இராமகண்ணபிரானின் 'நாடோடிகள்' - எம். கே. குமார்.

இராம கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" - ஒரு பார்வை.
எம்-கே. குமார்.


தமிழில் தோன்றிய முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து என்பது தமிழிலக்கிய ஆய்வளர்கள் சிலரின் கூற்று. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்த தமிழினத்தில் தமிழின் கலாச்சாரத்தொன்மையை பாரம்பரியத்தை நீண்டகாலம் தரித்திருந்ததும் தேசிய அளவில் இன்றுவரை பெருமைப்படுத்துவதும் தமிழினத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்திருக்கும் இன்னுமொரு சிறப்பு. திரு.கண்ணபிரான் அவர்களின் "நாடோடிகள்" கதை இத்தமிழ் சார்ந்ததும் அதன் தலைமுறைகள் சார்ந்ததுமாய் இருக்கிறது.
கதையின் நாயகர்கள்: 1) தனபால் மற்றும் 2) பார்த்திபன்
கதைக்களம்: புலம்பெயர்ந்தோர்களின் வாழ்வும் திசைமாறும் பயணங்களும்
திருப்பம்: ஏதுமில்லை! திருந்துதல் எதிர்பார்க்கப்படுகிறது.
பிற பாத்திரங்கள்: தனபாலின் மனைவி பத்மினி, மகள் ரூபா, முன்வழுக்கைத் தலைக்காரர், பார்த்திபனின் மனைவி சாந்தா
தனபாலின் குணங்கள்:
தற்பெருமை பேசுபவன்
கடின உழைப்பாளி எனினும் அடிக்கடி அனைத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பவன்
வசதியான பெண்ணை திருமணம் செய்கிறான்
எதையும் எளிதில் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதவன்
மேலைநாட்டு பழக்கவழக்கங்களில் ஈடுபாடு உள்ளவன்
வசதியான வாழ்வு மீதும் சொகுசு மீதும் மிகுந்த வேட்கை உள்ளவன்
தமிழினம் சார்ந்த மனிதர்களிடமிருந்து விலகியே வாழ நினைப்பவன்
பார்த்திபனின் குணங்கள்:
மாமா - அக்கா மீது அன்புடையவன்
தமிழின் மீதும் பற்றுடையவன்
அக்கா பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்
போதும் என்ற மனத்துடன் வாழ்கிறான்
தொண்டூழியம் புரிபவன்
பிறந்தநாள் கொண்டாட்டங்களில் விருப்பமற்றவன்
வேறுபட்ட இரு குணாதிசயங்களைக் கொண்ட இரு நண்பர்களின் கதை!
கதையின் ஒரு நாயகன் தனபால், சிறுவயது முதலே அவமானப்படுத்தப்படும் தமிழ்க் குடும்பச் சூழலுக்குள், வறுமையில் வளர்கிறான். விளைவு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை வாழ்க்கையில் நாடுகிறான். படித்து முன்னேறி, வசதியான பெண்ணைத் திருமணம் செய்து, வசதியான வாழ்க்கை வேண்டி வெளிநாடு சென்று மகளைப்பிரிந்து, மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழும்போது அவனெதிரில் விரக்தியுடன் சிரிக்கிறது அவனது நாடோடி வாழ்க்கை!

கதையின் இன்னொரு நாயகன் பார்த்திபனுக்கோ இளவயது முதலே பொதுநோக்கமும் தமிழினம் சார்ந்த செயற்பாடுகளும் மேல்நோக்கியதாகவே (இளவயது முதலே எல்லாம் இனியனவாய் அமைந்ததும் இதற்கு ஒரு காரணமோ?) அமைகின்றன. படித்து முடித்து ஒரே கம்பெனியில் வேலைசெய்து தமிழ் மன்றம் அமைத்து தொண்டூழியம் புரிந்துவருகிறான். இரு புலம்பெயர்ந்தோர் வாழ்வில் எவருடையது சிறந்த வாழ்க்கை என்பதை கருத்துக்கள் மூலமும் சிந்தனை ஓட்டங்கள் மூலமும் பார்வைக்கு வைக்கிறார் ஆசிரியர்.

நேரெதிர் குணாதிசயங்களைக்கொண்ட இரு நபர்களது கதையென்பதால் கதையை அதன் போக்கிலே விட்டிருக்கிறார் ஆசிரியர். ஆங்காங்கு சிந்தனைகளும் கருத்துகளும் பரவிக்கிடக்கின்றன. தனபாலிடம் கிளைவிரித்த தமிழ்க் கலாச்சாரமென்பது எவ்வித பரவுதலும் இன்றி முறிபட்டுப்போனது பற்றுதலற்ற நாடோடி வாழ்க்கையின் சாரம் என்றால் அந்த பரவுதல் பயனற்றுப்போனதற்கும் ஒரு தமிழ்க்கூட்டமே காரணமாய் இருந்திருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

விலங்குகளை விட சிறப்பாய் குரைக்கும் பெண்கள், அருமையாய் ஆப்பிளைக் கவ்வும் ஆண்கள், கொன்னிக்கொன்னிப் பேசப்படும் தமிழ் என குறுநகை ஏற்படுத்தும் மொழி கிடக்கிறது. தனபாலுக்கும் பியூனுக்கும் நடந்ததென்ன என்பது வெளிப்படையாய் தெரியவில்லை, அது அவசியமுமில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த இக்கதையின் கரு, நிகழ்கால வாழ்க்கையின் வினாக்களை பிரதிபலிப்பதாகவும் அர்த்தமுள்ள சில தருணங்களுக்கு விடை சொல்வதாயும் அமைகிறது. இது இக்கதையின் இன்றுவரையான உயிர்ப்புத்தன்மையை நிலைநாட்டுகிறது.
முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுந்த இக்கதையின் நீட்சி குறித்தான சிந்தனைகளை சிங்கப்பூர தமிழர்களிடம் இன்று நாம் காண விழையும்போது ஏமாற்றமே மிஞ்சுவது அதிர்ச்சியை அளிக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் சிங்கப்பூர் எவ்வாறு பொருளாதாரத்தில் சிறந்த நாடாக முன்னேறிவிட்டிருக்கிறது என்பதையும் மாறாக தமிழ் எவ்வாறு இருக்கிறது என்பதையும் பார்க்கையில் இக்கதையின் பேசுபொருள் இன்றும் சிங்கப்பூரை முன்னிறுத்தி விவாதத்திற்குரியதாகவே இருப்பதாக எனக்குப்படுகிறது.
புலம்பெயரும் தனிமனிதன் ஒவ்வொருவனுடைய வாழ்வும் பிடுங்கி நடப்பட்ட ஒரு மரத்தைப்போன்றது. தழைவதும் துளிர்ப்பதும் காய்ப்பதும் கனிதருவதும் எதனாலானது என்பது இக்கதை போலவே சிந்தனைக்குரியதாகும்.
@ @ @

மா. இளங்கண்ணன் அவர்களின் "பரிதியைக் கண்ட பனி" - ஒரு பார்வை.


கதையின் நாயகன்: அண்ணாமலை
கதைக்களம்: தந்தைக்கும் மகனுக்குமான பிணைப்பு
பிற பாத்திரங்கள்: அண்ணாமலையின் மகன் திருமேனி, அவரது மனைவி, மகள் மற்றும் அம்பலவானர்.
முடிவு: சுபம்
திருப்பம்: முடிவுக்கு முன் வரும் பிணவண்டி
குப்பை அள்ளும் அண்ணாமலை தன் மகன் திருமேனியை நன்கு படிக்க வைக்க நினைக்கிறார். வசதியில்லாத அவருடைய ஆசையை, மாலை நேரத்தில் அவர் வேலைபார்க்கும் தோட்டத்தின் உரிமையாளர் அம்பலவாணர் ஆதரித்து உதவ முன்வருகிறார். அவ்வாறு முன்வரும் நேரத்தில் விதி அண்ணாமலையின் மகன் திருமேனியை விலை பேசுகிறது. திருமேனிக்கு என்ன ஆனது, அண்ணாமலையின் கனவு பலிக்குமா என்பதயெல்லாம் பரிதியைக் கண்ட பனிபோல மாறிய அண்ணாமலையின் மனம் வழியாகச் சொல்லி கதை முடிகிறது.

கதை நிகழ்காலத்தில் சொல்லப்படுவதால் சைக்கிளில் செல்லும் அண்ணாமலையை நாமும் பின் தொடர்ந்து ஓடுவது போல சுவாரஸ்யமாய் இருகிறது நடை. திருமேனிக்கு நடந்தது என்ன என்பதைச் சொல்ல இடைவேளையையும் பிறகு இன்னும் உயிரோடுதான் இருக்கிறானா என்பதைச் சொல்ல, முடிவையும் தேர்ந்தெடுத்திருப்பது கதையின் ஓட்டத்திற்கு பலம்.

