03.07.2007
வாசகர் வட்டம்
சந்தியா நாவல் கருத்துரை பொன் சுந்தரராசு


சந்தியா நாவல்,தமிழகத்தில் தற்போது இலக்கியக் கோலோச்சும் படைப்பாளர்களுள் ஒருவரான பிரபஞ்சன் அவர்களின் படைப்பு.
தமிழகம், புதுச்சேரி ஆகிய அரசுகளின் சிறந்த எழுத்தாளர் விருது, இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்தய அகாதெமி விருது, இலக்கியச் சிந்தனை, கோவை கஸ்தூரி ரங்கம்மாள் பரிசு உள்ளிட்ட இலக்கிய விருதுகள், அகில இந்திய இலக்கியப் பரிசான பாஷா பரிட்சத் விருது முதலிய எண்ணற்ற இலக்கிய மரியாதைகளைப் பெற்றவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.
கவிதா வெளியீடு, 224 பக்கங்கள்.1995 முதற்பதிப்பு, 2001 இரண்டாம் பதிப்பு & 2007 மூன்றாம் பதிப்பு.
சந்தியா கதாபாத்திரம்,பாரதி கனவு கண்ட ஒரு புதுமைப் படைப்பு.பாரதிதாசனார் காணத் துடித்த புரட்சிப் படைப்பு.
அக்காலந்தொட்டு இக்காலம் வரை -நசுக்கப்பட்டு வரும் பெண்ணியத்தின் உரிமைக்குரலாய்ஒடுக்கப்பட்ட பெண்ணியத்தின் ஓங்கார கீதமாய்தடுக்கப்பட்ட பெண்ணியத்தின் போராட்ட வடிவமாய்உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் உன்னதப் படைப்பு சந்தியா.

தனது உரிமைகளை விட்டுக் கொடுத்துச் சமரசம் செய்து கொள்ளாதவள் சந்தியா. அதே சமயம் மரியாதை காட்டுதல், மனித நேயத்தோடு நடத்தல், மானிடப் பண்புகளை விட்டு விலகாமல் இருத்தல் போன்ற மனிதப் பண்புகளையும் விட்டுக் கொடுக்காத குணச்சித்திரம் அவள். இருபத்தோராம் நூற்றாண்டின் தமிழ்ப்பெண் இப்படி இருந்தால் தேவலாமோ என்ற சிந்திக்க வைக்கிறது அவளது படைப்பு.
சந்தியாவைப் பற்றிய படைப்பாளரின் விளக்கம் இது:
அவளால் எல்லாப் பெண்களையும் போல இருக்க முடியவில்லை. அம்மா, அப்பாவோடு இருந்து அவர்கள் நம்பிக்கையை ஏற்று, அவர்களின் கனவுகளை நிஜமாக்கிக் கொண்டு, சென்று போன அவர்கள் யுகத்தின் நம்பிக்கை தருகிற நிகழ்காலப் பிரதிநிதியாகி, மண் பார்த்து நடந்து, அவர்கள் கட்டி வைக்கிற பையனை மணந்து, அவனுக்காகச் சிரித்து, அவனுக்கு மகிழ்வளிக்கும் விதத்தில் அலங்காரம் செய்து கொண்டு, அவன் கூப்பிடும்போது மறுப்பு சொல்லாமல் படுத்து, அவனுக்கு மட்டுமே சந்தோஷமளித்து, அவன் பிள்ளையை வயிற்றில் வாங்கிக் கொண்டு, வளர்ந்து தியாக தீபமாய் வீட்டிற்கு விளக்கேற்றி வைக்கிற ஒரு மின்சாரப் பெண்மணியாகி, தன் சமய தர்மத்தைத் தன் அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் சென்றுவிடுகிற பதிவிரதா சிரோன்மணியாக அவளால் ஏன் இருக்க முடிவதில்லை? காரணம் மிக எளிதுதான். அவள் நவயுகத்தின் பெண். இந்தப் புதிய யுகத்தின் புதிய சிந்தனைகளை, வாழ்க்கை முறையை வரித்து, அதற்கு நாயகமாக வாழ விரும்புகிற பெண். சென்று போன யுகங்களின் வழி வந்த பெண்மணி அவள்.
ஆணாதிக்கத்தை இன்னும் கையிலேந்த விரும்பும் அல்லது ஆணாதிக்கத்திற்குக் குடைபிடிக்கும் பிற்போக்குவாதிகளின் மூளையைச் சலவை செய்யும் நோக்கில் இந்நாவலைத் துணிகரமாகப் படைத்துள்ளார் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள். அந்நோக்கத்தில் வெற்றியும் பெற்றுள்ளார் என்று உறுதியாகக் கூறலாம்.
பல பதிப்புகளாக மீண்டும் மீண்டும் உயிர்பெற்றுள்ள சந்தியா அதனை நிரூபித்துள்ளாள்.
பொது இடங்களில் ஆண்களால், பெண்கள்பால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள், சலுகைகள் எடுத்துக்கொள்ளுதல், சில்மிஷங்கள் செய்தல் போன்றவற்றைச் சந்தியா எதிர்க்கிறாள்.இது ஒன்றும் புதுதில்லை.இந்நவீன காலத்தில் பட்டணங்களில் வாழும் இந்தியப் பெண்களுள் பெரும்பாலோர் செய்யும் செயல்தான், திரைக்கதைகளில் படம் பிடிக்கப்படும் காட்சிகள்தான் இவை.
இப்படித்தான் செல்கிறது சந்தியா நாவல், சிவராமன் அறிமுகமாகும் வரை.
திருமணமானாலும் சுதந்திரம் பறிபோகாமல் தான் தானாகவே வாழ விரும்பும் நவயுகப் பெண்கள் கனவு காணும் ணின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறான் சிவராமன்.
சந்தியாவுக்கும் அவனுக்கும் நட்பு நெருக்கமடையும்போது, அவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்ற வாசகர்களின் எதிர்பார்ப்பை மீறிக் கதை திசைமாறிச் செல்லும்போதுதான் பிரபஞ்சன் நிற்கிறார்.இந்த நாவல் முழுமையாகப் பெண்ணியத்திற்குக் தோள் கொடுத்து நிற்கிறது. அதனை நிலைநிறுத்தும் பகுதிகள்தாம் நாவலின் ஜீவன். அவற்றைக் கண்ணோட்டமிடுவோம்.
1 சந்தியாவோடு அலுவலகத்தில் பணிபுரியும் புஷ்பராஜ் அவளுக்குக் காதல் கடிதம் கொடுக்கிறான். பல பெண்களுக்குக் காதல் கடிதம் கொடுத்து அவர்களைச் சங்கடத்தில் மாட்டிவிட்டவன் அவன். சந்தியா அக்கடிதத்தை அவனையே படிக்கச் சொல்லி அவனைத் திக்கு முக்காட வைக்கிறாள். தான் அவன் காதலை ஏற்று அவனோடு உடனே வந்து விட்டால் அவன் அவளை எங்கே அழைத்துச் செல்வான் என்று வினவ, கதிகலக்கிப் போகிறான் அவன் .
"சும்மா பொழுது போக்கிற்கு எழுதுவீர்களாக்கும். சும்மா நேரம், பொழுது போக்கக் காதலிப்பீர்களாக்கும். சந்தோஷத்திற்காக என்னோடு படுத்துக் கொள்வீர்களாக்கும். அப்புறம், தூங்கி எழுந்து, பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு இன்னொரு கிளார்க்குக்கு, இன்னொரு டைப்பிஸ்ட்டுக்குக் கடிதம் எழுதுவீர்களாக்கும். நான் கல்லானாலும் கணவனும் புல்லானாலும் புருஷன் என்று உங்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பேன் என்று எதிர்பார்த்தீர்களாக்கும்."
புஷ்பராஜ் தலை குனிகிறான். தலை குனிவது அவன் மட்டும்தானா?

2. பேருந்தில் சந்தியாவிடம் பாலியல் பலாத்காரம் செய்யும் இளை"னைக் காவல் நிலையத்தில் கொண்டு போய் நிறுத்துகிறாள். சட்டமும் விதிமுறைகளும் அரசியல் பதவிக்கும் செல்வாக்கிற்கும் இரையாவதை எண்ணிக் குமுறுகிறாள் அவள். இன்ஸ்பெக்டரிடம் பேசும்போது அக்குமுறல் வெளிப்படுகிறது.
"எது சார், சின்ன வயசு? இவருக்கென்ன வயசு அஞ்சா, பத்தா? தவிரவும் இவர் செஞ்ச காரியம் சின்னப் பையன்கள் காரியமா? அது சின்னப் பையன்கள் காரியமென்றால், இது மாதிரியான காரியங்களை அவர் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே! அவருக்குச் சகோதரிகள் இருப்பார்கள் தானே? இடுப்புக் கீழே கையை அவர்களிடம் வைத்துப் பார்க்கலாம்தானே?" சமூகச் சீர்கேடுகளைப் பட்டியலிட்டு அவள் சீறும்போது சமாதானத்திற்காகவும் தப்பிப்பதற்காகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வலுவற்ற வார்த்தைகள் கூறி வழுக்கி ஒடுகின்றனர்.
3. அவளைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை சில நிமிடங்கள் அவளுடன் பேசியவுடனே 'உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது' என்கிறான்.
"அதற்குள் என்னை எப்படி உங்களுக்குப் பிடிக்க முடியும்? என் விருப்பங்கள், சைகள், பலவீனங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அதுபோல் உங்கள் அறிவு, ரசனை, தகுதி எதுவும் எனக்குத் தெரியாது. நாம் எப்படி அதற்குள் ஒரு முடிவுக்கு வரமுடியும்?"
பெண் பார்க்க வந்தவன் சந்தியாவின் அந்த எதிர்பாராக் கேள்விக் கணைகளால் தாக்குண்டு மீள வழிதெரியாமல் வீழ்கிறான்.
4 சேரிப் பகுதி மக்களுக்கு வசதிகள் செய்து தராத நிலை கண்டு அரசு அலுவலர்களைச் சந்தியா அர்ச்சனை செய்யும் இடம் அரசுக்குக் கொடுக்கும் சாட்டையடி.
"அவர்கள் நாகரிகத்தைப் பற்றி விமர்சிக்க உங்களுக்கோ உங்கள் அரசுக்கோ என்ன யோக்தை இருக்கிறது? இந்தச் சேரி ஜனங்கள், குறிப்பாகப் பெண்கள் கழிப்பிட வசதி செய்து தரச்சொல்லிக் கேட்டு, ஊர்வலம் நடத்தி எவ்வளவு காலம் கிறது? ஏன் செய்து தரவில்லை? உங்களுக்கென்று வீடும் குளியல் அறையும் இருக்கப் போய்த்தானே நீங்கள் வசதியாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வர முடிகிறது. இல்லாவிட்டால் என்ன செய்திருப்பீர்கள்? இந்தப் பெண்கள் செய்வது மாதிரி, இருள் விலகுவதற்குள் எழுந்து வந்து அவர்கள் உட்காருவது மாதிரி நீங்களும் உட்கார்ந்திருப்பீர்கள்தானே?"

ஆண், பெண் உறவு பற்றி இந்நூல் நெடுகலும் விவாதிக்கப்படும் பல தகவல்கள் பலருக்குச் சினமமூட்டும் தகவல்களாக அமையலாம். ஆனால், சிந்திக்க வேண்டிய செய்திகள் என்பதில் ஐயமில்லை. அவற்றுள் சில:
1. ஆண் துணை எனக்கு வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். நான் சில நெறிகளுடன் வாழ்வது என்று இருக்கிறேன். நான் கண்டவனுடன் சுற்ற முடியாது. யாராவது ஒருத்தனுடன் குடும்பமாக, அவனை நேசித்து, அவன் குழந்தைக்குத் தாயாகி வாழ வேண்டும் என்பதிலும் தப்பில்லை. ஆனால், ஒரு பெண் என்பவள், ஒருவன் துணையுடன் வாழ வேண்டும் என்பது நிர்ப்பந்தமா? துணை அடைவது பாதுகாப்புக் கருதி என்றால், அது அபத்தம். இல்லற இன்பம் குறிக்கோள் என்றால், அதுக்குக் குடும்பம் என்ற அமைப்பு அநீதம். அந்த இன்பத்தை திருமணமாகாமலே பெற்றுக் கொள்ள முடியாதா? - சந்தியா
2. ஒருவனுடன் சிநேகிதமாக இருக்கிறாய். ஏதோ ஒரு சமயத்தில் அவனுடன் உடலுறவு கொள்கிறாய். அந்த உறவுக்குப் பெயர் என்ன? நட்பா, தாம்பத்யமா? நட்பில் தாம்பத்யம் கலந்தால் அது நட்பாகுமா? குடும்பம் என்பது நாகரிகம். அது தளை அல்ல. கட்டு அல்ல. நீ விரும்பவில்லை என்றால் அதற்குள் வராதே! வெளியே நில். ஆனால், மனம்போல் வாழ்வது என்பது நாகரிகமற்ற நிலை என்பதையும் மறக்கக் கூடாது. - கனகா
3. கற்பு என்பது கன்னித் திரை சமாச்சாரம். பெண் தன் கன்னித் திரை கிழிபடாது அதைக் கண்ணெணனக் காப்பாற்றக் கடமைப்பட்டவள். அதைக் கிழிப்பதற்கென்றே ஒருத்தன் கணவன் பெயரில் வருவான். முதலிரவு என்பதே சட்டபூர்வமான பாலியல் பலாத்காரம். - சந்தியா 4. பெண்களை ண்கள் புறக்கணிப்பதும் சிறுமைப்படுத்துவதும் எப்படித் தவறோ, அதே போன்றதுதான் ஆண்களை நாம் வெறுப்பதும். மனிதர்கள் வெறுக்கப்படத் தக்கவர்கள் அல்லர். நேசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஆண்களாயினும் பெண்களாயினும் யாரையும் யாரும் வெறுத்துப் புறக்கணித்து வாழ்வது சாத்தியப் படாது. ஆண்கள், பெண்கள் இதில் யார் முக்கியம் என்பதல்ல விஷயம். வாழ்க்கையே முக்கியம். சந்தோஷம் தனித்து வாழ்வதில் இல்லை. சேர்ந்து வாழ்வதில் தான் இருக்கிறது. - சந்தியா
5. மனைவியைப் பொது இடத்தில் கொஞ்சுவது, பொது இடத்தில் கோபிப்பது, துக்கத்தைப் பிறர் பார்க்கக் கொண்டாடுவது எல்லாமும் ஒரு வகை பாசம் என்பது என் கருத்து. - சிவநேசன்
6. இருட்டுக்கும் பெண்களுக்கும் எப்பவும் நம் நாட்டில் சம்பந்தப்படுத்தியே வந்திருக்கிறார்கள். மாலை மயங்கியதும் நம் பெண்கள் மாடுகள் கொட்டிலில் அடங்குவது மாதிரி வீட்டுக்குள் முடங்கி விட வேண்டும். இருட்டு பத்துகளுக்கு இடமானது. அந்த பத்துகளை வெல்ல ஆண்களால் முடியும். பெண்களால் முடியாது. இருட்டியதும் பெண்களுக்கு உடம்பு வாழ்க்கை தொடங்கிவிடுகிறது. அவர்கள் ஆண்களின் உடனடித் தேவை. - சந்தியா

7. சந்தோஷம் என்பது ஆணின் கூட்டுறவால் அன்றிச் சாத்தியம் உண்டா?நீ கலவி இன்பத்தைச் சொல்கிறாய் அல்லவா? ஆண் இல்லாமல் புணர்ச்சி இன்பம் சாத்தியமில்லைதான். அந்த ஆண் கணவனாகத்தான் இருக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஏன், ஒரு நல்ல சிநேகிதனாலும் அந்த இன்பத்தை வழங்க முடியுமே! உண்மையில் கணவனைக் காட்டிலும் கருத்து ஒருமித்த சிநேகிதனால் காதல் இன்பத்தைக் கூடுதலாகத் தர முடியும் என்றே நம்புகிறேன். - சந்தியா8. சிநேகிதனோடு உறவு வைத்துக் கொண்டால், அந்த உறவுக்குச் சிநேகிதம் என்ற பெயர் பொருந்துமா? சிநேகிதனாக இருந்து கொண்டு ஒருவன் அவ்வப்போது கணவனாகவும் மாறுவான் என்றால், அந்த உறவு எதன் பால்படும்? குழப்பமும் அகெளரவமும் அல்லவா அதனால் விளையும். - கனகா
9. நீங்கள் என்ன எங்களுக்குச் சுதந்நிரம் தருவது? சுதந்திரம், தரும் பொருளன்று. அது உரிமை! நாங்கள் அதை எடுத்துக் கொள்வோம்! ஆனால், பெண்களாகிய நீங்கள் அதற்கான தகுதிகளையும் தன்மைகளையும் பெற்றிருக்கிறீர்களா? இல்லை. இன்னும் உங்கள் நகைப்பித்தும், பட்டுப் புடவை பித்தும், மேனாமினுக்கித் தனமும் உங்களிடமிருந்து போயிற்றா? இன்னும் நீங்கள் உங்கள் உடம்பால் ஆண்களைக் கட்டிப் போடலாம் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். - சந்தியா
மேல்நாடுகளில் - ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திருமணப்பந்தம் என்ற அங்கீகாரம் தேவையற்றது என்ற எண்ணம் தோன்றிப் பல்லாண்டுகள் கடந்து விட்டன.
அத்தகைய உறவு அநாகரிகமானது, நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டது, ஈடுபாடற்றது, உறுதியற்றது, நம்பகமற்றது, விலங்குத் தன்மையுடையது என்று ஆசிய நாடுகளும் ஏனைய நாடுகளும் அவ்வுறவைக் கொச்சைபடுத்தி வசைமாரிப் பொழிந்தன.
இன்றைய நிலை என்ன? மேலை நாடுகளின் அந்த முறை இப்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி சில ஆசிய நாடுகளில் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே விரைவாக மாறிக்கொண்டு வருகிறது.
அதற்கு என்ன காரணம்?
மேல்நாட்டினர் போக்கு எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படுமளவுக்குத் தூய்மைபடுத்தப்பட்டுவிட்டதா? இல்லை.
இக்கால மனிதன் - கல்வி அறிவு மேலோங்க மேலோங்கத் தன்னை எந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளும் முடக்கிக் கொள்ள விரும்பாத சுயநல விரும்பியாகிவிட்டான். அதற்குச் சுதந்திர வாழ்க்கை என்று வசதியாக பெயர் வைத்துவிட்டான். அத்தகைய வாழ்க்கை வாழ்வதையே பெரிதும் விரும்புகிறவனாகிவிட்டான்.அதிலேயே மனிதன் மிகுதியும் நாட்டம் கொண்டவனாகவும் மாறிவிட்டான். தன் மகிழ்ச்சியை மட்டுமே தலையாய நோக்கமாகக் கொள்ள ஆரம்பித்துவிட்டான்.அது வரம்புகளற்ற வாழ்க்கை முறை.யாரும் யாருக்கும் கடப்பாடு கொள்ள வேண்டியதில்லை.வாழ்க்கை வாழ்வதற்கே என்பதே அதன் அடிப்படைத் தத்துவம்.அந்தப் போக்கிற்கு மேலை நாட்டு வாழ்க்கை முறை பொருத்தமானதாக அவனுக்குத் தோன்றி இருக்க வேண்டும். ஒன்று கலந்து விட்டான். இதுதான் உண்மை.
சந்தியா நாவலில்,மணவாழ்க்கை குறித்து மனிதர்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் பெண்ணியத்தோடு எத்தகைய நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கிறது என்பதை எழுத்தாளர் பிரபஞ்சன் தம் நாவலில் மிக அருமையாக வெளியிட்டுள்ளார். ஆண், பெண் இருவரும் தம்பதியராக சேர்ந்து வாழ்வதிலும், நண்பர்களாக இணைந்து வாழ்வதும் உள்ள நன்மை தீமைகள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
அந்தக் கருத்துக்களை அள்ளுவதும் தள்ளுவதும் வாசகர்களைப் பொறுத்தது.ஆனால்,
நாவலின் மையக் கருத்தும் நாவலில் விவாதிக்கப்படும் ஏனைய கருத்துகளும் மனித நேயமுடைய அனைவரும் எண்ணிப் பார்க்க ஏற்றவை என்பது மறுக்க முடியாத உண்மை.

முற்றும்

Labels:

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு