“வாழ்வெனும் மூங்கில் படல்கள் ”
“வாழ்வெனும் மூங்கில் படல்கள் ”
சா. கந்தசாமியின், ‘சூரியவம்சம்’ ஒரு வாசிப்பு
சுப்பிரமணியன் ரமேஷ்
சூரியவம்சம் நாவல் என்ன சொல்ல வருகிறது என்பதை இருவிதங்களில் சொல்லலாம். முதலாவதாக அது எதையும் சொல்ல முயலவில்லை அல்லது இப்படியும் சொல்லலாம், ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தின் மூலமாக சத்யஜித் ரே என்ன சொல்ல முயன்றாரோ அதைப் போன்ற ஒன்றை சா. கந்தசாமி சூரியவம்சம் மூலமாகத் தர முயன்றிருக்கிறார்.
@ @ @
செம்பொத்துகளும், நாரைகளும், கிளிகளும், பட்டாம்பூச்சிகளும் சிறகடிக்கும் காவேரியாற்றின் கரைகளில் செல்லைய்யா வளர்கின்றான். மெல்லிய சூரியனின் கதிர்கள் படர அவன் வளர்ந்து தளிர்க்கின்றான். தொட்டியிலிருந்து எடுத்து யாரோ அவனை மண்ணில் பதியமிடுகின்றார்கள். யாரோ அவனுக்குத் தண்ணீர் ஊற்றுகின்றனர், யாரோ அவனுக்கு உரமிடுகின்றார்கள். மெல்லிய உற்சாகம் குமிழிடும் ஆனந்தம் அவனுக்குள் எப்போதும் பொங்கியபடி இருக்கின்றது, அவன் வெறுமனே வளர்கின்றான். யாரோ அவன் கிளைகளைக் கழிக்கிறார்கள், யாரோ அவனுக்கு மண் அணைக்கிறார்கள், யாரோ அவன் மீது இலக்கமிடுகிறார்கள், யாரோ அவன் மீது ஆணி அறைகிறார்கள், யாரோ அவனைக் காயப்படுத்துகிறார்கள், தனக்குத் தரப்படும் யாவற்றையும் அவன் ஏற்று வளர்கிறான், நன்மைகளையும், தீமைகளையும் உண்டு வளர்கிறான், ஒவ்வொரு அனுபவங்களும் அவனை விசாலப்படுத்துகிறது, முன்னே தள்ளுகிறது. புதுச் சூழலுக்குள் முழு ஈடுபாடு கொண்டவனாய் மறுபடி செல்லைய்யா வளர்கிறான். செம்பாத்துகளும், கிளிகளும், பட்டாம்பூச்சிகளும் பறக்கும் சூழலில் தன்னுடைய பிரிய சேவலை அணைத்தபடி ஆட்டுக்குட்டிகள் பின் தொடர செல்லையா சூரியனைப் பின் தொடர்ந்து ஒரு நதியாய் நீண்டு வளர்ந்து கொண்டேயிருக்கிறான். செல்லைய்யாவைத் தொட முயலும் வாசகர்கள் தங்களை தாங்களே கொஞ்சமேனும் தொட்டுக் கொள்கிறார்கள். இதுதான் அந்த நாவலின் சாரம் எனலாம்.
நாவல் இரண்டு மனிதர்களைப் பற்றியது. ஒருவன் செல்லைய்யா மற்றொருவர் அவனுடைய அப்பா பெரியசாமி தேவர். அவர் அருமையானவராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தவர் இறக்கும் தருவாயிலும் சொத்தென தம்முடைய மகனைத்தான் காட்டமுடிகிறது. சொர்ணம் வயிற்றுப்பாட்டிற்கே ஏங்குகிறவளாக மாறிப்போனதில் பெரியசாமி தேவரின் கையாலாகாதனத்தின் மீது ஏக கசப்பு கொண்டவளாகிறாள். செல்லைய்யா பெரியசாமியைக் கொண்டிருக்கிறான். அவன் அக்கரையும் உலகமும் பெரியசாமியைப் போலவே இருப்பதை சொர்ணம் உள்ளூர உணர்ந்தே இருக்கிறாள். இது செல்லைய்யா மீது கடுமையை ஏற்படுத்துகிறது. வள்ளியூர் சேது அக்காவானாலும் சரி, தங்கக் காப்பு தாத்தாவானாலும் சரி செல்லைய்யாவை பெரியசாமியின் மகனென்றே அடையாளப்படுத்துகின்றனர். சொர்ணத்தின் மகனென்பதில் அவர்களுக்கு ஒற்றுமை ஏதும் தென்படுவதில்லை. செல்லையா பெரியசாமியையே கொண்டிருக்கிறான் என்று உறுதி படுத்துகின்றனர். செல்லைய்யாவிற்கும் தன் தந்தையின் குணங்கள் மீதும் அவருடைய விழுமியங்கள் மீதும் இயெல்பாகவே மதிப்பு இருக்கிறது. விற்றுப்போன வீட்டின் மூங்கில் படல்களை மழையிலும் மண் அணைத்து சாயாமல் பார்த்துக் கொள்கிறான், தன் தந்தையைப் போலவே காலையில் தோட்டம் முழுதும் உலவச் செல்லுவதிலும், குளக்கரைகளைப் பார்த்துக் கொள்வதிலும், சேவல், ஆடுகளை நேசிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறான். தந்தையைப் போலவே மகனையும் வாழ்வு சூதடும் போது இவன் தன் ஆர்வத்தாலும், அக்கரையாலும் மேலெழுகிறான். தன் குடும்பத்தின் வறுமையை வெல்கிறான்.
செல்லைய்யா என்ற துள்ளித்திரியும் சிறுவன் மெல்ல அனுபவங்களால் விசாலப்பட்டு, மனிதர்களால் புடமிடப்பட்டு திடம் பெற்று வாலிபனாகிறான். பொதுவாழ்வினை நோக்கி விரிகிறான். தங்கவேலு, சோர்ணம், அல்லியூர் மணி, பாப்பாவின் கணவன் கோவிந்தன், டில்லி, பாபு போன்றவர்கள் கெடுப்பவர்களாகவும் சாம்பசிவம், ராமு, தங்க காப்பு தாத்தா, பாக்கியம், மீனாட்சி, பாப்பா, மேரி, ராமன் போன்றோர் கொடுப்பவர்களாகவும் அறிமுகம் கொள்கிறார்கள் என்றபோதும் அவன் வாழ்க்கையை அதுவாகவே ஏற்றுக் கொள்கிறான். அதனால்தான் அவன் அம்மாவிற்கு வட்டிக்கு கடன் வாங்கியேனும் பணம் அனுப்ப முடிகிறது. தங்கவேலுவைப் போலீஸ் அடித்து விலங்கிட்டுச் சென்ற காட்சிக்கு மறுக முடிகிறது. டில்லியோடும், பாபுவோடும் மறுபடி சகஜமாய் பேச முடிகிறது. பாம்புச் சட்டையைப் போலவே, அவனுடைய படிப்பும் பறிபோகிறது, அவனுடைய செல்ல ஆடும், வீடும், மேரியும் அவனுடைய உலகத்திலிருந்து பிடிங்கிக் கொள்ளப்படுகிறார்கள். இயல்பாகச் சமன் செய்து கொண்டு கிடைத்த புதுச்சூழலில் ஆர்வமும் அக்கரையும் கொண்டு வளர்கிறான். ‘செல்லைய்யா செஞ்சா சரியாத்தான் இருக்கும்’ என்பதை சாம்பசிவம், ஊமை, ராமு, மாணிக்கம், பாண்டியன், ராமன் உட்பட அனைவரும் உணருகிறார்கள் சொல்கிறார்கள், அந்த திறமைக்கான ஆமோதிப்பாகவே அவர்கள் அவனை மேலேற்றிவிடவும் செய்கிறார்கள். கபடற்ற செல்லைய்யா நகர வாழ்வின் இருண்ட பக்கங்களையும் எதிர் கொள்ள நேர்கிறது. ராணி, குடிப்பது, புகைப்பதுமான சமன் குலைவை வென்று மேலும் திடம் கொள்கிறான்.
இயற்கையோடு இயைந்த முதல் சில அத்யாயங்களின் ஊடாகக் கதை பெரிதும் நகர்ந்து விடுவதில்லை என்றாலும் அது சாதுர்யமான மனத்தயாரிப்பை செய்கிறது. சென்னைக்கு வந்த பின் வரும் அத்தியாயங்களில் ஒரு வேகமும் பொறுமையின்மையும் தெரிகிறது. ஊழலும், அரசியலும் இயக்கும் இந்திய தொழிற்சங்க அமைப்புகளில் அக்கரையான இளம் வாலிபன், யாரையும் சார்ந்திருக்காமல் வெகு வேகமாக துணைச் செயலாளராக முடியும் என்ற நினைப்பே சிரிப்பை வரவழைக்கிறது. செல்லைய்யாவிற்கு அபரீதமான ஆற்றல் இருக்கிறதென்றாலும் அவன் பொது வாழ்வின் மேல் நாட்டம் கொள்வதற்கான இயல்பான காரணங்கள் ஏதும் நாவலில் விளக்கப்படவில்லை.
@ @ @
Labels: Review by Ramesh Subramanian.
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு