ஒரு மரணமும் சில மனிதர்களும்:
மரணத்துள் வாழ்ந்தோ(போ)ரின் மனிதக் கதைகள் வாசகனின் மனப்பதிவு
கே.ரி.பி.ஷாந்தன்
"நாம்
மூக்கும் முழியுமாக
வாழவே பிறந்தோம்..."
(நன்றி:-வ.ஐ.ச.ஜெயபாலன்)
ஆனால்இபல தசாப்தங்களாக
"மரணத்துள் வாழ்வோம்"
(நன்றி:- சண்முகம் சிவலிங்கம்)
என்பதாகவே ஈழத்தமிழரது நடைமுறை வாழ்வு நீண்டு செல்வதைப் பல்வேறு தளங்களினூடாகவும் சமூகவியல் பார்வையோடு "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் எமக்கு தாட்சாயிணி சிறப்பு அறிமுகம் ஆகிறார்.
"எழுத வேண்டும் என்று துறுதுறுத்த வயதில் எழுத ஆரம்பித்து, இன்று வரை எழுதப்பட்ட சிறுகதைகளில் தெரிந்தெடுத்த பன்னிரு கதைகளின் தொகுப்பு இது. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் எம்மால் கடந்துவரப்பட்ட காலத்தின் ஒவ்வொரு பிரதிபலிப்புக்களாகவே எஞ்சி நிற்கின்றன" என்ற நூலாசிரியரின் "என்னுரை" வாசகர்களை ஆசுவாசப்படுத்திவிடுகிறது.
"இச் சிறுகதைகளைப் பற்றி அவை பேசுவதற்க்கு மேலாக என்னால் பேசிவிட முடியாது" என்ற தாட்சாயிணியின் "என்னுரை" வரிகள் முற்குறிப்பாக அமைந்து, எம்மை மிகுந்த ஆவலுடன் கதைகளினுள்ளே சேர்த்துவிடுகின்றன.
"ஒரு மரணமும் சில மனிதர்களும்" தொகுப்பின் தலைப்பாய் அமைந்த சிறுகதை தலைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது கனகச்சிதப் பொருத்தம்.உறவுகளின் மீள் தரிசனம்இபரிணாமம், அங்கலாய்ப்புக்கள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளித்து சிறுகதை நகர்கிறது.ஆங்காங்கு சமூக அக்கறைகளும் கதையோட்டத்தோடு ஒத்திசைந்து கதையாடல்களாக வருகின்றன. {எ-கா:-"சிம்ரன் மாதிரியோ...?" எதிலோ தோற்றுவிட்டது மாதிரி அவளுக்கு ஓர் உணர்ச்சி தோன்றிற்று} பல்வேறு உறவுகள் வந்து போனாலும் நயனியும் அம்மம்மாவும் மனதுள் நிறைந்து நிற்கிறார்கள்.மிக யதார்த்தமான கதையோட்டத்தை பிரசார நெடிகள் கலவாது கொண்டுசென்றமை சிறப்பு. சிறுகதையின் முடிவுப் பகுதி சிலருக்கு செயற்கைத்தன்மை சாயல் கொண்டாலும், சாயல்கள் கொள்ளாத சத்தியச் சூழலே அது என்பதாகி எமது உள்ளங்களை ஊடுருவி விடுகிறது. வாய் விட்டுப் பெயர் சொல்லி அழ முடியாத நயனியின் சாவு எம்மையும் மீறி கண்களைக் கசிய வைத்து எழுத்தாளர் வென்றுவிடுகிறார்.
"பெண் எழுத்து"(பெண்ணால் அவள் நிலை கொண்டு எழுதப்படுவது என்ற எடுகோள்) என்ற தன்மையில் தாட்சாயிணி பல கதைகளிலும் தனித்துவமாகத் தெரிந்தாலும், "சோதனைகள்"இல் மிகச்சிறப்பான கணிப்பைப் பெற்றுவிடுகிறார். சமூகத்தினது அவலத்துடன் தனிமனித "இயற்கை" இடர்ப்பாடுகளை வாழ்வுச் சூழலில் ஏற்படுத்தப்பட்ட "செக்கிங்"என்ற செயற்கை இடர்ப்பாட்டோடு இணைத்துப் பல்நிலை கரிசனத்தைப் பெறுகிறார் நூலாசிரியர். பெண்ணின் "துன்பத்தைச்" சொன்னதோடு நிற்காது இடைச்செருகலாக அமையாத உரையாடல்கள் மூலம் சமூகத்தின் ஒருபிரிவினரின் "போலிச் சமூக அக்கறையை" சந்தி சிரிக்க வைத்தும் விடுகிறார். (எ-கா:-பெண்கள் தனி சோதனை ஒழுங்கை அறியாத பெண்கள் சிலர் ஆண்கள் வரிசையில் வரும்போது "வேடிக்கை' பார்த்த ஆண்கள், பெண்கள்). மனிதம் செத்துவிடாத மனிதர்கள் இருப்பதை கதை இறுதியில் காட்டி ஆறுதல்படுத்துகிறார்.
