'வெறும் பொழுது'-மரணம் பற்றிய கவிதைகள்
உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது' என்ற கவிதைத் தொகுப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு கவிதையின் தலைப்பு 'வெறும் பொழுது.' அதுவே நூலின் தலைப்பாகக் கவிஞரால் சூட்டப் பட்டிருக்கிறது.
வெவ்வேறு பாடுபொருள்களில் உமா மகேஸ்வரி தம் கவிதைகளை இயற்றியிருந்தாலும், 'மரணம்' பற்றி இவர் எழுதியிருக்கும் சில கவிதைகளைக் குறித்து இப்போது பார்ப்போம்.
@ @ @ @ @
'மரணம்' என்று தலைப்பிட்ட ஒரு கவிதையில், சுருக்கங்கள் மண்டிய வயோதிக உடலோடு, சுருண்டு அடங்கிக் கொண்டிருக்கும் தன் வாழ்வோடு, விரிந்த மணல் பரப்பில் சாவுக்குக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவளை உமா மகேஸ்வரி காட்சிப்படுத்துகிறார். 'மரணம் ஒருவருக்கு எதிர்பாராதவிதத்தில் சம்பவிக்கிறது' என்கிறார் இன்னொரு கவிதையில். மருத்துவச் சிகிச்சைகள் யூகங்களைமட்டும் ஆதாரமாக்கி, மனித உடலுக்குத் தரப்படுகின்றன. மருத்துவமனைப் படுக்கையின் தலைமாட்டில் காத்துக் கொண்டிருக்கும் மரணம், எதிர்பாராத விதத்தில் ஒருவரைத் தழுவும்போது அதை அவரால் தடுக்க முடிவதில்லை.
இதே உணர்வை உமா மகேஸ்வரி தம்முடைய இன்னொரு கவிதையில் பிரதிபலித்துள்ளார். " பால்கனிக் கதவையும், ஜன்னல்களின் இடுக்குகளை அடைத்தும், நடுங்கும் உன் பாதங்களைப் போர்வைக்குள் பொதித்தும், உன் காதுகளைப் பஞ்சால் அடைத்தும், இருள் நிறைந்த இந்த அறையில், எந்தப் பாதையில், எந்த இடைவெளியில் மரணம் உன்னை அள்ளிப்போனது? "
@ @ @ @ @
ஒரே தெருவில் வாழ்ந்தும், படைப்பாளிக்கு அதிகம் பழக்கம் இல்லாத ஒருத்தி, நெருப்பில் மாண்டுபோகிறாள். அவளைப்பற்றிய தம் மனச் சலனங்களைக் கவிஞர் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்: "அந்த ஒருத்திக்கு உத்யோகம் உண்டு. அதனால், சுய சம்பாத்யமும் உண்டு. தன் வயிற்றில் பாதி வளர்ந்திருந்த குழந்தையோடு அவள் ஏன் தீப்பாய வேண்டும்? அவளுடைய இல்லறப் பிரச்சனைகள் என்ன? அவளுடைய நீண்ட கூந்தலும், நிற அழகு எல்லாம் நெருப்பில் பொசுங்கினவே. உயிரற்ற உடலைத் தீ தீண்டினால், உடலுக்கு வலியே தெரியாது. ஆனால், உயிர் இருக்கும் உடல் வெந்துக் கருகும்போது, உடலுக்கு வலி தெரியுமே. நடைமுறை வாழ்க்கையில் வலி தாங்கி வாழவும், உடல் வலி இல்லாமல் தகன நெருப்பில் சாகவும், முகம் தெரியாத அவளுக்குத் தெரியாமல் போயிற்றே! "
@ @ @ @ @
சின்ன குழந்தைகளுக்கு மரணத்தின் எந்தப் பாதிப்பும் தெரிவதில்லை. அதை உணரும் வயதும் அவர்களுக்கு இல்லை. குழந்தை இந்த innocence - ஐ,
தம் ஆறு வரிக் கவிதையில் உமா மகேஸ்வரி படம் பிடிக்கிறார்.
மரண வீட்டிலிருந்து
எதுவும் ஒட்டுவதில்லை
பிள்ளைகள்மீது.
கீறியெழும் அழுகுரல்கள் பழகிப்போய்
உயிரற்ற தாயின் தலைமாட்டில் உட்கார்ந்து
பிஸ்கட் தின்கிறாள் மகள்.
@ @ @ @ @
மரணத்திற்குப் பிந்திய தகனம், ஒருவர் மனத்தில் எழுப்புகின்ற எண்ண அலையைத் தம் கவிதையில் காட்சிப் படிமமாகக் கவிஞர் கூறுவதாவது:
அதே நதிதான்
நீயும் நானும்
உனது எனது குழந்தைகளும்
ஆடிய அதே நதிதான்
ஓடிக்கொண்டிருக்கிறது
உன் உடலின் தகனத்தை வேடிக்கை பார்த்தபடி.
@ @ @ @ @
இறந்துபோன தங்கை, விட்டுச் சென்ற வாழ்ந்த அட்டைகளைப் பார்த்து, உயிரோடு இருக்கும் சகோதரி அவைபற்றி நினைத்துப் பார்க்கிறாள். இறந்த
தங்கையின் வாழ்த்து அட்டைகள், தேதியிடப்படாத்தால், இறக்கவே இல்லையாம். அட்டைகளில் காணப்படும் பறவைகள் உயிரோடு பறப்பன போல் தென்படுகின்றனவாம். பூக்கள் சிரிப்பனபோல் இருக்கின்றனவாம். தங்கையின் சடலம் எரிந்தபிறகும் கூட, இவளுடைய இமைத் திரையில் அசைகின்ற செத்தவளின் முகத் தோற்றங்களில் சாம்பல் படியவே இல்லையாம். செத்துப்போன தங்கைக்கு நடக்கும் முப்பதாம் நாள் படையலைப்பற்றிக் கோபத்துடன் பார்க்கிறது, 'படையல்' என்னும் கவிதை.
வீட்டில் அவள் இழப்பின் துயரம் அப்பியிருக்கிறது. அன்றைக்கும் தன் தலைமுடிக்குச் சாயம் பூசிக்கொள்ளும் அப்பாவைக் கல்லெரிந்து கொல்ல
வேண்டும் என்ற வெறி பீரிடுகிறது. தங்கைக்கு இது பிடிக்குமே, அது பிடிக்குமே என்று பார்த்துப் பார்த்து, ஊதா நிறப் பட்டு வாங்கி, பருப்பு ரசம், பட்டாணிப் பொரியல், பால் கொழுக்கட்டை செய்து, இலையில் படையலாக வைத்துவிட்டு, ஜாதி மல்லிப் பூச்சரத்தைக் கோர்த்து, தங்கையின் நிழற்படத்திற்கு மாலையிட முனையும்போது, "தங்கை இறக்கவில்லை, " என்று இவள் தன் தங்கையின் 'போட்' டோவைத் திருப்பிவைக்கிறாள்.
@ @ @ @ @
உமா மகேஸ்வரி தன் சொந்த வாழ்க்கையில் ரமா என்ற சகோதரியை இழந்தவர்; இந்த மரணம், இவர் மனசையும் உடலையும் பெரிசாக
உருக்குலைப்பு செய்திருக்கிறது.
'வெறும் பொழுது' என்னும் தம் கவிதை நூலில், 129 ஆம் பக்கத்தில் 'ரமாவுக்கு' என்று தலைப்பிட்டு, தொடர்ந்து ஒன்றுமே எழுதாமல், அந்தப்
பக்கத்தை வெற்ரிடமாக உமா மகேஸ்வரி விட்டிருக்கிறார். "எதுவும் வாசிக்க முடியாவிடினும், எழுதியவற்றை விடவும் வெற்றுப் பக்கங்கள் எப்போதும்
சொல்லாதன சொல்லும். காரணம், மரணத்திற்கு மறுசொல் ஒன்றுமே அற்ற நிசப்தம்தான்," என்று இவரது வெற்றிடம் நமக்குச் சொல்கிறது.
@ @ @ @ @
மரணம்குறித்த தம் அடிமனச் சலனங்களை, உமா மகேஸ்வரி காட்சிச் சித்தரிப்புக்களாகவும், இயலாமை நிலையாகவும், முரண் நிலையாகவும், கொதி நிலையாகவும், நிசப்த நிலையாகவும், தம் கவிதைகள் மூலம் பதிவு செய்துள்ளார். தம் சொந்தங்களுக்கும், தம்மைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் நேர்கின்ற மரணங்கள், ஒவ்வொருவரின் மனப் பாதிப்பைப் பொறுத்தமட்டில், சில தற்காலிக வலி தருபவை; சில நெடுநாள் வலி தருபவை. ஆனால், ஆழ்ந்து யோசிக்கும் வேளையில், காலம் என்னும் பெருங்கடலில் இவை எல்லாம் மெல்ல மெல்லக் கரைந்து போகும். அப்போது, மரணம்பற்றிய மானுடத் துயரங்களும், பயங்களும் கடந்து போகும்.
@@@@@
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு