வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்

‘வண்ணதாசன் சிறுகதைகள்’ - என் வாசிப்பனுபவம்இராம.வயிரவன், Sunday 10-Feb-2008------------------------------------------------------------------------------------------------------------------------

என்னைப் படிக்கத்தூண்டிய வரிகள்: ‘கிருஷ்ணன் வைத்த வீடு’ சிறுகதைத் தொகுப்பில் என நினைக்கிறேன் - ‘இந்த பலூன் விக்கிற முருகேசனை விட நான் என்ன வாழ்ந்து கிழித்துவிட்டேன்’ - இந்த முன்னுரை வரிகள்தான் என்னை இவரின் கதைகளைப் படிக்கத்தூண்டிய வரிகள்.

நன்றி: ரமேஷின் ‘வண்ணதாசன் சிறுகதைகள்’ பற்றிய குறிப்புக்களுடன், பாண்டியனின் இந்த வாசகர்வட்டத்திற்கான மின்மடல் அழைப்பைப் பார்த்தவுடனேயே நான் முடிவு செய்துவிட்டேன் இதில் கலந்துகொண்டு என்வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று. காரணம் வண்ணதாசன் கதைகள் எனக்குள் ஏற்படுத்திய வாசிப்பனுபவம்தான். வண்ணதாசன் கதைகளைத் தேர்வு செய்தவர்களுக்கு நன்றி.

பலமுறை முயற்சித்தும் இவரின் நூல்கள் கிடைக்கவில்லை, அதனால் மீண்டும் வாசிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை ஆனாலும் முன்பு படித்தபோது ஏற்பட்ட நினைவடுக்குகளிலிருந்து சில குறிப்புக்கள் மற்றும் வாசிப்பனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அதனால் குறிப்புக்களில் தவறுகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கதைக்கரு: கதைக்கருவாக வாழ்வியல் முரண்களையும், மெல்லிய உணர்வுகளையும் ஆசிரியர் அழகான கதைகளாக்கி விடுகிறார். ‘ஒரு நிலைக்கண்ணாடி..சில இடவல மாற்றங்கள்’ என்கிற கதையில் அக்காள் தங்கை இருவரின் முரண்பட்ட கேரக்டரை ஒப்பிடுகிறார். ‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ என்கிற கதையில் ஒரு கிழவி தான் வளர்த்த மாமரத்தின் மேல் கொண்டுள்ள பற்று அறிந்து அவளுக்குப் பிறகு அனுமதிக்கப் பட்டும் முடிவை மாற்றிக்கொண்டு மரத்தை வெட்டாமல் விட்டுபோகிறது கதையாகிறது.
கதை சொல்லுகிற உத்தி:இவர் கதைகளில் இவரின் கதை சொல்லுகிற உத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக இவரின் கதைகளைப் பலமுறை படித்திருக்கிறேன். அப்படிப்படித்த கதைகளில் ஒன்று ‘ஒட்டுதல்’ என்கிற சிறுகதை.
ஒட்டுதல்கணவனைப் பறிகொடுத்த பெண் ஒன்னரை மாதத்தில் மீண்டும் வேலைக்குச் செல்லுகிறபோது நடக்கிற நிகழ்வு கதையாகி விடுகிறது. துக்கம் வெல்ல ‘ஒட்டுதல்’ தேவை என்பது கரு.

நினைவுகளும் நிகழ்வுகளுமாக கதை சொல்லப்படுகிறது. நினைவுகளையும் நிகழ்வுகளையும் பிணைக்கிற இடங்கள் அருமை. சில விசயங்கள் நேரடியாகச் சொல்லாமல் சில குறிப்புக்களிலிருந்து வாசகர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆரம்பமும் முடிவும்: இவர் கதைகளில் கதையின் ஆரம்பமும் முடிவும் அழகாக, பொருத்தமாக அமைந்திருக்கின்றன.‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ - என்கிற கதை ‘எந்த மரத்தை வெட்டப்போகிறோமோ அந்த மரத்தின் நிழலிலேயே கோடறிகள், அறிவாள் எல்லாவற்றையும் வைக்கவேண்டியிருந்தது..’ என்று ஆரம்பிக்கும்.

‘ஒரு நிலைக்கண்ணாடி..சில இடவல மாற்றங்கள்’ என்கிற கதையில் ஆரம்பம் - ‘உங்க வீட்டு மச்சிலே ஒரு நிலைக்கண்ணாடி உண்டே அது இன்னமும் இருக்கா அக்கா?’ என்று தங்கை அக்காளிடம் கேட்பதாக ஆரம்பிக்கும். முடிவு ‘..அப்படியெல்லாம் நாங்களும் உட்கார்ந்து பேசினோம் என்றால் நாங்களும் இடையில் எங்காவது சிரிப்போம் இல்லையா? அந்த சிரிப்பு எப்படி இருக்கும்? இன்னும் இருக்கிறதா என்று மீனா கேட்டாளே எங்க வீட்டு நிலைக்கண்ணாடி - அதில் பார்த்தால் ஒரு வேளை தெரியுமோ?’ என்று கதை முடியும்.

நடை: திகட்டாத பொருத்தமான நடை கதைகளுக்கு அழகூட்டுகின்றன.
‘விதை பரவுதல்’ - ‘திறந்த கதவின் மூலமாக உள்ளே ஓடி வரப்போவது போல தரையிலிருந்து தெறிக்கிற மழைத்துளி முட்டியது’ என்ற வரிகள் வரும்.

‘ஒருமரம் ..சில மரங்கொத்திகள்’ - கதையில் - ‘நசநசவென்று மாமரத்தின் வாசம் காற்றில் ஒரு எட்டு கூட எடுத்து வைத்திருக்காது. அதற்குள்..’ என்கிற வரிகள்- ‘விளக்கை உரசினால் பூதம் வருவது மாதிரி மாவிலையைக் கசக்கினால் ஆயா வருமோ,..’ என்கிற வரிகள்‘ஒட்டுதல்’ - கதையில்- ‘ஒருவரை ஒருவர் நகர்த்திக் கொண்டது போல எல்லோரும் வாசலுக்கு வந்தார்கள்’ என்கிற வரிகள்.- ‘கைகளைக் கூப்பினாளே தவிரக் கும்பிடுகிற மனநிலை இல்லை..’ என்கிற வரிகள்- ‘கண்ணாடி பார்த்தாள். பொட்டில்லா நெற்றி மட்டும் தெரிந்தது.’ என்கிற வரிகள்
இவையெல்லாம் இவர் கதைகளைப் படித்தபோது பிடித்துப்போய் மனதில் தங்கிப்போன வரிகள்.

என் யோசனை: வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தங்களின் எழுத்தை மேலும் செம்மைப் படுத்திக் கொள்ளலாம் என்பது என் யோசனை.

-சுபம்-

இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் - வண்ணதாசனுக்கு நன்றி!

இருட்டை வெறும் இருட்டு என்றுதான் நினைத்திருந்தேன் -
வண்ணதாசனுக்கு நன்றி!

திருச்சியின் மையப்பகுதியில் செருப்பு தைப்பவரைத்தேடி அலைந்து ஏழு எட்டு மணி அளவில் பிரதான சாலை ஒன்றில் ஒருவரைத் தரிசித்தேன். நீர்த்தேங்கியிருந்த பள்ளமான சாலைப்பகுதியைத் தாண்டி அவர் அமர்ந்திருந்தார். நான் சென்ற நேரம் அன்றைய அவரது பொழுதின் முடிவுக்காலமாதலால் எல்லா உபகரணங்களையும் மூட்டை கட்டிவிட்டி வெளியிலிருந்து பார்க்க நன்கு இறுக்கி நையப்பட்ட ஒரு குப்பைத்தொட்டியைப்போன்ற தோரணையுள்ள ஒரு இடமாக்கிவிட்டு எழுந்து நகரவிருந்தார். நான் வந்து அவரிடம் சேர்ந்தபொழுது அவர் என்னை வெகு எளிதாய் உதாசீனப்படுத்தியிருக்கக்கூடும். ஏனெனில் நான் வேண்டியது அத்தனை மூட்டையையும் பிரித்து எடுத்து செய்யத்தகுந்த வருமானம் தரக்கூடிய வேலையில்லை. ஆனாலும் சாலைத்தூசிகள் சூழ்ந்த உலகில் வண்டிச்சத்தங்களும் இரைச்சலும் முண்டியடிக்கும் வெளிச்சத்துக்கு ஏமாந்த அவ்வேளையில் ஒட்டுமொத்த மூட்டைகளையும் பிரித்து குத்தூசியையும் நூலையில் எடுத்து அவர் அவ்வேலையைச்செய்தார். இரண்டு விஷயங்கள் என்னை வசீகரித்தன. அவ்வேலையைச் செய்ய அவர் காட்டிய முனைப்பும் அக்கறையும் ஒன்று. மற்றொன்று எங்களிடையே சிறு மின்னலைப்போல தோன்றி மறைந்த நாங்கள் இருவரும் திருப்தியடைந்த ஒரு தருணம்! பெரும் மின்னல் ஒன்று வெட்டிச்சென்றபின் அதைச் சார்ந்து ஒரு வெளிச்சம் பரவிக்கிடந்து மறையுமே அதைப்போல அது இன்றுவரை மறைந்தும் மறையாததாய் இருக்கிறது. பல்வேறு பிரிவுத்துவம் வாய்ந்த இவ்வாழ்வில் எதையும் சாராது வரும் பூரணத்துவம் மிகுந்த அந்தத் திருப்தியானது எத்தகைய புனைவும் எளிதில் தராத ஒன்று. வண்ணதாசன் கதைகளில் அம்மின்னலும் அதன் தாக்கமும் எனக்கு நிறைந்திருக்கிறது.

வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகளில் 'நடுகை' (பாதிமட்டுமே) மற்றும் 'கிருஷ்ணன் வைத்த வீடு' ஆகிய இரண்டை மட்டும் வாசிக்கும் பாக்கியம் இக்காலத்தில் எனக்கு கிட்டியிருந்தது.
தனது திருமணத்திற்கு மேளம் வாசித்தவரைப் பற்றிய ஒரு கதை, அமரர் ஊர்தியைப் பின்தொடருபவனைப் பற்றிய இன்னொரு கதை, தனது மாமரத்திலிருந்து சிறுகுச்சி ஒன்று ஒடிக்கப்படுவதை உணர்ந்து வீட்டிலிருந்து எழுந்து வரும் கிழவியின் கதை, வெறும் மின்மினிப்பூச்சிகளின் வெளிச்சத்தில் அலசப்படும் "தாழம்பூ" தாத்தாவின் கதை, நகர வாழ்க்கையில் நிலை தடுமாறி ஊர் திரும்ப ஏங்கும் 'நெல்லை சிவாஜி' குத்தாலிங்கம் அண்ணாச்சியின் கதை என கதை என்ற பெயரில் நிகழ்வுகள் பதியப்படுவதை நெகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறேன்.

நினைவில் ஒரே மாதிரியாகத்தான் நகர்ந்து போகிறார்கள் - மேளம் வாசிப்பவர்கள் அனைவரும் எனக்கு; தரையில் சிந்தும் பூக்களைத் தவிர்த்துக்கொண்டே அமரர் ஊர்தியைப் பின் தொடர்ந்து சென்றவர்களில் நானும் ஒருவன்; கிழவியினுடைய மாமர குச்சியின் வாசனையை குழந்தையின் காதுக்கடியில் கிடைக்கும் பால்வாசனையாய் உணர நேர்ந்தமையில் ததும்பிய மகிழ்வு; நீளமான கூந்தலைக்கொண்ட தலையில் தவழும் தாழம்பூவின் நறுமணத்தில் தாத்தாவை விட நான் திளைத்திருந்தமையில் கிடைத்த மோகம்; சில பேருடைய குடிவாசனை மட்டும் எப்போதுமே எனக்கு பிடித்திருந்தாய் இருக்கும் நிலைமை என மனம் இளகும் உயிர் நெகிழும் ஐம்புலன்களும் ஏங்கும் இலக்கிய சுகத்தை சில கதைகள் ஏற்படுத்திச்சென்றிருக்கின்றன.
அடுக்கி வைக்கும் செங்கல்களைப்போல நிகழ்வுகளால் கதையைக் கட்டமைக்கும் கலையைக் காண நேருவதுண்டு. ஒரே ஒரு செங்கல்லைக்கொண்டு தாஜ்மஹாலையே கட்ட முயலும் சம்பவத்திற்கிணையான இலக்கியங்களுமுண்டு. செங்கல்லையே காட்டாது அதைப்பற்றிய உலகை அலசும் கதைகளுமுண்டு. ஒரே ஒரு செங்கல்லைத் திரும்ப திரும்பப் பார்த்து அதன் செம்மைத்தனத்தை பதிய முற்படுவதும் உண்டு. வண்ணதாசனின் கதைகள் இதை அடிப்படையாகக்கொண்டது என நினைக்கிறேன். பலமுறை பார்ப்பதால் உண்டாகும் இயற்கையான சலிப்பையும் மீறி ஏதோ ஒன்று தர முயலுவது இவரது படைப்புகளின் வெற்றிக்கதையாகும்.

'யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த', நடந்து பார்க்காத சசிப்பெண்ணின் பாதத்தை துணியால் வேலைக்காரன் மூடுவதை மறக்க நினைத்தும் முடியாத 'கிருஷ்ணன் வைத்த வீடு' மறக்க முடியாத ஒரு கதை மட்டுமல்ல; செவ்வியல் சிறுகதையின் கட்டுமான வடிவத்திற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணமும் என்பேன். சிறந்த வாசகனை இக்கதை தத்தெடுத்துக்கொள்ளும் என்பதை உணர நேருகையில் மகிழ்கிறேன்.

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். மாமா வீட்டிற்கு எதற்காகவோ சென்றிருந்தேன். அங்கு என்ன நடந்தது என்பதும் ஞாபகமில்லை. ஆனால் நான் திரும்ப வேண்டும். இரவு எட்டு-ஒன்பது மணிக்கு காட்டின் வழியே எனது வீட்டுக்கு நான் திரும்பவரவேண்டிய சூழ்நிலை. யாரும் துணைக்கு இல்லை. எதற்கு துணை என்று இப்போது நினைத்தாலும் அன்று அந்த இருளைக் கடந்து வீட்டுக்கு வந்துசேர்ந்த சம்பவத்தையே நான் அடைந்த மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இன்றுவரை நினைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என்றால் யாரை எதிர்த்து? இருட்டையா? இருட்டு எனக்கு என்ன செய்தது? இருட்டு எப்படி எனக்கு எதிரியானது? இருட்டை ஜெயித்தேன் என்றால் இருட்டுக்கா நான் பயந்தேன்? இல்லை இருட்டின் அடையாளங்களுக்கா? இருட்டின் அடையாளங்கள்தான் என்ன? பூச்சி, பாம்பு, பேய், பூதம், திருடர்கள்? அதுசரி, இருட்டின் அடையாளங்கள் இவைகள் மட்டும் தானா?
இருட்டை தேர்ந்த புகைப்படக்கலைஞனைப்போல, ஓவியனைப்போல அடிக்கடி அலசுகிறார் வண்ணதாசன். சாலாச்சி அக்காவும், திலகா அக்காவும், சந்திமுனைப் பிள்ளையாரும் இருளும் வெளிச்சமும் போல எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.
இவ்விரு தொகுப்புகளிலும் கதைகளை எங்கும் நான் காணவில்லை. வெறும் புனைவு மட்டுமே கதை என்று கொண்டோமானால் அவைகள் எவற்றையும் இத்தொகுப்புகளில் நான் காணவில்லை. புனைவுகளின் தட்டையான தடங்களை எங்கும் நான் தரிசிக்கவில்லை. வாழ்க்கை, வாழ்க்கை, வாழ்க்கை மட்டுமே கதைக்களங்களில் விரவிக்கிடக்கின்றன.

நண்பர் மானசாஜென்னிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது 'நிலை' என்று வண்ணதாசனின் ஒரு கதை இருப்பதாய்ச் சொன்னார். நான் இப்போது அதைப்படிக்கவில்லை. ஆனால் 'நிலை' என்ற பெயரில் ஏறக்குறைய ஏழுவருடங்களுக்கு முன் ஒரு கதை படித்தேன். சிறந்த சிறுகதைகளாய் யாரோ ஒருவர் தொகுத்த அத்தொகுப்பில் அதுவும் ஒன்று. நள்ளிரவு வரை வேலை செய்துவிட்டு தீபாவளிக்கு முந்தைய இரவில் வீடு திரும்பும் ஒருவனின் கதை அது. அந்தக் கதையும் அதில் வரும் லாரியில் அடிபட்டுச்செத்துக்கிடக்கும் ஒரு எலியும் எனக்கு இன்றுவரை நினைவிலாடுகின்றன.
இரண்டு விஷயங்களுக்காய் திரு. வண்ணதாசனுக்கு நான் நன்றி சொல்ல விழைவது எதார்த்தமானது என நினைக்கிறேன்.
ஒன்று, நேற்றுவரை இருட்டு, வெறும் இருட்டாகவே எனக்கு இருந்திருக்கிறது - இப்போது அது, நெருங்கிய ஒரு உறவாகி விட்டிருக்கிறது -இரண்டாவது, எப்போதும் பார்வையிலிருந்து எளிதாய் நகர்ந்துவிடும் எந்த ஒன்றையும், இப்போது மீண்டும் ஒருமுறையாவது பார்க்க ஆரம்பித்திருக்கிறேன் - வண்ணதாசனால்!

நன்றி. அன்பன்,

எம்.கே.குமார்.

yemkaykumar@yahoo.com

வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்

வண்ணதாசனின் அன்புப் பிரபஞ்சத்தில் சில பிரளய மழைத்துளிகள்

சித்ரா

‘அன்பு’ இந்த வார்த்தை வள்ளுவர் காலத்திலிருந்து கையாளப்பட்டு வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அதில் அன்பாக இருத்தல் என்ற நிலையை விட அன்பு இல்லாத வாழ்க்கை எப்படி வறட்சியடைந்து கிடக்கிறது என்று சொல்லப்பட்டவையே அதிகம் என்று தோன்றுகிறது. அன்பகத்தான் இல்லாதான் உயிர் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? வன்முறைதான் மனிதனின் இயல்பா? ஏனைய மிருகங்களிலிருந்து உயர்ந்த பரிணாம வளர்ச்சி பெற்ற உயர்நிலை மிருகமாய் வாழ்வதுதான் மனிதனின் தனி அடையாளமா? சுற்றிலும் நாம் பார்க்கும் மிருகங்கள் ஒன்று கூட திட்டமிட்டு கொலை செய்வதில்லை. கையில் கத்தியுடன் அலையவில்லை. முதுகில் அரிவாளுடன் காத்திருக்கவில்லை. கைத்துப்பாக்கி ஏவுகணை ஒன்றைக்கூட கண்டு பிடித்து அதை மற்ற மிருகங்களுக்கு விற்று வாழவில்லை. தன்னை துன்புறுத்தினால் தற்காத்துக் கொள்ள மட்டும் மகாத்மா காந்தி சொன்ன ஆயுதங்களான கூரிய பற்கள், நகங்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்கின்றன. பசி என்ற தேவைக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன. புலிக்குப் பசி எடுக்காத போது மான்குட்டி கூட பக்கத்தில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். வேட்டையை விளையாட்டாகப் பழகியது மனிதன் மட்டும் தான்.
மனித வேட்டையாடும் போது மட்டும் ஆயுதங்களோடு கூடுதலாக சூழ்ச்சி, நயவஞ்சகம் போன்ற அறிவுத்திறன் கொண்ட புதிய ஆயுதங்களையும் சேர்த்துக் கொள்கிறான். { கொஞ்சம் கொட்டாவி வருகிறதா? இதுக்குத்தான் மத்தியான நேரங்களில் மெகாத் தொடர்களையும் திரைப்படங்களையும் பார்க்கக் கூடாது என்பது!!!] சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.வாசல் கதவு தட்டப்படுகிறது. யார் என்று மாயக்கண் மூலம் பார்க்கும் போது கையில்அரிவாளோடு உன்னைக் கொல்ல வந்திருக்கிறேன் என்று சொன்னால் வராத ஆச்சரியம் வாசலில் நின்று கொண்டு உங்களிடம் அன்பாகப் இருக்கப்போகிறேன் என்று நமக்குத் தெரிந்தவர்கள் சொன்னால் ஏற்படும் திடுக்கிடல்!! எதற்காகத் தேவையில்லாமல் நம்மிடம் பிரியம் காட்ட வேண்டும் கடன் கேட்கப் போகிறார்களோ? ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று சொல்லிவிடலாமா என்ற வாசகத்தைக் கதவில் தொங்க விடலாமா என்று ஒரு கண நேரத்தில் எக்கச்சக்க எண்ணங்கள்! வம்பு வளர்க்கவும், பிறர் மனம் வாட வீண் கதைகள் பேசுவதும் ஆயுதங்கள் கொண்டு துன்புறுத்துவதும் மனிதனின் இயல்பான குணங்களாக யாரும் சொல்லித்தராமல் வருகிறது. பிறரிடம் நேசத்தைக் காட்டத்தான் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. நீதி நூல்கள் எழுதப்பட நேரிடுகிறது. சட்டம், ஒழுங்கு, தண்டனை என்று பயமுறுத்தி அவனை நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது.

பிறரிடம் கனிவாகப் பேசுவது, பிரியத்துடன் பழகுவது என்பதெல்லாம் ஒரு கைதேர்ந்த விற்பனையாளன் தன் பொருட்களை விற்பதற்காக வாடிக்கையாளரிடம் காரண காரியங்களோடு காட்டும் அன்பைப் போல் ஒரு செயற்கையான விஷயமாகிவிட்டது. ஒரு விற்பனை முடிந்ததும் டக்கென்று மாறும் முகபாவம் நீ யாரோ நான் யாரோ என்று அடுத்த வாடிக்கையாளரை பிடிக்க்ப் போகும் அவசரங்களோடு யந்திரத்தனமான மனிதர்கள் மத்தியில் அன்பு அதிலும் எதையும் எதிர்பார்க்காத அன்பு என்பதே காணக்கிடைக்காதப் பொருளாகி விட்ட ஒரு காலக்கட்டத்தில் அன்பிலே தோய்ந்து அன்பிலே வாழ்ந்து அன்புக்காக உருகும் மனிதர்களைப் பற்றியக் கதைகள். (இப்படி பரீட்சைக்குப் படிப்பது போல் இப்படி வண்ணதாசன் கதைகளை அதுவும் அந்த சற்றே பெரிதான சிறுகதைத் தொகுப்பைப் படித்ததன் வம்புதான் இது.) இந்த மாதிரி பெரியப் புத்தகங்களை அதுவும் நமக்கு விருப்பமான எழுத்துக்கள் ஒட்டுமொத்தமாகக் கிடைப்பது ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் இதைக் கையாள்வதில் இருக்கும் சிரமங்கள் என்னைப்போல் படிப்பாளிகளுக்கு மட்டும் தான் புரியும். பெரியப் புத்தகங்களைக் கையில் எடுத்தாலே கனக்கிறது தூக்கம் வருகிறது என்ற காரணத்தினாலேயே வகுப்பில் கூடிய மட்டும் தூங்காமல் கோழிக்கிறுக்கலாக நோட்ஸ் எடுத்து அதையே பல்கலைக் கழக பரீட்சை வரைக்கும் படித்து, வகுப்பில் தூங்காமல் நோட்ஸ் எடுக்கும் காரணத்தினால் அவ்வப்போது சந்தேகம் கேட்டு நல்ல விஷயம் தெரிந்த ஆசிரியரை குழப்பி ஆராய்ச்சி படிப்பு வரை நீ போனால் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியும் என்று வாழ்த்தி வீரவணக்கம் செய்து விடுவார். இந்தப் பெரிய புத்தகத்தைக் கூட இரண்டாகவோ மூன்றாகவோ பைண்ட் செய்தால் நன்றாக இருக்கும் என்று புத்தகம் வாங்கும் போதே திலீப்குமாரிடம் சொல்லி அவர் என்னை அற்பப் பதர் மாதிரி பார்த்தார். என்னைப் போல் யாராவது ஒரு சக படிப்பாளி இதைப் பற்றி யோசித்திருக்க மாட்டாரா அட நம்ம நெனச்சதையே இவங்களும் சொல்றாங்களே என்று சொல்லமாட்டர்களா என்று ஒரு நப்பாசைதான்!

மிச்சம்:

உடலை விற்கும் பெண்ணின் அந்தரங்கம், அழகுணர்ச்சி, எதிர்காலத்தைப் பற்றியப் பயம், தனிமை, வறுமை சாதாரணமாகச் சிரித்துக் கொண்டே கேட்கும் விசாரிப்பில் அன்புத்துளிகளை உணர்தல் என்று பனி குளிர்வது மாதிரி சில சமயம் சந்தோஷமும் குளிர்கிறது.“சுருக்கா டீயை வாங்கியாந்தா என்ன? பனியில் நிண்ணா ரெண்டு பேருக்கும் ஒடம்புஎன்னத்துக்கு ஆகும்?”, என்ற சாதாரணக் கேள்வி அவளுக்கு தரும் ஆறுதல்ஒரு கண நேரத்துக்குத்தான் என்றாலும் அந்த எளிய மக்கள் ஒருவர் செய்யும் தொழில் மற்றவர் அறிந்தாலும் அதையும் தாண்டி ஏண்டா எல்லோரும் வச்சிக் குடிச்ச மிச்சத்தைக் குடிக்கறே என்ற கேள்வியின் மூலம் எச்சிலாகிப் போன தன் வாழ்க்கையைப்பற்றிய வெறுப்புகளை உமிழ்கிறாள். உணருகிறாள்.

தனுமை:

இந்தக் கதையைப் பற்றி அநேகமாக எல்லோரும் எழுதியிருக்கக் கூடும். வண்ணதாசனுக்கேக் கூட மிகவும் பிடித்தக் கதையாக இருக்கலாம். இந்த மௌனமே காதலாகிற நேரம் அதுவும் காமம் கலக்காதக் காதல் எல்லோர் மனதிலும் இருக்கும் ஒரு கற்பனைச் சுகம். தினமும் சந்திக்கும் இல்லை அடிக்கடி சந்திக்கும் யாரோ ஒருத்திக்காக மனதில் ஒரு சிம்மாசனம் போட்டு அதில் அவளை மகாராணியாக்கும் கற்பனை அநேகமாக நிறைய ஆண்களுக்கு இருக்கும். முக்கியமாக அவளுக்காக காத்திருப்பதும் அவளை நினைத்து ஏங்குவதும் அவளுக்கு அது தெரியாமலே வாழ்க்கை ஓடிவிடுவதுமாக ஒரு புரட்டப்பபடாதப் பக்கமாக பேசப்படாத சொல்லாக எழுதப்பாடாதப் பாடலாக எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கலாம். ஞானப்பனுக்கு டெய்ஸி வாத்திச்சியின் வளப்பமான உடலைப் பார்த்து சராசரி ஆண்மகனாய் அவன் உடல் அலைகிறது. தனலெட்சுமி தன்னுடைய பலகீனமான காலுடன் உடைமரக்காடுகளின் மத்தியில் மணலில் நடக்கும் போது படும் கஷ்டம் இனி அவளுக்குக் கிடையாது. பஸ் காலனி வரை போக ஆரம்பித்து விட்டது என்பதிலிருந்து தனுவின் நினைவு அவனுள் மெழுகைப் போல் உருகி உருகி உறைந்து அவள் உதிர்த்த நீலப்பூ ஞானப்பன் புத்தகங்களுக்கு மத்தியில் பழுப்புத்தடமாகி இருக்கிறது. டெய்ஸியின் அணைப்பு அவன் அந்தரங்க எதிர்ப்பார்ப்பை மீறி எதிர்க்கவே செய்கிறது. தனலெட்சுமிதான் வேணுமாக்கும் என்று அவள் செய்கின்ற நையாண்டி இன்னும் அவள் மீது வெறுப்பை அதிகப்படுத்துவதாகவே இருக்கிறது. வெறும் பார்வை மட்டுமெ இந்த நேசத்தில் சொல்லப்படிருக்கிறது. தினசரி நடந்து செல்லும் பாதையில் இப்படி ஒரு சலனம் உருவானதை தனு உணராமலேயே அவள் வாழ்க்கை முடிவடைந்திருக்கும்.

வரும் போகும்

சுந்தரம் எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது. வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது. தன்னுடைய பதினாறாவது வயதில் எந்தக் கவலையும் இல்லாமல் சினிமா பார்க்க முடிந்தது. கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடிந்தது. அம்மாவிடம் கோபித்துக் கொண்டு தட்டை வீசி எறிய முடிந்தது. புத்தகம் வாங்கிப் படிக்க முடிந்தது. வாலிபால் வாங்கி விளையாட முடிந்தது. படிப்பு முடிந்ததும் வேலையைப் பற்றிய எந்த யோசனையும் இல்லாமல் வாழ முடிந்தது. இப்படி அனுபவித்த இளமையின் சுகம் தன்னைத் தேடி வந்த வந்த பையனின் ‘இளமையில் வறுமை’யின் மூலம் உறுத்துகிறது. அவனுக்கு தன்னால் உதவ முடியாது என்ற கையாலாகத்தனத்தை விட அவனுக்கு ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று குருட்டு யோசனை பிடித்திருக்கிறது. நண்பன் கிட்டுவின் காதல் தோல்வி தற்கொலை முயற்சியிலும் தோல்வியில் முடிகிறது. ஆட்டுரலுடன் கட்டப்பட்ட பிச்சம்மா, அவள் காட்டும் பிரியம், அந்த வீட்டின் உழைப்பும் வறுமையும் சினிமா தியேட்டர் வாசலில் எண்ணெய் சூட்டில் வேகும் மொத்தக் குடும்பம், ஆனால் அதில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உறவின் நெருக்கம் வசதி வந்தால் இப்படி சார்ந்து வாழும் நிர்ப்பந்தங்கள் இல்லாத வாழ்க்கையில் ஒரு விலகல் வந்து விடுகிறது. இப்படி பூவடுக்குகள் போல் எக்கச்சக்க மனிதர்கள் வருகிறார்கள். புலம்பலாய் தொடங்கும் கதை புன்னகையில் முடிகிறது. கதைக்குள் எக்கச்சக்கக் கதைகள் வரும் போகும்.

புளிப்புக்கனிகள்

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதைப்போல் தான் விரும்பியப் பெண் அதுவும் அழகான பெண் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள் என்றவுடன் “ நா எதுக்கு வருத்தப்படணும்? தெருவோட மானம் நாறிப் போகாம இவ்வளவோட போச்சேண்ணு சந்தோஷம்லா படணும்? எந்தச்சவம் இருந்தா என்ன? எந்தச்சவம் போனா என்ன? இதுவா மனுஷனுக்குக் கவலை?”, என்ற கேள்வியில் தெரியும் கயமைத்தனம் அவன் உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கிறான் என்பது புரிந்ததும் பரிதாபத்துக்குரியவனாகிறான். அவள் அழகு காஞ்சனா போலயிருக்கிறாள் என்று ரசித்தது, அவள் கவனத்தை ஈர்க்க உரத்தக் குரலில் பேசி வம்பு செய்தது, எதற்கும் படியாத அந்தக் காதல் கடைசியில் கீழ்த்தரமாய் அது சீவல் பார்ட்டிதானாம் அவள் தம்பியை வைத்து சரி செய்து விடலாம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொள்ளும் சராசரிக்கும் கீழானவன் இப்படிப்பட்டவர்களிடம் தன்னைக் கற்புக்கரசி என்று நிரூபித்துக்கொள்ள எதற்காக பெண்கள் பாடுபட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

ஆண்கள் எத்தனை பேர் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வார்கள்?இல்லை என்னால் தனியாக சமாளிக்க முடியும் என்று குழந்தையுடன் மாமியார் வீட்டுக்குப் போய்அம்மா வரலியா என்ற இடைவிடாக் கேள்விகளில் மனம் சுருங்கி பஸ்ஸில் வீடு திரும்புகிறான். பெரிதாக அழத்தொடங்கும் குழந்தையைச் சமாளிக்க வகை தெரியாது தவிக்கையில் முன்பின் அறிமுகமில்லாதவர்களெல்லாம் செய்யும் உதவி. அம்மாவை இழந்து தவிக்கும் பிள்ளையும் தானும் அனாதரவாக இப்படிப்பட்டப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதாய் ஒரு கணம் மனம் தன் கற்பனையை பறக்க விடுகிறது. பார்ப்பதற்கு முரட்டுத்த்னமாக தோற்றமளிக்கும் எட்டையா. அந்த முதிர்ந்த மனிதரின் கனிவான மொழியில் குழந்தை சமாதானமாகி தூங்கி விடுகிறாள். அவர் பேசும் அந்தக் குழந்தை மொழியில் அவருக்கு அந்த சிறு பெண் அன்னையாகி சோறு பொங்கி அவருக்கு ஊட்டி இத்தனையும் செய்து கடைசியில் தூங்கி விடுகிறாள். குழந்தைக்கு அவர் சொல்லும் வார்த்தை விளங்கியிருக்க . முடியாது. ஆனால் அந்த அன்பின் மொழி மட்டும் புரிந்திருக்கும். குழந்தையுடன் இறங்கும் போது பாத்துய்யா பாத்து என்று மிருதுவாய் தோளைத் தொடும் தோழமை. இதெல்லாம் எங்கோ ஒரு உலகத்தில் நடக்கலாம், நடந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் இந்த நவீன வாழ்க்கை முறையில் தோன்றாமல் இல்லை. எம் ஆர் டி ரயிலில் பேருந்தில் லேசாகக் குழந்தை சிணுங்க ஆரம்பித்ததும் அதை சமாதானப்படுத்த இருந்த இடத்திலிருந்தே வாயில் பிளாஸ்டிக் சமாதானப்படுத்தியைச் சொருகும் பெற்றோர்கள், லேசான அழுகுரலுக்கே முகம் சுளிக்கும் புதுயுக மனிதர்கள், குழந்தைக்குத் தெரிந்த மொழியில் அது தன் தேவையைச் சிரித்தோ அழுதோ தெரியப் படுத்துகிறது என்பதைப் புத்தகத்தில் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்கள். குழந்தை நம்மைப்பார்த்து சிரித்து விட்டால் பதிலுக்கு சிரிக்க தயக்கம் காட்டும் நாகரிகம். சிரித்தது பெரிய தவறு போல் தலையை அமுக்கி வலுக்கட்டாயமாக ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை காட்டும் அம்மாக்கள்.அறிமுகமில்லாதவர்கள் உன்னைப் பார்த்து சிரிக்கவோ தொடவோ அனுமதிக்காதே என்று வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் ஒரு சில மிருகங்களுக்காக வலுக்கட்டாயமாக தேவையில்லாதவற்றை மூளையில் திணித்து குழந்தைகளிடமிருந்து பறிக்கப்படும் குழந்தைப் பருவம்.இவற்றையெல்லாம் தினமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நமக்கு வேறு எதோ உலகத்தில் இவையெல்லாம் நடந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

மிதிபட:

பெண்கள் நடுத்தர வர்க்கம், அடிமட்டத்து பெண்கள், முறை தவறியவர்கள் யாராக இருந்தாலும் மனதின் அடியாழத்தில் வலியுடன் வாழ்க்கையை நேசிக்கிறார்கள். கூடவே ஆணகளையும் நேசிக்கிறார்கள். தனித்தன்மையுடன் ஒளிர்கிறார்கள். ஆனால் ஆண்களால் இழிவுப் படுத்தப் படுகிறார்கள். அடிஉதைகளை தாங்குகிறார்கள். அதே வன்மத்துடன் பதிலுக்கு வேறுவிதமாக தாக்குகிறார்கள். மனதளவில் ஒட்டாமல் வாழும் புருஷனுடன் கோபித்துக்கொண்டு பிறந்த வீடு போய் இருந்து விட்டு திரும்பும் மனைவி. திரும்பி வரும் போது வீட்டின் அலங்கோலத்தைக் கண்டு முகம் சுளிக்கிறாள். அவள் முகம் சுளிப்பதைப் பார்த்து கயமைத்தனத்தோடு கொச்சையாகப் பேசி மனதால் துன்புறுத்திக் கொண்டெயிருக்கும் கணவன், மின்சாரம் போகும் கணநேர இருட்டில் அவள் உடலை மட்டும் சொந்தம் கொண்டாட வரும் கணவனை உதறித்தள்ளி விட்டுக் கிளம்புகிறாள், குனிந்து பையை எடுக்கும் போது தன்னை இடுப்பில் உதைப்பானோ என்ற பயத்துடனே! பெண்கள் தனக்குக் கீழானவர்கள். அவளை உடலால் மனதால் எப்படி வேண்டுமானாலும்துன்புறுத்தலாம். உடல் சேர்க்கைக்கூட அவளை அவமதிப்பதற்கும் துன்புறுத்துவதற்குமான ஒரு ஆயுதம். தேவைப்பட்டால் அவளை தெய்வநிலைக்கு உயர்த்திக்கொள்ளவும் தேவையில்லை என்றால் தூக்கி எறியவும் தயங்காது இதை சாதாரண விஷயமாக அதில் ஒன்றும் தவறில்லை என்று நினைத்த காலகட்டத்திலிருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டதாக சில சமயம் தோன்றினாலும் எங்கே வெகுதூரம் ஒதோ இங்கே பக்கத்தில் தான் இருக்கிறது என்று அவ்வப்போது ஒரு தோற்றம் பூதமாய் நம் கண் முன் நிற்கிறது.

கலைக்க முடியாத ஒப்பனைகள்

பாப்பாவுக்கும் கல்யாண மாப்பிள்ளைக்கும் இருந்த உடல் நெருக்கம் கடைசி வரை கதாநாயகனுக்கு உறுத்தலாகவேயிருக்கிறது. த்ன்னுடன் நெருக்கமாக இருந்தவன் கல்யாணத்திற்கு வந்து சகஜமாகப் பழகுவதும் பேசுவதும் தன்னிடமும் தேவையற்ற நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல்வதை விரும்பாத ஆண்மனம். மீண்டும் மீண்டும் பாப்பாவையும் கல்யாணப்பெண்ணையும் ஒப்பிட்டு எப்படி தன் நண்பன் இந்தக் கல்யாணத்திற்குச் சம்மதித்தான் என்பதை யோசிக்கிறான். நண்பனின் கல்யாணத்திற்கு ஒரு நாள் விடுப்பில் அவசரம் அவசரமாக வந்து கல்யாணத்தையும் முழுமையாகப் பார்க்க முடியாமல், தினந்தோறும் செய்யும் அதே வேலையையே இங்கும் வந்து மொய் எழுதும் வேலையைச் செய்கிறான். இதை கிட்டத்தட்ட சொந்த அனுபவம் போல் தொகுத்திருக்கிறார் நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டோம் என்ற சந்தோஷம் இல்லாமல் எரிச்சலோடு கிளம்புகிறான்.


பொதுவாகவே இவர் கதைகளில் பெரிய லட்சியவாதிகள், ஒழுக்கசீலர்கள் இப்படியெல்லாம் கிடையாது. சாதாரண மனிதர்கள். ஆனால் நுண்ணியமான எண்ணங்களில் சிறு செயல்பாடுகளில் அசாதாரணமானவர்கள் ஆகிறார்கள். வண்ணதாசன் இவரை அறிந்தவர்கள் இவர் பல கதைகளில் பல்வேறு வடிவங்களில் புன்னகைப்பதுப் புரியும்.

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்

10-02.2008
வாசகர் வட்டம்

வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்

பாண்டித்துரை

வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி கூறல் நிறை மட்டுமே படிக்க நேர்ந்தது. நான் இன்னும் என்னை படைப்புகளை நுகர்ந்து என் எண்ணப்பாடுகளை வெளிப்படுத்த தயார் செய்யவில்லை அல்லது இன்னும் அதீதமாக இலக்கிய படைப்புகளை படிக்காததன் தயக்கமாகவும் இருக்கலாம். என்னை ஏதோ ஒரு தளத்திற்கு அழைத்துச்செல்லும் களமாக வாசகர்வட்டம் இருப்பதால் என் பயிற்சியாகவே இந்த முயற்சியும்

பொதுவாகவே வண்ணதாசன் சிறுகதைகளில் கதைசொல்லக்கூடிய உக்தி ஒன்று போலத்தான் தெரிகிறது. இதை இவரது பல சிறுகதைகளில் காணமுடிகிறது (நான் படித்தவரையில்) அல்லது பிறரின் சிறுகதைகளில் கவனிக்க தவறிய அம்சமாகவும் இருக்கலாம். ஒரு கதையில் டிபன்பாக்ஸ் இன்னும் சிலகதைகளில் போர்வை தலைவலி தேரோட்டம் என்று இது போன்ற ஒன்றை மையப்படுத்து அல்லது அதீதமாக தென்படச்செய்து இதனூடாக அந்த கதையை விவரித்து விஸ்தரித்து செல்லும் பொழுதுதான் வண்ணதாசன் என்னை வியக்கச்செய்கிறார். நான் விரும்பி படித்த யாளிகள் கதை இன்னும் சில கதைகள் அலுப்பு தட்டச் செய்தது. திரு.சுப்ரமணியம் ரமேஷ் குறிப்பிட்ட தனுமை என்னும் சிறுகதை என்னை ரொம்பவே கவர்ந்தது அதை என்னால் இங்கு எப்படி என்று விவரிக்க இயலாதது வருத்தமே.

ஓர் அருவியும் 3 சிரிப்பும் பக்கம் -131ல்

குற்றால அருவியில் இரு நண்பர்களுக்கு இடையேயான சம்பாசனைகளில் இந்த சிறுகதை காட்டப்படுகிறது. கடைவைத்திருக்கும் அண்ணாச்சி என்னத்தை அனுபவித்திருக்க கூடும் என்ற இவர்களின் உரையாடலால் அண்ணாச்சி முதன் முறையாக வாழ்தலின் தரிசனத்தை அனுபவிக்க முயல்கிறார். இந்த சிறுகதையை படிக்கும்பொழுது என் ஞாபகத்திற்கு வந்தது பொன்.ராமச்சந்திரனும் ஆனந்தவிகடனும். பொன்.ராமச்சந்திரன் நேற்றிருந்தோம் முதல் சந்திப்பில் எம்.ஆர்.டிக்காக காத்திருந்த தருணத்தை சொன்னது அநேக பேர் இப்படித்தான் இருக்கின்றோம். சிலரோ தெரிந்தும் அத்தகு வாழ்தலை நுகர விருப்பமின்றியே விடைபெறுகின்றனர்.

ஆவியில் வண்ணதாசன் எழுதிவரும் தொடர் அகம் புறம் எப்பொழுதாவது படிப்பதுண்டு அப்படி சமீபத்திய அவரது பதிவு புலி பற்றி வரும் கனவு (யானை பற்றிய கனவுகள்தான் இவருக்கு அதிகமாக வருமாம்) இறுதியில் எல்லோரையும் கனவு காணச்சொல்லியிருப்பார் அந்தக் கனவும் அண்ணாச்சியுடன் பொருந்திப்போவதாகவே தோன்றுகிறது.

இதே போன்று ஞாபகம் எனும் சிறுகதை பக்கம் 175-ல்

டிபன் பாக்ஸ் பற்றிய ஞாபகங்களை எடுத்துச்செல்லும் அந்தக் கதையில் இறுதியில் வரும் வரிகள்

“ வாட்ச்மேன் இவள் பார்ப்பதற்கு பதில் சொல்வது போல ‘ நம்ம எஃப் கிளார்க்குமா ஓவர்டைம் செய்தாரு வேலைனா வீடும் அவருக்கு மறந்து போகும்னு சிரித்தார்.

அவளுக்கு சிரிப்பு வரவில்லை தனக்கு டிபன் பாக்ஸ் ஞாபகம் வந்தது போல் அவருக்கு வீட்டின் ஞாபகம் வரவேண்டும் “

இந்த சிறுகதையில் டிபன்பாக்ஸை மறந்துவிட்டுச் சென்று மீண்டும் எடுக்க வரும்பொழுது 100 பேர் பணிபுரிந்த அலுவலகமா இது என்று அந்த நிசப்தத்தில் தன்னை அவள் தொலைத்திருப்பாள். இந்த கதையின் ஓட்டம் வேறு என்றாலும் முடிவு நான் மேலே சொன்ன கதையுடன் ஒன்றுபடுகிறது. அண்ணாச்சிக்கு ஞாபகப்படுத்தியது போல் கடந்து செல்லும் பொழுது நமக்கும் யாரவது ஞாபகபடுத்த வேண்டியிருக்கிறது.

வந்தோம் இருந்தோம் சென்றோம் இப்படித்தான் இங்கு அநேக பேர் வாழ்ந்து செல்கின்றனர் நம்மை சுற்றிலும் நாம் தவறவிட்ட வாழ்வியல்களை அதற்குரிய கணத்துடன் வண்ணதாசனின் பல சிறுகதைகளில் காணமுடிகிறது.

வண்ணாத்திப்பூச்சியின் நினைவுகளுடன்
பாண்டித்துரை