ்ப்பள்ளிகள், செ ப பன்னீர் செல்வம் படித்த புக்கிட் பாங்சாங் அரசாங்கப் பள்ளி, அங்கேயிருந்த சாப்பாட்டுக் கடைகள், தோசை சுட்டு விற்ற பெண்மணி, சினிமா தியேட்டர், அங்கு பார்த்த கப்பலோட்டியத் தமிழன் திரைப்படம், மளிகைக்கடைகள், நாட்டு மருந்துக் கடை போன்ற பலவற்றையும் மறக்காமல் குறிப்பிட்டார். விலாசம் இல்லாமல் வாழ்ந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு தன் கடை முகவரியைக் கொடுத்து அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வரும் கடிதங்களை வைத்திருந்து அவர்கள் கடைக்கு வரும் போது அதைக் கொடுத்து உதவிய மளிகைக்கடைக்காரர், திராவிடச் சிந்தனையில் தீவிர ஈடுபாடு கொண்ட டீக்கடைக்காரர் களைப்பாகச் செல்லும் பள்ளிப்பிள்ளைகளைக் கூப்பிட்டு இலவசமாக டீ கொடுத்து போ போய் நன்றாகப் படி என்று சொல்லும் மனிதநேயமிக்க செயல் ஆத்திகவாதிகள் வழிபடும் கடவுளிடம் மட்டுமே காணக் கூடிய 'அன்பே சிவம்' கோட்பாடு!! யார் எவர் என்று தெரியாமலேயே ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், ஆபத்து என்றால் கூடி நின்று தோள் கொடுப்பதும் வார்த்தைகளால் சொல்லி உணரப்படாத கவிதைகள்!


தனி வீடு, சுற்றிலும் பழமரங்கள் நிறைந்த தோட்டம் இன்று நடுத்தர வர்க்கத்து சிங்கப்பூரர்களுக்கு எட்ட முடியாத ஒரு கனவாகவே இருக்கிறது. ஆனால் அன்று அந்த ஏழை எளிய மக்களுக்கு கிடைத்த ஒரு இனிமையான வாழ்க்கைச்சூழல். சர்க்கஸ் கூடாரத்தை விட்டு இவர் வசித்து வந்த வீட்டுத் தோட்டத்தில் இருந்த பழமரத்தைத் தேடி வந்து பழங்களைப் பறித்துச் சாப்பிட்ட யானை! காலையில் எழுந்து தோட்டத்திற்குப் போனால் தோட்டத்தில் ஒரு யானை இருந்தால் எத்தனை பிரமிப்பாக ஒரு சிறுவனுக்கு இருந்திருக்கக்கூடும்? அந்த யானை எப்படி அந்த குறுகலானப் பாலத்தைக் கடந்து தன் வீட்டிற்குள் வந்திருக்க முடியும் என்று இன்றும் விளங்காத மர்மாகவே இருக்கிறது. பழமரங்களை கூட்டமாகப் பற்ந்து வந்து வேட்டையாடிய பழந்தின்னி வௌவால்கள் இவையெல்லாம் இன்று விலங்கியல் தோட்டத்தில் மட்டுமே காணமுடியும்.


பக்கத்தில் இருந்த சமூக மன்றத்தில் இலவச திரைப்படக்காட்சியைக் காண பாய் தலையணை சாப்பாட்டு மூட்டையோடு கூட்டம் கூட்டமாக வந்து திரைப்படம் பார்த்து விட்டுச் செல்லும் மக்கள். பள்ளித் திடலில் நடைபெறும் கால்பந்தாட்ட விளையாட்டுப்போட்டிகளைக் காண திரளும் மக்கள். உடன் வரும் தின் பண்டங்கள், ஐஸ், பட்டாணி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை இப்படி பல அடுக்குகளாக அவர் நினைவுகள் விரிந்து கொண்டே போனது.
நேரம் கருதி அவர் இரண்டரை மணி நேரம் கழித்து தன் பேச்சை முடித்துக் கொண்டார். பின்னர் மேலும் வானொலியில் பணியாற்றத் தொடங்கியதும் தான் பெற்ற அனுபவங்களையும். புது தில்லியில் பிரபல எழுத்தாளர் தி ஜானகிராமனுடன் பழகியதும் தன் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக நினைவு கூர்ந்தார்.


"வானகமே, இளவெயிலே, மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ? "காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ வீண்படு பொய்யிலே- நித்தம் விதி தொடர்ந்திடுமோ?காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதெல்லாம் உறுதியில்லை காண்பது சக்தியாம்இந்தக் காட்சி நித்தியமாம்" என்ற பாரதி பாடலை நினைவுக் கூர்ந்து இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

சித்ரா ரமேஷ்
chitra.kjramesh@gmail.com