உதிரிகள் சிறுகதை வாசிப்பு- இராம கண்ணபிரான்.

பி.கிருஷ்ணனின் 'உதிரிகள்' சிறுகதை
கதையும் அங்கத உத்தியும்
இராம கண்ணபிரான்

------------------------------------------------------------------------------------------------

'உதிரிகள்' என்னும் சிறுகதை, புதுமைதாசன் என்ற புனைபெயரைக் கொண்ட சிங்கப்பூர் எழுத்தாளர் திரு பி கிருஷ்ணன் எழுதிய ஒரு படைப்பாகும். இக்கதை அவரது 'புதுமைதாசன் கதைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலில், இடம்பெற்றுள்ளது. பின்னர், இக்கதை 'சிங்கா' மாத இதழில் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது. இப்பொழுது சிங்கப்பூர்த் தேசிய நூலக வாரியம், 'Read Singapore' என்ற நிகழ்ச்சி நிமித்தம், இக்கதையை மலாய் மொழியிலும், சீன மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------


ஐம்பதுகளின் தொடக்கத்தில் தம் எழுத்துலக வாழ்க்கையை மேற்கொண்ட திரு பி கிருஷ்ணன், 'உதிரிகள்' கதையை 1993ஆம் ஆண்டில் எழுதியிருக்கிறார். 'ஷி’ப்ட்' வேலை செய்யும் ஐம்பத்து நான்கு சாமிநாதனுக்கும், ஐந்தாறு பேர் கொண்ட ஓர் இளம்பிராயத்து உதிரிக் கும்பலுக்கும் இடையே, ஒரு சமூக நிலையத்திற்கு வெளியே ஒரு வாக்குவாத மோதல் ஏற்படுகிறது. ஒரு வாரம் கழித்து, இரவு வேலை முடிந்து வீடு திரும்பும் சாமிநாதன் இந்தக் கும்பலால் பயங்கரமாகத் தாக்கப்படுகிறார்.
சாமிநாதன் உதிரிக் கும்பல்மீது ஆத்திரம்கொள்வதற்கு, சமூக நிலையத்தில் கும்பல்காரர்கள் அவரிடம் பண்பாடு இல்லாமல் நடந்துகொண்ட செயல் மட்டும் காரணம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால், இந்த மாதிரியான வேறொரு கும்பலைச் சேர்ந்த ஒருவனால், அவரது பதினைந்து வயது மகள் மாசு அடைந்து தற்கொலை புரிந்திருந்த துயர நிகழ்ச்சியும், சிங்கைத் தமிழர்களின் ஒரு பிரிவினர், தம் இளம் பருவத்தில் இப்படி வீணாய் உதிர்ந்துபோகும் அவல லையும், சாமிநாதனின் கடுஞ்சினத்திற்கு அடிப்படைக் காரணங்களாய் அமைகின்றன.


இந்த உதிரிக் கும்பல்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று பார்ப்போம்.
கல்வி நிலையில் இவர்களுள் பெரும்பாலோர், தொடக்கலை ஆறாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். லீவை, லோமேன் பிராண்டுக் காற்சட்டைகள், அவற்றை இழுத்துப் பிடிக்கும் அகன்ற இடைவார்கள், கன்னாபின்னா ஓவியங்கள் தெளிக்கப்பட்ட தொளதொளப்புச் சட்டைகள், மேல் பொத்தான் போடப்படாமல், உயரே ஏற்றப்பட்ட சட்டைக்காலர்கள் போன்றவற்றை அந்திருக்கும் தமிழ்ப் பையன்கள். வேலையற்றுச் சுற்றித் திரியும் இவர்கள் அடிக்கடி காலித்தனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த primary school drop-outs தங்களுக்கு இடையேயும், மற்றவரிடமும் பேசும்பொழுது, பதர்த் தமிழும் கொச்சை மலாய்ச் சொற்களும் கலந்து பேசுகிறார்கள். "ஏய், நீங்க எங்க பாஸால்லே (விஷயத்திலே) மாஸோ (தலையீடு) பண்ணாதே! நீ எங்கிட்ட ரொம்பத் தஹான் (தாக்குப்பிடித்தல்) பண்ணமாட்டே ! ஜாகா பாய், பாய் (எச்சரிக்கையாக இரு) " என்பதாக, இவர்களின் பேச்சுவர்த்தனை இருக்கிறது.
இந்த உருப்படாத உதாவாக்கரைகள், குடியரசுத் தமிழ் இனத்தவருக்கு அவமானச் சின்னங்கள் என்றும், கல்வித்துறை, பொருளாதாரத் துறை முதலியவற்றில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வந்திருக்கும் இவர்களின் எதிர்காலம் கவலைக்குரியதாக இருக்கிறதே என்றும் சாமிநாதன் கவலைப்படுகிறார்.