ஒரு பேருந்துப் பயண வேளையினுள்ளே சமூக உறவுநிலைச் சிக்கல்களைப் பண்போடு பேசுகிறது "விடுபடல்". மாறுபட்ட இரசனைகளின் ஒத்திசைவின்மையால் வாழ்வில் ஒருவித வரட்சி வந்துபோவதைப் பிறந்த குடும்பம் திருமணமான பின் என்ற மிகவும் "பழக்கப்பட்ட" தளங்களூடு கூறிவிடுகிறார். பள்ளி மாணவனை சக பயணியாக எடுத்து கதையை நகர்த்தியமை சிறுகதைப் பயணிப்புக்கு "கவனச் சிதறல்" இன்றி கருத்தை முன்னிலைப்படுத்த உதவி உள்ளது எனலாம்.
"வெடிக்காய்" சிறுகதை பழைய நினைவுகளை பசுமையாய் நிழலாட வைத்து "கால ஒட்டத்தின்" நிலைமாற்றங்களையும் படம்பிடித்துக் காட்டியது. கதை ஆரம்பமான "வெடிக்காய்" பின்னணிக்கே கதை இறுதியைக் கொண்டு வந்துஇபோருக்குப் பின்பாகவும் வாழ்வை நிம்மதியற்றதாக்கும் போரின் விளைவுகளின் கர்ணகடூரத்தை சிலவரிகளூடாகவே சிறுகதையாசிரியர் எமக்கு உணர்த்திவிடுகிறார்.
முழுக்கமுழுக்க படிமங்களின் அசைவாகவே நகர்த்திச் செல்லப்பட்ட கதையாகவே "மழை" நமக்குப் படுகிறது.தூறல் மழை, பலத்த காற்று, கொட்டு மழை என மண்ணை ஆக்கிரமிப்புச் செய்ததை தேர்ந்தெடுத்த வார்த்தைகளிëடு பதிவு செய்கிறார்.
சமூகத்தின் வெள்வேறு பண்பியல்புகளையும் பல்நிலைப்பட்ட கதைமாந்தர்களூடு நகர்த்திச் செல்லும் பிரிதொரு கதை "வெளியில் வாழ்தல்"."சமூகப் பார்வைகளை" வெளிச்சம் போட்டுக்காட்டிய மற்றொரு கதையான இது, சமூக உறவுப் பிரிந்துபடல்களையும், சமூக அக்கறைகளையும் காட்டுவதோடு "உறவுக் கதைகட்டல்களையும்" சொல்லிவிடுகிறது.
"பெண்" என்ற சிறுகதை ஆண்- பெண் புரிந்துணர்வை வலியுறுத்துவதாகவே பெரிதும் தென்பட்டது. என்றாலும் பின்னர் பாலியல் உறவு நடத்தைகளையும் மனிதம் இனத்துவத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும் காட்டியது.சுயநலச் செறிவுமிக்க சமூகத்தை வார்த்தைகளற்று கதைநகர்த்தல் மூலம் "சூடு போட்ட" இன்னுமொரு கதையாகவே "பெண்" தெரிகிறது.
மனித உணர்வுகளை இனப்பின்னணி கடந்த ஒற்றுமையுணர்வோடு பார்க்கும் வித்தியாசமான கதை "ரங்கநாதனும் ரஞ்சித்பெரேராவும்".கதைத் தலைப்பே சொல்ல வந்த செய்தியை உணர்த்திவிடுகிறது. போரின் கொடூரத்தை உறைக்க உணர்த்த கதாசிரியர் முற்பட்டுள்ளமை புலப்படுகிறது. "துளசி' என்ற சிறுபெண் கதையை நகர்த்துவதில் பெரும்பங்கு வகித்துள்ளமை புரிகிறது.
"துளிர்ப்பு" போரின் காரணமான தொடர்ச்சியான இடப்பெயர்வின் அவலத்தை 'மீள்வருகை"யுடன் விளக்கிற்று."துளிர்ப்பு" நல்லதொரு தலைப்பாகவே மனதில் துளிர்க்கிறது."கரையான்கள்" துணைகொண்டு "துளிர்ப்பு"க்கான கதைநகர்த்தல், செய்தி சொல்லல் சிறப்பு.
மனதைக் கனக்கச் செய்த மற்றுமொரு கதை "ஒரு பூவரசு, ஒரு கடிகாரம், ஒரு கிழவி".பூவரசின் மூலம் காலங்களின் சுழற்சியை, காலம் மீதான ஆக்கிரமிப்பை சிறப்பாகவே கதாசிரியர் கூறியுள்ளார். பூவரசில் வந்து நின்ற காகங்கள் ஆக்கிரமிப்பின் இன்னுமொரு குறியீடு. கிழவியின் அகாலச்சாவின் போது மணிக்கூடு திரும்ப ஓடத் தொடங்கியமை மனதை மீளமீள கனக்கச் செய்தது.
காணாமல் "போகச் செய்யப்பட்டோர்" பற்றிய பதை பதைப்பான சிறுகதையாக "தீ விளிம்பு" உணர்த்துகிறது. தீ விளிம்பிற்கு வெளியே நிற்கும் எம்மை அதனுள் எடுத்துச் சென்று கதையோட்டத்தில் இணத்துவிடுகிறார் ஆசிரியர். போர்க்கால வாழ்வையும் சமூக நெருக்கடிகளையும் மட்டுமல்லாது சமூக தனிநபர், குடும்பக் கட்டமைப்பு என்ற பெயரிலான "ஒடுக்குமுறைகளை"க் கேள்வியும் கேட்கிறார்; கேலியும் செய்கிறார். நிச்சயமற்ற வாழ்வியலை நிதர்சனமாகக் கதையினூடு சொன்னதில் வென்றேயிருக்கிறார்.
கல்விச் சமூகத்தின் சமூக அக்கறைச் செயற்பாட்டை "ரிக்கட் ஷோ" மூலம் அப்பல்கலைக்கழகச் சமூக வாழ்வியல் ஓட்டத்தோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார். குழுச் செயற்பாடு, மாணவர்களுக்கிடையிலான "சொல்லாடல்கள்" என கதைக்களத்தை நன்கு கவனித்துள்ளார்."சமூக சேவை" என்று "பெரிது படுத்தி" செய்வோரின் நோக்கத் தெளிவின்மையை, பூரணமின்மையை "கிண்டல்" செய்துள்ளார். வெறும் "கேலி"யாக இல்லாது கோபம், வேதனையாகவே நமக்கும் படுகிறது.
தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளைக் கொண்ட இத் தொகுப்பு மூலம் தாட்சாயிணி அவர்கள் சமூகச் சூழலை வெùவேறு களங்கள், போக்குகள், பின்னணிகள் ஊடாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். சில கதைகளில் செயற்கைத்தன்மை போன்று காணப்பட்டாலும்( எ-கா:-"ரங்கநாதனும் ரஞ்சித்பெரேரவும்") கதைகள் பலவும் குறித்த போட்டிகளில் பங்கு பற்றியதாக இருப்பதால் அப்போட்டி விதிமுறைகளுக்கு உட்பட்டனவாக அமைந்திருக்ககூடிய தன்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஈழத்து சமகால இலக்கியங்கள் "போரைப் பற்றி மட்டுமே பேசுவதாக" பரவலான குற்றச்சாட்டை முன்வைக்கும் இலக்கியவாதிகளாக, இலக்கிய ஆர்வலர்களாகத் தம்மைக் "காட்டிக்கொள்ளும்" மனிதர்களுக்கு இச்சிறுகதைத் தொகுப்பு நல்லதொரு மறுப்பாக அமையும். மரணத்துள் வாழ்பவர்கள் போரை விட்டு வெளியே வந்தாலும் போர் அவர்களை விடாது துரத்தவே செய்கிறது என்பதை இத்தகைய "ஓரப் பார்வையாளர்கள்" புரிந்தேயாக வேண்டும்.
போரைப்பற்றி இன்றி இடப்பெயர்வுகள் அதன் அவலங்கள் உறவுச் சிதறல்கள், துண்டாடல்கள், சமூகத்தில் வாழும் "நடிப்புச் சுதேசிகள்" குடும்பக்கட்டமைப்பு விமர்சனம், பாலியல் நடத்தைக் கோலங்கள், அன்னியர் ஆக்கிரமிப்பின் அவலம், மீண்டும் தொடங்கும் வாழ்வு....என எண்ணற்ற விடயங்களை சமூகவியல், அரசியல், மனித நடத்தையியல் பார்வையோடு நேர்த்தியாக அமைக்கப்பட்ட கதைகளாகவே இவை "நடுநிலை" வாசகர்களுக்கும், திறனாய்வாளர்களுக்கும் புரியும்.
ஆக மொத்தத்தில் "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற தாட்சாயிணியின் சிறுகதைத்தொகுப்பு பல மனிதர்களின் அறிந்தும், அறியப்படாததுமான வாழ்வியல் வெளிப்பாடாக எம் உள்ளத்தில் பதிந்து நிற்கிறது.
{அளவுகோல்களைக் கொண்டு இலக்கியத்தை அளவிடும் "தேர்வு நடத்தை"இல் நம்பிக்கை கொள்ளாமையால் இத் தொகுப்பை ஒப்பீடோ திறனாய்வோ செய்யாது "வாசகப் பார்வை" ஆகவே இக்கருத்துப் பகிர்வை முன்வைக்கிறேன்.}
2 மறுமொழிகள்:
ரமேஷ், மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இந்த பதிவுக்கு அடுத்த பதிவான 'ஏப்ரல் மாதத்திற்கான" என்று தொடங்கும்
பதிவில் இருந்து மறுமொழி இடும் வசதியில்லை. மற்றவர்களுக்கு அப்படியே இருக்கிறதா? கொஞ்சம் பாருங்க
நூலறிமுகத்திற்கு நன்றி
Post a Comment
<< முகப்பு