அவசரம் புரியாது கீழிறங்கும் மின்தூக்கியை பொறுக்காத அப்பா! கதையில் ஒரு பாவப்பட்ட தந்தையின் மனம் பரிதவிப்பதைச் சொல்வது சிறப்பாயிருக்கிறது.

அம்பலவாணர் நல்ல எஜமானர். இவரைப்போன்றோர் கதைகளில் மட்டுமே கிடைக்கும் அபாக்கியம் அதிகம் உண்டு.

தலைப்பு கவிதை போன்றது எனினும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
@ @ @

Labels:

3 மறுமொழிகள்:

At , Anonymous Anonymous மொழிந்தது...

\\தமிழில் தோன்றிய முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து என்பது தமிழிலக்கிய ஆய்வளர்கள் சிலரின் கூற்று\\

இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தர முடியுமா?

 
At , Anonymous Anonymous மொழிந்தது...

கட்டுரை ஆசிரியர் குமார் இதற்கான விரிவான பதில் தருவார். என்னைப் பொறுத்தவரை இதற்கெல்லாம் பெரிய மதிப்பில்லை. இப்போதைய படைப்புகளின் தரம் அதன் மூலம் நம் வாழ்வு விகாசம் கொள்ளக் கூடிய சாத்தியக் கூறுகள். ஆகியவற்றிலேயே என் கவனம் - சுருங்கச் சொன்னால் ஒரு படைப்பில் தட்டுப் படக்கூடியதை, நிறுவக் கூடியதை விடுத்து, நிறுவயியலாத அகப் பயணமே என் தேவை. அதை ஒரு மொழி,நாடு, கால வரையரைக்குள் அடக்க இயலும்மென நான் கருதவில்லை.

சிங்கப்பூரின் ஆரம்ப அச்சுகள், நடைசித்திரங்கள், 'குதிரைப்பந்தய லாவணி'போன்றவை காலத்தில் முந்தயதாக இருக்கலாம்.

-மானஸாஜென்.

 
At , Blogger எம்.கே.குமார் மொழிந்தது...

பெயரைத் தர விருப்பமில்லாத அனாமதேய நண்பருக்கு,

நீங்கள் கேட்ட விடயம் தொடர்பான மேலதிக தகவல்களைத் தர எனக்கு விருப்பமுண்டு என்பதால் எப்போதோ படித்த ஒரு புத்தகத்திலுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்ட அக்கருத்தை
தேடி எடுக்க முனைந்ததில் கொஞ்சம் தாமதம்.

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் வெளியிட்ட "ஆய்வரங்கம்1996" இதழில் வந்துள்ள ஒரு கட்டுரையில் கட்டுரையாசிரியர் திரு. திண்ணப்பன் அவர்கள், இக்கருத்தைச் சொல்கிறார். அதுவும் நா.கோவிந்தசாமி வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கையில் இப்படிச் சொல்லியுள்ளதாகச் சொல்கிறார்.

3.9.1888 அன்று மகதூம் சாயபு என்பவர் எழுதி சிங்கை நேசன் இதழில் வெளிவந்த "வினோத சம்பாஷணை" என்ற ஒரு உரையாடலை அவர் அவ்வாறு சொன்னதாகச் சொல்கிறார். இதுவே தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி என்பதாகவும் அதை ஒரு ஆய்வறிக்கையாக மேற்கோள் காட்டுகிறார். பார்க்க: பக்கம்3,4.

நா.கோவிந்தசாமி சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் உள்ள இக்கருத்தை திரு. மாலன் அவர்கள் கூட ஒத்துக்கொண்டதாக இதுகுறித்து பேசிக்கொண்டபோது ஒரு இலக்கிய ஆர்வலர் என்னிடம் சொன்னார்.

இன்னும் தகவல்கள் வேண்டுமெனின் முகவரி தரவும். ஸ்கேன் செய்யப்பட்ட புத்தக பக்கங்களை அனுப்பி வைக்கிறேன்.

நன்றி.

அன்பன்
எம்.கே.

 

Post a Comment

<< முகப்பு