***


மிகுதியான இடங்களில், கதை அங்கத நடையிலேயே எழுதப்பட்டுள்ளது. கதையின் இரண்டாம் பகுதியின் சித்தரிக்கப்படும் ஒரு மோதல் சம்பவத்தில், சாமிநாதன் ஒரு நாற்காலியைத் தூக்கியபடி, உதிரிக் கோஷ்டியை நோக்கி, "இப்ப உங்க எல்லோரோட மண்டைகளையும் ஒடைக்கிறேன், வாங்கடா!" என்று கொதிகலனாய்க் கொதிக்கிறார்.

மண்டையைப் பற்றிய இந்தக் குறிப்பை ஒட்டியே, கதைத் தொடக்கமும் ஆசிரியரின் எள்ளல் நடையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
"எவன் மண்டைடா ஒடையணும், வாங்கடா !" என்ற சாமிநாதனின் பின் சம்பாஷணையை முன்கூட்டியே குறிப்பிட்டு, "எவனும் தன் மண்டை உடைபட விரும்புவதில்லை. மற்றவன் மண்டையை உடைக்கத்தான் அவன் அவனுக்கு அடங்காப் பசி " என்று சிரிப்பு எள்ளலுடன் ஒரு கருத்தைச் சொல்லி, "ஆனால், தலை இப்போது பல விஷயங்களில் அவ்வளவு முக்கியமாகக் கருதப்படுவதில்லை. அந்தத் தலைக்குள் இருப்பதைக்கொண்டு, ஒரு பொம்மையைக் கூட செய்யமுடியாது என்றாலும், பலருக்கு வாழ்க்கை ஓடாமலா இருக்கிறது?" என்று கூறி, கதையில் இனி வரப்போகும் உதிரிக் கும்பல்காரர்களின் புத்தியற்ற மூளைகளின் தன்மையை முன் ஏற்பாட்டுடன் ஆசிரியர் கிண்டல் செய்து விடுகிறார்.


உதிரிப் பசங்களைப் பற்றிக் கதாசிரியர் வர்க்கும்போது, "தொடக்க நிலை ஆறிலேயே பாடப் புத்தகங்களை ஆற்றில் விட்டுவிட்ட அரை அவியல்கள். முடிதிருத்தும் லையத்தின் பக்கமே எட்டிப்பார்க்காத தலைகளை உடையவர்கள். மீ கோரேங் கட்டிய ரப்பர் பட்டையால், உருவாஞ் சுருக்குப் போடப்பட்டு, பாதி முதுகுகள்வரை தொங்கும் செம்பட்டைக் குடுமிகளைக் கொண்டவர்கள் " என்கிறார்.


ஆசிரியர் தம் அங்கத எழுத்துக்களைக் கூட்டும் போது, சாமிநாதனின் பேச்சுவழியாக, "நேற்றுப் பிறந்த பசங்களா! டேய், அரணைக் குஞ்சுகளா!" என்று சாடியும், சாமிநாதனின் எண்ன ஓட்டத்தின் மூலமாக, "தங்களுக்கு இடையே கொச்சை மலாய் பேசிக்கொள்ளும் ஒரு புதிய தமிழ் வர்க்கம் எப்போதோ உருவாகிவிட்டது. ஊதிப் பெருத்துவரும் இந்த பரம்பரையே இப்படி என்றால், இதன் வாரிசுகளின் நிலைமை என்ன? இதில், எது முன் தோன்றிய கல், எது பின் தோன்றிய மண், எது மூத்தக் குடி ?" என்று பழம்பெருமை பேசும் தமிழர்களின் மிகைக் கால உணர்வை நக்கல் செய்தும், கதையை கொண்டு செல்கிறார்.

***

இத்தகைய கேலி, பரிகாசம் எல்லாம், கதையில், நகைச்சுவைக்காகப் புகுத்தப்பட்டவை அல்ல. இளம் தமிழ்ச் சமூகத்தில் தற்பொழுது உருவாகியுள்ள ஒரு பிரிவினரின் அருவருப்பான, அவல நிலையை வாசகர்களின் மனங்களில் தைக்கும்படி உணரச்செய்து, தீர்வு காண அவர்களைச் சிந்திக்கும்படி செய்யவே, ஆசிரியர் தம் சிறுகதையில் அங்கத உத்தியைப் பயன்படுத்தியுள்ளார் என்று கூறலாம்.


மலாய், சீன மொழியாக்கங்கள் வழி, அந்தந்த இன வாசகர்களின் உள்ளங்களிலும், ஆசிரியர் கையாண்டிருக்கும் இந்த அங்கத உத்தி, நிச்சயமாகத் தன் வீச்சைச் செலுத்தும். அப்போது அவர்கள், 'அட, நம் நம் இனத்தில்கூட இவ்வகையான உதிரிப்பசங்கள் சிலர் உலவிவருகிறார்களே! இந்த social fragments - களை, எப்படி நம் சிங்கப்பூர்ச் சமுதாயத்தில் மெல்ல மெல்ல integrate செய்வது ? ' என்று யோசிக்கத் தொடங்குவார்கள்...
* * *

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு